இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கவலை, கோபம், சோர்வு, மகிழ்ச்சி என உணர்ச்சிகள் கலந்தவர்கள்தான் மனிதர்கள். ஏன் அனைத்து உயிரினத்துக்குமே இதுபோன்ற உணர்ச்சிகள் இருக்கும். உணர்ச்சிகள் நமது கட்டுப்பாட்டில் இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் அதுவே அதிகரிக்கும்போதும், மிகவும் குறையும்போதும் மனநல பிரச்சினையாக மாறுகிறது. மன அழுத்தம், மன பதற்றம் போன்றவை மனநோய்க்கு வழிவகுக்கின்றன. இதுபோன்ற மனநல பிரச்சினைகள் ஏற்படுவதை ஒருவர் புரிந்துகொண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும் என்கிறார் உளவியலாளர் நப்பின்னை. மனநல பிரச்சினைகள் குறித்தும், அது எவ்வாறு உருவாகிறது என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் அவர்.

Brain and behaviour psychology குறித்து படிப்பதற்கான ஆர்வம் எங்கிருந்து வந்தது?

அந்த காலத்தில் இதுபோன்ற படிப்பு பற்றியெல்லாம் தெரியவில்லை. ஆனால் எதையாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என எப்போதும் எனக்குள் ஒரு தேடல் இருந்துகொண்டேயிருக்கும். நான் ஒரு கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். வீட்டில் அனைவரும் ஏதேனும் ஒரு டிகிரி படித்தபோது நான் தனித்து நிற்கவேண்டுமென நினைத்தேன். அதேசமயம் அது மனிதர்களுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டுமெனவும் முடிவுசெய்து உளவியல் துறையை தேர்ந்தெடுத்தேன். அப்போது ஒருசில கல்லூரிகளில் மட்டுமே இந்த படிப்பை படிக்கமுடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால் இப்போது உளவியல் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. மனிதர்களுடன் இருக்கவேண்டும் அதேசமயம் ஒரு விஷயத்தை மாற்றிசெய்யவேண்டும் என்ற உத்வேகம் இருந்ததால்தான் உளவியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இதற்கு எனது கணவரின் ஆதரவு முழுமையாக கிடைத்தது.


நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் உளவியல் மாற்றங்கள்

உங்களுடைய முதல் பேஷண்ட் குறித்து ஞாபகம் இருக்கிறதா?

மறக்க முடியாத பேஷண்ட் என்றால், 24 வயது பெண் ஒருவர். கோபப்படும்போது மட்டும் சத்தமாக பேசுவார். மற்ற நேரங்களில் அவருடைய குரல் குழந்தைத்தனமாக இருக்கும். இந்த பிரச்சினையுடன் மற்றொரு மனநோயும் இருந்தது. அவரை பார்த்த முதல் இரண்டு மூன்று நாட்களுக்குள் என்னிடம் வந்து, 'நீங்க கொடுத்த மாத்திரையாலதான் வெயிட் போட்டுட்டேன். ப்ளவுஸ் எதுவும் பத்தல’ என்று சொல்லி சண்டை போட்டார். அவரை நான் உற்று பார்த்துக்கொண்டே இருந்தேன். உடனே அவர், ஏன் என்னை அப்படி பார்க்குறீங்க? என்று கேட்டார். இல்லை, இப்போது மட்டும் நன்றாக பேசுகிறீர்களே என கேட்டேன். அவ்வளவு கோபத்திலும் உடனே சிரித்துவிட்டார். அந்த பெண்ணை அவருடைய பாட்டிதான் கூட்டிக்கொண்டு வருவார். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் பரவாயில்லை, அவருடைய ஆதங்கம் நியாயமானது எனக் கூறி சமாதானம் செய்தேன். முதலில் அந்த பெண்ணிடம் அப்படி பேசுவதற்கு எனக்கும் பயமாகத்தான் இருந்தது. இன்றுவரை அவரை நான் நினைத்துப் பார்ப்பேன்.

இதுவரை நீங்கள் பார்த்த பேஷண்டுகளிலேயே குணப்படுத்த மிகவும் சவாலாக இருந்தது எது?

