இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடற்கரைகளையும், கடலையும் விரும்பாதவர்கள் மிகவும் குறைவே. வெள்ளை மணல் கொட்டிக்கிடக்கும் கடற்கரை, நீல நிற கடல் நீர், ஆர்ப்பாட்டமின்றி கரையைத் தொடும் அலைகள். இப்படி இந்தியாவில் அழகான கடற்கரைகளுக்கு பஞ்சமில்லை. இந்திய வரைபடத்தில் அரபிக் கடலில் சிறு சிறு புள்ளிகள் இருக்கும். அது எல்லாம் தீவுக் கூட்டங்கள். அவையெல்லாம் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட லட்சத்தீவுகள்தான். அவை இயற்கையை விரும்புபவர்களுக்கும், ஸ்கூபா டைவிங், நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் சாகச பிரியர்களுக்கும் சொர்க்க பூமி என்றே சொல்லலாம். அரபிக்கடல் பகுதியில் கேரள கடற்கரையில் இருந்து சுமார் 400 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய தீவுகள் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு "மறைக்கப்பட்ட ரத்தினம்" என்று நீண்ட காலமாக சொல்லப்படுகிறது. கவரத்தியை தலைமையிடமாக கொண்ட இந்த தீவில் அகத்தி, அமினி, கட்மத், அந்த்ரூத், மினிகாய், கில்தான், சேத்லத், பித்ரா உள்ளிட்ட 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை மிகவும் குறைவுதான். ஆனாலும் லட்சத்தீவில் மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த தீவுக்கூட்டத்தில், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. லட்சத்தீவுகளில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலையும் அதன் சிறப்பம்சங்களையும் இக்கட்டுரையில் காணலாம்.

லட்சத்தீவின் முக்கிய தொழில்

மீன் பிடித்தல், மீன் பதப்படுத்துதல் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல் போன்ற தொழில்கள் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் லட்சத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதால் தேங்காய் வியாபாரம் மற்றும் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. அதேபோல், சுற்றுலா மூலம்தான் இவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. லட்சத்தீவிற்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


லட்சத்தீவின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல்

லட்சத்தீவில் சுற்றிப்பார்க்க வேண்டிய தீவுகள்

மினிகாய் தீவு:

இந்தியாவின் மிகச் சிறந்த அழகிய தீவுகளில் ஒன்றாகக் கருதப்படும் மினிகாய் தீவு, அரேபியக் கடலின் பரந்த பரப்பிற்கு மத்தியில் அமைந்துள்ளது. படகு சவாரி, ஸ்கூபா டைவிங் மற்றும் பல கடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு இது பிரபலமானது. பல ஆடம்பர கடற்கரை விடுதிகள் தனிமை தேடுபவர்களுக்கு ஒருவித அமைதியை வழங்கி பயணிகளை கவர்கிறது. லட்சத்தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ள மினிகாய் தீவுகள் உள்ளூர் மக்களால் மாலிகாவ் என்று அழைக்கப்படுகிறது. கொச்சியிலிருந்து 215 கடல் மைல் தொலைவில் உள்ள இத்தீவு லட்சத்தீவுகளில் 2 ஆவது பெரிய தீவாகும். தீவுக்கூட்டத்தின் தென்மேற்குப் பகுதி சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும். இந்த இடம் மற்றும் அதன் கடற்கரைகள் 1885-இல் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்திற்கு பிரபலமானது.

கடல் அருங்காட்சியகம்:

கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கலை பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக இந்த அருங்காட்சியகத்தில் பலவிதமான மீன்கள் உள்ளன. கடல்வாழ் உயிரினங்களை பற்றியும், அதன் முக்கியத்துவதை பற்றியும் அறிந்து கொள்வதற்காக இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டது. இங்கு காட்சியமைக்கப் பட்டிருக்கும் சுறா எலும்புக்கூடுகள் உலகம் முழுவதும் பிரபலம்.


