இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அனைத்து ஜீவராசிகளுக்குமே உணர்ச்சிகள் உண்டு என்றாலும் அதை கட்டுப்படுத்தி அளவாக வெளிப்படுத்த தெரிந்தவர்கள் மனிதர்கள்தான். கோபம், அழுகை மற்றும் மகிழ்ச்சி என எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை யாரிடம் எந்த அளவிற்கு பயன்படுத்தவேண்டும் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கவேண்டும். எந்தவிதமான உணர்ச்சியாக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக போகும்போது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். அதுவே மன அழுத்தம், பதற்றம் போன்ற பல மனநோய்களுக்கும் வழிவகுத்துவிடும். கோபத்தை எப்படி கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்? மன பதற்றம் எப்படி இருக்கும்? என்பது குறித்தெல்லாம் விளக்குகிறார் உளவியல் நிபுணர் நப்பின்னை.

கோபம் அளவுக்கு அதிகமாகும்போது ஒருவருடைய மனநிலை எப்படியிருக்கும்? அவர் எந்தமாதிரி நடந்துகொள்வார்? அப்போது அவரை கட்டுப்படுத்துவது எப்படி?

கோபம் என்பது மிகப்பெரிய மனநோய். முதலில் கோபம் எதனால் வருகிறது? என்பதை பார்க்கவேண்டும். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இயலாமை. உதாரணத்திற்கு, பக்கத்துவீட்டு நாய் குரைத்துக்கொண்டே இருப்பதை தாங்கமுடியாமல் ஒருவர் அரிவாள் எடுத்துக்கொண்டுபோய் நாய் உரிமையாளரை மிரட்டிய செய்தியை டிவியில் ஒளிபரப்பினார்கள். அந்த நாய் எவ்வளவு நாட்கள் குரைத்துக்கொண்டே இருந்ததோ, அதனால் இந்த நபர் எவ்வளவு பாதிக்கப்பட்டாரோ அல்லது உரிமையாளரிடம் சொல்லியும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டாரோ என்பது போன்ற நிறைய விஷயங்கள் இதில் இருக்கின்றன. ஆனால் அதற்காக அரிவாள் எடுத்துக்கொண்டு சண்டைக்கு போகும் அளவிற்கு கோபம் அவசியமா? அது கடைசியில் வன்முறையில்தான் போய்முடியும். ஒருவருக்கு சாப்பாட்டில் உப்பு எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு கோபம் இருந்தால் போதும். அதுவே வன்முறை அளவிற்கு கோபம் வந்தால் உளவியல்ரீதியாக மட்டுமல்ல; கட்டாயம் மருத்துவரீதியாகவும் அதை பார்க்கவேண்டும். கோபத்திற்கான காரணங்களை ஆராயவேண்டும்.


வன்முறை அளவிற்கு கோபம் வந்தால் கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்

ஆளுமை பிரச்சினை அல்லது வலிப்புநோயின் தன்மை ஒருவருக்கு உள்ளே இருந்து வெளியே தெரியாமல் போகும்போது அவருக்கு கோபம் அதிகமாக வரும். அதற்கான மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கோபத்திற்கு மற்றொரு காரணம் சூழ்நிலை. ஒருவர் தனக்கு கோபம் வருவதை வார்த்தைகளால் சொல்லும்போது கவனிக்காவிட்டால் ஒரு பொருளை தூக்கிப்போட்டு உடைத்துவிடுவார். அப்படி உடைக்கும்போதுதான் கவனம் கிடைக்கிறது என்றால் அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். கணவன் - மனைவியிடையே சண்டை வந்தால் அது கொலைவரைக்கும்கூட போய்விடுகிறது. சில நேரங்களில் கோபம் வன்முறையைத் தாண்டி கொலைவரைக்கும் சென்றுவிடுகிறது.

கோபம் எப்போதும் ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். சில இடங்களில் கோபத்தை காட்டினால் வேலை நடக்காது. அதேசமயம் கோபத்தை காட்டாமல் விட்டுவிட்டாலும் வேலை நடக்காமல் போய்விடும். சூழ்நிலை மற்றும் இடம், பொருள், ஏவல் அறிந்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். கோபத்தை எப்போது, எங்கு, எந்த அளவிற்கு காட்டவேண்டும் என்பது கட்டாயம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.


கோபத்தை எங்கு, எந்த அளவிற்கு காட்டவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

கோபத்தை கட்டுப்படுத்தி அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் அது வெடித்துவிடுமா?

