இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய அதிநவீன காலகட்டத்தில் நிறையப்பேருக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று குழந்தையின்மை. இதற்கு வாழ்க்கைமுறை, உணவு, பழக்கவழக்கங்கள் என பல காரணங்கள் கூறப்பட்டாலும் தனிப்பட்ட காரணம் இதுதான் என்று வகைப்படுத்த முடிவதில்லை. குழந்தையின்மை பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் குழந்தைகளை வளர்ப்பதிலும் இளம்பெற்றோர்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. குழந்தையின்மை பிரச்சினைகள் குறித்தும் அதுகுறித்த சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் Fetal Medicine Consultant தீப்தி ஜம்மி.

குழந்தையின்மை பிரச்சினை தற்போது தீவிரமாக இருப்பதற்கான காரணம் என்ன?

குழந்தையின்மை பிரச்சினை பல வருடங்களாகவே இருக்கிறது. ஆனால் இப்போது சமூக ஊடகங்கள் மற்றும் விழிப்புணர்வு அதிகமாகிவிட்டதால் பரவலாக பேசப்படுகிறது. திருமணமாகி ஒரு வருடம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு கரு உண்டாகவில்லை என்றால்தான் அதனை குழந்தையின்மை என்றும், அதன்பிறகுதான் சிகிச்சைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் இப்போது சமூகத்தின் அழுத்தம் மற்றும் ஒரே சமயத்தில் திருமணமான மற்றொரு தம்பதிக்கு குழந்தை உருவாகி, தனக்கு இல்லாவிட்டால் அதிலிருக்கும் போட்டி மனப்பான்மை போன்றவை குழந்தையின்மையை பெரும் பிரச்சினையாக மாற்றிக் காட்டுகின்றன. இதுபோக வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர். அதனால் ஒருநேர உணவுகூட சேர்ந்து சாப்பிட முடிவதில்லை. இப்போது பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அனைத்துமே ஜெட் வேகத்தில் நடக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் திருமண உறவு அப்படி இருக்காது. சில தம்பதிகள் திருமணமான நான்கே மாதங்களில் குழந்தையின்மை சிகிச்சைக்காக வருகின்றனர். அதேசமயம் சிலர் 4 அல்லது 5 வருடங்கள் காத்திருந்து பார்க்கலாம் என்கின்றனர்.


கணவன் - மனைவி உறவில் போதிய இணக்கமில்லாமையாலும் குழந்தைப்பேறின்மை ஏற்படுகிறது

கணவன் - மனைவி இடையேயான புரிதல் தவிர ஆரோக்கியமும் குழந்தைப்பேறில் முக்கியப்பங்கு வகிக்கிறதா?

இன்றைய பிஸியான உலகத்தில் முன்பு என்னென்ன செய்தோம் என்பதெல்லாம் மறந்துவிடும். இப்போது உணவு, காய்கறிகள் என அனைத்துமே டோர் டெலிவரி செய்யப்படுகின்றன. இப்படி அனைத்து வேலைகளுமே சுலபமாகிவிட்டதால் உடலுழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது. 90% பேர் டெஸ்க் வேலையையே செய்கின்றனர். வீட்டிற்கு வந்தாலும் அதிக ஜங்க் உணவுகளை எடுத்துக்கொள்கிறோம். சரியாக உடற்பயிற்சி செய்வதில்லை. 6 மாதங்களுக்கு முன்புவரை சீரான மாதவிடாய் இருந்த பெண்கள் பலருக்கு மாதவிடாயானது அதற்குள் சீரற்றதாகிவிடுகிறது. அதற்கு காரணம் உடலுழைப்பின்மை மற்றும் உணவு முறைகள்தான். இதனால் உடல் எடையானது 8 முதல் 10 கிலோ கூடிவிடுகிறது. எடை அதிகரிப்பதால்தான் சீரற்ற மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் பலர் வேலை செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து அமர்ந்து பாதிப்பை மேலும் அதிகரிக்கின்றனர். எடை கூடுவதால்தான் பெரும்பாலும் நீர்க்கட்டிகள், பிசிஓடி போன்றவை உருவாகின்றன. இதற்கு மருந்து மாத்திரைகளைவிட வாழ்க்கைமுறை மாற்றங்கள்தான் சிறந்த தீர்வை கொடுக்கும். மேலும் இன்று நிறையப்பேருக்கு போதுமான தூக்கம் இருப்பதில்லை. தேவையான நீர் குடிப்பதில்லை. உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்களை சேர்ப்பதில்லை. உடற்பயிற்சி செய்வதில்லை. குறிப்பாக, தூங்கும்வரை செல்போனை நோண்டிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் நேரம் விரயமாவதுடன் உணவு கட்டுப்பாடும் இல்லாமல் போய்விடுகிறது. உடலை எந்த அளவிற்கு பராமரிக்காமல் விட்டுவிடுகிறோமோ அந்த அளவிற்கு அதற்கான தாக்கத்தை பிரதிபலிக்கும்.

