இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவு, தண்ணீர் என எதிலுமே 100% இயற்கையான பொருட்களை காண முடிவதில்லை. அதிலும் அதீத ரசாயன பயன்பாடு மற்றும் தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இப்போது பட்டிதொட்டியெங்கும் அனைவரின் கையிலும் செல்போன் விளையாடுகிறது. சமூக ஊடகங்களில் யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்துக்களை வேண்டுமானலும் பதிவிடலாம் என்ற நிலை இருப்பதால், மருத்துவர் அல்லது நிபுணர்களின் பரிந்துரையின்றி அதில் வருகிற அனைத்து டிப்ஸ்களையும் பின்பற்றி, மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்கும் நிலைக்கு பலரும் தள்ளப்படகின்றனர். முகப்பரு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு ரசாயனம் கலந்த மருந்துகளைவிட வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காணலாம் என்கிறார் சித்த மருத்துவர் எம்.எஸ்.உஷா நந்தினி.

முகப்பரு மற்றும் வடுக்கள் வராமல் தடுக்க சித்த மருத்துவத்தில் என்னென்ன வழிகள் உள்ளன?

முகத்தில் பருக்கள், குழிகள் அதிகம் வந்தாலே ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சினை இருக்கிறதா என்பதை முதலில் கவனிக்கவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். பெண்களைப் பொருத்தவரைக்கும் கர்ப்பப்பையின் அழகுதான் முகத்தில் தெரியும். மாதந்தோறும் தவறாமல் மாதவிடாய் சீரான முறையில் வந்தாலே முகம் தெளிவாக இருக்கும். பல்வேறு காரணங்களால் முகப்பரு உருவாகிறது. நமது உணவுப் பழக்கவழக்கம், தலையில் இருக்கும் பொடுகு, அதிகம் எண்ணெய் சேர்த்து உணவுகளை எடுத்துக்கொள்வது, ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் முகப்பரு வருகிறது.


பொடுகு காரணமாக முகப்பருக்கள் வரும்பட்சத்தில் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது. திரிபலா சூரண ஊறல் நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதனை தலையில் நன்கு தெளித்து, 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் தலைக்குக் குளித்தால் தீர்வு கிடைக்கும். உணவுப் பழக்கங்கள் மற்றும் ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக வரும் முகப்பருக்கள் பெரிதாகவும், அதனை உடைக்கும்போது வெள்ளை நிறத்தில் சீழ் வெளிவரும் வகையிலும் இருக்கும். இதற்கு செஞ்சந்தனத்தை பன்னீரில் கலந்து இரவில் ஃபேஸ்பேக்காக போட்டுக்கொள்ளலாம். வேப்பிலை பொடியை விரலி மஞ்சள் பொடியுடன் சேர்த்து பேக்காக தயாரித்து முகத்தில் தடவலாம். அதேபோல், தூங்கும்போது தலையணைமீது ஒரு டவல் விரித்து தூங்கவேண்டும். தினமும் டவலை துவைத்து சுத்தமாகப் பயன்படுத்தவேண்டும். அதேபோல், தலைசீவியபின் சீப்பையும் கழுவவேண்டும்.

பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய சரும கருமை (Skin Tan) பிரச்சினைக்கு இன்டெர்நெட்டில் தீர்வு தேடுவது சரியா?

சூரிய கதிர்களால் சருமத்தில் அதிகப்படியான மெலனின் சுரப்பதால்தான் சருமம் கருமையடைகிறது. இதற்கு நிறைய க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். சில க்ரீம்களில் ஜீனோஈஸ்ட்ரோஜென்கள் (xenoestrogens) என்று சொல்லக்கூடிய வேதியியல் பொருள் இருக்கிறது. இதனால் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாயுப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.


இதனால் சரும கருமையை நீக்க க்ரீம்களை தேடிச் செல்லாமல் வீட்டிலேயே ஒரு பவுடர் தயாரித்து அதனை பயன்படுத்தலாம். தோல் நீக்காத கொண்டைக்கடலை மற்றும் பாசிப்பயறை சம அளவு அரைத்து, அதனுடன் அதில் 10% அளவுக்கு அரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், மாலை நேரத்தில் இந்தப் பொடியை மோரில் கலந்து முகத்தில் தடவி, சிறிதுநேரம் வைத்து பின்னர் ஸ்க்ரப் செய்து முகத்தை கழுவவும். மருத்துவரின் பரிந்துரையின்றி க்ரீம்களை நாமாகவே வாங்கிப் பயன்படுத்தும்போது, சரும அலர்ஜி ஏற்பட்டு, அதனை குணமாக்க ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தவேண்டிய சூழல் ஏற்படலாம்.

கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கு சித்த மருத்துவத்தில் என்னென்ன தீர்வுகள் உள்ளன?

