அக்னி நட்சத்திரத்தில் (கத்தரியில்) என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
கோடையில், அதீத வெப்பம் நிலவக் கூடிய காலமே "அக்னி நட்சத்திரம்". இது "கத்தரி வெயில்" என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில் எவ்வித சுப காரியங்களையும், புதிய பேச்சுவார்த்தைகளையும் பெரும்பாலானோர் நடத்துவதில்லை. ஜோதிட சாஸ்திரத்தில் இது அக்னி நட்சத்திர தோஷம் என்று கூறப்படுகிறது. ஜோதிடப்படி 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் நாம் அறிந்தவை. அப்படி இருக்கும்போது அக்னி நட்சத்திரம் என்பது என்ன? இந்த கால கட்டத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? எவற்றை எல்லாம் செய்யாமல் தவிர்க்கலாம் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
"அக்னி நட்சத்திரம்" என்றால் என்ன?
சூரியனை அடிப்படையாக வைத்தே நம்முடைய பஞ்சாங்க முறைகள் அனைத்தும் கணிக்கப்படுகின்றன. சித்திரை மாத இறுதி வாரத்தில் தொடங்கி வைகாசி முதல் வாரம்வரை சூரியன் உச்சம் பெறும் காலகட்டத்தில் மிக அதிக வெப்பம் பூமியின் மீது விழும். இதைத்தான் "அக்னி நட்சத்திரம்" என்கிறோம். பஞ்சாங்கத்தின் படி பரணி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் துவங்கி, ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம்வரை சூரியன் ஆட்சி புரியும் காலம் அக்னி நட்சத்திர காலம் எனப்படுகிறது.
"கத்தரி வெயில்" காலம்
அக்னி நட்சத்திரம் அதாவது கத்தரி வெயில் வழக்கமாக 25 நாட்களுக்கு நீடிக்கும். இந்த ஆண்டு கத்தரி வெயில் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை இது நீடிக்கிறது. அந்த வகையில் கத்தரி வெயில் தற்போது நடைபெற்று வருகிறது.
கிரகப்பிரவேசம், பூமி பூஜை உள்ளிட்டவற்றை கத்தரியில் செய்யக்கூடாது
கத்தரியில் திருமணம் செய்யலாமா?
அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம் செய்யலாமா என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் சாஸ்திரத்தின்படி, அக்னி நட்சத்திர காலத்தில் திருமணத்தை தாராளமாக செய்யலாம். மேலும், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தையும் நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம்.
கிரகப்பிரவேசம் செய்யலாமா?
இந்த நாட்களில் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், பூமி பூஜை செய்தல் போன்றவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
குழந்தை பிறப்பு?
நமது கலாசாரப்படி, ஆடி மாதத்தில் புதுமண தம்பதிக்கு ஆடி சீர் வைப்பது வழக்கம். சீர் வைத்து புதுப்பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவார்கள். ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை கடும் வெப்ப காலம் என்பதால் பிரசவித்த பெண்களுக்கு உடல் உபாதைகள், நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இதை தவிர்க்கும் நோக்கிலேயே, ஆடியில் பெண்கள் கருத்தரிப்பதை தவிர்ப்பதற்காக தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கம் உருவானது. விதிப்படி சூரியன் உச்சத்தில் இருக்கும்போது குழந்தை பிறந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
சீமந்தம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்டவற்றை அக்னி நட்சத்திர காலத்தில் செய்யலாம்
மேலே குறிப்பிட்டுள்ளவை தவிரி அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து கீழே காணலாம்.
அக்னி நட்சத்திரத்தில் என்னவெல்லாம் செய்யலாம்?
சீமந்தம், மஞ்சள் நீராட்டு விழா, வாடகைக்கு வீடு மாறுதல், திருமண மண்டபம், கடைகள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகளை துவங்குதல் உள்ளிட்டவை செய்வதில் எந்த தவறும் இல்லை. தண்ணீர் பந்தல் அமைக்கலாம். தோஷ நிவர்த்தி பூஜைகள், நவகிரக சாந்தி வழிபாடுகளும் செய்யலாம். விசிறி, குடை, செருப்பு உள்ளிட்டவற்றை தானம் வழங்கலாம். எலுமிச்சை, தயிர் ஆகியவற்றை கோவில்களுக்கு தானம் வழங்கலாம்.
அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை?
சொந்த வீடு கட்டி குடியேறுவது, சொந்த வீடு கட்ட துவங்குவது, வாசற்கால் வைப்பது, கிணறு வெட்டுவது, கூரை, ஓடு வேய்வது, செடிகளை புதிதாக நடுதல், விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல், தீட்சை வாங்குதல், தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.
கோயில்களில் தோஷ நிவர்த்தி
அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு, அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள். கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் கோடை விழா நடைபெறும். மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.
வெயிலின் உச்ச நேரமான நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம்
கத்தரி வெயிலுக்கான பொதுவான "டிப்ஸ்"
வழக்கமாக கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும். எனவே அவசியமின்றி மக்கள் பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்க்கலாம். அவசியம் இல்லையெனில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம். அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை மதிய நேரங்களில் செய்வதைத் தவிர்க்கலாம். வெளியே செல்லும்போது குடை மற்றும் கையில் தண்ணீர் எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துக்கொள்ளலாம். மேலும் துணியால் முகத்தை மூடியபடியும் பயணிக்கலாம். மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பது நல்லது.
தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அத்துடன் நீர் சத்து அதிகமாக இருக்கக்கூடிய நீர் மோர் அதிகம் குடிப்பதும், குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதும் உடல் சூட்டை குறைக்கும். அதோடு, பழங்கள், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படாத பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் பழரசம் உள்ளிட்டவற்றை அருந்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உப்பு கலந்த எலுமிச்சை சாறு மற்றும் சிட்ரஸ் சத்து மிகுந்த பழங்களை சாப்பிடலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சப்ஜா விதை, பாதாம் பிசின் உள்ளிட்டவற்றை சேர்த்த பழரசத்தையும் அருந்தலாம். பாட்டில் மட்டும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை குடிப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும்.
உடை என்று எடுத்துக்கொண்டால், பருத்தி ஆடைகளை அணியலாம். காற்றோட்டமான உடைகள் அணிவது நல்லது. காலை, இரவு என இரண்டு வேளையும் குளிக்கலாம். குளிப்பதற்கு அதிகம் ரசாயனம் கலந்த சோப்புகளை பயன்படுத்தாமல், இயற்கையான கடலை மாவு, பயித்த மாவு வகைகளை பயன்படுத்தலாம்.