கரு மருத்துவத்திற்கும், சோதனைக்குழாய் மருத்துவத்திற்கும் இடையேயான வித்தியாசம் என்ன?

கருமுட்டையும் விந்துவும் பெண்ணின் ஃபெலோபியன் குழாயில் ஒன்றுசேர்ந்துதான் கருவாக உருவாகிறது. இப்படி உருவான கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்ந்து அங்கு வளர்கிறது. இதே முறையானது வெளிப்புறத்தில் நடந்தால் அதுதான் சோதனைக்குழாய் முறை. ஆணிடமிருந்து விந்துவையும், பெண்ணிடமிருந்து கருமுட்டையையும் எடுத்து ஒரு வட்ட வடிவ டிஷ்ஷில் போட்டு இன்குபேட்டரில் வைக்கவேண்டும். 3 நாட்கள் கழித்து அது கருவாக உருவாகியிருந்தால் அதை ஒரு டியூபில் போட்டு மைனஸ் டிகிரியில் ஸ்டோர் செய்துவிடுவார்கள். அந்த கருவை எடுத்து பெண்ணின் கர்ப்பப்பைக்குள் நேரடியாக செலுத்துவர். இதனை IVF என்பர்.


சோதனைக்குழாய் மருத்துவம் - ஸ்கேன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை பரிசோதித்தல்

இதற்கு அடுத்த நிலையைத்தான் ICSI என்பர். இந்த செய்முறையில் விந்துவையும் கருமுட்டையையும் manipulator பயன்படுத்தி எடுத்து இரண்டையும் செயற்கையாக இணைப்பர். Fetal medicine என்பது கருவிலிருக்கும் குழந்தையை பரிசோதிக்கும்போது அதற்கு ஏதேனும் பிரச்சினை இருப்பது தெரிந்தால் அதனை பனிக்குடத்திலிருந்து தண்ணீர் எடுத்தோ அல்லது நஞ்சுக்கொடி வழியாகவோ சோதித்து கண்டறிந்து சரிசெய்வது. இது fetal medicine அல்லது fetal surgery அல்லது fetal therapy-யாக இருக்கலாம். ஒரு கருவை படிப்பது fetal medicine. அதுவே ஒரு கருவை உண்டாக்குவது IVF.

IVF சிகிச்சை முக்கியமாக யாருக்கெல்லாம் அளிக்கப்படுகிறது?

ஒரு ஃபெர்டிலிட்டி மருத்துவமனைக்கு சென்றாலே IVF செய்துவிடுவார்கள் என பலர் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் அப்படி சிகிச்சை இருக்காது. கடந்த 6 அல்லது 7 வருடங்களுக்கு முன்பு இந்த துறையில் முதுகலை மருத்துவம் பயின்றுவிட்டு மகப்பேறு மருத்துவர் என்ற பட்டம் பெற்றவர்கள் சிகிச்சை அளிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்போது பல சப்-டிவிஷன் கோர்ஸ்கள் இருக்கின்றன. முதுகலை பயின்றுவிட்டு தனியாக Fetal medicine பயிலலாம் அல்லது கருவை உண்டாக்கும் fertility specialist ஆகலாம் அல்லது லேப்ரோஸ்கோபி பயிலலாம். இப்படி முன்பு மகப்பேறு மருத்துவம் பயின்ற ஒருவரால் செய்யப்பட்ட பல சிகிச்சைகள் இப்போது அதற்கான சிறப்பு பிரிவு மருத்துவர்களால் அட்வான்ஸ் டெக்னாலஜி மூலம் அளிக்கப்படுகின்றன.


கருவுறுதல் பிரச்சினைகள் வராமல் இருக்க முறையான டயட் அவசியம்

கருவுறுதல் பிரச்சினை வராமல் தடுக்க என்னென்ன உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்?

நாம் அலட்சியமாக நினைப்பவைதான் நமது வாழ்க்கைமுறையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 27 வயதில் தொடர்ந்து வேலை பார்த்தாலும் சரியாக தூங்காவிட்டாலும்கூட அடுத்த நாள் வேலையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் அதுவே 40 வயதில் ஒருநாள் தூங்காவிட்டாலும் அடுத்த நாள் வேலையில் கவனம் செலுத்தமுடியாமல் போய்விடும். 25 - 30 வயதிற்குள் உடலை எந்த அளவிற்கு ஆரோக்கியமாக பார்த்துக்கொள்கிறோமோ அந்த வலிமைதான் 40 வயதிற்கு மேல் தெரியும். இளம்வயதில் சரியாக தூங்காமல், நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் அதன் தாக்கம் 40 வயதிற்கு மேல் தெரியும். எனவே யாராக இருந்தாலும் 6 முதல் 8 மணிநேரம் தூங்கவேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு டின்னர் சாப்பிட்டுவிட வேண்டும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் தினசரி குடிக்கவேண்டும். தேவையில்லாமல் ஜங்க், சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. தினமும் குறைந்தது அரை மணிநேரம் உடற்பயிற்சி கட்டாயம் செய்யவேண்டும். ஒவ்வொரு நேர உணவிலும் குறைந்தது ஒரு காய்கறி மற்றும் ஒரு பழம் சாப்பிடவேண்டும். இதுபோல் சிறுசிறு விஷயங்களில் கவனமாக இருந்தாலே எடை கட்டுப்பாட்டில் இருக்கும். குழந்தையின்மை பிரச்சினையும் வராது.


