இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுவாகவே மனிதன் ஏதாவது வித்தியாசமான செயல்களை செய்தாலே ‘என்ன வித்த காமிக்கிரியா’ என்று சொல்லுவார்கள். ஆனால் வில் என்ற ஆயுதத்தை ஏந்தி பல வித்தைகளை கலந்து வில்வித்தை என்னும் போட்டியில் பங்கேற்று 5 உலக சாதனைகளையும் 3 முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார் சர்வதேச வில்வித்தை வீராங்கனை சஞ்சனா. வில்வித்தை போட்டியில் பலர் சாதித்திருந்தாலும் வெறும் 3 வயதில் 3.50 மணி நேரத்தில் இடைவிடாமல் 1111 வில்லம்பை எய்தி உலக சாதனை படைத்த பெருமை இச்சிறுமியையே சேரும். இதுதவிர மாநில போட்டியில் 1 நிமிடத்தில் 3 தனி வில்லம்புகளில் சரியாக அம்பு எய்தி தங்க பதக்கம் வென்று இரண்டாம் உலக சாதனை புரிந்தாள். அடுத்து கண்களை கட்டிக்கொண்டு அம்பு எய்தல், தலைகீழாக இருந்து அம்பு எய்தல், ஆணி மேல் நின்று கீழே பார்த்து மேல்நோக்கி அம்பு எய்தல் என்று 7 வயதிற்குள் 5 உலக சாதனை படைத்தது பெரிய சாதனையே.

இந்த சாதனைகளை படைத்த சஞ்சனாவின் முழு பெயர் ஹு.டாக்டர் யூ.பி.சஞ்சனா. இவள் தற்போது சென்னையிலுள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து கொண்டு வருகிறாள். வில்வித்தையையே உயிர்மூச்சாக கொண்டிருக்கும் சஞ்சனா இதுவரை 366 விருதுகளும் மாநில அளவில் 10 தங்க பதக்கங்களும், 2 வெள்ளி பதக்கங்களும், 1 வெண்கலமும் பெற்றுள்ளார். இதுதவிர தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியிடமும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமும் பரிசுகளை பெற்றிருக்கிறார். வெறும் வில்வித்தை விளையாட்டில் மட்டும் சாதனை புரியாமல், பலருக்கும் சேவை செய்யும் விதமாக ஒரு அறக்கட்டளையையும் நிறுவி வாழ்க்கையிலும் சாதனை புரிந்து வருகிறாள் இச்சிறுமி. இப்படி விளையாட்டிலும், வாழ்க்கையிலும் அசத்தி வரும் இச்சிறுமி அளித்துள்ள சுவாரசியமான நேர்காணலை இப்பதிவில் காண்போம்.

வில்வித்தை விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

நான் என்னுடைய இரண்டாம் பிறந்தநாள் கொண்டாடிய போது என் தந்தையின் நண்பர் எனக்கு பிளாஸ்டிக் வில், அம்பை பரிசளித்தார். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது அந்த வில் இல்லாமல் சாப்பிடமாட்டேன், தூங்கமாட்டேன் என்று என் பெற்றோர்கள் கூறுவார்கள். ஒரு நாள் என் பெற்றோர்கள் அதை உடைத்து விடவே, நான் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு புது வில், அம்பை வாங்கலாம் என்று சென்றேன். அப்போதுதான் வில்வித்தை இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றும், வில்வித்தையில் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்றும் என் பெற்றோர்கள் அறிந்தார்கள். என்னை அப்போதே வில்வித்தை பயிற்சி வகுப்பில் சேர்ப்பதற்காக அழைத்து சென்றார்கள். ஆனால் அங்கு, 10 வயதுக்கு பிறகு அழைத்து வாருங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.


வில்வித்தை பயிற்சிபெறும் சஞ்சனா

அப்போது என் தந்தையின் நண்பர் ஒருவர் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி ஹு மாஸ்டரிடம் அனுப்பினார். அவர் என்னை பார்த்தவுடன், ‘இவள் கண்களில் வெறி தெரிகிறது. நிச்சயம் இவள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று பெரிய ஆளாக வருவாள்’ என்று கூறினார். உடனே நான் அவர் கொடுத்த வில்லில் தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு இடைவிடாமல் அம்பை எய்தினேன். மாஸ்டர் வில்லை திரும்ப தர சொல்லி கேட்டபோது நான் அதை தரவே இல்லை. உடனே என் மாஸ்டரும் நீயே வைத்துக்கொள் என்று அந்த வில்லை எனக்கே தந்துவிட்டார். அவர் கொடுத்த அந்த வில்லைதான், நான் இன்று வரை பயன்படுத்துகிறேன். அதை கொண்டுதான் 5 உலக சாதனைகளையும் படைத்தேன்.

தமிழ்நாடு வில்வித்தை வீராங்கனை என்று உங்களை அழைத்த போது உங்கள் பெற்றோர்கள் எப்படி உணர்ந்தார்கள்?

என் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். அதை விட என் மாஸ்டர் அதிக மகிழ்ச்சியில் இருந்தார்.

வில்லை தூக்குவதற்கு சிரமமாக இல்லையா?

என் குருநாதர் அருகில் இருக்கும் வரை எனக்கு பயமும் கிடையாது, கஷ்டமும் கிடையாது. என் மாஸ்டர் என்னை மலை உச்சியில் இருந்து குதிக்க சொன்னாலும் குதித்து விடுவேன். ஏனென்றால் குதிக்க சொன்ன அவரே என்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

வில்வித்தையின் போது காயங்கள் ஏற்பட்டதுண்டா?

எனக்கு எந்த ஒரு அடியும் படாது. என் வில்லுக்குதான் பல அடிகள் படும். நாளைக்கு போட்டி என்றால் இன்று என்னுடைய வில் சேதமாகிவிடும். சிலர் வில்லை தட்டிவிட்டு செல்வார்கள். இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், நான் இது குறித்தெல்லாம் வருந்துவது இல்லை. இது போல் அசம்பாவிதங்கள் ஏற்படும் போது, நான் புது வில்லை வாங்கி மாலை 7 முதல் 11 மணி வரை பயிற்சி செய்து மீண்டும் காலை 4 முதல் 6.30 மணி வரை பயிற்சி மேற்கொண்டு 7 மணிக்கு போட்டியில் பங்கேற்பேன். ஒருபோதும் எதற்கும் மனம் தளர்ந்து சோர்வாகமாட்டேன்.


போட்டியில் கலந்துகொண்ட தருணம்

உங்களை பயிற்சிக்கு அழைத்து செல்வது யார்?

அம்மாதான்.

பல பள்ளிகளுக்கு விருந்தினராக செல்லும் தருணம் எப்படி இருக்கிறது?

நான் அத்தருணத்தில் அளவில்லா மகிழ்ச்சியில் இருப்பேன். இதுவரை 185 பள்ளிகளுக்கு விருந்தினராக சென்றிருக்கிறேன். அவ்விழா மேடைகளில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் இருக்கக் கூடிய உறவு முறை பற்றியும், ஆசிரியர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும், பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுவேன்.

உங்கள் சாதனைகளை கண்டு உங்கள் நண்பர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?

என் நண்பர்கள் பலரும் இது போல் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்றார்கள். என் ஆசிரியர்கள் பலரும் என்னை ஆசீர்வதித்தார்கள். சில நண்பர்கள் சாதாரணமாகதான் நடந்து கொள்வார்கள். சில நண்பர்கள் ‘நீ என்னப்பா பெரிய ஆள் ஆயிட்ட, ஃபோன் பண்ணா எடுக்க மாட்ட, பிஸியா இருப்ப’ என்று கிண்டலும் செய்வார்கள்.

நீங்கள் யாரிடம் மன்னிப்பு மற்றும் நன்றி தெரிவிக்க விரும்புகிறீர்கள்?

யாரிடமும் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. ஆனால், என் வில்வித்தை மாஸ்டர்க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எனக்காக வில்வித்தை போன்ற பல பொருட்கள் வாங்கி தந்துள்ளார். அதேபோல் எந்த பொருள் வேண்டுமானாலும் கேள் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் நான் அவருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் வருங்கால திட்டங்கள் என்ன?

வில்வித்தையில் இன்னும் அதிக விருதுகள் பெற வேண்டும். அதேபோல் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்று என் குருநாதருக்கும், என் நண்பர்களுக்கும் எனக்காக கஷ்டப்படும் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதே என் வருங்கால திட்டம், லட்சியம் எல்லாம்.

உங்களுக்கு வரும் பரிசுத் தொகைகளை நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதுவரை நான் 8 லட்சம் ரூபாய் பரிசு பெற்றிருக்கிறேன். அந்த 8 லட்சம் ரூபாயை நான் நடத்தும் ‘நான்கு கரங்கள்’ அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறேன். எனக்கு வரும் பொன்னாடைகளை பாவாடை சட்டையாக தைத்து கொடுப்பேன். உறவுகள் இன்றி உயிரிழப்போரின் உடல்களை, நானும் என் அறக்கட்டளை குழுவும் சேர்ந்து அடக்கம் செய்வோம். பல பேருக்கு அறக்கட்டளையின் மூலம் ஸ்கூல் பேக், புக்ஸ், பென்சில் போன்ற பல பொருட்களை வாங்கி கொடுக்கிறோம். மேலும் அறக்கட்டளை சார்பாக அரசு பள்ளிகளில் நல்ல கழிப்பறையை கட்ட திட்டம் தீட்டியுள்ளோம். இதை செய்வதற்கு நடிகர் ஒருவரும் எனக்கு உதவி புரிகிறார்.


