இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிற கேன்சர் என்ற பெயரைக் கேட்டாலே ஒருவித பயம் ஏற்படும். கேன்சர் வந்துவிட்டாலே உயிர்பிழைக்கமாட்டர்கள் என்ற நிலையை மாற்ற தற்போது அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. அதிலும் என்ன வகையான கேன்சராக இருந்தாலும் ஆரம்பநிலை என்றால் முழுமையாக குணப்படுத்திவிட முடியும். அதுவே அட்வான்ஸ் நிலை என்றால் முடிந்தவரை வாழ்நாளை நீட்டிக்க முடியும். கேன்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், கடைசி நிலையில் இருக்கும் கேன்சர் நோயாளிகளுக்கு என்ன மாதிரியான பராமரிப்பு அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் புற்றுநோயியல் நிபுணர் ஓவேஷ் முகமது.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?

உணவுகளை பொருத்தவரை எப்போதும் சர்வதேச உணவு கட்டுப்பாடு விதிமுறைகளைத்தான் இந்திய கலாசாரத்திற்கு ஏற்றபடி நாம் பின்பற்றுகிறோம். கேன்சர் நோயாளிகளுக்கு உடல் பருமன் பிரச்சினை இருந்தால் கட்டாயம் எடையை குறைத்தல், மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல், புகைப்பிடித்தல், ஆல்கஹால் போன்ற பழக்கங்களை கைவிடுதல் என வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உருவாக்க உளவியலாளர்கள், டி-அடிக்‌ஷன் சென்டர் போன்றவற்றையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர். அடுத்து டயட் சரியாக இருக்கவேண்டும். ஒருநாளில் மூன்றுவேளைக்கு மூன்று பழங்கள் / காய்கறிகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


கேன்சர் நோயாளிகள் தவிர்க்கவேண்டிய பழக்கவழக்கங்கள் மற்றும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

பொதுவாகவே நிறைய பழங்கள், காய்கறிகள், குறிப்பாக பச்சை கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேன்சர் நோயாளிகள் இந்த உணவுமுறையை பின்பற்றுதல் அவசியம். பர்கர், ஃப்ரைடு சிக்கன் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும். இந்த உணவுமுறைகளை கேன்சர் நோய் குணமடைந்துவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும்.

இதுவரை நீங்கள் அளித்த சிகிச்சையின் மூலம் கற்றுக்கொண்டது என்ன?

கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணிற்கு ஒருமாதம் முறையான சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அதற்கு காரணம், அந்த பெண் கடைசி நிலைக்கு சென்றுவிட்டதுதான். கேன்சரை பொருத்தவரை ஆரம்பநிலையிலேயே சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட வேண்டும். மூன்று அல்லது நான்காவது நிலைக்கு செல்லும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலமும் உடல் இயக்கமும் அதனை கட்டுப்படுத்த போராடவேண்டிய நிலை ஏற்படும். அந்த சூழ்நிலையில் நோயாளியை உயிர்பிழைக்க வைப்பது மிகவும் சிரமம். எனவே முடிந்தவரை ஆரம்பநிலையிலேயே குணப்படுத்திவிட வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.


கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சை விளக்க படங்கள்

அதேபோல் ஒரு ஆணிற்கு பெருங்குடல் புற்றுநோய் உருவாகி கடைசி நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு எங்களுடைய குழு, அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, உடலின் மேற்பகுதியிலிருந்து கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களும் ஒட்டியிருந்ததால் அதனையும் நீக்கவேண்டி இருந்தது. முதலில் ரத்தக்குழாய்களை வெட்டி எடுத்து கேன்சர் கட்டியை நீக்கியபிறகு ரத்தக்குழாய் அறுவைசிகிச்சை நிபுணரின் உதவியுடன் மீண்டும் அதனை பொருத்தி, அந்த நோயாளியின் காலை மீண்டும் செயல்பட வைத்தோம்.

அட்வான்ஸ் நிலையில் இருந்து உயிர்பிழைக்க மாட்டார்கள் என தெரியும் நோயாளிகளின் குடும்பத்தாருக்கு என்னமாதிரியான அறிவுரைகளை வழங்குவீர்கள்?

