இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சொந்த ஊராகக் கொண்டவர் கிறிஸ்டினா. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே கலைமீதும் கைவினைப் பொருட்கள்மீதும் அதீத ஆர்வம் கொண்டிருந்த இவர், ஒவ்வொரு கலை மற்றும் கைவினை சார்ந்த அனைத்துப் பயிற்சிகளிலும் முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளார். இத்துறையில் பன்னிரெண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட கிறிஸ்டினா தற்போது சென்னையில் ‘கிறிஸ்டினா இன்டர்நேஷ்னல் ஆர்ட் அண்ட் கிராப்ட் ஸ்டுடியோ’ என்ற கூடம் ஒன்றை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருவதோடு இவரது துறை சார்ந்து பயிற்சி அளிக்கும் ஆசிரியராகவும், ‘ஹோம் சயின்ஸ்’(Home science) மற்றும் ‘ஹோம் மேனேஜ்மென்ட்’ (Home management) துறைகளிலும் இன்டீரியர் டிசைனிங்(Interior designing) பிரிவிலும் சிறப்பாக செயலாற்றி வருகிறார். கிறிஸ்டினாவுடனான ஓர் உரையாடல்...

உங்களுடைய அகாடமியில் என்னென்ன விதமான கலை மற்றும் கைவினை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது?

இங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள பலவிதமான கலை மற்றும் கைவினை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ரஷ்யா, லண்டன், இத்தாலி, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடக்கும் கலை மற்றும் கைவினை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக காலிகிராபி (calligraphy), பலவகையான கிளே(clay), கைவினைப்பொருட்கள் சார்ந்த பயிற்சி வகுப்புகள், 1930களில் உருவான பேப்பர் டோல்(Paper tole), ஜப்பானில் உள்ள டெக்கோ கிளே (Deco clay), இத்தாலியில் உருவான மசாஸ் பாசோ, ரஷ்யன் ஸ்கல்ப்சுரல் (Russian sculptural) வரைகலை போன்ற எக்கச்சக்கமான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. மேலும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என இந்த கலையின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இங்கு முழு ஈடுபாட்டோடு பயிற்சி அளிக்கப்படும்.


காலிகிராபி - பேப்பர் டோல் - ஸ்கல்ப்சுரல் வரைகலை

நீங்கள் எந்தெந்த பிரிவுகளின்கீழ் கலை மற்றும் கைவினை சார்ந்த பயிற்சி பெற்றுள்ளீர்கள்?

முழுக்க முழுக்க சர்வதேச அளவிலான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்னுடைய வழக்கம். சர்வதேச அளவில் பிரபலமாகவுள்ள ஜப்பான் டெக்கோ கிளே அகாடமியில் நான்கு சர்டிபிகேஷன்ஸ் (certifications) முடித்துள்ளேன். ரஷ்யாவிலுள்ள ஈவ்ஜினியாவில்(Evgenia) ஆர்மியோ ஸ்கூலில் ரஷ்யன் ஸ்கல்ப்சுரல் (Russian sculpture) வரைகலையில் ஐந்து மாஸ்டர் கிளாஸ் சர்டிபிகேஷன் பயிற்சி பெற்றுள்ளேன். மேலும் 17ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய டெக்கோ இருந்தாலும் சரி அல்லது காலிகிராபியாக இருந்தாலும் சரி, அதன் ஒவ்வொரு பயிற்சியையுமே அதற்குரிய இடத்தில் உலகின் பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பயிற்சி பெற்றுள்ளேன். இப்பொழுது இவை அனைத்தையும் சென்னையில் வழங்குகிறோம்.

எந்தெந்த கலை சார்ந்த பாடங்களில் பிறருக்கு பயிற்சி அளித்து வருகிறீர்கள்?

நான் பெரும்பாலும் டிசைனிங் சார்ந்த பயிற்சிகளையே அளித்து வருகிறேன். எனக்கு ‘இன்டீரியர் டிசைனிங்’ கலையில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். அதனால் அது சார்ந்த பயிற்சிகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறேன். அதுமட்டுமில்லாமல் எனக்கு சிறுவயதிலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்பது கனவாகவே இருந்தது. அது இப்போது நடப்பது மிகவும் ஆனந்தமாக உள்ளது.


