இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

`உணவே மருந்து’ என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் அதனை நடைமுறை வாழ்க்கையில் வழக்கமாக்கி இருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினால் பலருக்கும் பதில் இருக்காது. தினசரி நாம் உண்ணும் உணவை ஊட்டச்சத்து மிக்கதாகவும், சரிவிகித முறையிலும் எடுத்துக்கொண்டாலே பாதி பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மேலும், ஒற்றை தலைவலி, பி.சி.ஓ.டி, பி.சி.ஓ.ஸ் போன்ற பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சி செய்வதே சிறந்த தீர்வு கொடுக்கும் என்கிறார் சித்த மருத்துவர் ஷர்மிகா.

1. ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

ஒற்றைத் தலைவலி என்பது நரம்பியல் பிரச்சினை சார்ந்தது. இது பெரும்பாலும் அதிகப்படியாக யோசிப்பதாலும் மன அழுத்தத்தாலும், ஹார்மோன் மாற்றங்களாலும் வரக்கூடும். அதுவும் குறிப்பாக ஒற்றைத் தலைவலி ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகம் வருகிறது.


ஒற்றை தலைவலி

2. ஹார்மோன் மாற்றங்களுக்கு நீர் சமநிலையின்மையும் ஒரு காரணமா?

ஆம்! நிச்சயமாக. தற்போதைய காலக்கட்டத்தில் போதிய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதனையே பலர் மறந்து விடுகிறார்கள். முற்காலத்தில் வெயிலில் சென்று உழைத்தால் அடிக்கடி தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடித்து உடலை சீராகப் பார்த்துக்கொண்டனர். ஆனால் இப்போதோ பெரும்பாலும் ஏ.சி யில் பணிபுரிவதால் பலருக்கும் தாகம் ஏற்படுவதில்லை. இதனால் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுகிறார்கள். ஆனால் நம் உடலின் உள்ளுறுப்புக்கள் பொதுவாகவே உலரும் தன்மையானதாக இருக்கும். அதிலும் நாம் தண்ணீர் குடிக்காமல் விட்டால் நம் உள்ளுறுப்புகள் தண்ணீரற்று முழுமையாக உலர்ந்துவிடும். இப்படி உலர்வதால் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படும். இதனாலேயே மருத்துவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

3. ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது?

கட்டாயமாக 20 கிலோ எடைக்கு 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வேண்டுமானால் அதற்கு அதிகமாகவும் குடிக்கலாம். ஆனால் அதற்கு குறைவாகக் குடிக்கக்கூடாது.


உடலில் நீர் பற்றாக்குறை

4. தலையில் நீர்கோர்க்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? மீறி அப்படி சேர்ந்தால் அதற்கான வீட்டு வைத்தியங்கள் என்னென்ன?

பொதுவாக பெண்கள் கூல் ட்ரயர், ஹாட் ட்ரயர் என்று இரண்டினையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் எது பயன்படுத்தினாலும் முடி துவாரங்கள் வழியே தண்ணீர் தலையின் உட்புறம் செல்லுமே தவிர அது உலராது. அதற்காக ட்ரயர் போன்றவற்றை பயன்படுத்தாமல் மின்விசிறியின் கீழ் அமர்ந்து 10 நிமிடங்களுக்கு முடியை நன்கு துவட்டி காயவைத்தாலே போதுமானது. அதைவிட வெயிலில் நின்று காயவைப்பது மிகவும் நல்லது. உடலுக்கு வைட்டமின்-டியும் கிடைக்கும்.

5. தற்போதெல்லாம் 10, 12 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள். அதற்கான காரணங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?

உணவைக் காட்டிலும் வாழ்க்கைமுறையே இதற்கு பெரும்பங்கு வகிக்கிறது. இக்கால குழந்தைகளுக்கு வைட்டமின்-டி என்பதே இல்லாமல் போய்விட்டது. மேலும் இன்றைய குழந்தைகள் கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து கைபேசியில் விளையாடுகிறார்கள். இப்படி இயற்கை வாழ்க்கைமுறை எதுவும் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பது மிக இளம் வயதில் பருவமடைதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உணவுமுறையை பொருத்தவரை மைதா, அதிக இனிப்பு வகைகள், காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.


