இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பேசுபொருளாகியிருக்கின்றனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர். நாசாவின் விண்வெளி வீரர்களாக இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெறும் 8 நாட்கள் பயணத்திட்டமாக விண்வெளிக்குச் சென்றனர். ஆனால் இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பழுது ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த இவர்கள் இருவரையும் ஸ்டார்லைனர் மூலமே திரும்ப பூமிக்கு கொண்டுவர தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சி கடைசியில் தோல்வியில்தான் முடிந்தது. மீட்க வேறு விண்கலத்தை தயார் செய்துவருவதாக நாசா அறிவித்தது. இப்படியாக வெறும் 8 நாட்களுக்கு திட்டமிடப்பட்ட பயணம், 286 நாட்களாக நீண்டது. ஒருவழியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் க்ரூ 10 என்ற திட்டத்தை நாசா உருவாக்கி சுனிதா மற்றும் வில்மோரை மீட்க 2 வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம்மூலம் அனுப்பியது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு ஒருவழியாக மார்ச் 19ஆம் தேதி டிராகன் விண்கலம் பூமியை வந்தடைந்தது. அவர்கள் பூமிக்கு திரும்பினாலும், நீண்ட நாட்களாக புவி ஈர்ப்பு விசையின்றி இருந்ததால், அவர்களது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம், குறிப்பாக உடனடியாக நடக்கமுடியாது என்பன போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் நாசா தரப்பில் 45 நாட்கள் திட்டமிட்ட சிகிச்சைக்குப்பிறகு அவர்கள் சாதாரண நிலைக்கு திரும்புவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா இதுபோன்று ஒரு மிஷனில் ஈடுபட்டு பூமி திரும்பும் போதுதான் நடுவானில் விண்கலம் வெடித்துச்சிதறி உயிரிழந்தார். அதுபோன்று சுனிதா வில்லியம்ஸுக்கும் நடந்துவிடக்கூடாது என இங்குள்ள பலரும் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். அதற்கான சிறந்த பதிலும் கிடைத்துவிட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்!

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்திலுள்ள ஜூலாசன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் பாண்டியா. இவர் ஒரு மருத்துவர். தீபக்கின் அண்ணா அமெரிக்காவில் இருந்ததால் இவரும் 1957ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு ஸ்லோவீனிய அமெரிக்க பெண்ணான உர்சுலின் போனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜெய், தினா மற்றும் சுனிதா என 3 குழந்தைகள். இந்த சுனிதாதான் இப்போது சுனிதா வில்லியம்ஸ் என்று உலகெங்கும் அறியப்படுகிற நாசா விஞ்ஞானி. இவர் 1965ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தார். தீபக் பாண்டியாவுக்கு உடற்பயிற்சி மற்றும் நீச்சல்மீது அதீத ஆர்வமாம். அதனாலேயே தனது 3 பிள்ளைகளுக்கும் சிறுவயதிலேயே நீச்சல் கற்றுக்கொடுத்ததுடன், தினமும் காலை, மாலை 2 நேரமும் தொடர்ந்து 2 மணிநேரம் பயிற்சி எடுக்க வைத்துள்ளார். நீச்சல்மீது சுனிதாவுக்கு தனிக்காதல் ஏற்பட, அதில் நன்றாக பயிற்சி பெற்று தனது 6 வயதிலிருந்தே நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றுள்ளார். மசாசூசெட்ஸில் பள்ளிக்கல்வி பயன்ற இவர், 1987ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அப்பா, அம்மா இருவரும் இந்து, கத்தோலிக்கம் என வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் வீட்டில் தங்களுடைய மூன்று பிள்ளைகளுக்குமே இரண்டு மதங்களையும் அவரவருடைய கலாசாரங்களையும் சொல்லிக்கொடுத்து வளர்த்ததாக சுனிதா வில்லியம்ஸே நேர்க்காணல்களில் தெரிவித்திருக்கிறார். அதிலும் சுவாரஸ்யம் என்னவென்றால் குடும்பத்துடன் தேவாலயத்திற்கு செல்லும்போது தீபக் பாண்டியா கையில் பகவத் கீதையை எடுத்துச்செல்வாராம். மேலும் வீட்டிலேயும் இந்திய பண்டிகைகளை கொண்டாடுவதுடன், இந்திய உணவுகளையும் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தியிருக்கிறார். அதனால்தான் விண்வெளிக்கு சென்றபோதுகூட சுனிதா தன்னுடன் பகவத் கீதையையும், தனக்கு மிகவும் பிடித்த உணவான சமோசாவையும் எடுத்துச்சென்றதாக கூறியிருக்கிறார்.


சுனிதா வில்லியம்ஸின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள்

ஜூலாசன் கிராமம்மீது சுனிதாவுக்கு உள்ள பற்று!

