இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ரூ.5,000 கோடி செலவு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரதமர் மோடி வரை! எந்த பக்கம் திரும்பினாலும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள்! என உலகையே மிரள வைக்கும் விதமாக அம்பானி வீட்டு கல்யாணம், மிக மிக ஆடம்பரமானதாகவும், அதிக செலவுமிக்கதாகவும் மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை நடந்த திருமணங்களிலேயே ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்தான் அதிக செலவில் நடந்தேறியுள்ளது. இனி இதுபோன்றதொரு திருமணத்தை மீண்டும் உலகம் காணுமா என்பது சந்தேகமே. கடந்த ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தத்துடன் தொடங்கி தற்போது கல்யாணம் வரையிலான அம்பானி வீட்டு திருமணம் கடந்து வந்த பிரம்மாண்ட பாதையை பார்ப்போம்...


ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஜோடி

2023 ஜனவரியில் நடந்த நிச்சயதார்த்தம்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மற்றும் கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும்(29), தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும்(29) திருமணம் முடிவு செய்யப்பட்டு, 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பணம் பணத்தோடுதான் சேரும் என்று சொல்வதற்கு ஏற்றார்போல ராதிகா மெர்ச்சண்டும், பயங்கர வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். ராதிகாவின் குடும்பமும் மிகப்பெரிய பிசினஸ் குடும்பம்.

களைகட்டிய திருமண கொண்டாட்டங்கள்

அம்பானி வீட்டுக் கொண்டாட்டங்கள் குறித்து சொல்லவே தேவையில்லை. வழக்கமான பண்டிகைகளையே மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவது அவர்கள் வழக்கம். இதில் முகேஷ் அம்பானியின் இளைய வாரிசின் திருமணம் குறித்து சொல்லவா வேண்டும்? தனது வீட்டின் இறுதி திருமணம் என்பதால் 2 நிச்சயதார்த்த விழா, 2 திருமண முன் வைபோகம், 3 நாள் திருமண விழா என மொத்த குடும்பமும் இந்த திருமணத்தை தட புடலாக கொண்டாடித் தீர்த்துள்ளது.


முகேஷ் அம்பானியின் குடும்ப புகைப்படம்

திருமண முன்வைபவ கொண்டாட்டங்கள்

2024 ஜூலை 12-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தங்கள் இல்ல திருமணம் தொடர்பான கொண்டாட்டங்களில் உலகம் முழுவதிலுமிருந்து தங்களுக்கு தெரிந்த அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்கு முகேஷ் அம்பானி முக்கியத்துவம் கொடுத்தார். எனவேதான், ஒருவேளை திருமணத்தில் பங்கேற்க முடியாமல் போக வாய்ப்பிருந்தாலும், திருமண முன்வைபவத்திலாவது அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று திட்டமிட்டே ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர்.

முதல் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம் நகரில் நடைபெற்றது. இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களும், இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா, கவுதம் அதானி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களும், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்திய திரையுலக பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி உள்ளிட்ட நட்சத்திரங்களும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் என ஆயிரக்கணக்கான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


முதல் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் தோனி-சாக்ஷி மற்றும் ரன்வீர் சிங்-தீபிகா

முதல் கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம் அடங்குவதற்குள், இரண்டாம் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம், ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. கடல்வழி பயண கொண்டாட்டமான இது, செலிபிரிட்டி அசென்ட் என்று பெயரிடப்பட்ட ஆடம்பர சொகுசு கப்பலில் கடந்த மே 29-ம் தேதி இத்தாலியில் தொடங்கி ஜூன் 1 அன்று ஃபிரான்சில் நிறைவடைந்தது. இந்த விழாவில் ஆலியா பட், ரன்பீர் கபூர், சல்மான் கான், நடிகை கரீனா கபூர், சாரா அலி கான், கரிஷ்மா கபூர், ஜான்வி கபூர், அனன்யா பாண்டே, திஷா பதானி, ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். 4 ஆயிரத்து 380 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்த இந்த உல்லாச கப்பலின் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7,475 கோடி எனக் கூறப்படுகிறது. க்ரூஸ் கப்பலில் நடைபெற்ற இந்த விழாவில், கேட்டி பேரி, டேவிட் குட்டா, பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், ஆண்ட்ரியா பொசெல்லி ஆகிய பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு விருந்தினர்களுக்கு இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.


காதலன் ஆனந்த் அம்பானி கொடுத்த காதல் கடிதத்தையே ஆடையாய் சுற்றிக்கொண்ட ராதிகா மெர்ச்சண்ட்

சொகுசு கப்பல் விழாவில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தது ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த கவுன்தான். லண்டனை தலைமையிடமாகக் கொண்ட டிசைனர் ராபர்ட் வன் என்பவரால் ஷிஃபான் துணியில் வடிவமைக்கப்பட்ட கருப்பு-வெள்ளை கவுனில், ராதிகாவுக்கு ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் எழுதிய காதல் கடிதம் மொத்தமாக அச்சிடப்பட்டிருந்தது.

ஜரூராக நடந்த திருமண ஏற்பாடுகள்

இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஜரூராக நடந்து வந்தன. தன்னுடைய மகன் திருமணத்தை முன்னிட்டு நீடா அம்பானி, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண அழைப்பிதழை விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபடுவதற்காகவும், திருமணத்திற்கு கடவுளை அழைக்க நாடி வந்துள்ளதாகவும் நீடா அம்பானி பூரித்து கூறியிருந்தார். திருமணத்திற்கு வருகை தரும் விஐபிகளுக்கு தங்க சாமி சிலைகள் இடம்பெற்ற கோயில் வடிவிலான அழைப்பிதழ் தயாரித்து அதனைத் தானே பிரத்யேகமாகச் சென்று அம்பானி கொடுத்திருந்தார்.