தனது மாஸ்டருடன் சஞ்சனா

உங்கள் குருநாதரிடம் திட்டு வாங்கியது உண்டா?

முன்னர் கூறியது போல சில சமயங்களில் வில் உடைந்துவிடும். அப்போது என் குருநாதர், ‘இது உன்னுடைய வில்-அம்பு தானே இதை நீதான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உனக்கு பதிலாக உன் பெற்றோர்கள் உன் வில்-அம்பை பார்த்து கொள்வார்களா’ என்று திட்டுவார். இது தவிர வேறு எதற்கும் திட்டு வாங்கியதில்லை.

உங்கள் வயதில் இருப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

நாம் தோல்வி அடைந்து விட்டால் அது குறித்து கவலைப்பட கூடாது. என் குருநாதர் என்னிடம், ‘விழ விழ எழுவேன், விழ விழ எழுவேன், ஒன்று விழ ஒன்று விழ ஒன்பதாய் எழுவேன், விஸ்வரூபம் பெறுவேன்’ என்று கூறுவார். இதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். தோல்வியை எண்ணி வருந்த வேண்டாம். நாம் ஜெயிப்பதற்கு குதிரை போல் ஓட வேண்டும். ஜெயித்ததை தக்கவைத்து கொள்ள குதிரையை விட வேகமாக ஓட வேண்டும்.

சொல்லப்போனால் எனக்கு வில்வித்தையை விட குத்துச்சண்டை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதில் அடி வாங்கி கீழே விழுந்தவன் தோற்றுவிட்டான் என்று அர்த்தமில்லை. கீழே விழுந்த 10 நொடிக்குள் எழவில்லை என்றால் மட்டுமே தோற்றதாக அர்த்தம். இதன் காரணமாகவே குத்துச்சண்டை எனக்கு மிகவும் பிடிக்கும்.

படிப்பையும், வில்வித்தையையும் எப்படி சமமாக சமாளிக்கிறீர்கள்?

நான் வகுப்பிலும் முதல் மதிப்பெண் அல்லது இரண்டாம் மதிப்பெண்தான் எடுப்பேன். பள்ளியிலிருந்து வந்தவுடன் 10 நிமிடங்களுக்கு ஓய்வெடுத்துவிட்டு அடுத்து படிக்க தொடங்கிடுவேன். தினம் தினம் நடத்தும் பாடத்தை அன்றைக்கே படித்து முடித்து விடுவேன். தேர்வு நடக்கும் சமயத்தில் ஒருமுறை படித்துவிட்டு தேர்வெழுதுவேன். நாள்தோறும் படித்துவிடுவதால், எனக்கு விளையாட்டும் படிப்பும் சிரமமாக இருப்பதில்லை. நான் பள்ளிக்கு செல்லாத நாட்களில் என் நண்பர்களிடமிருந்து நடத்திய பாடத்தை கேட்டு பெற்று பாடத்தை சரியாக படித்து முடித்து விடுவேன். அதனால் விளையாட்டினால் என் பள்ளி படிப்பு பாதிப்பதில்லை.

அதிக வெற்றியை கண்ட நீங்கள் போட்டியில் தோல்வியை கண்டுருக்கிறீர்களா?

நிறைய போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கிறேன். என்னுடைய குரு, ‘சஞ்சனா நீ 99 முறை தோற்று விடு, ஆனால் 100 வது முறையிலிருந்து நீ தோல்வியை மறந்து வெறும் வெற்றியை மட்டுமே காண்பாய்’ என்று கூறுவார். அதனால் தோல்வியால் எனக்கு கவலையில்லை. அது எனக்கொரு பாடமே.

நீங்கள் வாங்கிய விருதுகளை யாருக்கு அர்ப்பணிக்கிறீர்கள்?

முதலில் எனது குரு ஷிஹான் ஹுசைனி ஹுக்கு அர்ப்பணிக்கிறேன். இரண்டாவதாக என்னையும், என் சாதனைகளையும் இந்த உலகிற்கு வெளிச்சப்படுத்திய ஊடகத்திற்கும், இறுதியாக பாலியல் வன்கொடுமையால் இறந்த என் சகோதரிகளுக்கும், இதுவரை நான் பெற்ற விருதுகளை அர்ப்பணிக்கிறேன்.

சஞ்சனாவுக்கு பிடித்தவைகள்:

பிடித்த புத்தகம்?

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயாவின் அக்னி சிறகுகள் புத்தகம், காமராஜர் புத்தகம் என்று பல தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்களை படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிடித்த பாடல்?

சிங்கப்பெண்ணே பாடல்

பிடித்த கதாநாயகன்?

எனக்கு பிடித்த முதல் கதாநாயகன் என்னுடைய குரு ஷிஹான் ஹுசைனி ஹு-தான். அடுத்ததாக அப்பா மற்றும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்.

Updated On 12 Dec 2023 12:14 AM IST
ராணி

ராணி

Next Story