ஒருசிலர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது உறவினர் கொஞ்சநாள் அதிகமாக உயிர்வாழ்ந்தாலும் போதும் என்பார்கள். அவர்களிடம் இந்த சிகிச்சை வாழ்நாளை நீட்டிப்பதற்குத்தானே தவிர, உயிர்பிழைக்க வைப்பதற்கு அல்ல என்பதை புரியவைக்கவேண்டும். அதன்பிறகும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கேட்கும்போது கீமோதெரபியில் சில மாற்றங்களை மேற்கொண்டு சிகிச்சை வழங்குவோம். இதனால் கிட்டத்தட்ட 6 மாதங்கள் வாழ்நாளை நீட்டிக்கமுடியும். ஒருசில நோயாளிகளுக்கு மருந்தின் வீரியம் தாங்காமல் வாழ்நாள் குறையவும் வாய்ப்புண்டு. ஒருசில குடும்பத்தார், நோயாளி மிகவும் கஷ்டப்படுகிறார், கடைசிகாலத்தில் சிரமப்படாமல் இருக்க சிகிச்சை அளியுங்கள் என கேட்பார்கள். அவர்களுக்கும் கீமோதெரபியை பரிந்துரைப்போம். ஏனெனில் இதில் 50 - 50 வாய்ப்புகள்தான் இருக்கின்றன.


கேன்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பேலியேட்டிவ் கேர் மற்றும் ஹாஸ்பைஸ் கேர்

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், சிகிச்சைக்கு செலவழிக்க முடியாத பட்சத்தில் பேலியேட்டிவ் கேர் குறித்து தெளிவாகக் கூறுவோம். நிறைய மருத்துவமனைகளில் பேலியேட்டிவ் கேர் யூனிட்ஸ் என்றே இருக்கும். அங்கு அந்த நோயாளியை அட்மிட் செய்து அவர்களுக்கு மூச்சுத்திணறல், வலி, வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கு மருந்துகள் அளிப்பார்கள். ஆனால் பேலியேட்டிவ் கேர் யூனிட் சார்ஜ் அதிகமாக இருக்கும் என்பதால் நீண்ட நாட்கள் அங்கேயே இருக்கமுடியாது. இந்த நேரத்தில் Hospice care கொடுக்கவேண்டும். Hospice care எப்படி கொடுப்பது என்பதை பேலியேட்டிவ் கேர் டீமே சொல்லிக்கொடுப்பார்கள். அந்த டீம் வீட்டிற்கே வந்து தேவையான மருந்துகளை கொடுத்துச்செல்வார்கள். அனைத்து சிகிச்சைகளுமே குடும்பத்தினர் மற்றும் நோயாளியின் நிலையை பொருத்ததுதான்.

பிழைக்கமாட்டார் என தெரிந்தும் சிகிச்சை அளித்து பின் உயிர்பிழைத்த நோயாளிகள் உண்டா?

ஒரு 13 வயது சிறுமிக்கு கால் எலும்பில் கேன்சர் வந்து, குடும்பத்தினர் சரியாக கவனிக்காததால் அது உடல் முழுவதும் பரவி அட்வான்ஸ் நிலைக்கு சென்றுவிட்டது. இதனால் அந்த சிறுமிக்கு காலையே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் கீமோதெரபி உட்பட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் 3 வருடங்களுக்கும் மேல் அந்த சிறுமி நன்றாக இருந்தார். கீமோதெரபி சிகிச்சையை பொருத்தவரை நோயாளி அதனை தாங்கிக்கொள்ளும்வரை அளிக்கப்படும். பொதுவாகவே மருந்துகள் என்றாலே பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்யும். கீமோவில் இரண்டுவகைகள் இருக்கின்றன.


கேன்சர்களுக்கு கொடுக்கும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் நபர்களுக்கு நபர் வேறுபடும்

உதாரணத்திற்கு, ஆக்சாலிக் ப்ளான்ட்டின் என ஒரு மருந்து இருக்கிறது. இது வயிற்றில் வருகிற கேன்சர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் ஒன்று. இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு வருகிற பெரிஃபெரல் நியூரோபதி என்ற பக்கவிளைவு உருவாகும். இதனால் கால்களில் உணர்ச்சி குறைந்து பஞ்சுமேல் நடப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். அதேபோல் மார்பக புற்றுநோய்க்கு பயன்படுத்துகிற பொதுவான மருந்துதான் அட்ரியாமைசின். இதனால் கார்டியோ மயோபதி, கார்டியாக் டேமேஜ் போன்ற இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். சில மருந்துகளால் முடி கொட்டும். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு முடி மீண்டும் வளர்ந்துவிடும். ஆங்காலஜி சிகிச்சையின் பலன்களும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளும் நபருக்கு நபர் வேறுபடும். இந்த பக்கவிளைவுகளை குறைக்கவும் மருந்துகள் இருக்கின்றன. கொஞ்சநாள் சிரமப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 20 வருடங்கள் வரைகூட உயிர்வாழலாம்.

Updated On 6 May 2024 11:43 PM IST
ராணி

ராணி

Next Story