இன்டீரியர் டிசைனிங்

காலிகிராபி குறித்த சில விளக்கம் மற்றும் உங்களுக்கு அதில் மிகவும் பிடித்தமான வகை என்றால் என்ன?

காலிகிராபி என்பது ரோமானியர்களிடையே தோன்றிய ஒரு எழுத்து வடிவமாகும். வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலுமே ஒவ்வொரு விதமான காலிகிராபி முறை கையாளப்படுகிறது. உலகெங்கிலும் அதாவது சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் இந்த எழுத்து வடிவம் புகழ்பெற்று இருந்தது. மேலும் இட்டாலிக் (Italic), காத்திக்(kathik), காப்பர் பிளேட்(copper plate), ஸ்பென்சர்(Spencer) என பல வகைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கண்டறியப்பட்டன.

காத்திக் வகை காலிகிராபி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனை ஓல்ட் இங்கிலீஷ் என்றும்கூட கூறுவர். எனக்கு அதன் வடிவம்தான் மிகவும் பிடிக்கும். அது மிகவும் பாரம்பரியமிக்கது. அதன்பிறகு மாடர்ன் காலிகிராபியும் கூட எனக்கு மிகவும் பிடிக்கும்.

சிறந்த வரைகலைக்கான சில டிப்ஸ்...

வரைகலையை பொறுத்தவரை நீங்கள் உங்கள் முதல்கட்ட வரைகலை முயற்சியிலேயே ஆர்டிஸ்ட் கிரேடு சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. பொதுவாகவே வரைகலையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் மூன்று நிலைகள் உள்ளது. அதில் முதலாவது மாணாக்கர் கிரேடு(Student grade), இரண்டாவதாக தொழிற் சார்ந்த கிரேடு(Professional grade) இறுதியாக வரைகலை கலைஞர்களுக்கான கிரேடுகள்(Artist grade). அதாவது முதற்படியே வரைகலை கலைஞர்களுக்கான கிரேடுகளில் இருந்து தொடங்குவதால் நமக்கு இறுதியாக கிடைக்கும் ரிசல்ட் சிறப்பானதாகவே அமையும்.


வரைகலை பயிற்சி

இரண்டாவதாக சிறந்த வரைகலை என்பது நமது சுற்றுச்சூழல் மற்றும் நாம் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்தே அமையும். தரம் குறைந்த பேப்பரையோ அல்லது பிரஷ்ஷையோ பயன்படுத்துவது சிறந்த வெளியீட்டை நிச்சயம் தராது. எனவே தரம் உயர்ந்தப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

களிமண்ணின் வகைகள் என்னென்ன? அது எவ்வாறு கலை மற்றும் கைவினைக்கு பயன்படுகிறது?

இந்தியாவில் தோன்றிய களிமண் வகை என்று பார்த்தால் அது டெரக்கோட்டா (Terracotta) தான். நாங்களும் டெரக்கோட்டா களிமண் வகை சார்ந்த கைவினைப் பயிற்சி வகுப்புகளைத்தான் நடத்தி வருகிறோம். களிமண் வகைகள் என்றுப் பார்த்தால் ‘தாய் களிமண்’. இது தாய்லாந்தில் தோன்றியது. அடுத்ததாக பேப்பர் களிமண். இந்த வகையானது அதிகளவில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்றொன்று பாலிமர் (polymer clay) வகை களிமண். இதனை காயவைத்து பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதனைப் பயன்படுத்தி அனைத்துவிதமான கைவினை சார்ந்தப் பொருட்களையும் எளிதில் செய்ய இயலும். லமாசா (Lamasa) தான் மிக முக்கிய வகையான களிமண் வகை. இது முழுவதுமாக சோளமாவை கொண்டு செய்யப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து வகையான களிமண்களுமே காய்கறிகள், பூக்கள், அலங்கரிப்புப் பொருட்கள் போன்ற எல்லாவிதமான கைவினைப்பொருட்கள் செய்ய ஏற்புடையதாக இருக்கும்.


