இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் டாப்பில் இருக்கும் முகேஷ் அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும், வைர வியாபாரி வீரேன் மெர்ச்சண்ட் மகளான ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கடந்த மார்ச் மாதமே உலக பிரபலங்கள் பலர் பங்கேற்ற திருமண முன்வைபவ கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்றது. இந்ந நிலையில் திருமண முன்வைபவத்தின் இரண்டாம் கொண்டாட்டம் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரபலங்களிடம் மொபைல் ஃபோன் பயன்பாட்டை தவிர்க்க சொல்லி அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகின்றன.

அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்

அம்பானி வீட்டுக் கொண்டாட்டங்கள் குறித்து சொல்லவே தேவையில்லை. வழக்கமான பண்டிகைகளையே மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவது அவர்கள் வழக்கம். இதில் அம்பானியின் இளைய வாரிசின் திருமணம் குறித்து சொல்லவா வேண்டும்? 2 நிச்சயதார்த்த விழா, 2 திருமண முன் வைபோகம் என மொத்த குடும்பமும் தட புடலாக கொண்டாடித் தீர்த்து வருகிறது.


வைர வியாபாரி வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட் & முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகள். இதில் மூத்தவர்களான ஆகாஷ் அம்பானியும், இஷா அம்பானியும் ட்வின்ஸ். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கடைசி மற்றும் 3-ம் மகனான ஆனந்த் அம்பானிக்குதான் தற்போது திருமணம். ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

திருமண முன்வைபவ கொண்டாட்டங்கள்

திருமணத்திற்கு முதல்நாளோ அல்லது சில நாட்களுக்கு முன்போ திருமண முன்வைப கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆனந்த் அம்பானியின் திருமணம் என்பது, முகேஷ் அம்பானி வீட்டின் கடைக்குட்டியின் திருமணம். அதனால் எவ்வளவுக்கு எவ்வளவு பிரம்மாண்டமாக திருமண விழாக்களை நடத்த முடியுமோ அப்படி நடத்தி வருகின்றனர் அம்பானி குடும்பத்தினர்.


மெழுகு சிலையாய் காட்சியளிக்கும் ராதிகா - காதலை பரிமாறிக்கொள்ளும் ராதிகா மெர்ச்சண்ட் & ஆனந்த் அம்பானி இணை

ஆனந்த் அம்பானி(29), ராதிகா மெர்ச்சண்ட்(29) நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜனவரியில் முடிந்த நிலையில்தான், குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த மார்ச் மாதம் 3 நாட்கள் நடைபெற்ற ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களும், இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா, கவுதம் அதானி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களும், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், சயீஃப் அலிகான், ரன்வீர் சிங், ராம் சரண், நடிகைகள் கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களை அழைத்துவர விமானங்கள், சொகுசு கார்கள் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய சொகுசு பேருந்துகள் என அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகளும் அமைக்கப்பட்டிருந்தன. சாப்பாட்டை எடுத்துக்கொண்டால், விழாவின் 3 நாட்களும் இந்தியா மட்டுமன்றி தாய்லாந்து, மெக்சிகோ, ஜப்பான் என பல்வேறு நாடுகளின் 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.


சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஜோடி - திருமண முன்வைபவ விழாவில் முகேஷ் அம்பானி குடும்பம்

விழாவில் முகேஷ் அம்பானி - நீத்தா அம்பானி இணைந்து ஆடிய நடனம், நீத்தா அம்பானி தனியாக ஆடிய அழகிய நடனம், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் ரொமேன்டிக் நடனம், பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் ஒரே மேடையில் ஆடிய நடனம், தோனி, இவாங்கா ட்ரம்பின் தாண்டியா நடனம் உள்ளிட்டவை உலக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

2-ம் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம்

முதல் கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம் அடங்குவதற்குள், இரண்டாம் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தை, பிரம்மாண்டத்திற்கே சவால்விடும் வகையில் மிக பிரம்மாண்டமாய் நடத்தி முடித்துள்ளனர் அம்பானி குடும்பத்தினர். இந்த விழா கடல்வழி பயண கொண்டாட்டமாக ஆடம்பர சொகுசு கப்பலில் கடந்த மே 29-ம் தேதி இத்தாலியில் தொடங்கி ஜூன் 1 அன்று ஃபிரான்சில் நிறைவடைந்தது. செலிபிரிட்டி அசென்ட் என்று பெயரிடப்பட்ட ஆடம்பர சொகுசு கப்பலில் நடைபெற்ற விழாவில் ஆலியா பட், ரன்பீர் கபூர், சல்மான் கான், நடிகை கரீனா கபூர், சாரா அலி கான், கரிஷ்மா கபூர், ஜான்வி கபூர், அனன்யா பாண்டே, திஷா பதானி, ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். 4 ஆயிரத்து 380 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்த இந்த உல்லாச கப்பலின் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7,475 கோடி எனக் கூறப்படுகிறது.

க்ரூஸ் கப்பலில் நடைபெற்ற இந்த விழாவில், கேட்டி பேரி (Katy Perry), டேவிட் குட்டா (David Guetta), பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் (Backstreet Boys), ஆண்ட்ரியா பொசெல்லி (Andrea Bocelli) ஆகிய பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு விருந்தினர்களுக்கு இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.


ஆனந்த் அம்பானி எழுதிய காதல் கடிதத்தை ஆடையாய் சுற்றிக்கொண்ட ராதிகா மெர்ச்சண்ட்

காதல் கடிதமே ஆடையாய்!

சொகுசு கப்பல் விழாவில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தது ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த கவுன்தான். லண்டனை தலைமையிடமாகக் கொண்ட டிசைனர் ராபர்ட் வன் என்பவரால் ஷிஃபான் துணியில் வடிவமைக்கப்பட்ட கருப்பு-வெள்ளை கவுனில், ராதிகாவுக்கு ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் எழுதிய காதல் கடிதம் மொத்தமாக அச்சிடப்பட்டிருந்தது. ராதிகாவின் இந்த காதல் கடித கவுனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதனிடையே, பத்திரிகை ஒன்றுக்கு ஆனந்த் அம்பானியின் காதல் கடிதம் குறித்து பேசிய ராதிகா, "என் பிறந்தநாளுக்காக அவர் எனக்கு நீண்ட காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் என்னைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்". "இந்த காதல் கடிதத்தை நான் என்றென்றும் பத்திரமாக வைத்திருக்க விரும்பினேன். நான் என் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் இதைக் காட்டி, 'இதுவே எங்கள் காதல்' என்று சொல்ல விரும்பினேன்" என்று தெரிவித்திருந்தார்.


ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டின் திருமண அழைப்பிதழ்

திருமணம் எங்கு?

அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான மும்பை BKC-யில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரின் பிரம்மாண்ட வளாகத்தில் ஜூலை 12-ம் தேதி தொடங்கி 14-ம் தேதிவரை 3 நாட்களுக்கு திருமண வைபவ விழா நடைபெறுகிறது. அதில் ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பாரம்பரிய இந்து வேத முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. ஜூலை 13, புனிதமான ஷுப் விழா, அதாவது பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெரும் நிகழ்வு நடைபெறுகிறது. ஜூலை 14 அன்று திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

திருமண அழைப்பிதழ்

மூன்று நாள் திருமண விழாவின் விவரங்களை தெரிவிக்கும் வகையில், ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்டின் திருமண விழா அழைப்பிதழ் வெளியாகி இருக்கிறது. பாரம்பரிய சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. 'சேவ் தி டேட்' என அழைப்பிதழை விருந்தினர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர்.

Updated On 1 July 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story