‘சரும நிறத்தை அதிகரிக்க வேண்டுமா? கருகருவென நீண்ட கூந்தல் வேண்டுமா? அப்போ இந்த ப்ராடக்ட்டை பயன்படுத்துங்க!’ என்பது போன்ற விளம்பரங்களை ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்துவருகிறோம். அப்படி பிரபலமாக்கப்படும் பொருட்களால் நமக்கு ரில்சட் கிடைக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். மருத்துவர் பரிந்துரையின்றி ரசாயனம் கலந்த எந்த பொருட்களை வாங்கி நமது சருமத்தின்மீது பயன்படுத்தினாலும் ஆபத்துதான். அதேசமயம் இப்போது ஆண்கள் பெண்கள் என அனைவருமே தங்களுடைய தலைமுடி மற்றும் சருமத்தை பராமரிப்பதில் ஆர்வம்காட்டுகின்றனர். ஆனால் தங்களுடைய சருமம் குறித்து புரிந்துகொள்ளாமல் கடையில் கிடைக்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தி மோசமான பக்கவிளைவுகளையும் அனுபவிக்கிறார்கள். இதுபோன்ற பக்கவிளைவுகளை தவிர்க்க, இயற்கையான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலே போதும் சருமம் பொலிவடைவதுடன், முடியும் அடர்த்தியாக வளரும் என்கிறார் பியூட்டீஷியன் பிரியா. வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிமையான அதேசமயம் நல்ல ரிசல்ட் தரக்கூடிய டிப்ஸ்களை நம்முடன் பகிர்கிறார்.
அடர்த்தியான கூந்தலை பெற!
நிறையப்பேருக்கு முடி மெலிந்து இருப்பதுடன் முடி கொட்டுதல் பிரச்சினையும் இருக்கும். இவர்களுக்கு தலைமுடியை பின்னினால் அடர்த்தியாக இல்லையே என்று கூறி வருத்தப்படுவார்கள். இவர்கள் ஜடாமான்சி என நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வேரை வாங்கி எண்ணெயில் போட்டுவைத்து பயன்படுத்தலாம். இதனால் முடி வளர்ச்சி அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கமுடியும். இதன்கூடவே கருஞ்சீரகம், வெட்டிவேர், கறிவேப்பிலை போன்றவற்றையும் சேர்த்து முடிக்கு பயன்படுத்தினால் தலைமுடி விறுவிறுவென வளரும். ஜடாமான்சி வேரை பேக்காக தயாரித்தும் தலையில் போடலாம் அல்லது எண்ணெயில் கலந்தும் பயன்படுத்தலாம்.
அடர்த்தியான தலைமுடியை பெற பயன்படும் ஜடாமான்சி வேர்
தளர்ந்த சருமம் இறுக!
நிறையப்பேருக்கு தோல் தளர்ந்து இறுக்கமின்றி இருக்கும். அவர்கள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் கோரைக்கிழங்கை வாங்கி ஊறவைத்து அரைத்து ஃபேஸ்பேக்காகவோ அல்லது அதை தேய்த்து சருமத்தின்மீதோ தடவலாம். இதை தொடர்ந்து செய்துவர சருமம் பொலிவுறுவதுடன், சுருக்கங்களும் நீங்கும்.
சரும நிறத்தை அதிகரிக்க!
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ரோஸ்மேரியை பால் சேர்த்து அரைத்து முகத்துக்கு தடவலாம். இதனுடன் தேன் கலந்தும் தடவலாம். இப்படி செய்வதால் முகத்தின் நிறம் கூடும்.
நலங்கு மாவு வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள் வீட்டிலேயே கடலை மாவு, பாசிபருப்பு, பாசிப்பயறு ஆகியவற்றை அரைத்து தேன், பால் கலந்து முகத்திற்கு தடவிவர, முகத்தின் நிறம் கூடும்.
முகத்திலிருக்கும் முடியை அகற்ற ஹெர்பல் வாக்ஸிங் செய்ய பயன்படும் பூலாங்கிழங்கு
முகத்திலிருக்கும் முடியை நீக்க!
முகத்தில் நிறைய முடி இருப்பவர்கள், பூலாங்கிழங்கை வாங்கி இழைத்து முகத்தில் தடவி சிறிதுநேரம் வைத்திருந்து, காய்ந்ததும் சர்குலர் மோஷனில் தேய்த்து எடுத்தால் முடி நீங்கிவிடும். இதை ஹெர்பல் வாக்ஸிங் என்று சொல்லலாம்.
முகப்பரு மறைய!
முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் மறைய கடுக்காயை அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண நீரை சேர்த்து பரு மற்றும் தழும்புகள்மீது வைத்தால் நாளடைவில் சரியாகும். நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் பொடியை வாங்கியும் அதில் தயிர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்தும் பேக்காக போட்டால் ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் தழும்புகள் மறையும்.