மருத்துவரின் ஆலோசனை - ஆண்கள் புகைபிடித்தல் கூடாது (உ.ம்)

குழந்தையின்மை பிரச்சினை பெண்களுக்கு மட்டும்தானா? அல்லது ஆண்களுக்கும் இருக்குமா?

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு குழந்தையில்லை என்றாலே பெண்ணைத்தான் சிகிச்சைக்கு அழைத்துவருவார்கள். பெரும்பாலும் ஆண்கள் வரமாட்டார்கள். ஆனால் இப்போது நிறையப்பேர் கணவன் - மனைவியாகத்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். 30 - 40% பெண்களுக்கு பிரச்சினை இருக்கிறதென்றால் அதே அளவிற்கு ஆண்களுக்கும் இருக்கிறது. மீதமுள்ள 20 -30% பேருக்குத்தான் கரு தங்காமல் இருக்க என்ன காரணம் என்றே தெரியாமல் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் கணவன் - மனைவி இருவரையும் பரிசோதிப்பது அவசியம்.

ஆண்களுக்கு என்னென்ன மாதிரியான பிரச்சினைகள் இருக்கும்?

ஆண்களுக்கு விந்து தன்மையைத்தான் முதலில் பரிசோதிப்பர். இந்த பரிசோதனையானது பெண்களைவிட சுலபமாக இருக்கும். விந்தணுக்களை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து நாம்தான் கணக்கிட முடியும். அப்படி பார்க்கும்போது விந்தணுக்களின் எண்ணிக்கை, அது ஊர்ந்து செல்லும் வீரியத்தன்மை, விந்தணுவின் தலை, உடல் மற்றும் வால் போன்றவை எப்படி இருக்கிறது என்பதுபோன்ற பல சோதனைகள் செய்யப்படும். முதலில் பெண்ணுக்கு மட்டும் ஓரிரு வருடங்கள் சிகிச்சை அளித்தும் குழந்தை உருவாகாவிட்டால் அடுத்து ஆணுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்படி பரிசோதிக்கும்போது விந்தணுக்களே இருக்காது. விந்தணு இருப்பது போன்று திரவம் இருந்து அதில் விந்தணுக்களே இல்லையென்றால் அதனை azoospermia என்பர். இந்த நிலை இருக்கும்போது கரு உருவாகாது.


பெண்கள் உடற்பயிற்சி செய்து எடையை கட்டுக்குள் வைப்பதும், தேவையான தூக்கமும் அவசியம்

இதற்கு IUI என்ற முறை இருக்கிறது. இது IVF-க்கு முந்தைய நிலை. இந்த முறையில் விந்தணுக்களை தனியாக எடுத்து அதற்கு ஊட்டமளிப்பர். இப்படி பல பரிசோதனைகளும் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்படும். பெண்களுக்கு எப்படி எடையை குறைக்க அறிவுறுத்தப்படுகிறதோ அதேபோல் ஆண்களுக்கும் எடை குறைக்கவும், புகைப்பிடித்தல் மற்றும் மதுபழக்கத்தை கைவிடவும் அறிவுறுத்தப்படுகின்றன. இதைத்தாண்டி நீரிழிவு, வெப்பமான இடத்தில் வேலை செய்தல், ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபடுதல் போன்றவற்றையும் தவிர்க்கவேண்டும்.

குழந்தையில்லாதவர்கள் என்ன செய்யவேண்டும்?

குழந்தை இல்லை என்பவர்கள் தங்கள் இணையுடன் அதிக நேரம் செலவிடவேண்டும். கணவன் - மனைவி இருவருமே எடையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தூக்கம், போதிய தண்ணீர் குடித்தல், உடல் இயக்கம் போன்றவற்றை கட்டாயம் சீராக்க வேண்டும். இவற்றை கடைபிடித்துக்கொண்டே IVF சிகிச்சை மேற்கொண்டால் சீக்கிரத்தில் ரிசல்ட் கிடைக்கும். அதே போல மன அழுத்தம் இருக்கக்கூடாது. அதிக நேரம் கேட்ஜெட் பயன்படுத்தக்கூடாது. சரியான டயட் முறையை பின்பற்ற வேண்டும்.

Updated On 1 July 2024 11:56 PM IST
ராணி

ராணி

Next Story