இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காலம் மாற மாற பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டே இருக்கும். அதுபோல பயன்படுத்தும் வார்த்தைகளிலும் ஒருசிலவற்றை டிரெண்டிங் வார்த்தைகள் என பயன்படுத்துவதுண்டு. அதிலும் குறிப்பாக, தற்போது எங்கும் டிஜிட்டல் மயம், டெக்னாலஜி மற்றும் சோஷியல் மீடியா என்றாகிவிட்ட நிலையில் டிரெண்டுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. அப்படி சமீப காலமாக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றுதான் உருட்டு. பொதுவாக இல்லாத ஒன்றை நம்பவைத்து ஏமாற்றுவதைத்தான் உருட்டு என்கிறோம். சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இன்றைய காலத்தில் உடல் ஆரோக்கியம், ஃபிட்னெஸ் குறித்து பலரும் அட்வைஸ் கொடுப்பதும் அது பொய்யெனும் பட்சத்தில் சமூக ஊடகங்களில் வைரலாவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி சமீபத்தில் மருத்துவ உலகில் என்னென்ன உருட்டுகிறார்கள் என்பது குறித்து ‘உருட்டு உருட்டு’ என்றே பேசி டிரெண்டானவர்தான் டாக்டர் முருகு சுந்தரம். அவருடனான ஓர் உரையாடல்...

சமூக ஊடங்களில் ஆரோக்கியம் குறித்து நீங்களே பார்த்து வியந்த உருட்டு எது?

உருட்டுலயே உருட்டு உலக மகா உருட்டெல்லாம் சருமம் சார்ந்ததில்தான் இருக்கிறது. இப்போது வீட்டிலிருக்கும் அம்மா, பாட்டி என எல்லாருமே கொஞ்சம் டிரெண்டானவுடன் சருமம் குறித்த டிப்ஸ்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டிலேயே எளிய தீர்வு கொடுப்பது மட்டுமில்லாமல் பியூட்டி பார்லர்களில் நடக்கும் உருட்டுகள், டாக்டர்கள் எனக் கூறிக்கொண்டு நடத்தப்படும் மோசடிகள் என பல இருக்கின்றன. பலர் இதுகுறித்து ஏமாந்துபோய் கூறுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தவே உருட்டு குறித்து பேசத் தொடங்கினேன்.

சமூக ஊடகங்களை பார்த்து சிகிச்சை எடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உங்களிடத்தில் வந்ததுண்டா?

அலோபீசியா ஏரியேட்டா என்ற வட்ட வழுக்கை பிரச்சினைக்கு நேர்வாளம் (குரோட்டன் டிக்லியம்) என்ற கொட்டையை தரையில் உரசி வழுக்கை இருக்கும் இடத்தில் தடவினால் முடி வளரும் என்று யாரோ பதிவிட்டிருக்கிறார்கள். கொட்டையிலிருந்து வரும் எண்ணெயை தடவினால் முதலில் வழுக்கை இருக்கும் இடத்தில் கொப்புளங்கள் வரும். சிலருக்கு அங்கு முடி முளைக்கும். சிலருக்கு கொப்புளங்கள் அதிகமாகி மோசமாகிவிடும். இதில் 4 விதையை ஒரு குழந்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அந்த அளவுக்கு விஷம் நிறைந்தது. இது அறிவியல் வளர்ச்சியடையாத காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய முறை. அதைப் பார்த்து தடவிமொத்த முடியும் கொட்டிப்போய், தலை முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு நிறையப்பேர் வந்திருக்கிறார்கள்.


நேர்வாளம் கொட்டை தேய்ப்பதால் தலையில் ஏற்படும் கொப்புளங்கள்

சாதாரணமாக வட்ட வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடி வளர வைப்பது எளிது. ஆனால் இதுபோன்று கொப்புளங்கள் ஏற்பட்டு அதனால் தழும்புகள் உருவாகும்போது அங்கு முடி வளராமலேயே போய்விடும். அதேபோல் முகத்தில் கண்டவற்றை தடவுதல், ஃபேஷியல் செய்தல் போன்றவற்றாலும் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

அங்கீகாரமற்ற முறையில் கிரீம்கள், பவுடர்களை தயாரித்து அதை ஆன்லைனில் விற்பனை செய்கிறார்களே... அதுகுறித்து கூறுங்கள்

