இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

டெக்னாலஜி ஒரு புறம் வளர்ந்துகொண்டே போகிறது. மற்றொரு புறம் உடல் பிரச்சினைகளைவிட மனம்சார்ந்த பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அனைவருக்குமே அவரவர் வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மன அழுத்தங்களும், மனச்சோர்வுகளும், தாக்கங்களும் ஏற்படுகின்றன. மனநல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் குணப்படுத்துவது கடினம் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. மேலும் மனச்சோர்வு குறித்தும், மனநல பாதிப்புகளுக்கான சிகிச்சை குறித்தும் விளக்குகிறார் அவர்.

மனச்சோர்வு மனநல பாதிப்பாக மாறுவதை கண்டுபிடிப்பது எப்படி? அதன் அறிகுறிகள் என்னென்ன?

மனநல பிரச்சினையை பொருத்தவரை நமக்கு எதுவும் வராது என நினைப்பதுதான் முதல் பிரச்சினை. அப்படியே மனநல பிரச்சினைகள் கண்டறியப்பட்டாலும் முதலில் ஆன்மிகத்தை நாடுகிறார்கள். அதிலேயே ஓரிரு வருடங்களை கழித்தபின்புதான் மனநல மருத்துவரை தேடிவருவார்கள். மனநல பிரச்சினைகள் மன அழுத்தத்தில் இருந்துதான் தொடங்குகிறது. ஆனால் மன அழுத்தம் இருந்தாலும் தினசரி வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கிறோம். அதேநேரம் தினசரி நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டு, அதனால் ஓரிரு வாரங்களுக்கு எந்த வேலையும் செய்யமுடியாத நிலை உருவாகி, அமைதியாகிவிட்டால் அவருக்கு பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே அப்போதே அந்த நபரை மனம்விட்டு பேச வைக்கவேண்டும். அமைதியாகிவிட்ட நிலைக்கு அடுத்த நிலை சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் போதல். அதற்கு அடுத்த நிலைதான் நாம் ஏன் இருக்கிறோம்? எதற்காக இருக்கிறோம்? என்ற கேள்விகள் உருவாகிற நிலை. இதுபோன்ற விரக்தியின் உச்சகட்ட நிலையில்தான் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.


மனச்சோர்வால் பிறரிடமிருந்து விலகி இருத்தல் - விரக்தி ஏற்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ளுதல்

ஒருவருக்கு மனச்சோர்வு எதனால் வருகிறது? எப்படி வருகிறது? என்ற காரணமெல்லாம் சொல்லமுடியாது. பள்ளி சிறுவர்கள் முதல் வயதானவர்கள்வரை அனைவருக்குமே மனச்சோர்வு ஏற்படும். குடும்பத்தில் யாருக்கேனும் மனநல பாதிப்பு இருந்தாலோ, சிறு திட்டு அல்லது கோபத்தைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத சுபாவங்களாலோ, குடும்ப பிரச்சினைகளாலோ அதிர்ச்சி ஏற்படும். இதுபோன்ற அதிர்ச்சிகளை தொடர்ந்து தாங்கிக்கொண்டே இருக்கும் நபருக்கு ஒருநாள் அது வெடித்து மனச்சோர்வு அல்லது மன உளைச்சல் போன்ற மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற நபர்களை மருத்துவரிடம் காண்பிக்கவேண்டும்.

மனநல பிரச்சினைகளுக்கான தீவிர அறிகுறிகள் என்னென்ன?

சில வியாதிகள் வந்து ஒருவாரம்தான் இருக்கும். ஆனால் அதற்குள் அதீத கோபம், கையில் கிடைத்ததையெல்லாம் உடைத்தல், பேச்சில் வித்தியாசம் தெரிதல், தூக்கம் குறைதல், தேவையில்லாமல் அதிகமாக போன் செய்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இது பெரும்பாலும் பைபோலார் டிஸார்டராக இருக்கலாம். மனநல பிரச்சினை இருப்பவர்கள் எப்போதும் சோகமாகவே இருக்கவேண்டிய அவசியமில்லை. காரணமில்லாமல் அதீத மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். அதிலும், தனிமையால் மனச்சிதைவு நோய் ஏற்பட்டவர்களுக்கு காதில் யாரேனும் பேசுவதுபோன்று சத்தம் கேட்பதாக சொல்வார்கள். அவர்களுக்கு அந்த சத்தங்களே துணையாக இருப்பதுபோன்று உணர்வார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கான ஒரு உலகத்தையே உருவாக்கி அதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.


மனச்சிதைவால் யாரோ தன்னிடம் பேசுவது போன்ற உணர்வு நிலையை குணப்படுத்த சிகிச்சை அவசியம்

இதுபோல் மனச்சிதைவு ஏற்பட்டவர்கள் பலரை தெருக்களில் தனியாக பேசி, சிரித்துக்கொண்டு இருப்பதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும். சில பிரச்சினைகளுக்கு கொஞ்ச நாட்கள் மருந்து எடுக்கவேண்டும். சில பிரச்சினைகளுக்கு வாழ்நாள் முழுவதுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நரம்பு தளர்ச்சி வந்துவிடுமோ என பயப்படுவோரும் உண்டு. ஆனால் மாத்திரைகளை நிறுத்திவிட்டால் மீண்டும் அதே பிரச்சினை வர வாய்ப்புகள் உண்டு. பிபி, சுகர் மாத்திரைகளைப் போன்றுதான் மனநல பிரச்சினைகளுக்கான மாத்திரைகளையும் தொடர்ந்து எடுப்பது அவசியம்.

