இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சர்தாஜ் பேகம் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மேலும் இவர் தனது தாயையும் ஊனமுற்ற சித்தியையும் தன்னுடன் வைத்துப் பார்த்துக்கொள்கிறார். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஒரு தன்னம்பிக்கை பெண்ணாக, பிற பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழும் சர்தாஜ் பேகம் தன்னுடைய அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்.

கொரோனாவால் எடுத்த முடிவு

முதலில் ஏர் டிக்கெட்டிங், விசா துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சர்தாஜ்க்கு 2019 இல் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் போகவே வறுமையில் வாடியது அவருடைய குடும்பம். அப்போதுதான் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறுகிறார் சர்தாஜ். ”அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டு முதன்முதலாக ஆட்டோ ஓட்டும்போது சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அதுவும் கொரோனா காலத்தில் மனக்கவலைகள் அதிகமாக இருந்ததால், ஆட்டோ வருமானத்தை வைத்தே குடும்பம் நடத்தியதால் சிரமமாக உணர்ந்தேன்” என்கிறார்.


கொரோனா சமயத்தில் ஆட்டோ ஓட்டியபோது

ஊரடங்கு சமயத்தில் பெரும்பாலும் கொரோனா நோயாளிகளே ஆட்டோவில் பயணித்ததால் நோய்த்தொற்று ஏற்படலாம் என குடும்பத்தினர் மிகவும் பயந்ததால், இந்த தொழில் வேண்டாம் என கூறியிருக்கின்றனர். தவிர, பெண் ஆட்டோ ஓட்டுநர் என்பதைக் காட்டிலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பலர் நெகட்டிவ் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கின்றனர். அதிலும் சில ஆண்கள், ”ஏன் இந்த தொழிலுக்கு வந்தீர்கள்? உங்களுக்கு வேறேதும் தொழில் கிடைக்கலையா? நீங்களெல்லாம் இந்த தொழிலுக்கு வந்ததால் எங்கள் தொழில் கெட்டுவிட்டது” என்று திட்டி அவமானப் படுத்தியுள்ளனர்.

இருப்பினும் இன்றுவரை தனது தொழிலை கைவிடாது உறுதியாக நிற்கிறார் சர்தாஜ்.என்னதான் ஆட்டோ ஓட்டுவது தொழிலாக இருந்தாலும் தனது குடும்பம், குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. காலையில் தனது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பிவிட்டுத்தான் தனது சவாரியை தொடங்குவாராம். சில நேரங்களில் வீட்டுக்கு வர தாமதமாகும் என்கிறார்.

ஒரு பெண்ணாக சந்திக்கும் சிரமங்கள்

”பொதுவாக ஆட்டோவில் செல்லும் பயணிகள் ஓட்டுநரிடம் பேரம் பேசுவதுண்டு. 10-இல் 5 சவாரி பேரம் பேசும் சவாரியாக தான் இருக்கும். அவர்களுடன் வீணாக வாதாடாமல் அனுசரித்து போவதுதான் என்னுடைய ஸ்டைல். பெண் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் என்னை வாழ்த்தி கூடுதல் பணம் வழங்கும் பயணிகளும் இருக்கின்றனர். அதேசமயம் என்னுடைய தாயார் இந்த தொழில் குறித்து கவலைப்பட்டு மறுத்து வந்தார். எனது மகனும் பயந்துபோய் வேண்டாம் என்றான். ஆனால் படிப்பு எந்தவிதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதால், முதலில் படிப்பை முடித்துவிட்டு, அம்மாவுக்கு சம்பாதித்துக்கொடு என்று அவனையும் சமாதானப்படுத்தினேன். மேலும் நான் தைரியமான பெண் என்று அவர்களிடம் கூறி இப்போதும் என தொழிலை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்” என்கிறார் பேகம்.


தனது ஆட்டோவுடன்...

