நிறையப் பெண்களுக்கு நீளமாக நகம் வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டு வேலைகள் மற்றும் பல்வேறு வேலைகளால் அந்த நகம் உடைந்துவிடும் என்ற பயத்தினாலேயே பலர் நகம் வளர்ப்பதில்லை. அதுபோன்றோர் ஆசைக்காக கடைகளில் கிடைக்கும் ப்ளாஸ்டிக் நகங்களை வாங்கி ஒட்டிக்கொள்வார்கள். ஆனால் அந்த நகங்கள் ஓரிரு நாட்களில் விழுந்துவிடும். அதுபோல் இல்லாமல் குறைந்தது 20 நாட்களாவது நீளமான நகங்களை வைத்துகொள்ள விரும்புகிறவர்கள் பார்லர்களுக்குச் சென்று எனாமல் nail extension செய்துகொள்ளலாம். ஒவ்வொருவரின் கைவிரல்கள் மற்றும் நகங்களின் வடிவங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு செட்டாகும் விதங்களில் நகங்களின் அளவை நீட்டிக்க முடியும். இதை பராமரிப்பதும் சுலபம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் லதா.
நகத்தை நீட்டிக்க extension வைப்பதற்கு முன்பு முதலில் அதன்மேல் இருக்கும் லேயரை நீக்கவேண்டும். அதற்கு நகம் தோலுடன் ஒட்டியிருக்கும் பகுதியில் இருக்கும் க்யூட்டிக்கிளை முதலில் உள்நோக்கி தள்ளவேண்டும். 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இதை செய்யவேண்டுமே தவிர, குழந்தைகளுக்கு செய்யக்கூடாது.
பக்கவாட்டில் இருக்கும் அதிகமாக வளர்ந்த நகம் மற்றும் வெளியே இருக்கும் க்யூட்டிக்கிளை கட் செய்யவேண்டும். அதன்பிறகு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி நகத்தை நன்றாக தேய்த்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நகத்தின்மீது ஷைனிங்காக இருக்கும் எனாமல் நீங்கிவிடும். சொரசொரப்பாக இருக்கும் நகத்தின்மீது extension வைத்தால்தான் நீண்ட நாட்களுக்கு அது இருக்கும்.
நக நீட்டிப்புக்கு முதலில் கியூட்டிக்கிள் மற்றும் எனாமலை நீக்குதல்
அடுத்து நகத்திற்கு ப்ரைமர் பயன்படுத்தவேண்டும். ப்ரைமர் போட்டபிறகு UV ray மெஷினில் 30 விநாடி வைக்கவேண்டும். அதன்மீது பேஸ் கோட்டிங் போடவேண்டும். மீண்டும் UV ray மெஷினில் 60 விநாடி வைக்கவேண்டும்.
நகத்தின் அளவுக்கு ஏற்றாற்போல் ப்ளாஸ்டிக் நகத்தை எடுத்து அதன் நுனியில் எமி ஜெல் சிறிது எடுத்துக்கொண்டு, சிலிப் லோஷனில் ப்ரஷ்ஷை தோய்த்து, ஜெல்லை ப்ளாஸ்டிக் நகத்தின்மீது பரப்பி நகத்தில் ஒட்டவேண்டும். அதிகப்படியான ஜெல் பயன்படுத்தினால் அது வெளியே வந்துவிடும் என்பதால், க்ளிப்பை மாட்டிப்பார்த்து சரிசெய்யவேண்டும். க்ளிப்பை மாட்டியவாறே மீண்டும் UV ray மெஷினில் 60 விநாடி வைக்கவேண்டும்.
மெஷினிலிருந்து நகத்தை வெளியே எடுத்து க்ளிப்பை கழற்றிவிட்டு, மேலே ஒட்டியிருந்த ப்ளாஸ்டிக் நகத்தையும் எடுக்கவேண்டும். இப்போது ஜெல் நகத்தைப் போன்றே ஒட்டியிருக்கும். அதை தேவையான அளவு மற்றும் ஷேப்பில் வெட்டி, ஃபைல் செய்து, அதன்மீது நெயில் பாலிஷ் போடவேண்டும்.
இயற்கை நகம் போன்றே தோற்றமளிக்கும் ஜெல் நெயில்
ஜெல் நெயில் பாலிஷ் போட்டால் நீண்ட நாட்களுக்கு உரிந்துவராது. நெயில் பாலிஷ் போட்டபிறகு UV ray மெஷினில் 60 விநாடி வைக்கவேண்டும். அதன்மீது க்ளிட்டர் பாலிஷ் அல்லது மேட் பாலிஷ் போட்டு மீண்டும் UV ray மெஷினில் 60 விநாடி வைக்கவேண்டும். ஃபினிஷிங்கிற்கு டாப் கோட்டிங் போட்டு அதையும் மெஷினில் 60 விநாடி வைத்து எடுத்தால் nail extension ரெடி.
பெரும்பாலும் இதுபோன்ற nail extensionகளை திருமணத்தின்போதுதான் நிறையப்பேர் வைக்கச்சொல்லி கேட்பார்கள். பெண்கள் மட்டுமல்ல; உடைந்த அல்லது சரியான வடிவத்தில் இல்லாத நகம்கொண்ட ஆண்களும் இப்போது nail extension செய்துகொள்கிறார்கள்.