உளவியலை பொருத்தவரை ‘குணப்படுத்துதல்’ என்ற வார்த்தையே கிடையாது. பிபி, சுகரைப் போன்று உளவியலுக்கு சிகிச்சைதான் அளிக்கமுடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. இதில் சிகிச்சை எனும்போது ஒரு உளவியல் வல்லுநர் மருந்து, மாத்திரைகளை பரிந்துரைக்க மாட்டார். அதற்கு பதிலாக கவுன்சிலிங் அளிக்கப்படும். உதாரணத்திற்கு, 22 வருடங்களுக்கு முன்பு காலேஜ் படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர் என்னிடம் வந்தார். சென்னையில் நிறைய உளவியல் நிபுணர்களை பார்த்தும் அவருக்கு குணமடையவில்லை. கிராமத்திலுள்ள ஒரு கல்லூரியில் வேலைபார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அவர் வந்தார். அவருடைய முதல் கேள்வியே, ‘எனக்கு CBT பண்ணுவீங்களா?’ என்பதுதான். அப்போது நான் ஆச்சர்யப்பட்டேன். ஆனால் அந்த இளைஞருக்கு தற்கொலை எண்ணம் இருப்பதாகக் கூறினார். அவருக்கு நான் உளவியல் ரீதியாகவும், மற்றொரு மருத்துவர் மருந்து மாத்திரைகள் ரீதியாகவும் சிகிச்சை அளித்துவந்தோம். எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு இருந்தது. அந்த நபருக்கு OCD என்று சொல்லக்கூடிய Obsessive-compulsive disorder உடன் தற்கொலை எண்ணமும் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்தது. ஆனால் அந்த மருத்துவர், அவருக்கான சிகிச்சையை தொடங்கவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்.


எண்ணங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வைத்து உளவியல் பிரச்சினையை புரிந்துகொள்ளலாம்

பாதிக்கப்பட்ட இளைஞருக்கோ தான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள போகிறோம் என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டது. பலவிதங்களில் முயற்சி செய்தும் எங்களால் அந்த எண்ணத்தை அவர் மனதிலிருந்து உடைத்தெறிய முடியவில்லை. அந்த இளைஞர் மிகவும் புத்திசாலி என்பதால் எப்படியாவது அவர் டிகிரி முடித்துவிட வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால் அவரால் எங்கும் தனியாக செல்லமுடியாது. அவருக்கு சிறப்பாக சிகிச்சை அளித்தாலும் தற்கொலை எண்ணத்திலிருந்து மட்டும் விடுபட வைக்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஆதரவாக இருந்த பெற்றோரும் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்துவிட்டார்கள். இரண்டு மூன்று வருடத்திற்கு பிறகு அந்த நபர் வரவே இல்லை. இன்றுவரை அவர் என்ன ஆனார் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது.

சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டேன் என உங்களிடம் பகிர்ந்த நோயாளிகள் இருக்கிறார்களா?

மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான மாணவர் ஒருவர் என்னிடம்வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு இப்போது நன்றாக இருக்கிறார். நிறையப்பேர் என்னிடம் மகிழ்ச்சியாக வார்த்தைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். திருமண வாழ்க்கை முறியும் நிலையில் என்னிடம் வந்து சிகிச்சைபெற்று ஒன்றாக வாழ்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். என்னிடம் வந்ததில் மறக்கமுடியாத பெண்மணி ஒருவர் இருக்கிறார். பிறந்து மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையுடன் அந்த பெண் என்னிடம் வந்தார். அவருக்கு எண்ண சுழற்சி நோய் இருப்பதாகவும், குழந்தையை ஏதாவது செய்துவிடுவார் என்ற பயத்துடனும் என்னிடம் அனுப்பிவிட்டார்கள். மனநல பிரச்சினைக்கு மருந்து சாப்பிடுவதால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த பெண்ணோ எப்படியாவது தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். இப்போது அந்த பெண் ஒரு பெரிய மேக்கப் ஆர்ட்டிஸ்ட். அவருடைய மகன் சாட்டார்டு அக்கவுண்டண்ட். இன்றுவரை அவர் என்னை எங்கு பார்த்தாலும் எனக்கு நன்றி சொல்வார்.


மனநல பிரச்சினைக்கும் will power-க்கும் எந்த தொடர்பும் இல்லை

உடலளவில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதனை சரிசெய்ய will power உதவும் என்பார்கள். ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வார்கள்?

