இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் குறைந்தது 10 குழந்தைகளாவது இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி வீடு முழுக்க குழந்தைகள் இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளின் தாய் இருக்கமாட்டார். அதுகுறித்து கேட்டால் கடைசி பிரசவத்தின்போது இறந்துவிட்டதாக சொல்வார்கள். ஒருசில பெண்கள் குழந்தையை சுமக்கமுடியாத சூழ்நிலையிலும் கருத்தரித்துவிட்டால் வேறு வழியின்றி அதை பெற்றெடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இதனால் பிரசவத்தின்போது தாய் அல்லது சேய் அல்லது தாய்-சேய் இருவருமே இறந்த சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. இதுதவிர குழந்தைகளை வளர்க்கமுடியாமல் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டு பலர் இருக்கின்றனர். மேலும் குழந்தைப்பிறப்பை கட்டுப்படுத்த வழிதெரியாத பலர் நிறைய முறைகளை முயற்சித்து அவற்றில் சில, சில நேரங்களில் கைகொடுத்தாலும் பல, பல நேரங்களில் கைகொடுக்கவில்லை. இப்படி இருந்த சூழ்நிலையில்தான் டெக்னாலஜி வளர வளர கருத்தடை சாதனங்கள் மற்றும் மாத்திரைகள் உட்பட பல வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம் கரு உருவாவதை தடுக்கமுடியும் என்றாலும், கருத்தடை முறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே நீண்டகாலமாகவே இல்லை. உலகளவில் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போன சமயத்தில் இந்தியாவில், குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. ஆரம்பத்தில் ‘நாம் இருவர் நமக்கு மூவர்’ என ஆரம்பித்த குடும்ப கட்டுப்பாட்டு விழிப்புணர்வு விளம்பரமானது ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ எனும்வரை குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தியது. இதற்கு இந்தியாவில் மக்கள்தொகை விறுவிறுவென அதிகரித்துக்கொண்டே போனதும் மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான் கருத்தடையின் முக்கியத்துவம் குறித்தும், கருத்தடை வழிகள் குறித்தும் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய கருத்தடை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றுசேர்ந்து சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தி உலக கருத்தடை தினத்தை அனுசரிக்க முடிவெடுத்தன.

உலக கருத்தடை தினம் மற்றும் கருத்தடை வகைகள்

கருத்தடை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கவும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 26ஆம் தேதி உலக கருத்தடை தினமாக (World Contraception Day) அனுசரிக்கப்படுகிறது.


கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் உலக கருத்தடை தினம் அனுசரிப்பு

நவீன கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் மற்றும் குடும்பங்களிடையே ஏற்படுத்தவும், பாலியல் நோய்கள் பரவுவதை தடுக்கவும், கர்ப்பம் தேவைப்படுகிறதா என்ற முடிவை எடுக்க தம்பதிகளுக்கு உதவவும், 2007ஆம் ஆண்டுமுதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதன்மூலம் தாய்மார்களின் இறப்பை குறைக்கமுடியும், திட்டமிடப்படாத கர்ப்பத்தை தடுக்கமுடியும். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் உரிமையை இதன்மூலம் பெண்கள் பெறமுடிகிறது. ஆனால் பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாசாரங்களில் கருத்தடை செய்வதில் பல்வேறு சிக்கல்களும் சவால்களும் இருக்கின்றன. மேலும் இன்றுவரை உலகளவில் வளர்ச்சியடையாத பல பகுதிகள் இருக்கின்றன. அங்கு கருத்தடை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக, அதிகப்படியான குழந்தைகளை பெற்றெடுத்திருக்கும் பலர் வறுமைக்கோட்டிற்கு கீழ்தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட மக்களிடையே கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில்தான் உலக கருத்தடை தினம் ஆண்டுதோறும் பின்பற்றப்படுகிறது.