மனநல பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியுமா?

ஒருசில மனநல பிரச்சினைகளை முழுமையாக குணப்படுத்த முடியும். ஒருசில பிரச்சினைகளுக்கு அப்படியல்ல. திடீரென ஏற்பட்ட தோல்வி அல்லது இழப்பு அல்லது தனக்கு நடந்த அநீதியை தாங்கிக்கொள்ள முடியாதபோது அதன் தாக்கம் சிறிது நாட்களுக்கு இருந்துவிட்டு பின்னர் படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் சிலருக்கு அந்த தாக்கமானது வாழ்நாள் முழுவதும் நீடித்தால் குணப்படுத்த முடியாது.

இன்றைய காலகட்டத்தில் எந்த வயதினர் மனநல பிரச்சினைகளுக்கு அதிகம் ஆளாகிறார்கள்?

பெரும்பாலும் டீனேஜர்கள், காலேஜ் செல்பவர்கள் மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். இப்போது வளர்இளம் சிறார்களும் பாதிக்கப்படுகிறார்கள். போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதனாலேயே போதைப்பொருட்களின் பயன்பாட்டை குறைக்குமாறு அறிவுறுத்துகிறோம். அதேபோல் காலங்காலமாக பெண்களும் மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, திருமணத்திற்கு பிறகு ஏற்படுகிற கஷ்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது.


மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகும் டீனேஜர்கள் - போதை பழக்கத்திற்கு அடிமையாதல்

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் வந்தால் அவர்களிடையே என்னென்ன மாற்றங்கள் தென்படும்?

குழந்தைகளுக்கு ஆட்டிஸம், ADHD போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒருசில குழந்தைகள் துருதுருவென இருப்பார்கள். இந்த குழந்தைகளால் பள்ளிக்கு செல்லும்போது ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியாது. அந்த குழந்தைகளை ஒரு இடத்தில் உட்கார வைத்து பாடம் சொல்லிக்கொடுப்பது கடினம். இந்த பிரச்சினையை மனநல மருத்துவர் அல்லது உளவியல் நிபுணரை அணுகி சரிசெய்துதான் ஆகவேண்டும். சில குழந்தைகள் வளர வளர இது சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு அந்த பிரச்சினையே தொடரும். இதனாலேயே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் ADHD-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் இருக்கிறது. அதேபோல் ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏதேனும் ஒன்றையே உற்று பார்த்துக்கொண்டிருத்தல், பசித்தால் சொல்லத் தெரியாமல் இருப்பது என எப்போதும் தங்களுடைய உலகத்திலேயே இருப்பார்கள். இதுபோன்ற குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தெரபிக்களை கொடுத்தால் சரியாகிவிடுவார்கள். ஆனால் வளர்ந்தால் சரி ஆகிவிடுவார்கள் என விட்டுவிட்டால் பிரச்சினை அதிகரித்துவிடும்.


லிவ் இன் ரிலேஷன்ஷிப் ஆரோக்கியமானதா என்பது குறித்து எழும் கேள்விகள் (உ.ம்)

அதேபோல் சில குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை என பெற்றோர் அடிப்பதுண்டு. ஆனால் படிக்காததற்கான உண்மையான காரணம் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. ஒரு குழந்தையின் கற்றல் திறனை மேம்படுத்த என்னென்ன செய்யவேண்டுமோ அதை முறைப்படி செய்யவேண்டும். டிஸ்லெக்சியா என்கிற கற்றல் குறைபாட்டிற்கும் புத்திசாலித்தனத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. சிலருக்கு குறிப்பிட்ட பாடம் மட்டும் கற்றுக்கொள்ள முடியாது. அதற்கான காரணத்தை கண்டறிந்து கவுன்சிலிங் அளிக்கவேண்டும்.

இளைஞர்களிடையே காணப்படுகிற லிவ் இன் ரிலேஷன்ஷிப் ஆரோக்கியமான மனநிலையா?

உலகமெங்கும் அசுர வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இப்போது டெக்ஸ்ட்ஷிப், சுச்சுவேஷன்ஷிப் என நிறைய ‘ஷிப்ஸ்’ வகைகள் இருக்கிறது. அதேபோல் பாய் பெஸ்டீ, ஜிம் பெஸ்டீ, போன் பெஸ்டீ என நிறைய ‘பெஸ்டீஸ்’களும் இருக்கிறார்கள். இதுபோன்ற உறவுகளில் ஒன்றுதான் லிவ் இன் ரிலேஷன்ஷிப். இதுபோன்ற உறவுகளில் நுழைவதற்கு முன்பு அதிலுள்ள நிறை குறைகளை ஆராய்ந்து அறிந்துகொண்டுதான் அந்த உறவில் இறங்கவேண்டும்.

Updated On 22 April 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story