இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து விடுதலை பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளே ‘குடியரசு தினம்’. நாட்டின் முதல் குடியரசு தினம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழா டெல்லியில் எங்கு நடைபெற்றது என்று கேட்டால், பலரும் ராஜ்பாத் என்றே பதில் தருவார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி ராஜ்பாத்தில் நடைபெறவில்லை. இந்தியாவின் முதலாவது குடியரசு தின அணிவகுப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டெல்லியிலுள்ள இர்வின் விளையாட்டரங்கில் (இன்றைய தேசிய மைதானம்) நடைபெற்றது. அன்று முதல் ஒவ்வொரு குடியரசு தினத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க நாளான குடியரசு தினம் பற்றியும், அதனை கொண்டாடுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றியும் விரிவாகக் காண்போம்.

இந்தியாவின் சுதந்திரம்


இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியை கண்டு கொதித்தெழுந்து மக்கள் நடத்திய போராட்டங்கள்

ஆங்கிலேயர்களின் ஆட்சியை கண்டு கொந்தளித்த இந்திய மக்கள், போராட்டங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, வெள்ளையர்களை இந்தியாவை விட்டு விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் மக்களிடையே பரவத் தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கிலயர்களுக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. இதன்பிறகுதான் இந்தியாவின் குடியரசை பற்றி விவாதிக்க அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

குடியரசு தினம் பிறந்தது எப்படி?

1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. ' அங்கு பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்' என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவுசெய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரமும் மந்த நிலையில் இருந்தது. வறுமை மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்தாலும் சுதந்திர எழுச்சியும் போராட்டமும் நடந்து கொண்டேயிருந்தது. அதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கு வழிவகுக்கும் என்பதை காந்திஜி உணர்ந்தார். அதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி (1930), நாமே சுதந்திர தினத்தை அமைதியாக கொண்டாடலாம் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பலகட்ட போராட்டங்களையடுத்து இந்தியா 1947-ம் ஆண்டு முழு சுதந்திரம் பெற்றது. DR. அம்பேத்கர் தலைமையிலான குழு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியது. சட்டத்தை உருவாக்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனது. அதனை மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. இறுதியாக 1950 ஜனவரி 26 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.


ஜவஹர்லால் நேரு தலைமையில் 1929ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் புகைப்படங்கள்

குடியரசு என்பதன் பொருள் என்ன?

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” என்பதாகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து கொள்ளும் முறை குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே” குடியரசு என்ற வார்த்தைக்கான இலக்கணம் என வகுத்தவர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டதுதான் DR. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம்.

குடியரசு தின கொண்டாட்டம்

இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திய மூவர்ண கொடியை ஏற்றி குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் இன்று வரை ஜனவரி 26 ஆம் நாள், தாய்நாட்டை காக்க தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்படுவதுடன், நாட்டிற்காக சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.


குடியரசுதினக் கொண்டாட்ட அணிவகுப்பு நிகழ்ச்சியின் காட்சிகள்

சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது டெல்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும். இன்றைய காலகட்டத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைபட்டு கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் ரத்தமும் , ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் இருக்கிறது என்றால் யாராலும் மறுக்க முடியாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல பாகுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமைகொள்ளுவோம். ஜெய் ஹிந்த்.

Updated On 30 Jan 2024 5:30 AM IST
ராணி

ராணி

Next Story