இளம்வயதிலேயே பருவமடைதல்

6. எந்த உணவு முறையை பின்பற்றினால் இளம் பருவமடைதலை தடுக்கலாம்?

பொதுவாக எல்லோரும் சிறுதானிய வகைகளான ராகி, சாமை, கோதுமை போன்றவற்றை உட்கொள்வது நல்லது. அதுவும் காலை மற்றும் மதிய வேளைகளில் மட்டும் இதனை உட்கொள்ளலாம். செரிமான பிரச்சினைகளை தவிர்க்க இரவு நேரத்தில் சிறு தானியங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சிறுதானிய உணவுகளுடன் உடற்பயிற்சியையும் மேற்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

7. மாதவிடாய் நாட்களில் அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஏற்படும் பிரச்சினை பலருக்கும் இருக்கிறது. இப்படி அரிப்பு வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

இதற்கு சிறந்த தீர்வு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக இந்த மாதவிடாய் ஆகும் 7 நாட்களுக்கு முன்னால் ABC ஜூஸ், அதாவது இந்த ஆப்பிள், பீட்ரூட், கேரட் என்று இந்த 3 ஜூஸ்களை எடுத்துக்கொள்ளலாம். இதைத் தவிர்த்து வெள்ளரிக்காய், சாத்துக்குடி, சப்போட்டா, வெள்ளைப்பூசணி, தர்பூசணி, சீத்தாப்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சியான பழங்களை குடிக்கவோ சாப்பிடவோ செய்யலாம். 3 ஜூஸ்களை எடுக்கமுடியவில்லை என்றால் அதிகபட்சம் 1 ஜூஸையாவது குடிப்பது நல்லது. இப்படிச் செய்தால் அரிப்பு தன்மை ஏற்படுவது குறைவாகும். இதைத்தவிர செயற்கை நாப்கின் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு காட்டன் நாப்கின்களை உபயோகித்தால் பெரும்பாலும் அரிப்பு ஏற்படாது.

மேலும் அரிப்பு ஏற்பட்டால் சித்தா மருத்துவத்தில் திரிபலா பொடி இருக்கிறது. 1 குவளை தண்ணீரில் 1 கரண்டி திரிபலா பொடியை கலக்கி அரிப்பிருக்கும் இடத்தை நன்கு கழுவ வேண்டும். இதனை மாதவிடாய்க்கு முன் மாதவிடாய்க்கு பின் என்று நாள்தோறும் பயன்படுத்தலாம். குறிப்பாக, தினமும் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு உறங்கினால் நிச்சயம் அரிப்பு ஏற்படாது.


மாதவிடாய் காலங்களில் அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு

8. சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களுக்கு முன்னால் வெள்ளைப்படுதல் அதிகமாயிருப்பது சாதாரணம் தானா? அல்லது ஏதேனும் பிரச்சினை உள்ளதா?

மாதவிடாய் வெளிப்படுவதற்கு முன் 3 முதல் 5 நாட்களுக்கும் மாதவிடாய் முடிந்த பிறகு 5 நாட்களுக்கும் வெள்ளைப்படுவது என்பது சாதாரணம் தான். ஆனால் அந்த வெள்ளைப்படுதல் திரவ நிலையில் இருக்க வேண்டும். அதற்கு மாறாக கட்டியாக வெளியேறினாலோ அல்லது துர்நாற்றம் வெளியேறினாலோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அதுவும் இந்த வெள்ளைப்படுதலின்போது கண் எரிச்சல், தலைமுடி உதிர்தல், உடம்பு வலி போன்றவை ஏற்பட்டாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த அறிகுறிகள் தென்படும்போது நிச்சயமாக மருத்துவரை நாடுவது நல்லது.

