தைராய்டுல இருந்து விடுபட இந்த யோகாசனங்கள செய்யுங்க!
தற்போதைய இயந்திர உலகில் நம் அனைவரது ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாக உள்ளது யோகா. அந்த வகையில், தற்போதைய முக்கிய பிரச்சினையாக உள்ள தைராய்டுக்கு இந்த யோகா பயிற்சிகள் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது 100-ல் 50 சதவிகித பெண்களுக்கு இந்த நோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு மருத்துவர்களை அணுகி தீர்வு காண்பது மிக முக்கியமான ஒன்றாகும். இருப்பினும் தைராய்டை எளிய முறையில் குணப்படுத்த சில யோகாசனங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தைராய்டை எளிதில் குணப்படுத்தும் ஆசனங்கள் இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஒன்று நின்றபடியே செய்யும் ஆசனங்கள். மற்றொன்று அமர்ந்த நிலையிலேயே செய்யும் ஆசனங்கள். இது ஒவ்வொன்றையும் 4 முதல் 30 எண்கள் வரையிலான எண்ணிக்கையில் செய்து வர தைராய்டில் இருந்து எளிதில் வெளிவரலாம். எனவே அது குறித்த யோகாசனங்களும் அதன் செய்முறை விளக்கம் மற்றும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
நின்றபடி செய்யும் ஆசனங்கள்
அஷ்ட்ட உத்தனாசனம்
எழுந்து நேராக நின்று, கைகள் இரண்டையும் தூக்கி பின்னோக்கியவாறு குனிந்து முப்பது எண்கள் வரை சாய வேண்டும். அதைப்போலவே அதற்கு முன்னோக்கி எதிர்புறமாக தலை மற்றும் மேல் பகுதி உடலை வளைத்து, முகம் முழங்கால் இரண்டையும் ஒட்ட கீழ் நோக்கி அதே முப்பது எண்கள் வரையிலான எண்ணிக்கையில் குனிந்து பாதத்தை தொடுதல் வேண்டும். இதைப்போலவே நான்கு முறை தொடர்ந்து செய்வது அஷ்ட்ட உத்தனாசனம்.
அஷ்ட்ட உத்தனாசனம் செய்யும் முறை
அர்த்த சக்ர ஆசனா
நேராக நின்றபடி இடுப்பு பகுதியில் கைகளை வைத்து கொண்டு பின்னோக்கியவாறு மேல் உடற்பகுதியை வளைத்து சமமாக தலையை நிறுத்தி முப்பது எண்கள் வரையிலான எண்ணிக்கையில் செய்ய வேண்டும். அதனைப்போலவே மறுபடியும் எதிர்ப்புறமாக மேல் உடற்பகுதியை சமமாக முன்னோக்கி வளைத்து தலைக்கு மேல் கைகள் இரண்டையும் கூப்பியவாறு முப்பது எண்கள் வரையிலான எண்ணிக்கையில் நிற்பது தான் அர்த்த சக்ர ஆசனா.
அர்த்த சக்ர ஆசனா செய்யும் முறை
பரிவர்தன திரிகோணாசனம்
இரு கால்களையும் அகல வைத்து, கைகள் இரண்டையும் நீட்டி பின்பு உங்கள் மேல் உடலை கீழே வளைத்து, வலது கை இடது காலின் பாதத்தை தொட்டு, இடது கையை வான்நோக்கி மேலே தூக்கி பின் உங்களின் பார்வை அந்த இடது கையின் உள்ளங்கையை பார்க்க வேண்டும். இப்படி 30 எண்கள் வரையில் செய்தால் போதுமானது. அடுத்ததாக அதன் எதிர்ப்புறத்தில் திரும்பி கைகள் இரண்டையும் நீட்டி, மேல் உடலை வளைத்து, இடது கை வலது காலின் பாதத்தை தொட்டு, பின் வலது கையை வான்நோக்கி மேலே தூக்கி உங்களின் பார்வை வான்நோக்கி மேலே உள்ள வலது உள்ளங்கையை பார்த்திடும் படி செய்ய வேண்டும். இவை இரண்டையும் செய்து முடித்தப் பிறகு இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து, இரு கைகளையும் மேலே தூக்கி உள்ளங்கைகளை ஒன்று சேர்த்து உங்களின் கழுத்துப்பகுதியை பின்னோக்கி வளைத்து மேல்நோக்கி இருக்கும் கைகளைப் பார்த்து நேராக நிற்க வேண்டும், மீண்டும் அதே எதிர்திசையில் இந்த ஆசனத்தை செய்து முடிப்பது நமக்கு முதுகு வலி ஏற்படாமல் தடுக்கலாம்.