உதாரணத்திற்கு, ஒரு நபருக்கு ஆஸ்துமா இருக்கிறது. அவருக்கு will power அதிகமாக இருந்தாலும் நன்றாக மூச்சுவிட முடியுமா என்ன? அதுபோலத்தான் இதுவும். will power என்பது நோயிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கு போராடவேண்டும், ஜெயிக்கவேண்டும் என்பதற்கு உத்வேகமாக இருக்குமே தவிர, நோயிலிருந்து மீள முடியாது. ஒருவருக்கு கால் உடைந்துவிட்டால் எழுந்து நடக்கவேண்டும் என்ற will power இருக்கும்போது குணமாவதற்கான முயற்சி எடுத்து உடற்பயிற்சி, பிசியோதெரபி செய்து எழுந்து நடந்துவிடுவார். மன அழுத்தம் ஏற்படும்போது மனதில் will power இல்லாவிட்டால், எதிலும் நாட்டம் இருக்காது. மனநோய் வந்துவிட்டால் will power என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது. மனது உடைந்து இருப்பவர்கள், பதற்றம் இருப்பவர்கள் வாழ்க்கை மீதே நாட்டமின்றி இருப்பார்கள். அவர்களிடம் will power என்ற வார்த்தையையெல்லாம் பேசவே முடியாது.

மனநோய்க்கான அடிப்படை காரணம் என்ன?

ஒன்று குடும்பத்தில் யாருக்காவது மனநோய் இருந்தால் மரபணுரீதியாக வரலாம். இரண்டாவது ஆளுமை சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது அதனை சரியாக கையாள தெரியாவிட்டால் அது மனநல பிரச்சினையில்தான் முடியும். மூன்றாவது நிலைமையை சமாளிக்கும் திறன் (coping mechanism) இல்லாதிருத்தல். மரபணுரீதியாக பிரச்சினை இருப்பவராகவும், பயந்த சுபாவம் உடையவராகவும் இருக்கும் ஒரு நபருக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அந்த சூழலை அவருக்கு கையாள தெரியாது. எளிதில் பாதிப்படையக்கூடிய ஒரு நபருக்கு வெளிப்புற காரணிகளால் ஏற்படும் அழுத்தமானது மனநோயை உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் திருமணம், படிப்பு, வேலை என்றாலே அழுத்தம் உருவாகிறது.


மரபணு ரீதியாகவும் மனநல பிரச்சினைகள் ஏற்படும்

மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபருக்கு தனக்கு பிரச்சினை இருக்கிறது என்ற உள்ளுணர்வு இருக்கும். அவர்களுக்கு என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

மனநோயை நான் இரண்டாக பிரிப்பேன். எனக்கு பிரச்சினை இருக்கிறது என்பது எனக்கே தெரியும். இது ஒருவித மனநோய். மற்றொரு விதம் என்னவென்றால், எனக்கு பிரச்சினை இருப்பது என்னைதவிர மற்றவர்களுக்கு தெரியும் என்பது. உதாரணத்திற்கு, எனது பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார் என்று நான் சந்தேகப்பட்டு அனைவரிடமும் சொல்வேன். ஆனால் அதை கேட்பவர்களுக்கு, அவர் ஏன் அப்படி செய்யப்போகிறார் என்று தெரியும். புரிதல் இல்லாத இந்த மனநோயைத்தான் சைக்கோசிஸ் என்கிறார்கள். சிலருக்கு அடிக்கடி கை கழுவிக்கொண்டே இருக்க தோன்றும், வீட்டை பூட்டிவிட்டோமா என அடிக்கடி பரிசோதித்து பார்த்துக்கொண்டே இருப்பது, எண்ண சுழற்சிநோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும். இதனை நியூரோசிஸ் என்கிறார்கள். நியூரோசிஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு தங்களுடைய பிரச்சினை என்னவென்று தெரியும். அதனால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டாலே சரி ஆகிவிடுவார்கள். ஆனால் சைக்கோசிஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு தங்களுடைய பிரச்சினை என்னவென்றே தெரியாது. அதனால் சிகிச்சை எடுக்கச்சொல்லி அடுத்தவர் அறிவுரை வழங்கினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொதுவாக கவலை, கோபம் எல்லாமே ஒருவித மனநல பிரச்சினை என்றாலும் அதன் அளவீடுகள்தான் நோய் என்பதை தீர்மானிக்கின்றன. டெக்னாலஜி எவ்வளவுதான் வளர்ந்தாலும் மனநோய்க்கு சிகிச்சை எடுக்கவேண்டும் என மருத்துவர்களை தேடிவருபவர்கள் இங்கு மிகவும் குறைவு. எனவே மனநல பிரச்சினையை நோய் என புரிந்துகொண்டு உளவியலாளரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

Updated On 20 May 2024 6:28 PM GMT
ராணி

ராணி

Next Story