Anger inward மற்றும் Anger outward என்று சொல்வார்கள். சிலருக்கு கோபம் இருக்கும். ஆனால் தனது கோபத்தை காட்டமுடியாத அல்லது காட்டினால் தன்னுடைய வேலை நடக்காத ஒரு இடமாக அது இருக்கலாம். உதாரணத்திற்கு, முதலாளி ஒருவர் திட்டும்போது அவரிடம் வேலை செய்யும் நபரால் பதிலுக்கு திட்டமுடியாத சூழ்நிலை இருக்கும். அந்த கோபத்தை அவரிடம் காட்டமுடியாததால் குடும்பத்தினரிடம் காட்டுவார் அல்லது தனக்குள்ளேயே வைத்து வைத்து அது உடல்ரீதியான பாதிப்புக்கு வழிவகுக்கும். கோபம் என்பது இருபக்கமும் கூரான கத்தி போன்றது. நமக்குள் வைத்திருந்தால் நம்மையே பாதிக்கும். பிறரிடம் காட்டினாலும் நம்மைத்தான் பாதிக்கும். கோபத்தை யாரிடமும் காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டால் வாய்வுத்தொல்லை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை போன்ற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதேசமயம் கோபத்தை வெளியே காட்டிவிடுகிறேன் என்று சொன்னால் அதுவும் ஒருவருடனான நட்புறவில் விரிசலை ஏற்படுத்தி உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் கோபத்தை உள்ளேயே வைத்துக்கொள்வதைவிட வெளியே காட்டிவிடுவது நல்லது.

காதல் தோல்வியால் மன அழுத்தம் ஏற்பட்டவர்களை கையாண்ட அனுபவம் உண்டா?

காதல் தோல்வி என்று நேரடியாக சொல்லிக்கொண்டு வரமாட்டார்கள். கல்லூரிக்கு போவதில்லை, படிப்பதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை, கதவை சாத்திக்கொண்டு இருட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறார் என்று பெற்றோர் கூட்டிக்கொண்டு வருவார்கள். அவர்களிடம் விசாரிக்கும்போதுதான் காதல் தோல்வி அடைந்திருப்பதாகவும், அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை என்றும், அதுதான் தன் வாழ்க்கையையே திருப்பி போட்டுவிட்டதாகவும் கூறுவார்கள். ஆனால் இப்போது காதல் தோல்வியை பெரும்பாலும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 20 அல்லது 30 சதவீதம்பேர்தான் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இதைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது பெற்றோரின் சண்டையால்தான். இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் பெற்றோரிடமிருந்து கிடைக்கவேண்டிய பாராட்டு கிடைக்காமல் போகும்போது குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.


மன பதற்றத்தால் பாதிக்கப்பட்டவரிடம் தெரியும் அறிகுறிகள்

தன்னுடைய தேவைகளை தன்னால் பூர்த்தி செய்யமுடியாமல் போகும்போதும், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் போகும்போதும் மன அழுத்தம் உருவாகிறது. இது எதனால் வருகிறது? என குறிப்பிட்டு சொல்லமுடியாது. மூளையில் ரசாயன மாற்றங்கள் ஏற்படும்போதும் மன அழுத்தம் வர வாய்ப்பிருக்கிறது. நினைத்ததை படிக்க முடியவில்லை, திருமண வாழ்க்கை நன்றாயில்லை, பிடித்த வேலையில்லை எனும்போது அனைவருமே மனம் சோர்ந்துவிடுவோம். ஆனால் அதிலிருந்து மீண்டுவர நமக்குள் coping mechanism என ஒன்று இருக்கிறது. சிலர் வாழ்க்கையில் கிடைத்ததை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வார்கள் அல்லது நமக்கு அது கிடைக்கவில்லை, அதை விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கலாம் என அடுத்தகட்டத்தை நோக்கி ஓடவேண்டுமென்று தைரியத்தை வரவழைத்துக்கொள்வார்கள். கோவிலுக்கு செல்வது, ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்பது என ஏதேனும் ஒரு coping mechanism வைத்திருப்பார்கள். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், கணவன் - மனைவி சண்டை, குழந்தைக்கு ஏதேனும் நோய் என பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

Anxiety attack என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது?

பதற்றம் என்பது மிகப்பெரிய நோயாக பார்க்கப்படுகிறது. காரணம், மாரடைப்பு போன்று நெஞ்சு அடைப்பு, வியர்வை, தொண்டை அடைப்பு, சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு, அழுகை வருதல், எழுந்து எங்காவது ஓடிவிடலாம் போன்று இருத்தல் என பதற்றமான ஆளுமையாகவே இருப்பார்கள். சூழ்நிலைகளும் அதற்கேற்றாற்போன்று இருக்கும். உதாரணத்திற்கு இண்டர்வியூவுக்கு போகும்போது எல்லாருக்குமே ஒருவித பதற்ற உணர்வு இருக்கும். அதுவே பதற்ற ஆளுமை உள்ளவர்கள் இண்டர்வியூவுக்கு போனால் மேலும் பதற்றமாகிவிடுவார்கள். அதைவிட பயந்த சுபாவம் உள்ளவர்களை, யாராவது பெயர் சொல்லி கூப்பிட்டாலே யாரோ அடித்ததைப் போன்று பதறுவார்கள்.