அம்பானி வீட்டில் நடந்த திருமண விழா பூஜையில் கலந்துகொண்ட ஜான்வி கபூர்

இதையடுத்து, இந்த மாத துவக்கத்திலிருந்தே தினந்தோறும், ஒவ்வொரு நாளும் அம்பானி வீட்டில் சடங்குகளும், பூஜைகளும் வெகு அமர்க்களமாக நடந்து வந்தன. இந்த சடங்குகளுக்கு, விஐபி-கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்றனர்.

திருமணத்திற்கு முதல் நாள் இரவு, சிவ சக்தி பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் நடிகை ஸ்ரீதேவி மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், அவரது காதலர் சிகர், மிஸ் வேல்டு மனுஷி சில்லர், மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி, நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜையில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் அணிந்து வந்த உடைகளும், நகைகளும் காண்போரை கவர்ந்தன.

மேலும், அமைதியான, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக பிரார்த்திக்க கிரஹ சாந்தி பூஜையும் நடத்தப்பட்டது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வேண்டி, மணமக்கள் இருவருமே இதில் கலந்து கொண்டனர். அப்போது மணமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். நீடா அம்பானி, தனக்கு வரப்போகும் மருமகள் ராதிகாவை மனமார ஆசீர்வாதம் செய்தார்.


ஆனந்த் அம்பானி திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த்

பிரம்மாண்டமே அசந்துபோகும் விதத்தில் நடைபெற்ற திருமணம்

திருமணம் ஜூலை 12 -ம் தேதி, மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரம்மாண்ட வளாகத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் பிரபலங்கள் முதல் உலகளவில் பிரபலமானவர்கள்வரை பலர் கலந்துகொண்டனர். அவர்களை அழைத்து வருவதற்காக 100 விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்திருந்தார். அதேபோல், விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விருந்தினர்களை அழைத்து வருவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான லக்சுரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக எந்த பக்கம் திரும்பினாலும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் காணப்பட்டன.

உடையிலும் தெரிந்த ஆடம்பரம்

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆடம்பரம் அவர்களின் திருமண உடையிலும், அணிந்ததிருந்த நகைகளிலும் வெளிப்பட்டன. விழாவில் பங்கேற்ற அம்பானி குடும்பத்தினர் மட்டுமே பல நூறு கோடிகள் மதிப்பிலான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தனர். குறிப்பாக திருமண நிகழ்வில் ஆனந்த் அம்பானியின் உடை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனந்த் அணிந்திருந்த சிவப்பு நிற ஷெர்வானி, மரகதம் மற்றும் வைர பட்டன்களைக் கொண்டிருந்ததுடன், சிக்கலான தங்க வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 720 காரட் எடையுள்ள ஒரு பெரிய மரகதத்தின் மீது குனிந்த சிறுத்தையைக் கொண்ட ஒரு பெரிய வைர ப்ரூச் மற்றும் ஒரு ரீகல் நெக்லஸையும் அவர் அணிந்திருந்தார். தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட அவரது ஆடையின் விலை 214 கோடி ரூபாயாம். அத்துடன் அவர் அணிந்திருந்த சிவப்பு நிற தலைப்பாகையின் விலை மட்டும் ரூ.160 கோடி என சொல்லப்படுகிறது. மேலும் ஆனந்த் அம்பானி கட்டியிருந்த கடிகாரத்தின் விலை 54 கோடியாம்.


உடையை வடிவமைத்த வடிவமைப்பாளர் ஷலீனாவுடன் ஆனந்த் அம்பானி

மறுபுறம், ராதிகா மெர்ச்சண்ட் தனது திருமணத்திற்காக அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்த சிவப்பு மற்றும் வெள்ளை நிற லெஹெங்காவை அணிந்திருந்தார். அவரது திருமணக் குழுவானது 'பனேட்டர்' என்பதன் பாரம்பரிய அடையாளமாக இருந்தது. அந்த வகையில் ராதிகா மெர்ச்சண்டின் உடையின் மதிப்பும் பல கோடி என்று சொல்லப்படுகிறது. மணமக்கள் அல்லாமல், முகேஷ் அம்பானி-நீட்டா அம்பானி ஆகியோரும் உலகின் விலையுயர்ந்த ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி முதல் பிரதமர் மோடி வரை

ஜூலை 12-ம் தேதி திருமணம் முடிந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு வரவேற்பு விழா உள்ளிட்டவை நடைபெற்றன. அதில் நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதமர் மோடி வரை இந்தியாவின் பெரும்பாலான பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.


மணமக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி

விழாவில் பிரதமர் மோடி மணமக்களை வாழ்த்தியதன் வீடியோ லேட்டாக வெளியாகியிருந்தாலும், லேட்டஸ்ட்டாக பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனமாடியதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த தசாப்தத்தின் ஆடம்பர திருமண விழாவான அம்பானி வீட்டு கல்யாணத்தில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், சவுதி அராம்கோ சிஇஓ அமின் நாசர், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ, அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு கிஃப்டாக அளிக்கப்பட்ட தலா ரூ. 2 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள்!

மொத்த செலவு!

அம்பானி வீட்டு திருமண செலவுகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு கிஃப்டாக தலா ரூ. 2 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்துடன், தங்கம், வெள்ளி பரிசு பொருட்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உலகின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 2 ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள், திருமண சடங்கு நிகழ்வுகள், அழைப்பிதழ், திருமண கிஃப்ட் என பல ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 5,000 கோடி செலவாகியிருக்கலாம் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது. ஆனால் இது அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On 22 July 2024 5:17 PM GMT
ராணி

ராணி

Next Story