இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கேரள மாநிலத்தின் அழகிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஆலப்புழா. கொச்சி மாநகரத்தின் தெற்கு பகுதியிலும், கோட்டயத்தின் மேற்கு பகுதியிலும் அமைந்துள்ளது. ஆலப்புழாவிலிருந்து தெற்கு திசையில் கொல்லம் நகரமும், கொஞ்சம் தொலைவில் வர்க்கலா கடற்கரையும் அமைந்துள்ளன. கிழக்கின் வெனிஸ் நகரம் என்று அழைக்கப்படும் ஆலப்புழா, கேரளாவின் கடற்பயண வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தினைக் கொண்டிருக்கிறது. இன்றும், அது படகு பந்தயங்களுக்கும், காயல் விடுமுறைகளுக்கும், கடற்கரைகளுக்கும், கடற்பொருட்களுக்கும், தேங்காய் நார் தொழிலுக்கும் பெயர் பெற்றிருக்கிறது. கேரளாவில் படகு வீடுகளுக்கு மிகவும் பிரபலமான இடங்கள் ஆலப்புழா மற்றும் குமரகம். இதில் ஆலப்புழாவில் படகு வீடு கிடைப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதாக இருக்கும். காரணம், இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகு வீடுகள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உள்ளன. ஆலப்புழாவின் அழகை பற்றியும், ஆலப்புழாவில் எங்கெல்லாம் செல்லலாம் என்பதை பற்றியும் இந்த கட்டுரையில் காணலாம்.

ஆலப்புழா செல்வதற்கு போக்குவரத்து வசதிகள்:

கொச்சி சர்வதேச விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து சுமார் 85 கிமீ தொலைவில் உள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையமும் 160 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆலப்புழாவில் ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தின் மற்ற நகரங்களிலிருந்தும் எளிதில் ரயில் மூலம் பயணிக்கும் வகையில் ஆலப்புழா உள்ளது. சாலை போக்குவரத்தைப் பொறுத்த வரையில், பெங்களூர், சென்னை, கோழிக்கோடு என பல்வேறு நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.


வேம்பநாட் ஏரியில் அமைந்திருக்கும் பத்திரமண்ணல் எனும் சிறிய தீவு

ஆலப்புழாவில் கண்டு ரசிக்க வேண்டியவை

பத்திரமண்ணல்

ஆலப்புழா அருகில் உள்ள பத்திரமண்ணல் எனும் இந்த சிறிய தீவு, வேம்பநாட் ஏரியில் அமைந்துள்ளது. இந்த தீவுத் திட்டு 10 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இது கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. குமரகத்திலிருந்து ஃபெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகு மூலம் இந்த தீவுக்கு செல்லலாம். குமரகம் பேக்வாட்டர்ஸ் வழியாக படகில் பத்திரமண்ணல் நோக்கி பயணிக்கும் அனுபவம் ஒன்றே பயணிகளை மயங்கவைப்பதற்கு போதுமானதாக உள்ளது. இந்த தீவிற்கு வந்து செல்பவையாக 50 வகை பறவைகளும், நிரந்தரமாக தங்குபவையாக 91 வகைப் பறவைகளும் காணப்படுகின்றன.


ஆலப்புழாவின் மிக நீண்ட கடற்கரை மற்றும் கடற்பாலம்

ஆலப்புழா கடற்கரை

கடற்கரை என்றாலே மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதற்கென்றே சுற்றுலா செல்கிறார்கள் பலர். அதிலும் கேரள கடற்கரைகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆலப்புழா, உப்பளங்களுக்கு மட்டுமல்லாது, கடற்கரைகளுக்கும் பெயர் போனது. அரபிக் கடலின் ஒரு பகுதியே ஆலப்புழா கடற்கரை. ஆலப்புழா கடற்பாலம், ஆலப்புழா கலங்கரை விளக்கம் போன்றவை மிகவும் பிரபலமானவை. மலையாளம், தமிழ் உட்பட பல மொழித் திரைப்படங்களும் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன.


படகு வீடுகளிலிருக்கும் சிறப்பு அம்சங்கள் (டைனிங் இடம் மற்றும் திறந்தவெளி படுக்கை)

படகு வீடுகளின் சிறப்பு;

ஆலப்புழா என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது படகு வீடுகள்தான். ஆலப்புழாவுக்கு சென்ற பிறகு அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து படக்குத்துறையை அடைய வேண்டும். நீங்கள் முன்பதிவு செய்திருந்தால், அதற்கான நிறுவனத்தாரை தொடர்பு கொண்டு படகுக்கு செல்லலாம். படகில் சென்றவுடன் குளித்துவிட்டு, அவர்கள் தரும் சூடான பஜ்ஜி மற்றும் தேநீரை சாப்பிட்டுவிட்டு, சுற்றுலாவை தொடங்கலாம். ஆலப்புழா பேக் வாட்டரில் படகு செல்லும் போது, கேரளத்தின் அழகு நம்முடன் தவழ்ந்து மிதந்து வரும். படகு செல்லும் வழியில் மீன் கடைகள் நம் கண்ணை கவரும். அதில் நமக்கு பிடித்த மீன் வகைகளை வாங்கிக் கொடுத்தால், படகில் இருப்பவர்கள் அதனை சமைத்து கொடுப்பார்கள். தவிர, ஒவ்வொரு படகு இல்லங்களிலும் உணவுப் பட்டியல் உண்டு. அதற்கு ஏற்றவாறு உணவை ஆர்டர் செய்தும் சாப்பிடலாம். ஒவ்வொரு படகு வீட்டிலும் மூன்று பேர் இருப்பார்கள். ஒருவர் சமையல் தேவைக்காகவும், இருவர் மாறி மாறி படகை இயக்குவதற்குமான பணியிலும் இருப்பார்கள்.


ஆலப்புழாவில் சிறப்புமிக்க சொகுசு படகு வீடுகள்

படகு செல்லும் வழியின் இரண்டு பக்கங்களிலும் கரை மட்டுமே இருக்கும். நகரங்களில் வீட்டுக்கு வீடு பைக், கார்கள் இருப்பது போல, ஆலப்புழாவில் வசிக்கும் மக்களிடம் படகு இருக்கும். நீங்கள் படகில் செல்லும் போது, தங்களுடைய அன்றாட தேவைக்காக மக்கள் படகில் கிளம்பிச் செல்வதை பார்ப்பது புதுமையாக இருக்கும். படகு இல்லங்களின் வாடகை கட்டணம் 15 ஆயிரத்திலிருந்து 2 லட்சம் வரை ஒரு நாளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் செலுத்தும் கட்டணத்துக்கு ஏற்ப வசதிகள் இருக்கும். இரண்டு படுக்கை அறைகள், இலவச வைபை, காலை, மதியம், இரவு உணவுகள், பார்க்கிங் வசதி என உங்கள் தேவைக்கு ஏற்ப படகு இல்லங்கள் தரப்படும்.

ஆழப்புழாவிற்கு செல்ல ஏற்ற காலம் எப்போது?

அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களில் ஆலப்புழாவுக்கு பயணிக்கலாம். ஒரு வேளை மழைக்காலத்தில் பயணிக்க விரும்பினால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பயணத்தை திட்டமிடலாம். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

Updated On 8 April 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story