கோபத்தை கட்டுப்படுத்த ஒரு பேப்பர், பேனா போதும்! - விளக்குகிறார் தீபா சிவகலை
உலக பொதுமறையாம் திருக்குறளை வள்ளுவ பெருந்தகை அறம், பொருள், இன்பம் என மூன்றாக பிரித்து நமக்கு வழங்கியுள்ள போதிலும், அவற்றில் வெகு சில குறள்கள் மட்டுமே இங்கு பிரபலமாக பேசப்படுகின்றன. மீதமுள்ள குறள்கள் அனைத்தும் ஒரு தோண்டப்படாத தங்க புதையல் போல் இன்றும் இருந்து வருகிறது. இந்நிலையில், திருக்குறளில் கூறப்பட்டுள்ள தகவல்களை சாமானியரும் புரிந்துக் கொள்ளும்படி எளிய தமிழில் விளக்கம் கூறி நம் வாழ்வியலோடு பொருத்திப்பார்க்கும் பழக்கத்தை வளர்த்து வருகிறார் திருக்குறள் எளிய தமிழ் விளக்குனர் தீபா சிவகலை. இது தவிர இவர் சுய ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கும், ஒருவரின் திறன்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் தேவையான விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அவ்வப்போது விளக்கமளித்து வரும் நிலையில், இந்த பதிவில் நம்முடைய கோபம், அழுகை, ஏமாற்றம், தனிமை போன்ற உணர்வுகளை எப்படி கையாளலாம் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இன்றைய சூழலில் தமிழ் மொழியில் ஆங்கில கலப்பு என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. பல நபர்கள் நம் தாய்மொழியே தெரிந்திருந்தாலும் ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாக நினைக்கிறார்கள். இதனை ஒரு மொழி ஆர்வலராக எப்படி பார்க்கீறீர்கள்?
திருக்குறள் எளிய தமிழ் விளக்குனர் தீபா சிவகலை
இதற்கு முதல் காரணமாக நான் கூற விரும்புவது நமது கல்வி முறையைதான். காரணம் இன்று தமிழில் பேச விரும்புபவர்கள் கூட முயற்சி செய்துதான் ஆங்கில கலப்பில்லாமல் பேசுகிறார்கள். அந்த அளவிற்கு நமது கல்வி முறையில் ஆங்கில மொழியின் தாக்கம் இருக்கிறது. உதாரணமாக பல பள்ளிகளில் இன்று தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். இந்த மனநிலை எதனால் வந்தது? இதற்கு காரணம் தாழ்வு மனப்பான்மைதான். ஒவ்வொரு மனிதரும் அவரவர் தாய் மொழியை உயர்வானதாக கருத வேண்டும். நம் மொழியை மிஞ்சிய வேறொரு மொழி இல்லை என்கிற சிந்தனை வந்தாலே ஆங்கிலத்தில் பேசுவதை அவமானமாக நினைக்கும் மனநிலை வந்துவிடும். ஆனால் இன்றைய சூழலில் மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து வருகிறது. ஏனெனில் நமது தமிழ் மொழியை நாம் தெளிவாக பேசும்போது நமக்குள் கம்பீரம் பிறக்கிறது. அதனை இன்று பலரும் உணர்ந்து தெளிவான தமிழ் மொழியில் பேச முயற்சிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த மனநிலை எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை தரலாம்.
பொதுவாக பல மனிதர்கள் வாழ்க்கையில் ஏதாவது மோசமான நிகழ்வுகளை சந்தித்தால், சோர்ந்து முடங்கி விடுவார்கள். அதை நினைத்தே பல நாட்கள் கலங்கி நிற்பார்கள். அந்த வகையில் அப்படியான சூழலை நாம் எப்படி கடந்து செல்லலாம்?
தாளாத துக்கம் மனதில் இருந்தால் அழுது கொட்டி தீர்த்து விடுவது நல்லது
அந்த சூழலை நாம் கடந்து செல்வதற்கு என தனி திறனோ, பக்குவமோ தேவை இல்லை. குறிப்பிட்ட கால நேரமே போதுமானது. தாளாத துக்கம் நம் மனதில் இருந்தால் அழுது கொட்டி தீர்த்து விட வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதை அடுத்தவரிடம் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களுக்குள்ளாகவே அழுது தீர்த்துவிடுங்கள். ஏன், அதை எழுதிக் கூட வைத்து உங்கள் மனதை தேற்றுங்கள். இன்று பலருக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. நமது பல உணர்வுகளை எழுதுவதன் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக ஏதோ ஒரு சூழலில் கட்டுப்படுத்த முடியாத கோபம் உங்களுக்கு வருகிறது என்றால். உங்கள் மனதில் பட்டதை, ஆதங்கத்தை ஒரு பேப்பரில் வார்த்தைகளாக எழுதுங்கள். வலிகள் வரிகளாக மாறும்போது கோவமும், பாரமும் தானாக குறையும். பின் எழுதிய அந்த காகிதத்தை ஒரு மண் சட்டியில் வைத்து எரித்து விடுங்கள். இது கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கான நல்ல தீர்வு. இதன் மூலம் நமக்கும் பாதிப்பில்லாமல், நம்மை காயப்படுத்தியவருக்கும் வலி தராமல் அந்த தருணத்தை நம்மால் கடந்து சென்றுவிட முடியும்.