மினிகாய் தீவு மற்றும் கடல் அருங்காட்சியகம்

அகட்டி தீவு:

ஸ்நோர்கெலிங் தொடங்கி கண்ணாடி படகு சவாரி செய்வது வரை அனைத்து வகையான நீர் விளையாட்டுகளுக்கும் அகத்தி தீவு சிறந்த இடமாகும். விமான நிலையத்திலிருந்து லகூன் கடற்கரையை அடைய 20 நிமிடங்கள் ஆகிறது. அகட்டி தீவுகளுக்குச் செல்லும்போது உள்ளூர் உணவுகள் மற்றும் உலர்ந்த அல்லது புகையூட்டப்படும் "டுனா" மீனை சுவைப்பது மிகவும் பிரபலம். கடற்கரையின் நிலவொளியில் இரவு உணவு, சூரிய குளியல் மற்றும் அன்புக்குரியவர்களுடன் படகு சவாரி செய்ய சிறந்த இடம் இந்த அகட்டி தீவு.

பங்காரம் தீவு:

தேனிலவுக்கு ஏற்ற இடமாக கருதப்படும் இந்த தீவில் உற்சாகமான நீர் விளையாட்டுகள், தீவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக மாற்றுகிறது. சுற்றுலாப் பயணிகளால் பெரும்பாலும் சொர்க்கம் என்றே அழைக்கப்படும் இந்த பங்காரம் தீவு, வெள்ளை மணல் மற்றும் ஆழமற்ற கடற்கரைகளுக்கு பெயர் போனது. இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்கள் என அனைவருக்கும் பிடித்த இடமாக இந்த தீவு அமைந்துள்ளது.


அகட்டி மற்றும் பங்காரம் தீவுகள்

கத்மட் தீவு:

பெரிய லகுன் மற்றும் வளமான கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாக கட்மட் தீவு திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தீவு அழகிய ஆழமற்ற வெள்ளி கடற்கரைகளுக்கு பெயர் போனது. லட்சத்தீவுகளில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கத்மட் தீவு, ஒரு பவளப்பாறையி்ன மேல் அமைந்துள்ளது. இந்தத் தீவில் பரந்த அளவிலான நீர் விளையாட்டுகளையும், தனிமையான நேரங்களையும் அனுபவிக்க முடியும். தீவில் அரிதாகவே மக்கள் நடமாட்டம் உள்ளதால் இது மிகவும் அமைதியான இடமாக திகழ்கிறது. கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளதால், இங்கு முதன்மையான வருமானம் மீன்பிடித்தலே. இந்த தீவில் ஸ்நோர்கெலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் மிகவும் பிரபலம் .

கவரட்டி தீவு:

இயற்கை எழில் கொஞ்சும் மசூதிகள் தவிர, கவரட்டி தீவு பல சுற்றுலா தலங்களையும் கொண்டுள்ளது. கடல் அருங்காட்சியகம் முதல் உப்புநீக்கும் ஆலை வரை, தீவில் அனைத்தையும் கொண்டுள்ளது. வெள்ளை மணல், தெளிவான நீல நிற நீர், ஒதுங்கிய தடாகங்கள் மற்றும் அழகான சூரிய அஸ்தமனம் ஆகியவை இந்த தீவினை சிறப்பாக்குகிறது. இந்த தீவை லட்சத்தீகவுளில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக ஆக்குகிறது. இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமான கவரட்டி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. நீர் விளையாட்டுகள் மற்றும் நீச்சல் போன்றவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட உகந்த இடம் இந்த கவரட்டி தீவு.


கத்மட் மற்றும் கவரட்டி தீவுகள்

லட்சத்தீவுகளுக்கு எப்போது செல்ல வேண்டும்?

உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதால் இது ஒரு ஆக்டிவான சுற்றுலாத் தலமாகவே இருந்து வருகிறது. செப்டம்பர் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் லட்சத்தீவுகளுக்கு சென்று வருவதற்கு ஏற்ற சீசனாக கூறப்படுகிறது. அந்நேரத்தில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. இது, சர்ஃபிங், நீச்சல், கேனோயிங், ஸ்நோர்கெலிங், ஸ்கூபா டைவிங், வாட்டர் ஸ்கீயிங், கயாக்கிங் மற்றும் பல சாகசங்களில் ஈடுபட உகந்த காலநிலையாக பார்க்கப்படுகிறது. கோடைக்குப் பிறகு, அதாவது பருவமழை தொடங்கி முடிந்தப் பிறகு, அந்த இடம் முழுக்க மிகவும் பசுமையாக மாறுகிறது.

Updated On 4 March 2024 11:49 PM IST
ராணி

ராணி

Next Story