இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சாதிப்பதற்கு வயது தடையில்லை என்பதை பலரும் பல நிகழ்வுகள் மூலமாக நிரூபித்து வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் அவ்வப்போது ஏதோ ஒரு சாதனைகளை நிகழ்த்தி கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில், நான்காம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவியான சம்ருதிகா சுரேஷ் குமார், கண்களை மூடிக்கொண்டு ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிப்பது, வித்தியாச வித்தியாசமான கியூப்களை பயன்படுத்தி நமது தேசிய கொடியின் வண்ணங்களை உருவாக்குவது என 5 விதமான உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இது குறித்து சம்ருதிகா நம்மோடு பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்...

கிட்டத்தட்ட 5 உலக சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறீர்கள், உங்களின் இந்த திறமையை எப்போது அடையாளம் கண்டீர்கள்? யார் உங்களுக்கு உத்வேகம் கொடுத்தார்கள்?

என்னுடைய இந்த திறமையை அடையாளம் கண்டது எனது அப்பா, அம்மாதான். அவர்களின் உத்வேகத்தாலும், வழிகாட்டுதலாலும்தான் இத்தகைய சாதனைகளை என்னால் நிகழ்த்த முடிந்தது. எனது 4 வயதில் துவங்கிய இந்த பயணத்தில், என்னுடைய அப்பா, அம்மா தவிர பள்ளி ஆசிரியர்கள் மற்றும் என்னுடைய தோழி சஞ்சனாவின் பெற்றோரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். குறிப்பாக என்னுடைய ஆசிரியர் அகிலா டீச்சர்தான் என்னுடைய இந்த தனித்திறமையை மேம்படுத்த பெரிதும் உதவினார்.

உங்களின் இந்த தனித்துவமான திறமையை கண்டு சக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் என்ன சொல்லுவார்கள்?

அனைவருமே என்னை பாராட்டுவார்கள். குறிப்பாக எனது திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக பாசிட்டிவாக பல கருத்துக்களை அவர்கள் கூறுவதோடு, இனி உன்னை சந்திக்க வரவேண்டும் என்றால் அப்பாயிண்ட்மென்ட் வாங்கிவிட்டுதான் வரவேண்டும் போல இருக்கே என கூறுவார்கள். அதை கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்களுடைய அப்பா, அம்மாவை பெருமைப்படுத்திய நிகழ்வாக எந்த சாதனையை சொல்லுவீர்கள்?

நிச்சயமாக அவர்கள் பெருமையடைந்த சம்பவம் என்றால், 84 ரூபிக்ஸ் கியூபை கொண்டு நமது நாட்டு தேசிய கொடியின் வண்ணத்தை உருவாக்கிய தருணம்தான். அதிலும் குறிப்பாக 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட அந்த சாதனையை என்றுமே என்னால் மறக்க முடியாது.


கண்களை மூடிக்கொண்டு தேசிய கொடியின் வண்ணங்களை உருவாக்கும் சம்ருதிகா

கண்ணை மூடிக்கொண்டு சரியான பணத்தை கண்டுபிடிக்கிறீர்கள், கியூபையும் சர்வ சாதாரணமாக அடையாளம் கண்டு சரியாக பொறுத்துகிறீர்கள்... இதில் ஏதும் தந்திரம் இருகிறதா?

இதில் தந்திரம் எல்லாம் எதுவும் இல்லை. தகுந்த உடற்பயிற்சியும், சில தியான முறைகளையும்தான் நான் பின்பற்றுகிறேன். அதுவே எனக்கு புதிரை தீர்க்க உதவுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இதற்கான பயிற்சியையும், நுணுக்கங்களையும் பயின்று வரும் எனக்கு, குருவாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது எனது ஆசிரியர் அகிலா டீச்சர்தான்.

கண்ணை மூடிக்கொண்டு சரியான பணத்தை கண்டு பிடிப்பதே சிரமம். ஆனால் அதில் போடப்பட்டிருக்கும் எண்ணை கூட சரியாக சொல்லுகிறீர்களே, அது எப்படி?

அது எனது சிந்தனையின் மன ஓட்டத்தில் வருகின்ற வார்த்தைகள். துவக்கத்தில் அந்த பணத்தை தொட்டவுடன் பல வண்ணங்கள் என் மனதுக்குள் தோன்றும். ஒரு கட்டத்தில் அதுவே தானாக மாறி சரியான எண்ணை எனக்கு பிரதிபலிக்கும்.

கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் இதற்கு அடித்தளமே உங்களுடைய பயிற்சி முறைதான். தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வீர்கள்?