கால்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தாலேயே பெண்களுக்கு பாத வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ஹீல்ஸ் பயன்படுத்துவோருக்கு இந்த பிரச்சினை அதிகம் ஏற்படும். இதுதவிர, ஹார்மோன் பிரச்சினை, பிசிஓடி போன்ற பிரச்சினைகளாலும் பாத வெடிப்பு ஏற்படுகிறது. தண்ணீர் குறைவாகக் குடிப்பதாலும் வெடிப்புகள் வரும். சில நேரங்களில் பிறர் பயன்படுத்திய சோப்புகளைப் பயன்படுத்துதல், துவைக்கும் சோப்புகள் போன்றவற்றால் கான்டாக்ட் டெர்மாட்டிட்டிஸ் என்ற அலர்ஜி பிரச்சினை வரும். இதனாலும் வெடிப்புகள் வரலாம். அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய பொருள் எது என்பதைக் கண்டறிந்து அதனை தவிர்க்கவேண்டும். ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவேண்டும். இதுதவிர, ஹார்மோன் பிரச்சினை மற்றும் சொரியாசிஸ் போன்ற சருமப் பிரச்சினைகளால் பாத வெடிப்புகள் ஏற்பட்டால் அதற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.


வாயகன்ற பாத்திரத்தில் சூடான தண்ணீர் ஊற்றி அதில் சிறிது கல் உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, அந்த தண்ணீரில் சிறிதுநேரம் காலை ஊறவைத்து கழுவ, கிருமிகள் நீங்கி சுத்தமாகும். காலை சுத்தமாக துடைத்துவிட்டு, இரவு தூங்கப்போகும் முன், விளக்கெண்ணெயில் சிறிது மஞ்சள்தூள் கலந்து பாதங்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடவவேண்டும். காலை எழுந்தவுடன், டிஸ்யூ பேப்பரால் அதனை சுத்தமாக துடைத்துவிடவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளதா?

நோய்களைப் பொருத்தே உணவுகளில் மாற்றம் இருக்கும். உதாரணமாக, வாதநோய் பிரச்சினைக்கு சிகிச்சை எடுப்பவர்கள் வாயுத்தொல்லையை ஏற்படுத்தக்கூடிய வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. சரும பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுப்பவர்கள், கத்தரிக்காய், மீன், கோழி இறைச்சி, கருவாடு, தட்டை, மொச்சை, அவரை போன்றவற்றை தவிர்க்கவேண்டும். சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கு என்னென்ன உணவுகளை சாப்பிடலாம், என்னென்ன சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.


பொதுவாகவே சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் அகத்திக்கீரை மற்றும் பாகற்காய் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் இவற்றிலிருக்கும் ஃபைட்டோ கெமிக்கல் மூலக்கூறுகளானது எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும் அதனை முறிக்கக்கூடிய தன்மை உள்ளதாக இருக்கும். எனவே இந்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

தூக்கமின்மை பிரச்சினைக்கு மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். மாத்திரைகளை தவிர்க்க சித்த மருத்துவத்தில் என்னென்ன வழிகள் இருக்கின்றன?

ஷிப்ட் வேலை, அதிகப்படியான செல்போன் பயன்பாடு போன்ற காரணங்களால் பலருக்கும் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது. மூளையில் சுரக்கும் கார்டிசோல், செரட்டோனின் மற்றும் மெலட்டோனின் போன்ற தூக்கத்திற்குத் காரணமாக ஹார்மோன்களின் சுரப்பில் சமநிலையின்மை ஏற்படுவதே தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்குகிறது. இதனால் பகல்நேரத்தில் தூக்கம்வரும். இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும்.


கண்ணை பாதிக்கக்கூடிய ப்ளூரே கதிர்களை வெளியிடும் திரை நேரத்தை குறைக்கவேண்டும். இதனால் கார்டிசோல் சுரப்பு சீராகி, தூக்கம் வரும். அதேபோல் இரவு உணவை 7 மணிக்குள்ளாக முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், செரிமானப் பிரச்சினைகளால் தூக்கமின்மை ஏற்படும். அதேபோல் ஷிப்ட் வேலை செய்பவர்கள், அவர்களுடைய வேலைக்கு ஏற்றாற்போல் உணவுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். இரவு நேரத்தில் 2 சிட்டிகை அல்லது கால் டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து சாப்பிடவேண்டும். இதுதவிர, கசகசாவை 3 மணிநேரம் ஊறவைத்து, அரைத்து, அந்த விழுதை கால் தம்ளர் பாலில் கலந்து குடிக்கவேண்டும். இதனைத்தாண்டி தூக்கமின்மை பிரச்சினை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

சித்த மருத்துவத்தால் என்னென்ன நோய்களை குணப்படுத்தமுடியும்?

4,448 வியாதிகளுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்காமல், உணவு பத்திய முறைகளையும் பரிந்துரைத்து, மீண்டும் நோய்கள் வராமல் தடுப்பதே சித்த மருத்துவத்தில் பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கருப்பை சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்குமே அறுவை சிகிச்சையின்றி சித்த மருத்துவம் மூலம் தீர்வு காணமுடியும்.

Updated On 8 Aug 2023 4:33 AM GMT
ராணி

ராணி

Next Story