9. மாதவிடாய் சீராக இல்லாமை அல்லது ஒரு நாள் மட்டும் மாதவிடாய் ஆவதற்கான காரணங்கள் என்ன? அதனை சீர் செய்வதற்கான வழிகள் என்ன?

இதனை `ஸ்பாட்டிங்’ என்று குறிப்பிடுவர். இப்படி ஆகுபவர்கள் முதலில் ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும். அந்த ஸ்கேனில் பி.சி.ஓ.டி, பி.சி.ஓ.ஸ் அல்லது ஃபைப்ராய்ட்ஸ் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தால் அதற்குரிய சிகிச்சையை பெறவேண்டும். அப்படி இது எதுவும் இல்லாமல் ரிசல்ட் நார்மலாக இருந்தால் அவர்களுக்கு ஹார்மோன் மாத்திரைகள் வழங்கப்படும். சிலர் உடற்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவர்.

10. பிரசவத்திற்கு பிறகு பொதுவாக பெண்களுக்கு தொப்புள் குடலிறக்கம் ஏற்படும். இந்த தொப்புள் குடலிறக்கத்தை சீர்செய்து அதன் பழையநிலைக்கு கொண்டுவர என்ன செய்யவேண்டும்?

ஹெர்னியாவுக்கு ஹோமியோபதியில் தீர்விருக்கிறது. சித்தாவில் ஒவ்வொருவரின் உயரத்திற்கும் எடைக்கும் ஏற்றாற்போல் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கப்படும். வயது காரணமாகவும், அதிக எடையுள்ள பொருளைத் தூக்குவதாலும், அடிக்கடி இருமல், தும்மல் வந்தாலும் பெரிட்டோனியம் என்னும் ஜவ்வானது விரிவடையும். இதனாலேயே ஹெர்னியா ஏற்படுகிறது. அதிக சுமை தூக்குதல், தொடர்ந்து இருமுதல் போன்றவற்றை நிறுத்தினால் ஹெர்னியாவை குறைக்க வாய்ப்பிருக்கிறது. 2 சென்டிமீட்டருக்கு கீழே இறங்கினால் அறுவைசிகிச்சையும் பரிந்துரைக்கப்படும்.


பி.சி.ஓ.டி, பி.சி.ஓ.எஸ் பிரச்சினையால் உடற்பருமன்

11. பி.சி.ஓ.டி, பி.சி.ஓ.ஸ் இருப்பவர்களுக்கு உடற்பருமன் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சித்தாவின் மூலம் உடல் எடையினை குறைப்பது எப்படி?

சித்தாவை பொறுத்தவரை தீர்வு என்பது உடனடியாக கிடைக்காது. நல்ல தீர்வினை பெற சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், தொடர் உடற்பயிற்சினாலும், சரியான உணவுமுறையினாலும் நிச்சயமாக உடல் எடையினை குறைக்க முடியும். உணவுமுறையை பொறுத்தவரை இனிப்பு மற்றும் மைதாவை அறவே தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவிடும். 3 அல்லது 4 மாதங்களில் 7 முதல் 10 கிலோ எடை குறைந்தவர்களுக்கு 6 - 6 பிளான் அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படும்.

12. மெனோபாஸின் முக்கியத்துவங்கள் என்னென்ன?

மாதவிடாய் நின்றுபோதலைத்தான் மெனோபாஸ் என்று கூறுவர். இந்த மெனோபாஸ் எந்தளவுக்கு தள்ளிப்போகிறதோ அந்த அளவுக்கு உடலுக்கு நல்லது. மாதவிலக்கு தொடர்ந்து வந்தால்தான் உடலில் எந்த அழுக்கும் தேங்காமல் உடல் சீராக இருக்கும். மெனோபாஸான பிறகு பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்வது, தினமும் காலை மாலை நடப்பது, வேண்டுமானால், ஜிம்முக்கு செல்வது என்று எப்பொழுதும் ஹார்மோன்களை சீராகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மெனோபாஸ் சீக்கிரம் வர வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.

Updated On 14 Aug 2023 6:54 PM GMT
ராணி

ராணி

Next Story