பரிவர்தன திரிகோணாசனம் செய்யும் முறை
அமர்ந்த நிலையில் செய்யும் ஆசனங்கள்
சசாங்காசனம்
சமமாக வஜ்ராசனத்தில் அமர்ந்து முன்னோக்கி உங்களது முகமானது நிலத்தில் பட கைகள் இரண்டையும் கூப்பியவாறு படுக்க வேண்டும். இதையே எதிர்த்திசையிலும் செய்ய வேண்டும்.
உஷ்டாசனம்
முதலில் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து முட்டியிட்டு நிற்க வேண்டும். பின்னர் மேல் உடலை பின்னோக்கி வளைத்து, வலது கை பாதத்தை தொட்டும், இடதுகையை தலையோடு ஒட்டி நீட்ட வேண்டும். இதை எதிர்த்திசையில் கைகளை மாற்றி செய்ய வேண்டும். அதாவது, இடது கை பாதத்தை தொட, வலது கையை தலையோடு ஒட்டி நீட்ட வேண்டும். இதனை செய்ய இயலாதவர்கள் முட்டியிட்டு மேல் உடலை பின்னோக்கி வளைத்து ஒரு கையை இடுப்பில் வைத்தும், மற்றொரு கையை தலையை ஒட்டி தூக்கியும் கூட இந்த ஆசனத்தை செய்து முடிக்கலாம். மேலும் இந்த ஆசனத்திற்கு எதிர்த்திசை ஆசனமாக உங்கள் கைகளையும், கால்களையும் நிலத்தில் சமமாக நிறுத்தி மேல் உடலை முழுமையாக வளைத்து, உங்கள் முகத்தின் தாடைப்பகுதி நெஞ்சோடு ஒட்டி இருப்பது போல செய்ய வேண்டும்.
சசாங்காசனம், உஷ்டாசனம் செய்யும் முறை
புஜங்காசனம்
நிலத்தில் சமமாக படுத்து, கைகள் இரண்டையும் தரையில் ஊன்றியவாறு தலையை மட்டும் மேலே தூக்க வேண்டும். பிறகு பின் கழுத்தோடு ஒட்ட உங்களது பார்வை வான் நோக்கி இருக்க வேண்டும். இதனை மூன்று முறை தொடர்ந்து செய்து வருவது தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்லது.
தனுராசனம்
தரையில் படுத்த படியே இரு கால்களையும் கைகளைக் கொண்டு மடக்கி பின் இரு கால்களையும் பின் பக்கமாகத் தள்ளி, மெதுவாக தலையை மேலே தூக்க வேண்டும். இவ்வாறு மடக்கும் போது உங்கள் உடல் வில் போன்ற வடிவில் வளைய வேண்டும். இதனை 30 எண்ணிக்கை அடிப்படையில் நான்கு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். தனுராசனம் செய்து முடித்தப் பிறகே உங்களின் முதுகு வலிக்காமல் இருக்க பவனமுக்தாசனம் செய்வது அவசியமாகும். வான்நோக்கி தரையில் படுத்துக்கொண்டு கால்கள் இரண்டையும் மடக்கி வயிற்றுப்பகுதியில் அழுத்தி, கைகளினால் கால்களை பிடித்து இதனை செய்ய வேண்டும்.
புஜங்காசனம், தனுராசனம் செய்யும் முறை
விபரீத கரணி
இந்த விபரீத கரணி என்னும் ஆசனம் தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு குணமளிக்கும் ஒரு மிகச்சிறந்த ஆசனமாகும். இதனை செய்யும் பொழுது தலையணை பயன்படுத்துவது நல்லது. முதலில் தரையில் சமமாக படுத்துக்கொண்டு அணைத்து வைத்தவாறு முதுகுப் பகுதிக்கு தலையணையை வைத்து பின் கால்கள் இரண்டையும் மேலே தூக்கி நிறுத்த வேண்டும். இவ்வாறு பத்து முதல் இருபது நிமிடங்கள் செய்து வருவது தைராய்டு குறித்த பாதிப்புகளில் இருந்து குறுகிய காலத்திலேயே விடுபட உதவும்.
விபரீத கரணி செய்யும் முறை