இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

முன்பெல்லாம் ஒரு பெண் கருவுற்றால் வீட்டு வேலை, வயல் வேலை என்று அசால்ட்டாக இறங்கி செய்வார்கள். ஆனால் உணவு முறை மற்றும் நவீன வாழ்க்கைமுறை பிரச்சினைகளால் இப்போதுள்ள பெண்களுக்கு கருத்தரிப்பு என்பதே சவாலானதாக மாறிவிட்டது. மேலும் கருத்தரிப்பு உறுதியாகிவிட்டாலே முழுநேரமும் ஓய்வில்தான் இருக்கிறார்கள். இருப்பினும் பலவீனமாகவே உணர்கிறார்கள். கர்ப்பகாலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? கர்ப்பிணிகள் தங்களை பராமரிப்பது எப்படி? வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படி இரண்டையும் சமாளிப்பது என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா.

இரண்டு கர்ப்பப்பை இருக்கிற பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இரண்டிலும் குழந்தை உருவாகி இருப்பதாக செய்தி வெளியாகி ஆச்சர்யப்பட வைத்துள்ளதே... இது எதனால்?

ஒருசில பெண்களுக்கு இரண்டு கர்ப்பப்பை இருக்கும். எந்த கர்ப்பப்பை நன்கு வளர்ச்சியடைந்திருக்கிறதோ அதில்தான் கரு உருவாகி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வளரும். சிலருக்கு அரிதாக சிறிய கர்ப்பப்பையில் கரு உருவாகி அதனால் வளர முடியாமல் சிதைந்துவிடுவதும் உண்டு. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டிலும் கரு உருவாவது என்பதை இப்போதுதான் முதல்முறை கேள்விப்படுகிறோம். இது மருத்துவ உலகையே ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு செய்திதான்.

ஒருசில பிறந்த குழந்தையின் உடலுக்குள் கரு உருவாகி இருப்பதையும் செய்திகளில் படிக்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது?

சிலருக்கு இரட்டை குழந்தைகள் உருவாகும். அதிலும் குறிப்பாக, ‘ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்’ என்று சொல்வார்கள். அப்படி உருவாகும் கருக்களில் ஒன்று வளர்ச்சியடையும். மற்றொன்று வளராமல் அப்படியே கருவாகவே இருக்கும். அந்த கருவானது வளர்ச்சியடையும் குழந்தையின் தோலின்மேலோ அல்லது தோலுக்கு அடியிலோ சென்று தங்கிவிடும். சில சமயங்களில் ஒரு குழந்தைக்குள் மற்றொரு கரு பதிந்திருக்கும். ஆனால் அந்த கரு முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. இதுவும் அரிதாகவே பார்க்கப்பட்டாலும் இரண்டு கர்ப்பப்பையிலும் ஒரே நேரத்தில் குழந்தை என்பதைவிட சற்று சாதாரணமானதுதான்.


கருவில் இரட்டைக் கரு உருவாதல்

இதேபோல் மற்றொரு பிரச்சினையும் பொதுவாக காணப்படுகிறது. அதாவது, கருப்பை கட்டிகள் (Ovarian tumors) என்று சொல்லக்கூடிய கட்டிகளில் ஒருவகை இருக்கிறது. அதை Dermoid Cyst என்கின்றனர். இதில் பல், முடி, தோல் மற்றும் எலும்பின் பாகங்களும் இருக்கும். ஏனெனில் ஒரே ஒரு செல்லிலிருந்துதான் கரு உருவாகும். அப்படி உருவாகும்போது பல், தோல் போன்றவை உருவாகும் ஒரு குழும செல்கள் வளர்ச்சியடையாமல் ஒரே இடத்தில் தேங்கிவிடும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து டெர்மாய்டு டியூமராக உருவாகிறது. பொதுவாக கர்ப்பப்பை கட்டி இருக்கும் 20 பேரில் ஒருவருக்கு டெர்மாய்டு கட்டி இருக்கும்.

குழந்தைக்குள் கரு இருக்கும் பட்சத்தில் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுமா?

பெரும்பாலும் இதுபோன்ற கருக்கள் குழந்தையின் ரத்தக்குழாய்கள், எலும்புகள், நரம்புகளுடன் தொடர்பில் இருக்காது. அதனால் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு நீக்கப்படும். ஆனால் சில சமயங்களில் அப்படி தொடர்பு இருக்கும் பட்சத்தில் மேஜர் சர்ஜரி தேவைப்படும்.

இரட்டையர்கள் ஒட்டிப்பிறப்பது எதனால்?

ஒரு ஆணின் விந்துவும், பெண்ணின் கருமுட்டையும் சேர்ந்து முதலில் ஒரு செல்லாக உருவாகும். அது இரண்டு, நான்கு, எட்டு என பெருகிக்கொண்டே போகும். அப்படி செல்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பிரியும்போது இரண்டு குழந்தைகளாக பிரிந்தால் இரட்டையர்கள் உருவாகிறார்கள். அந்த கால இடைவெளி சற்று தாமதமாகும்பட்சத்தில், அதாவது கரு உருவாகி ஒருவாரம் கடந்த பிறகு இரண்டாக பிரிந்தால் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக பிறப்பார்கள்.

கர்ப்பகாலத்திலுள்ள படிநிலைகளை கூறுங்கள்...