தினமும் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வேன். சூரிய நமஸ்காரம் போன்ற வழிமுறைகளை எல்லாம் பின்பற்றுவது கிடையாது. குறுகிய நேரத்தில் மிக கூர்மையுடன் பயிற்சி மேற்கொள்வேன்.

இதுவரை எந்தெந்த நாடுகளுக்கு சென்றுள்ளீர்கள்? உங்களால் மறக்கமுடியாத சாதனை எது?

இதுவரை நான் மலேசியாவிற்கு மட்டுமே சென்றுள்ளேன். அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற நான், அந்நாட்டின் தேசிய கோடியை கியூபில் பொருத்தி பலரையும் ஆச்சரியப்படுத்தினேன். அவர்கள் கொடுத்த உத்வேகமும், பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதேபோல் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சாதனை என்றால், 84 தேசிய கொடிகளை பொருத்தி வண்ணம் தீட்டிய நிகழ்வுதான். மேலும் மற்றொரு நிகழ்வாக ஆளுநரிடம் விருது பெற்ற தருணத்தையும் மறக்கமுடியாது. அந்த சமயம் ஆளுநர் அவர்களே என்னை ஊக்குவிக்கும் விதமாக, தொடர்ந்து இதை போன்ற சாதனைகளை நிகழ்த்திக்காட்ட வேண்டும் என கூறியதையும் என்றுமே மறக்க மாட்டேன்.


கண்களை மூடிக்கொண்டு சம்ருதிகா ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த தருணம் மற்றும் கியூப் சாதனை

உங்களுடைய எதிர்கால கனவு என்ன ? உங்களை போல் நானும் இந்த திறமையை கற்றுக்கொள்ள முடியுமா?

எனது எதிர்கால கனவு, எனக்கு பயிற்சி கொடுக்கும் அகிலா டீச்சரை போல நானும் மாணவர்களுக்கு சொல்லி தர வேண்டும். அதோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்குள்ளும் இருக்கும் திறமையை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தவும் முயற்சிப்பேன். அதேபோல் இந்த தனித்துவமான திறமையை நீங்கள் கற்றுக்கொள்ள முடியுமா? என கேட்கிறீர்கள். நீங்கள் பெரியவராக இருப்பதால் இதை சாத்தியப்படுத்துவது சிரமமான ஒன்றுதான். ஆனால் சிறுவர்களும், குழந்தைகளும் நிச்சயம் கற்றுக்கொள்ளலாம்.

ஏன் பெரியவர்களால் கற்றுக்கொள்ள முடியாது?

அதற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் எனது ஆசிரியர் அப்படித்தான் சொல்லுவார். இதுவரை இது போன்ற தனித்துவமான முயற்சியை பெரியவர்கள் செய்து நான் பார்த்ததும் இல்லை.

இத்தனை சாதனைகள், இவ்வளவு திறமைகள் உங்களுக்குள் இருந்தாலும். இதற்கான ஆர்வம் எங்கிருந்து வந்தது?

என்னுடைய பயணத்தில் நான் நிகழ்த்திய முதல் உலக சாதனையின் போதே இதன் மீதான ஆர்வமும், உத்வேகமும் எனக்கு வந்துவிட்டது. அதோடு எனது உறவினர்களும், சுற்றத்தாரும் என்னை பாராட்டி பேசும்போது அது மேலும் உற்சாகத்தை கொடுத்தது.

இந்த தனி திறமையை தவிர வேறு எந்தெந்த விளையாட்டுகளில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது? வேறு திறமைகளும் உங்களுக்கு இருக்கிறதா?

கபடி எனக்கு மிகவும் பிடிக்கும், அந்த விளையாட்டில் தனி ஆர்வம் எனக்கு இருக்கிறது. அதேபோல் கண்ணை மூடிக்கொண்டு தலைகீழாக நின்று கியூபை சரியாகப் பொறுத்துவது போலவே கண்ணைமூடிக் கொண்டு சைக்கிள் ஒட்டுகின்ற திறமையும் எனக்கு இருக்கிறது. அந்த சமயத்திலும் சில காட்சிகள் என் கண் முன் வருவதை வைத்துதான் எத்தகைய பரபரப்பான சாலைகளிலும் என்னால் பயணிக்க முடிகிறது. இது தவிர கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய பல விஷயங்களிலும் நான் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

சிறுமியின் தனி திறமையையும், பொறுமையையும் கண்டு நாங்கள் நிச்சயம் பிரமிப்பு அடைந்தோம். இதேபோல பல திறமைகளை வளர்த்துக்கொள்ள ராணி குழுமத்தின் சார்பாக அவருக்கு வாழ்த்துகளை கூறி மகிழ்ச்சியோடு விடைபெற்றோம். நன்றி

Updated On 19 Feb 2024 11:51 PM IST
ராணி

ராணி

Next Story