இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எந்தவகையான உடல்நல பிரச்சினை என்றாலும் முதலில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மருந்து, மாத்திரைகள்தான். ஆனால் உடலில் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தில்லா மருத்துவம் என்றால் அது பிசியோதெரபிதான். பிசியோதெரபி குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ஸப்பஇஹா தஹாசீன் ஜ.

பிசியோதெரபி என்றால் என்ன?

பிசியோதெரபி என்பது உடல்நல பிரச்சினையை சரிசெய்யும் ஒரு முறை. குறிப்பிட்ட ஒரு இடத்தில் வலி வந்தால் அது எதனால் வந்தது என்ற காரணத்தைக் கண்டறிந்து அதற்கு பிசியோதெரபி முறை மூலம் சிகிச்சை அளித்து வலியை நீக்குவது. மேலும் அந்த வலி மீண்டும் வராமல் இருக்க என்னென்ன உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கப் படும்.


மூட்டுவலிக்கு பிஸியோதெரபி சிகிச்சை

பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்றான முதுகு வலி (back pain) வருவதற்கான காரணங்கள் என்னென்ன?

நாம் பின்பற்றும் டயட், உட்கார்ந்தே வேலை செய்யும் வாழ்க்கைமுறை போன்றவற்றால் நிறைய பிரச்சினைகள் வருகின்றன. கிட்டத்தட்ட 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு வயிற்றுத்தசைகள் பலவீனமடைகிறது. அதனுடைய அழுத்தமானது முதுகுப்பகுதியில் செலுத்தப்படுவதால் முதுகில் வலி ஏறபடுகிறது. இதனால் உடலை வளைக்கும்போதோ, உட்கார்ந்துவிட்டு எழுந்திருக்கும்போதோ அல்லது உடலை அசைக்கும்போதோ வலி ஏற்படுகிறது. இதனால் அமர்ந்து சாக்ஸ் போடுவதுகூட கடினமாகிறது. முதுகுவலியில் மற்றொரு வகை, கர்ப்பிணிகளுக்கு வருவது. அதாவது வயிற்றில் சிசு வளர வளர அந்த வயிற்றுத்தசைகள் விரிவடைவதால் அழுத்தம் முழுவதும் முதுகுப்பகுதிக்கு செல்கிறது. அந்த அழுத்தத்தை தாங்கும் அளவிற்கு முதுகுத் தசைகள் வலிமையாக இல்லாவிட்டால் வலி ஏற்படுகிறது.

அமர்ந்தே வேலை செய்பவர்கள் எந்தெந்த நிலையில் (position) அமர்ந்தால் வலியை தவிர்க்கலாம்?

நீண்டநேரம் அமர்ந்தே இருக்கக்கூடாது. 1 மணிநேரம் உட்கார்ந்திருந்தால் குறைந்தது 5 நிமிடமாவது எழுந்து நடந்துவிட்டு பிறகு அமர்ந்தால் முதுகு தசைகள் சற்று ரிலாக்ஸ் ஆகும். முதுகு எப்போதும் நேராக இருக்கவேண்டும். முதலில் அமரும்போது நேராக அமர்ந்தாலும் நேரம் போகப் போக கூன் போட்டு அமருதல் அல்லது முன்புறம் அல்லது பின்புறம் வளைந்து அமருதல் போன்ற நிலைகளுக்கு சென்றுவிடுவோம். ஆனால் அமரும்போது எப்போதும் கால்கள் தரையிலும் கைகள் டேபிளுக்கு இணையாகவும் இருக்கவேண்டும். இப்படி அமர்வதால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்.


அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகு வலி

பக்கவாதம் மற்றும் ஸ்ட்ரோக் நோயாளிகள் என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ளலாம்?

பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வெளிவந்த உடனேயே பிசியோதெரபியை தொடங்கினால் குணமடைவது எளிதாகும். வலியை குறைப்பதற்கு முன்பு அது காயத்தால் ஏற்பட்ட தற்காலிக கடுமையான வலியா (Acute Pain) அல்லது நாள்பட்ட (Chronic pain) வலியா என்பதை பார்க்கவேண்டும். பக்கவாதம் வந்தவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே படுத்திருப்பதிலிருந்து எப்படி உட்கார வைப்பது, உட்கார வைப்பதிலிருந்து எப்படி நிற்க வைப்பது, நிற்பதிலிருந்து எப்படி நடப்பது என ஒவ்வொரு நிலையாக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இதனால் சீக்கிரத்தில் தீர்வுகாண முடியும். இல்லாவிட்டால் அது நாள்பட்ட வலியாக மாறி தசைகள் இறுகவோ அல்லது இலகவோ செய்யும். இதனால் தசைகள் தனது வலிமையை இழக்கும்.