நீச்சல் தவிர உடற்பயிற்சியும் சுனிதாவிற்கு பிடித்தமான ஒன்று என்பதாலேயே சிறுவயதிலிருந்தே மாரத்தான் மற்றும் டிரையத்லான் போன்ற போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிபெற்றிருந்தார் இவர். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உலக புகழ்பெற்ற பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொள்ள சுனிதா தனது பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால் அப்போது விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பு வந்ததால், இரண்டையும் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைத்த இவர், விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ட்ரெட்மில்லில் தொடர்ந்து நான்கரை மணிநேரம் ஓடிமுடித்தார். இப்படி பாஸ்டன் மாரத்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தூரத்தை ட்ரெட்மில்லிலேயே ஓடிமுடித்து சாதனை புரிந்தார். சிறுவயதில் மேற்கொண்ட பயிற்சிகள்தான் விண்வெளியில் மாரத்தானில் ஓடிய முதல் நபர் என்ற சாதனை புரிய தன்னை ஊக்குவித்தது என்று அவரே அதுகுறித்து தெரிவித்திருந்தார். மாரத்தான் மட்டுமல்லாமல் எதிர்ப்பு பயிற்சிமூலம் நீச்சலடித்து, விண்வெளி நிலையத்திலுள்ள உடற்பயிற்சி சைக்கிளை ஓட்டி, ட்ரெட்மில்லில் நடந்து விண்வெளியில் இருந்தவாறே ட்ரையத்லான் செய்துமுடித்து அந்த சாதனையையும் படைத்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார் சுனிதா வில்லியம்ஸ். என்னதான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சுனிதாவிற்கு இந்தியாமீதும், தனது சொந்த ஊரான ஜூலாசன் மீதும் தனிப்பற்று இருப்பதாக கூறியிருக்கிறார். அங்கு இன்றும் தன்னுடைய உறவினர்கள் வசித்துவருவதால் ஒவ்வொரு முறை விண்வெளிக்கு சென்று திரும்பிய பிறகும் தனது சொந்த ஊருக்கு வந்துபோவதை வழக்கமாக வைத்துள்ளார். அதனாலேயே ஒவ்வொரு முறை சுனிதா விண்வெளிக்கு செல்லும்போதும், அங்கிருந்து திரும்பும்போதும், இந்த கிராம மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, இந்தமுறை 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பும் சுனிதா பத்திரமாக வந்துசேர வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகளை செய்ததுடன், பூமி திரும்பியதும் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த முறை வெற்றிகரமாக பூமி திரும்பியிருக்கும் சுனிதா, உடல்நலம் சரியான பிறகு இந்தியாவுக்கு வந்துபோவார் என்று எதிர்பார்க்கின்றனர் ஜூலாசன் கிராம மக்கள்.


சிறுவயதிலிருந்தே மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றது & அமெரிக்க கடற்படை அகாடமியில் சுனிதா

சோதனைகளை சாதனைகளாக்கிய சுனிதா!

விண்வெளியில் மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்ததுடன், நீண்ட காலம் விண்வெளியில் தங்கிய பெண், நீண்டதூரம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட பெண் போன்ற சாதனைகளை படைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். இதுவரை 3 முறை விண்வெளிக்குச் சென்று வந்திருக்கும் இவர், அங்கு 9 முறை நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். இத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் இந்த முறை மேற்கொண்ட பயணம் சுனிதாவிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாசாவுக்குமே மிகவும் சவாலானதாக மாறியது. காரணம், போயிங் நிறுவனம் உருவாக்கியிருந்த ஸ்டார்லைனர் விண்கலத்தின் சோதனை ஓட்டமாகத்தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 8 நாள் பயணமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும் திட்டமே உருவாக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்திலேயே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விண்கலத்தை ஏவுகிற ராக்கெட்டின் ஆக்ஸிஜன் வால்வில் பிரச்சினை இருந்ததால் ஒருசில வாரங்களுக்கு இந்த சோதனை ஓட்டத்தை தள்ளிவைத்தனர். அடுத்தடுத்து ஹீலியம் வாயு கசிவு, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் பிரச்சினை போன்ற காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, அவை சரிசெய்யப்பட்ட பின்னர் ஒருவழியாக ஜூன் மாதம் 5ஆம் தேதிதான் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள கேனவெரல் விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டார்லைனர் விண்வெளிக்கு ஏவப்பட்டது. இந்த பயணத்தை முடித்து, ஜூன் 14ஆம் தேதி இருவரும் அதே விண்கலத்தில் பூமிக்கு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில்தான், விண்கலம் பூமியிலிருந்து சென்றபோதே அதில் ஹீலியம் கசிவு ஏற்படுவதை கண்டறிந்தனர். ஆனாலும் ஒருவழியாக அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. எப்படியாவது விண்கலத்திலுள்ள பிரச்சினைகளை சரிசெய்து சுனிதா மற்றும் வில்மோரை பூமிக்கு கொண்டுவரும் முயற்சியில் நாசா தீவிரமாக இறங்கியது. அதனால் 4 நாட்கள் கழித்து ஜூன் 18ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறியது நாசா. இதற்கிடையே ஸ்டார்லைனரில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் இருவரையும் பூமிக்கு அழைத்துவரும் திட்டத்திலும் தொய்வு ஏற்பட்டது. அதனால் வேறு விண்கலம் மூலமாகத்தான் அவர்களை பூமிக்கு கொண்டுவர முடியும் என்று ஆகஸ்ட் மாதம் அறிவித்தது நாசா. இதனால் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தை தரையிறக்கினர்.


சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அடங்கிய குழுவை மீட்ட க்ரூ9 திட்டம்

வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட க்ரூ9 திட்டம்!

ஒருவழியாக க்ரூ9 என்ற திட்டத்தை உருவாக்கி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிராகன் விண்கலத்தில் நாசா வீரர் நிக் ஹாக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் 2 காலி இருக்கைகளையும் உருவாக்கி விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது நாசா. 4 பேரும் சுமார் 5 மாதங்கள் ஒன்றாக விண்வெளியிலேயே கழித்த நிலையில், க்ரூ10 என்ற திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் 4 பேரையும் பூமிக்கு கொண்டுவரும் இறுதிகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் 12ஆம் தேதியே இவர்கள் பூமி திரும்புவதாக இருந்த நிலையில், விண்கலத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஒருவழியாக அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு, மார்ச் 14ஆம் தேதி கென்னடி விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் ஏவப்பட்டது. மார்ச் 16ஆம் தேதி அது சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது. திட்டமிட்டபடி மார்ச் 18ஆம் தேதி விண்வெளி மையத்திலிருந்து கிளம்பி, சுமார் 17 மணிநேர பயணத்திற்கு பிறகு இந்திய நேரப்படி மார்ச் 19ஆம் தேதி அதிகாலை அமெரிக்காவில் ஃப்ளோரிடா கடற்பரப்பில் இறங்கியது. ஆனால் இந்த விண்கலம் தரையிறங்குவதற்கு முன்பு 7 நிமிடங்கள் நாசா கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அது இழந்தது. பூமியிலிருந்து சுமார் 40 -70 கிமீ உயரத்தில் இருந்த விண்கலத்தை சுற்றி 1900 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவியது. இதனால் நாசா முழுக்க பெரும் பதற்றம் நிலவியது. அதன்பிறகு நாசாவின் கண்காணிப்பு கேமராவின் விண்கலத்தில் புகைப்படங்கள் பதிவான பிறகுதான் அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் உற்சாகமடைந்தனர். இதுபோன்று புவியீர்ப்பு விசைக்குள்ளான வளிமண்டலத்துக்குள் நுழையும்போது சில நிமிடங்களுக்கு தொடர்பு துண்டிக்கப்படும். இதை ‘பிளாக் அவுட் டைம்’ என்று சொல்கின்றனர்.

இதுபோன்ற ரேடியோ பிளாக் அவுட் நேரத்தில்தான் 2003ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 வீரர்கள் பயணித்த கொலம்பியா விண்கலம் தரையிறங்குவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறியது. அதேபோல் 1971ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் 11 விண்கலமும் வளிமண்டல மறுநுழைவின்போது தொடர்பை இழந்தது. இருந்தாலும் விண்கலத்தில் பாராஷூட்கள் விரிந்து வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆனால் உள்ளிருந்த 3 வீரர்களும் சடலமாகவே மீட்கப்பட்டனர். இதுபோன்று எந்த அசம்பாவிதங்களும் இந்த முறை நடந்துவிடக்கூடாது என்பதில் நாசா விஞ்ஞானிகள் உறுதியாக இருந்தனர். அதேபோல் விண்கலத்தில் பயணித்த 4 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். நீண்ட நாட்கள் புவியீர்ப்பு விசையின்றி அவர்கள் விண்வெளியில் இருந்ததால் எலும்பு அடர்த்தி குறைதல், நடப்பதில் சிரமம் போன்ற சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனவே நாசா தரப்பில் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்களுக்கு 45 நாட்கள் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனிடையே பூமிக்கு வந்து 5 மணி நேரம் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் பயிற்சிகளுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் எழுந்து நடக்க துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

சிறப்பு சம்பளம்

விண்வெளியில் கூடுதல் காலங்கள் இருந்ததற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு நாள் ஒன்றுக்கு 5 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 430 ரூபாய் மட்டுமே சிறப்பு சம்பளமாக வழங்கப்படுமாம். அந்த வகையில் 286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதாவுக்கு தினப்படியாக மொத்தம் 1,430 டாலர்கள் வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு 1,22,980 ரூபாய். இதோடு சேர்த்து ஆண்டு ஊதியமாக 94,998 டாலர்கள் சுனிதாவுக்கு கிடைக்கும். இதன் இந்திய மதிப்பு 81,69,861 ரூபாய் ஆகும். இந்நிலையில், இவ்வளவு நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸின் தினப்படி ஊதியத்தை கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்க், வேண்டுமென்றால் சுனிதாவுக்கு கூடுதல் சம்பளத்தை எனது பணத்தில் இருந்து கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Updated On 25 March 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story