இதில் சிறப்பு என்னவென்றால் சர்தாஜுக்கு யாரும் ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுக் கொடுக்கவில்லை. திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு துணை நிற்கும் சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் பார்த்து தான் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டாராம். ”ஆட்டோ ஓட்டும் தொழிலில் பிரச்சினையானது தினம் தினம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதேபோல் ஒரு பெண்ணாக மாதவிடாய் நேரங்களில் நீண்டநேரம் சவாரி செய்வது சற்று சிரமமாகவும், உடல் ரீதியாக எளிதில் சோர்வடையவும் வைக்கிறது. எங்களைப் போன்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களை சிலர் ஊக்கம் செய்யாவிட்டாலும் மனசங்கடம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்” என்று தனது ஆதங்கத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார்.

தொடர்ந்து, “நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்திருந்தாலும் என்னை பொருத்தவரை பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு நல்ல சான்று சமீபத்தில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அவலநிலைதான். முக்கியமாக பாலிவுட் நடிகைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசானது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை. ராணுவ வீரரின் மனைவிக்கே அந்த மோசமான சூழ்நிலை ஏற்படும் போது எங்களைப்போன்ற சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இதனை நினைக்கும்போது, நாட்டுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது” என்கிறார்.


சர்தாஜின் கசப்பான அனுபவம் (சித்தரிப்புப் படம்)

மறக்க முடியாத தருணங்கள்

தனது சவாரியில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். ”ஒருநாள் இரவு 11 மணியளவில் நுங்கம்பாக்கத்திலிருந்து வரும் வழியில் பிரபலமான பப்பின் வெளியே ஒரு இளம்பெண் தட்டு தடுமாறி தனது கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்தாள். கைகள் நீட்டி ஆட்டோவை கூப்பிட்ட அந்த பெண்ணுக்கு எங்கு போகவேண்டும் என்பதைக்கூட சொல்லமுடியாத அளவுக்கு போதையில் இருந்தாள். அந்தப் பெண்ணை என் மகள்போல் கருதி என் ஆட்டோவில் ஏற்றி சவாரியைத் தொடங்கினேன். பெண் சுதந்திரம், பெண் உரிமைக்காக போராடும் நாம் அதனை தவறான வழியில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதுவே அந்த இரவில் ஒரு ஆண் அவரிடம் தவறாக நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் பெண்ணாக இருந்ததால் அவர் வழிகாட்டிய பாதையிலே சென்று அந்தப் பெண்ணை அவர் வீட்டில் இறக்கிவிட்டு வந்தேன்” என்று தனது ஆழ்ந்த கருத்தை பதிவுசெய்தார்.


சர்தாஜின் இனிமையான அனுபவம் (சித்தரிப்புப் படம்)

தொடர்ந்து அவருக்கு நடந்த இன்ப நிகழ்வையும் பகிர்ந்துகொண்டார். ”ஒருநாள் பிராமணப் பெண்மணி ஒருவர் என்னை கை நீட்டி சவாரிக்கு அழைத்தார். நான் பர்தாவின் மேல் காக்கி சட்டை அணிந்திருந்ததால் என் பாதி ஆடை மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சவாரிக்கு அழைத்தார். அவர் பிராமண பெண் என்பதால் நானே அவரிடம் நான் இஸ்லாமியப்பெண் என்று கூறினேன். அதற்கு அந்த பெண்மணி மதத்தில் என்ன இருக்கிறது எல்லோரும் மனிதர்கள் தானே என்று கூறியபோது ஒரு இந்தியனாக மிகவும் பெருமையாக இருந்தது. பிரிவினை வாதத்தை சேர்ந்தவர்கள் சிலரால்தான் இங்கு பிரச்சினைகள் வருகின்றன. மற்றபடி இந்துக்கள் - முஸ்லிம்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்” என்று நாட்டின் சகோதரத்துவத்தை புன்னகையுடன் பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக அவர் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநராக பல இன்னல்களை சந்தித்திருக்கிறார் என்றும் இந்த காலகட்டத்தில் உதவி என்று கேட்டால் உதவி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் நம் பலவீனம் பிறருக்கு பலமாக இருப்பதை முறியடிக்க வேண்டும் என்றும் தோல்வி என்ற ஒன்று இல்லை என்று எண்ணி விடாமுயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்று மற்ற பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு தனது ஆலோசனை கூறுகிறார் பெருமிதத்துடன்.

Updated On 28 Aug 2023 6:59 PM GMT
ராணி

ராணி

Next Story