கருத்தடையை பொருத்தவரை தற்காலிக கருத்தடை மற்றும் நிரந்தர கருத்தடை உள்ளது. அதில் ஆண், பெண் என இருபாலருக்கும் பல்வேறு முறைகள் இருக்கின்றன. குறிப்பாக, கருத்தடை மாத்திரைகள், IUD என்று சொல்லப்படுகிற கருத்தடை சாதனங்கள், ஹார்மோன் முறைகள், ஆணுறைகள், ஊசிகள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை என பல முறைகளில் கரு உருவாவதை தடைசெய்யலாம். நிரந்தர கருத்தடையை பொருத்தவரை ஆண்களுக்கு வாசெக்டமி மற்றும் பெண்களுக்கு டியூபெக்டமி முறைகள் பின்பற்றப்படுகின்றன. வாசெக்டமி என்பது ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்துநாளத்தை துண்டிப்பதன்மூலம் விந்தணு வெளியேறுவதை தடுக்கும் முறை. விந்துநாளங்களை துண்டிக்க பயப்படுபவர்கள் அவற்றை அடைக்கும் முறைமூலமும் இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ளலாம். அதுவே பெண்களுக்கு செய்யப்படும் நிரந்தர கருத்தடையை டியூபெக்டமி என்கின்றனர்.


கருத்தடை மாத்திரைகள் மற்றும் அறுவைசிகிச்சை (குடும்ப கட்டுப்பாடு)

பெண்ணின் அடிவயிற்றில் சிறிய கீறல் அல்லது லேப்ரோஸ்கோபி மூலம் துளையிட்டு, ஃபெலோபியன் குழாய்களிலிருந்து கருமுட்டை கருப்பையை அடைவதை தடுக்கும்விதமாக அந்த குழாயில் தடுப்பு அமைப்பதன்மூலம் மூடப்படுகிறது. இந்த இரண்டுமுறைகளுமே குடும்ப கட்டுப்பாடு என்றே சொல்லப்படுகிறது. பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப கட்டுப்பாட்டு முறையைவிட ஆண்களுக்கு செய்வது மிகவும் எளிமையானது என்றாலும், இந்தியாவை பொருத்தவரை பெண்கள்தான் அதிகம் குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்துகொள்கின்றனர். அறுவைசிகிச்சை தவிர, பெண்களின் பிறப்புறுப்பு வழியாக, காப்பர் டி சாதனத்தை பொருத்துவதன்மூலமும் கருவுறுதலை தடுக்கலாம். இந்த முறையானது பெரும்பாலும் முதல் குழந்தை பெற்றுவிட்டு இரண்டாம் குழந்தைக்கு சற்று இடைவெளி வேண்டும் என்று நினைக்கும் தம்பதிகளால் பெரிதும் பின்பற்றப்படுகிறது. குழந்தைக்கு திட்டமிடும்போது மருத்துவரின் உதவியுடன் காப்பர் டியை வெளியே எடுத்துவிடலாம்.

இதுபோக, தற்காலிகமாக கரு உருவாவதை தடுக்க, கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால்தான் கரு உருவாகாது. எப்போது மாத்திரையை நிறுத்திவிட்டு உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அப்போது கருத்தரிப்பர். அதேபோலத்தான் ஆணுறைகளும். ஆனால் கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்களை பொருத்தவரை அதுகுறித்த பல்வேறு எதிர்மறை கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் கருப்பை புற்றுநோய் வரும் அல்லது மலட்டுத்தன்மை ஏற்படும் என நினைக்கின்றனர். குறிப்பாக, மார்பக புற்றுநோய் வர வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர். ஆனால் அதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. உண்மையில், மருத்துவரின் அறிவுரையுடன் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது எந்த பிரச்சினையும் இருக்காது.


கருத்தடை மாத்திரைகளால் உருவாகும் பிரச்சினைகள் என கூறப்படும் வதந்திகள்

கருத்தடை மாத்திரைகளுக்கு முன்...