ஓபிசிடி மற்றும் ஓசிடிக்கு இடையேயான வேறுபாடு

மன பதற்றத்திற்கு ஒருவரின் ஆளுமை, வளர்ந்த விதம் என பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு குழந்தையின் அப்பா மிகவும் கோபக்காரராக இருந்து அம்மாவை அடிப்பார். அதனால் அப்பாவை பார்த்தாலே குடும்பமே பயந்துகொண்டிருக்கிறது என்றால் அந்த குழந்தையின் உடலில் பயமே ஒரு கட்டளையாக உருவாகிவிடுகிறது. அதனால் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரான பிறகும் எப்போதும் பதற்றம் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக, கொரோனாவிற்கு பிறகு இன்றைய இளைஞர்கள் பலர் நிறைய கூகுள் செய்து அனைத்து நோய்களும் தங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். இதனால் நோயை நினைத்து நிறையப்பேர் பதற்றம் அடைகிறார்கள்.

ஓசிடி ஒருவித மனநோயா?

இதை ஓசிபிடி - Obsessive-compulsive personality disorder என்பார்கள். இந்த பிரச்சினை இருப்பவர்களுக்கு ஒரு பொருளை எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும், நியூஸ் பேப்பரை பிரித்தால் கட்டாயம் மடித்து வைக்கவேண்டும், பாட்டிலை சரியாக மூடவேண்டும் என்று எல்லாவற்றிலும் பர்ஃபெக்ட்டாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள். சில நேரங்களில் அப்படி பண்ணாவிட்டாலும் அப்புறம் செய்துகொள்ளலாம் என நினைத்துவிட்டால் பிரச்சினை இல்லை. அதுவே அப்படி செய்யவில்லையே என நினைத்து பதற்றமடைந்து வேறு செயல்களில் கவனம் செலுத்தமுடியாமல் போனால்தான் பிரச்சினையாக மாறுகிறது. இந்த பிரச்சினையைத்தான் ஓசிடி என்கிறார்கள். இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறு ஆபத்து என்றாலும் அதன் மோசமான விளைவைத்தான் நினைத்துக்கொள்வார்கள். பதற்றம் நீண்டுதான் ஓசிடியாக உருவெடுக்கிறது. ஆனால் இதுபோன்ற அனைத்து பிரச்சினைகளுமே சிகிச்சைமூலம் சரிசெய்யப்படக்கூடியவைதான்.


காதல் முறிவால் 20 முதல் 30 சதவீதம்பேர் மனநலம் பாதிக்கப்படுகிறார்கள் - மருத்துவர் நப்பின்னை

மனநோயால் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய தவறுசெய்த யாரேனும் ஒரு நபரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறதா?

17 வருடங்களுக்கு முன்பு புழல் சிறையில் ரிமாண்டு பிரிவில் வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு மிகவும் புத்திசாலியான ஒரு நபரை சந்தித்தேன். ஆனால் அவர்மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை பார்த்தால் ஒரு புத்தகத்தைவிட அதிகமாக எழுதவேண்டி இருக்கும். அந்த நபரிடம் நான் பேசியபோது எனக்கே ஜெயிலில் வைத்து என்ன பிசினஸ் செய்தால் வருமானம் பார்க்கலாம் என ஐடியா கொடுத்தார். அந்த அளவிற்கு புத்திசாலியான அவருக்கு தன்னை போலீசார் என்கவுண்டர் செய்யப்போகிறார்கள் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஒருமுறை கேஸ் விசாரணைக்கு அவரை அழைத்துச்சென்றபோது கைவிலங்கை கழற்றி அவரை சாப்பிட அனுமதித்திருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வேறொரு தகராறு அங்கு நடந்திருக்கிறது. போலீசார் வேகமாக அங்கு சென்றதும் தன்னை என்கவுண்டர் செய்யத்தான் திட்டமிடுகிறார்கள் என பயந்து தான் உட்கார்ந்திருந்த நாற்காலிக்கு அடியில் பயந்துபோய் அமர்ந்துகொண்டதாகவும் வெளியே வராமல் அடம்பிடித்ததால் போலீசார் இழுத்துக்கொண்டு சென்றதாகவும் என்னிடம் கூறினார். கோபத்தின் மிகுதியால் தனது சகோதரியின் கணவரை கொன்றுவிட்டு ஜெயிலில் அழுதுகொண்டிருந்த பட்டதாரி இளைஞர் ஒருவரை பார்த்திருக்கிறேன். இப்படி மனநோயால் பாதிக்கப்பட்டு தவறுசெய்த பலரை நான் சந்தித்திருக்கிறேன்.

Updated On 18 Jun 2024 6:13 AM GMT
ராணி

ராணி

Next Story