கர்ப்பகாலத்தை மூன்று மூன்று மாதங்களாக பிரிப்பார்கள். முதல் மூன்று மாதங்களை கருவின் ‘எம்ப்ரியோ’ காலகட்டம் என்கின்றனர். அப்போதுதான் இதயம், சிறுநீரகம் போன்ற முக்கியமான உறுப்புகள் உருவாகும். அந்த சமயத்தில் தாய்க்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். அடுத்த மூன்று மாதங்களில் ஏற்கனவே உருவான உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்து, முதிர்ச்சியடைந்து வேலைசெய்ய ஆரம்பித்துவிடும். கடைசி மூன்று மாதங்கள் குழந்தையின் எடை அதிகரித்து, வெளியுலகில் வாழ என்ன அவசியமோ அதற்கேற்ப நுரையீரல் போன்ற உறுப்புகள் தங்கள் செயல்பாட்டை அமைக்கும் காலம். இந்த காலகட்டத்தில்தான் சுரப்பிகளும் செயல்படும்.


கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அசௌகர்யங்கள்

கர்ப்பிணிகளுக்கு இரவில் அதிகம் தூக்கம் வராதது ஏன்?

பெரும்பாலான கர்ப்பிணிகள் பகலில் தூங்கிவிடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள், பிஸியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வராது. முதல் 3 மாதங்களில் வாந்தி, சரியாக சாப்பிட முடியாத நிலை போன்ற காரணங்களால் நன்றாக தூங்கமுடியாது. கடைசி மாதங்களில் குழந்தையின் இயக்கம் அதிகமாக இருப்பதாலும், வயிறு பெரிதாக இருப்பதாலும் சரியாக படுக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் தூக்கமே வரவில்லை என்ற நிலை கர்ப்பகாலத்தில் மிகவும் அரிதானதுதான். நிறையப்பேருக்கு தூக்கம் இருந்தாலும் அது முழுமையாக இல்லாத நிலை ஏற்படும்.

கர்ப்பகாலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?

வீட்டில் சமைத்த, புரதச்சத்து நிறைந்த உணவுகளையே மருத்துவர்கள் பரிந்துரைப்பர். பாக்கெட்டுகளில் அடைத்த மற்றும் வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இதனாலேயே நிறைய நேரங்களில் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதிகமாக அரிசி சாதம் எடுப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக, காய்கறிகள், பச்சை கீரைகளை அதிகம் உட்கொள்ளலாம். தினமும் முளைக்கட்டிய தானியங்கள், பருப்பு வகைகளை சாப்பிடலாம். வீட்டில் சமைக்கும்போதே கர்ப்பிணிக்கென்று தனியாக ஒரு அளவு சேர்க்கவேண்டும். இதை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட முடியாவிட்டாலும், தனியாக ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம். சூப், பொரியல், கட்லெட், ஜூஸ் போன்றவற்றை இரண்டு மணிநேர இடைவெளி விட்டுவிட்டு எடுத்துக்கொள்ளலாம். இதனால் வயிறு நிரம்பி அடைத்ததுபோன்ற உணர்வோ, அசௌகரியமோ ஏற்படாது.


கர்ப்பிணிகளுக்கு தூக்கமின்மை ஏற்படும்

எந்த ஒரு உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்?

தினசரி வீட்டில் செய்யும் காய்கறிகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய கர்ப்பிணிகள் ஆரம்பத்திலேயே அதிக எடையுடன்தான் இருக்கிறார்கள். எனவே அவர்கள் நீர்க்காய்களைக்கூட எடுத்துக்கொள்ளலாம். இதனால் வயிறு நிறைவதோடு, உடல் எடையும் அதிகரிக்காது, தேவையான மினரல்கள், வைட்டமின்களும் கிடைக்கும். எடை குறைவாக இருப்பவர்களுக்கும், வீட்டில் சமைத்து சாப்பிட முடியாதவர்களுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் புரோட்டீன் பவுடர்கள் மற்றும் பிஸ்கட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். மாலை நேரங்களில் சுண்டல், பயறு, கடலை போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகள் வேலையையும், தங்களையும் எப்படி சமாளிப்பது?

கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தினசரி சவால்களை சந்திக்கவேண்டி இருக்கும். இந்த சமயத்தில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே தவிர, மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடாது. வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகள், கர்ப்பகாலத்தில் எப்படி தங்களை பராமரிக்கிறார்களோ, அப்படித்தான் குழந்தை பிறப்புக்கு பிறகும் தங்களை பராமரிக்க முடியும். எனவே கர்ப்பகாலத்தில் வேலை ஒருபுறம் செய்துகொண்டிருந்தாலும் மற்றொருபுறம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் வேலையையும், வயிற்றிலிருக்கும் குழந்தையையும் முறையாக பராமரிக்க முடியும். அடிக்கடி வாந்தி எடுக்கும் கர்ப்பிணிகள் திரவ உணவுகளை தவிர்த்து, பழங்கள், நட்ஸ், இட்லி அல்லது கஞ்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உட்கார்ந்தே வேலை செய்யவேண்டிய சூழல் இருந்தால், 8 மணிநேரமும் உட்கார்ந்தே இருக்கக்கூடாது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடமாட வேண்டும். நீண்ட நேரம் காலை தொங்கவைத்தே இருக்கக்கூடாது. கண்களுக்கு பயிற்சி, கைவிரல்களுக்கு பயிற்சி, மசாஜ் போன்றவையும் அவசியம். அதேபோல் தங்களுடைய வசதிக்கேற்றபடி பயணத்தையும் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் கடைசி 3 மாதங்கள் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும். எனவே வேலைசெய்ய முடியாத பட்சத்தில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். அதேபோல் உட்காரும் நாற்காலி மீதும் கவனம் அவசியம். இல்லாவிட்டால் முதுகு மற்றும் இடுப்புவலியால் அவதிப்பட நேரிடும்.

Updated On 12 Dec 2023 12:14 AM IST
ராணி

ராணி

Next Story