சரி, கருத்தடை முறைகள் இப்போது பல இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற டெக்னாலஜி வளர்ச்சி இல்லாத காலத்தில் கருத்தரிப்பதை தடுக்க நம் முன்னோர்கள் பல விநோத முறைகளை பின்பற்றி இருக்கின்றனர். அவற்றில் பல, கைகொடுக்காவிட்டாலும் சில அவ்வப்போது உதவியிருக்கின்றன. ஆண் - பெண் இருவரும் உடலுறவில் ஈடுபடும்போது பெண்களின் கால்களுக்கு நடுவே மரநாய்களின் விதைப்பைகளை கட்டி தொங்கவிடுவது, பீவர் எனும் சிறிய உயிரினத்தின் விதைப்பைகளை மைய அரைத்து அதை மதுவில் கலந்து குடிப்பது என்பதுபோன்ற இயற்கைக்கு மாறான முறைகளை பின்பற்றினர். இது பழங்கால ஐரோப்பியர்களின் மூட நம்பிக்கையாகவே பார்க்கப்பட்டது. அது தவிர, உடலுறவுக்கு பின், பெண்கள் தோப்புக்கரணம் போடுதல், அதனுடனே தும்முதல் போன்ற செயல்களால் விந்தணு கர்ப்பப்பைக்குள் நுழைவதை தடுத்து கரு உருவாகாமல் தடை செய்யலாம் என்று நினைத்தனர். இந்த பழக்கம் பெரும்பாலும் பழங்கால கிரேக்கர்களிடையே இருந்தது. மற்றொரு விந்தையான பழக்கமும் இவர்களிடையே காணப்பட்டது. அதாவது இரும்பு உபகரணங்களை தயாரிக்கும் கொல்லர்கள் அவற்றை குளிர்விக்க பயன்படுத்திய நீரை உடலுறவுக்குப்பின் பெண்கள் குடிப்பது. இப்படி செய்வதால் அந்த நீரிலிருக்கும் அதீத கந்தகம் கரு உருவாவதை தடுக்கும் என்று நம்பினர். இது ஓரளவு பலனளித்தாலும் பெண்களின் உடல் உறுப்புகளை கடுமையாக பாதித்து உயிரையே கொல்லும் அளவிற்கு மோசமானதாக இருந்தது.


நவீன கருத்தடை முறைகளுக்கு முன்பு கருவுறுதலை தடுக்க பின்பற்றப்பட்ட வழிகள்

கிரேக்கர்கள் இப்படி செய்தார்கள் என்றால் அடுத்து எகிப்தியர்கள், முதலையின் சாணத்தில் தேன் கலந்து உடலுறவுக்கு முன்பு, அதை பெண்ணுறுப்பில் பூசிக்கொண்டனர். காலம் கொஞ்சம் மாற மாற, விலங்குகளின் குடல்களை சுத்தப்படுத்தி அதை சூடான பாலில் நனைத்து ஆணுறைகளைபோல பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக, இதற்கு பெரும்பாலும் பன்றியின் குடலையே பயன்படுத்தினர். அடுத்து எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதன் உள்பகுதியை நீக்கிவிட்டு, தோலை பெண்ணுறுப்பில் நுழைத்து வைத்தனர். இதனால் உடலுறவின்போது விந்தணு கருப்பைக்குள் நுழையாது என்று நம்பினர். இதுபோக அபின் பூக்களை பெண்ணுறுப்பில் நுழைத்துக்கொள்வதையும் குறிப்பிட்ட சமூக மக்கள் ஒரு கருத்தடை முறையாக பின்பற்றினர். இதுபோக, கருத்தடை சாதனங்கள் மற்றும் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒருசில வருடங்களுக்கு முன்பு, அதாவது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கோக-கோலாவை பெண்ணுறுப்பில் ஊற்றினால் அது விந்தணுக்களை செயலிழக்க செய்துவிடும் என்று நம்பி அந்த முறையையும் பின்பற்றியிருக்கின்றனர். இவற்றில் பல கைகொடுக்கவில்லை. அதற்கு மாற்றாக பெண்களின் உயிரைத்தான் பறித்தன. இப்படி கரு உருவாவதை தடுக்க முடியாமல் சிரமப்பட்டவர்களுக்கு உதவும் வகையில்தான் கருத்தடை சாதனங்களும், மாத்திரை மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Updated On 30 Sept 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story