கைவினைப் பொருட்கள் செய்ய உகந்த களிமண் வகைகள்

களிமண் சார்ந்த கைவினைப் பொருட்கள் செய்யும்பொழுது விரிசல்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

டெரக்கோட்டா களிமண்ணில் அதிக தண்ணீர் சேர்க்கப்படுவதால் அதில் விரிசல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் விரிசல் விழுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. எனவே விரிசல் விழுவதை தவிர்க்க தண்ணீரை சரியான அளவில் சேர்த்திட வேண்டும். அடுத்து தாய் களிமண் (Thai clay) வகையில் விரிசல் என்பதைவிட உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது நீண்ட நாள் பழைமையான களிமண்ணை பயன்படுத்தினாலும், மிஷினில் களிமண் செய்முறையில் தவறுகள் நடந்தாலும் கூட இந்த தாய் களிமண் சார்ந்த கைவினைப்பொருட்கள் உடையக்கூடும். இறுதியாக பாலிமர் களிமண் வகையில் மண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் அளவில் அதீத கவனம் அவசியம். ஏனென்றால் சரியான அளவில் பேக்கிங்(Baking) இல்லை என்றாலும் விரிசல் ஏற்படும்.

சமச்சீர்(symmetric) மற்றும் சமச்சீரற்ற(Asymmetric) நிலைப்பாடுகள் களிமண் கலையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

சமச்சீரான நிலை என்று கூறுகையில் களிமண்ணினால் செய்யப்படுகின்ற அணிகலன்களைக் கொண்டு சமச்சீரான நிலைப்பாட்டை கொண்டுவர இயலும். அதாவது இருபக்கமும் ஒரே மாதிரியான அல்லது சமமான வடிவத்தில் செய்வதன் மூலம் அது சமச்சீர் நிலைப்பாட்டின் வடிவத்திற்கு வரும். அதே நேரத்தில் சமச்சீரற்ற நிலைப்பாடு என்பது பூக்களை அடுக்குகையில் அதற்கென்று தனித்தனி வடிவங்கள் இருக்கிறது. அதாவது ‘லைன்(Line)’, ‘இக்பானா வகை(Ikebana)’ போன்ற வரிசைப்படுத்தும் முறைகள் சமச்சீரற்ற நிலைபாட்டிற்கு உதாரணங்கள்.


விதவிதமான களிமண் டிசைன்கள்

இன்டீரியர் டிசைனிங்கில் வண்ணங்களின் முக்கியத்துவம் என்ன?

பொதுவாகவே ஒரு வீட்டிற்குள் நாம் நுழையும்பொழுதே அமைதியான மற்றும் புத்துணர்ச்சியான உணர்வை அந்த வீடு தரவேண்டும். அதில் வண்ணங்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. சுவர்களின் வடிவத்திற்கும், அளவிற்கும் ஏற்றவாறு வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்துவது நல்லது. சிறிய அளவிலான இடம் பெரிய இடம்போல தோற்றமளிக்க வெள்ளை மற்றும் லைட் கலர்களை பயன்படுத்தவேண்டும். அதேசமயம் பெரிய அளவிலான இடங்களுக்கு நடுத்தர வகையான வண்ணங்கள் (slight dark shade colors) பயன்படுத்துவதும் சிறந்தது. பொதுவாகவே இன்டீரியர் டிசைனிங்கில் வண்ணங்கள் பெரும் பங்காற்றுகிறது.

குழந்தைகளுக்கான அறைகளை இன்டீரியர் டிசைனிங் செய்யும்போது கவனிக்கவேண்டிவை என்னென்ன?

பொதுவாகவே பெரும்பாலானோர் அறைகளின் அமைப்பை அடிக்கடி மாற்றியமைப்பது இல்லை. சாதரணமாக 8 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்டீரியர் டிசைனிங்கில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது அது குழந்தைகளுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்தி தருகிறதா? என்பதை முக்கியமாக கருத்தில்கொள்ள வேண்டும். எனவே நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் டிசைன்கள் மற்றும் வண்ணங்களை பயன்படுத்துவது சிறந்தது.

Updated On 16 Oct 2023 7:08 PM GMT
ராணி

ராணி

Next Story