இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ்நாட்டில் கோடை மழை என்பது பெய்ய தொடங்கியிருந்தாலும், வெயிலின் தாக்கம் என்பது குறைந்தபாடில்லை. வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், பல்வேறு தரப்பினரும் கடும் சிரமங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். வெயிலுடன் சேர்ந்து வெப்ப அலையும் வீசுவதால் 15 மாவட்டங்களில் 103 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் தோல் நோய்கள், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளுக்கு மக்கள் ஆளாக நேர்கிறது. இதில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த நமது சந்தேகங்களுக்கு மருத்துவரும், அரசு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வருமான திருமதி.கீதாலட்சுமி நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவருடன் நடத்தப்பட்ட நேர்காணலை இந்த தொகுப்பில் காணலாம்.

கோடை வெயிலில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன?

இந்த வெயிலில் இருந்து தப்பிக்க முதலில் செய்ய வேண்டியது உடலுக்கு தேவையான தண்ணீரை பருகுவது. இதனை பெரும்பாலானவர்கள் செய்ய தவறிவிடுகின்றனர். சிறுவர்களுக்கு தாகம் எடுத்தால் அவர்களாகவே தண்ணீர் குடித்துவிடுவாரகள். ஆனால், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் வேலைக்காக ஓடும் அவசரத்தில் தாகம் எடுத்தாலும் வேலையை முடித்துவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தண்ணீர் குடிப்பதையே முழுமையாக மறந்துவிடுகின்றனர். நமது உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் பெரும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். நமது உடலின் ரத்த ஓட்டத்தில் பெரும்பாலான பங்கு தண்ணீருக்குத்தான் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் நமது உடலுக்கு தேவையான நீரை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொண்டால்தான் நமது மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். உடல் உறுப்புகளும் ஆக்டிவாக இருக்கும். ஒரு நாளைக்கு மினிமம் 2 லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். அதிலும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீரை குடிப்பதும் தவறுதான். அப்படி குடிக்கும்போது வாந்தி போன்ற பிரச்சினைகளும் வரும். அப்படி நிகழாமல் இருக்க வேண்டும் என்றால் 15 முதல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை குடிப்பது நல்லது.


குறைந்தது ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்

அதேபோன்று பகல் 11 மணியிலிருந்து 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று நினைத்து தனியாக நடந்து செல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. இதுதவிர ஸ்கின் அலர்ஜி, நாக்கு வறண்டு போதல், தலைவலி, தசை பிடிப்பு, உடல் வலி போன்றவை அதிகமாக காணப்படும். இவை அனைத்திற்கும் ஒரே காரணம் உடம்பில் நீர் சத்து குறைந்து போவதுதான். தண்ணீரை தவிர, நீர்சத்து அதிகம் உள்ள பழங்களையும், காய்களையும் உட்கொள்வது நல்லது. இவற்றை நாம் சரியாக கடைபிடித்தாலே வெயிலில் இருந்து ஓரளவு நம்மை தற்காத்து கொள்ளலாம்.

ஹீட் ஸ்ட்ரோக் அதாவது வெப்ப பக்கவாதம் என்றால் என்ன? அதில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?

நமது உடம்பில் உள்ள நீர்சத்து குறையும்போது ரத்தம் கெட்டித்தன்மையை அடைகிறது. இந்த மாதிரியான நிலையில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, பிபி அதிகமாகி தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படுகிறது. இந்த நிலையைத்தான் வெப்ப பக்கவாதம் அதாவது ஹீட் ஸ்ட்ரோக் என்று சொல்கிறார்கள். மேலும் அப்படி ரத்தம் கெட்டியடைந்து அதன் ஓட்டம் நிற்கும் போதுதான் இதய அடைப்பு ஏற்பட்டு, மூளை செயல்பாடு நின்று உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உண்டாகிறது. அதேபோன்று சில சமயங்களில் அதிகாலையில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் படுத்தபடியே இறந்து கிடப்பார்கள். அதற்கு, தூங்க போகும் முன்பு சரியான அளவு தண்ணீர் குடிக்காததும் ஒரு காரணம். இப்படியான பிரச்சினைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றால் எப்போதும் நமது உடலுக்கு தேவையான தண்ணீரை நாம் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லலாம் செய்ய வேண்டும்?

குழந்தைகளை பொறுத்தவரை எந்தவிதமான பயமும் இல்லை. அவர்கள் தங்களது உடலுக்கு தேவையான தண்ணீரை யாரும் சொல்லாமலேயே சரியான அளவில் எடுத்துக்கொள்வார்கள். இதனால் பாதி பிரச்சினை தீர்ந்து போய்விடும். இருப்பினும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான நேரங்களில் ஆரோக்கியமான முறையில் ஜூஸ், லஸ்ஸி, மோர் போன்றவற்றை அதிகமாக குடிக்க கொடுப்பது நல்லது.

அதேபோன்று 60 வயதில் இருந்து 65 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக வெளியில் சென்று வருவதை தவிர்ப்பது நல்லது. காரணம் இவர்களுக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் அதிகமாக ஏற்படுகிறது. வேறு வழியில்லை. அவசர தேவைக்காக வெளியில் செல்ல வேண்டும் அல்லது வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் முடிந்தவரை நடப்பதை தவிர்த்துவிட்டு வாகனத்தில் பயணிப்பதையோ, ரயில், ஆட்டோ போன்றவற்றில் பயணம் செய்வதையோ பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெயில் நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள் ஏதாவது இருக்கிறதா?


வெயில் நேரங்களில் காரம் மற்றும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது

முடிந்த வரை உணவில் காரத்தை குறைத்துக்கொள்வது நல்லது. மேலும், வெயில் நேரங்களில் செரிமான பிரச்சினைகளை உண்டாக்கக்கூடிய ஆயில் அதிகம் நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுவது இன்னும் சிறந்தது.

இந்த சமயங்களில் என்ன மாதிரியான ஆடைகளை உடுத்துவது நல்லது?

நமது உடம்பிற்குள் காற்று புகுவது மாதிரியான லைட் வெயிட் ஆடைகள், காட்டன் உடைகள் போன்றவற்றை அணிவது நல்லது. குறிப்பாக வெள்ளை நிறத்திலான ஆடைகளை அதிகம் உடுத்தினால் வெயில் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை குளிப்பது சிறந்த ஒன்று.

கோடை காலத்தில் எந்த மாதிரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? அதற்கென்று கால நேரம் இருக்கிறதா?


காலை மற்றும் மாலை நேரங்களில் வெயில் தாழ்ந்து உடற்பயிற்சி செய்வது நல்லது

உடற்பயிற்சி காலையில் செய்வதுதான் நல்லது. 6 மணியில் இருந்து 8 மணிக்குள்ளாக செய்து முடித்துவிட வேண்டும். காலையில் செய்ய முடியவில்லை, அதனால் மாலையில் செய்கிறேன் என்று சொல்பவர்கள், வெயில் தாழ்ந்து 6 மணிக்கு மேலாக நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது.

Updated On 17 Jun 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story