அப்படி என்றால் பல விஷயங்களை கடந்து செல்ல கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது என கூறுகிறீர்களா?
நிச்சயம் கிடையாது, கோபம் நமக்கு இல்லாமல் போய்விட்டால் பல விஷயங்களை நாம் இழந்துவிடுவோம். அரசியல் துவங்கி வாழ்வியல்வரை எந்த ஒரு விஷயத்திலும் நாம் கோபத்தை வெளிப்படுத்தாவிட்டால் மாற்றம் கிடைக்காது. உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை கூட சொல்லலாம். அன்று நாம் போராட்ட களத்தை சந்திக்காமல், கோபத்தை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் நமது பாரம்பரிய பெருமையை காப்பாற்றி இருக்க முடியாது. அதனால் கோபம் தவறல்ல, ஆனால் எல்லை மீறிய கோபம் ஆபத்தானது. மேலும் கட்டுப்படுத்த முடியாத, மாற்றத்தை கொண்டு வரமுடியாத விஷயங்களில் கோபம் கொள்வது தேவையற்ற விஷயமாகும். அது நமக்கு மன உளைச்சலையும் தரலாம்.
கோபம் தவறல்ல; எல்லை மீறிய கோபம் ஆபத்தானது
தனிமை, ஏமாற்றம் மற்றும் அழுகை பற்றிய உங்கள் பார்வை என்ன?
தனிமை என்பது நல்ல விஷயம்தான். ஒரு மனிதன் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு10 நிமிடமாவது தனிமையில் இருந்து பழக வேண்டும். காரணம் அந்த சமயத்தில்தான் நமது வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனை நமக்கு தோன்றும். நாள் முழுவதும் ஏதோ ஒரு வேலையை செய்துக்கொண்டு பொழுதுப்போக்கான விஷயங்களில் கவனம் செலுத்தி ஓடிக்கொண்டே இருக்கும் நாம், ஒரு நிமிடம் கூட அடுத்து நமது வாழ்க்கையில் என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்திப்பதே கிடையாது. அந்த சிந்தனையை தூண்டும் இடமாக தனிமையை பார்க்கிறேன். அதே போல் ஏமாற்றம் என்பது எல்லோருடைய வாழ்விலும் நடக்கக்கூடிய சம்பவம்தான். இந்த உலகத்தில் யாரும் யாரையும் ஏமாற்றக்கூடாது. இருப்பினும் ஏமாறும் சூழல் வந்தால் அதை கடந்து செல்லும் யுக்தியை கண்டுபிடித்து அடுத்தகட்டத்திற்கு பயணிக்க வேண்டும். வலி கொடுத்தால் அழுது விடுங்கள் இருப்பினும் அந்த அழுகையை யாருக்கும் வெளிக்காட்டாமல் தனிமையில் அழுது கொட்டி தீர்த்துவிடுங்கள். யாரும் நம்மை பார்த்து பரிதாபப்பட தேவையில்லை பக்குவமான மனநிலைக்கு நம்மை நாமே கொண்டு செல்ல இதுதான் ஒரே வழி.
இன்று பல நபர்கள் என்னதான் நாம் வேலை செய்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறதே என்ற ஏக்கத்துடனேயே பணிக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பணியில் hard work மட்டுமே செய்தால் போதாது; smart work செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்
எந்த ஒரு விஷயமாகட்டும் அல்லது வேலையாகட்டும், அதை நாம் துவங்கும்போது சில நாட்களுக்கு அதில் நாம் பலனை எதிர்பார்க்கக் கூடாது. நம் மூதாதையர்கள் கூறியதுபோல கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்ற மனநிலையில்தான் நாம் இருக்க வேண்டும். இருப்பினும் ஒரு கட்டத்தில் இத்தனை வேலைகள் செய்தும் நமக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என தோன்றும். அந்த சமயம் ஒரு விஷயத்தை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதுமே hard work மட்டுமே நாம் செய்தால் போதாது, சில யுக்திகளை கண்டுபிடித்து smart work செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான அறிவையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வெற்றி என்பது மன நிறைவான வாழ்க்கையே தவிர கட்டாயமான ஒரு விஷயம் அல்ல. நமக்கு பிடித்த விஷயத்தை தொடர்ந்து செய்தாலே வெற்றி தானாக தேடி வரும். ஒரு அம்மா தன்னுடைய குழந்தைக்கு தேவையான விஷயத்தை செய்யும்போது, அதனால் தனக்கு பலன் கிடைக்குமா என எதிர்பார்ப்பது கிடையாது. அந்த மனநிலையைதான் இந்த மாதிரியான விஷயத்தில் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த விஷயத்தை தொடர்ந்து செய்யுங்கள் வெற்றி தானாக உங்களை தேடி வரும்.