மக்களின் ஆதங்கத்தை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல் விதவிதமாக சமூக ஊடகங்களில் உருட்டுகிறார்கள். இப்போது ‘செலிப்ரிட்டி க்ரீம்’ என்று ட்ரெண்டாகி வருகிறது. சாதாரணமாக ஒரு க்ரீம் தயாரிக்க அதிகபட்சமாக 500 ரூபாய்க்கு மேல் ஆகாது. ஆனால் செலிப்ரிட்டிகளின் பெயர்களை பயன்படுத்தி அவர்களை வைத்து விளம்பரப்படுத்தி 5000-க்கு கூட க்ரீம்களை விற்கிறார்கள். மக்களும் அவர்களைபோல மாறிவிடலாம் என்று நம்பி ஏமாந்துபோய் வாங்குகிறார்கள்.

இப்போது வாங்கும் காஸ்மட்டிக் பொருட்களில் சருமத்தை சேதப்படுத்தும் அடிப்படையான காரணிகள் என்னென்ன?

இங்கு நிறையப்பேருக்கு எப்படியாவது கலரான சருமத்தை பெற்றுவிட வேண்டும் என்ற ஏக்கம் உண்டு. கருப்பாகவோ, மாநிறமாகவோ இருந்தால் ஒளிமயமான எதிர்காலம் கிடையாது என்று சொல்லி சொல்லியே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டார்கள். இதனால் கொஞ்சமாவது கலராகிவிட மாட்டோமா என்று நினைத்து காஸ்மட்டிக்குகளை வாங்குகிறார்கள். இதனை பயன்படுத்தி ஸ்கின் ஒயிட்டனிங், ப்ரைட்டனிங் மற்றும் லைட்டனிங் க்ரீம்களை தயாரிக்கிறார்கள். இவற்றில் டாப்பிக்கல் ஸ்டீராய்டுகளை பயன்படுத்துகிறார்கள். எக்ஸிமா போன்ற சரும பிரச்சினைகளுக்குத்தான் ஸ்டீராய்டு க்ரீம்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நன்றாக இருக்கும் சருமத்தின்மீது இந்த க்ரீம்களை குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் தடவும்போது அதன் பக்கவிளைவாக சருமம் வெளுக்கிறது. மோசமான பக்கவிளைவை நல்லது என்று கூறி வியாபாரம் செய்கிறார்கள். இதனால் சருமம் மெலிந்துபோய் ரத்தக்குழாய்கள்கூட வெளியே தெரிய ஆரம்பிக்கும். முகப்பரு, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.


கஞ்சாவை பயன்படுத்தி மசாஜ் செய்தல்

கஞ்சாவை ( Marijuana or weed) உட்கொள்ளக்கூடாது, ஆனால் மசாஜ் செய்ய பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்களே... அது உண்மையா?

இதுவும் உருட்டுதான். ஆனால் அந்த காலத்தில் கிளியோபாட்ரா வைன் பீப்பாய்களில் படிந்திருக்கும் வைன்களை சுரண்டி எடுத்து அதை முகத்தில் தடவியதாக சொல்வதுண்டு. அதில் ரெஸ்வரெட்ரால் என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. அது சருமத்திற்கு நல்லதுதான். ஆனால் கஞ்சாவை பயன்படுத்துவது நல்லதல்ல. ரெட் வைனில் ரெஸ்வரெட்ரால் இருக்கிறது. அதேபோல் சிலப்பதிகாரத்தில் மாதவி நிறைய இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் 36 வகை மூலிகைகளை பயன்படுத்தியதாகவும், குளிக்கும் நீரில் கலந்ததாகவும், நறுமண புகைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

எளிமையாக சருமத்தை பராமரிப்பது எப்படி?

சருமத்தை தனியாக பராமரிக்க வேண்டிய அவசியமே இல்லை. அது தானாகவே தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும் வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. வள்ளுவரே ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ என்றுதான் குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் தவறாக இருப்பதால்தான் சரும பராமரிப்பு தேவைப்படுகிறது. சருமம் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளத்தான் எண்ணெய்படலம் ஒன்றை உருவாக்கிக்கொள்கிறது. அதையும் தாண்டி சருமம் பாதிப்படையும்போதுதான் குளித்தவுடன் இரவில் மென்மையான க்ரீம் அல்லது தேங்காய் எண்ணெயை தடவலாம். சூரிய ஒளியினால் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தனி அக்கறை செலுத்தலாம்.

Updated On 30 Jan 2024 12:02 AM IST
ராணி

ராணி

Next Story