மார்பு பகுதியில் அடைப்பது போன்ற வலி ஏற்பட்டாலே அதை மாரடைப்பு என்று நினைத்துவிடுகிறார்கள். அதற்கான காரணம் என்ன?

இப்போதுள்ள பெரும்பாலானோர் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தும்போது நீண்டநேரம் முன்பக்கமாக கீழாக குனிந்தே இருக்கின்றனர். இதனால் கழுத்து மற்றும் மார்புப்பகுதி நீண்ட நேரம் முன்நோக்கி குனிந்தே இருப்பதால் மார்பு தசைகள் இறுகுகிறது. இதனால் உடல் அமைப்பே கூன்போட்டது போன்று மாறிவிடுகிறது. எப்போது அந்த தசைகள் விரிகின்றதோ அப்போது வலி ஏற்படுகிறது.


நீண்ட நேர செல்போன் பயன்பாட்டால் மார்பு பகுதியில் அடைப்பு

அதிலும் குறிப்பாக, ஜிம்முக்கு செல்பவர்கள் தங்கள் உடல்நிலையை பற்றி தெரிந்துகொள்ளாமலேயே அதிகப்படியாக எடைகளை தூக்கி பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனால் தசைகள் சோர்வடைந்து மார்பு வலி ஏற்படுகிறது.

பெண்களுக்கு இருக்கும் மற்றொரு பிரச்சினை தோள்பட்டை வலி. இதற்கு தீர்வுதான் என்ன?

இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் ஒரே வேலையை தொடர்ந்து செய்வது. இதை Repetitive strain injury என்கின்றனர். குறிப்பிட்ட ஒரு தசையை தொடர்ந்து வேலைசெய்ய அழுத்தம் கொடுக்கும்போது அதற்கு சிரமம் ஏற்படுவதால் தன்னால் வேலை செய்யமுடியாது, ஓய்வு தேவை என்பதை அந்த தசைகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் வலியை கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் வேலைசெய்யும்போது ஒரு கட்டத்தில் அசைக்கவே முடியாத வலி ஏற்படுகிறது. இதனால் தோள்பட்டை வலி ஏற்படுகிறது. வலி வந்தாலும் தைலம் தடவுதல், வலி மாத்திரைகளை எடுத்தல் மூலம் வலியை கட்டுப்படுத்த முயற்சிப்பர். ஒருகட்டத்தில் இது நாள்பட்ட வலியாக மாறிவிடுகிறது.


கால்பந்து வீரர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி

கால்பந்து வீரர்கள் மற்றும் வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலி பற்றி கூறுங்கள்...

திடீரென விளையாடும்போதோ அல்லது தொடர்ந்து கால்பந்து விளையாடும்போதோ முழங்கால் வலி வருகிறது. விளையாடும்போது மற்ற வீரர்கள் மீதுதான் கவனம் செல்லுமே தவிர, நாம் என்ன நிலையில் நிற்கிறோம் என்பதில் கவனம் இருப்பதில்லை. அதனால் அடிபட்டாலோ அல்லது வீரர்கள் மோதிகொள்ளும்போதோ தசைநார் (ACL injury or ligament tear) கிழிகிறது. அதுவே தொடர்ந்து வேலைசெய்து கொண்டிருப்பவர்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு வேலையிலிருந்து ஓய்வுபெறும்போது அவர்களுடைய உடல் அசைவுகள் குறைந்துவிடுகிறது. இதனால் தசைகளின் வலிமையானது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. எனவே வயதானவர்கள் எழுந்து நின்றால், நடந்தால்கூட வலி ஏற்படுகிறது. வலிக்கிறதே என்று அவர்கள் மீண்டும் அமர்ந்துவிடுகிறார்கள். இதனால் தசைகள் மேலும் பலவீனமடைகிறது.

Updated On 25 Oct 2023 4:52 AM GMT
ராணி

ராணி

Next Story