இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய நவீன யுகத்தில், மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையை பொறுத்தவரையில், மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே, நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டேதான் இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் இன்று ஒரே தீர்வாக நினைத்து பலரும் பின்பற்றுவது மூலிகை மருந்துகளைத் தான். ‘உணவே மருந்து’ என்ற கோட்பாடுடைய பாரம்பரிய சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களை போக்கும் குறிப்புகள் பொதிந்து கிடக்கின்றன. அப்படிப்பட்ட மருத்துவ குணமுள்ள மூலிகைகளின் பயன்களை வெளிக்கொணரும் விதமாக இன்று பலரும் தங்களது வீடுகளில் மூலிகை தோட்டம் அமைத்து அதன் மூலமாக தங்களது நோய்களுக்கு சிறு சிறு தீர்வுகளை கண்டு வருகின்றனர். அந்த வகையில், நமது சென்னையில் இயற்கை மருத்துவத்தின் பெயரால் ஈர்க்கப்பட்டு தனது வீட்டிலேயே சொந்தமாக அழகிய சிறிய மூலிகைத் தோட்டம் ஒன்றை உருவாக்கி, அங்கு பல்வேறு வகையான மூலிகை செடிகளை பராமரித்து வருபவர் தான் ஸ்வர்ணலதா. இவரது தோட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலோடு சென்றபோது அவரோடு நடத்திய மூலிகைத் தோட்டம் சார்ந்த உரையாடல் பின்வருமாறு.

மூலிகைத் தோட்டம்

“என் பெயர் ஸ்வர்ணலதா. நான் ஒரு ஓவியர். எனக்கு சித்தர்கள் எழுதிய புத்தகங்களைக் படிக்கும் பழக்கம் உண்டு, எனவே அதன் மூலம் இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை மூலிகையின் முக்கியத்துவத்தை என்னால் அறிய முடிந்தது. அதுமட்டுமில்லாமல் நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் தீராத பிணியில் சிக்கியபோது ஏராளமான அலோபதி மருவத்துவர்களை அணுகினேன். அந்த மருத்துவமானது மேலும் எனக்கு பல பலவகையான ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுத்தது. ஆம் ஒரு நோய்க்கான சிகிச்சையானது பக்கவிளைவாக மற்றொரு நோயை தூண்டியதை என்னால் உணரமுடிந்தது. இந்த நேரம்தான் நான் இயற்கை மருத்துவத்தினால் ஈர்க்கப்பட்டு, இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக நான் கடைகளுக்கு சென்று தேடித்தேடி மூலிகை மருந்துகளை வாங்கி பயன்படுத்த துவங்கினாலும் கூட, கலப்படம் இல்லாத மூலிகைகள் தான் கடைகளில் விற்கப்படுகிறதா என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. மேலும் அந்த கேள்வியானது என்னை சொந்தமாக வீட்டிலேயே ஒரு மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டத்தை உண்டாக்கியது.


மூலிகைச் செடிகளுடன் ஸ்வர்ணலதா

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. ஏனென்றால், பத்து மூலிகைச் செடிகள் தேடி வாங்கும் பட்சத்தில் ஐந்து செடிகள் மட்டுமே அதில் நன்றாக வளரும். ஆனாலும்கூட நான் மனம் தளரவில்லை. மூலிகைச் செடிகள் எல்லாம் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண செடிகள் போல இல்லை. அதனை பராமரிக்க தனி கவனம் அவசியமாகும். பொதுவாக மூலிகைச் செடிகள் பராமரிப்பு என்று பார்க்கையில், சில செடிகளுக்கு வெயில் தேவை. சில செடிகளுக்கு நிழல் தேவை. மேலும் சில மூலிகை செடிகளுக்கு வெயில் மற்றும் நிழற் கலந்த பராமரிப்பு அவசியத் தேவையாக இருக்கும். ஏனென்றால் ஐம்பது சதவிகித மூலிகைச் செடிகள் எல்லாம் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் வளர கூடியதாகும். அதை கொண்டு வந்து, அதன் சூழலுக்கு ஏற்றவாறு அதற்கென தனி ஒரு சூழலை நமது சென்னையில் உருவாக்குவது எனக்கு கடினமானதாக இருந்தாலும் கூட என்னை நானே பழக்கப்படுத்திக் கொண்டேன். நமது சென்னை மண்ணின் வளத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான மூலிகைச் செடிகள் நன்றாகவே வளர்கிறது. ஆங்கில மருந்துங்களில் ஒரு நோய்க்கு ஒரு மருந்துதான். ஆனால் நமது இயற்கை மருத்துவத்தில் ஒரு மூலிகை பலவகையான நோய்களுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் பெற்றது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

மூலிகைச் செடிகள் குறித்த விளக்கம்

மூலிகைத் தோட்ட உரிமையாளர் ஸ்வர்ணலதா, அவர் தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு மூலிகைச் செடிகள் மற்றும் அதன் குண நலன்கள் குறித்த தெளிவான விளக்கம் அளிக்கிறார்...

விஷநாராயணி

இந்தச் செடியின் இலைகளை சாறு பிழிந்து பயன்படுத்துவதால் விஷக்கடிகள் குணமாகும். இதன் இலையின் சாறுகளை தோல் பகுதியில் பயன்படுத்துவது நல்லது. மேலும் செடியின் தண்டு பகுதியை ரசம் வைத்து குடித்து வர உடம்பினுள் இருக்கும் நாள்பட்ட நச்சுக்களை வெளியேற்றும்.


வீட்டிலேயே அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம்

திப்பிலி

பொதுவாகவே திப்பிலியில் ஏராளமான வகைகள் இருக்கிறது. அதில் இங்கு இருக்கும் குறிப்பிட்ட இரண்டு வகைதான் ஒன்று அரிசித் திப்பிலி மற்றொன்றுயானைத் திப்பிலி. யானைத்திப்பிலியை பொறுத்தவரையில் அதன் இலை, தண்டு, வேர் போன்ற அனைத்து பகுதிகளையும் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வர காய்ச்சல், தலைவலி, சளி தொல்லை, இருமல் போன்றவை குணமாகும்.

மிளகு

மிளகு என்பது சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், ஆனால் இதில் ஆகச்சிறந்த மருத்துவ குணங்கள் இதற்கு உண்டு. இந்த மிளகுக்கென்றே தனி பழமொழி ஒன்று உள்ளது “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட சாப்பிடலாம்”. மிளகு என்பது எப்பேர்ப்பட்ட விஷத்தையும் முறிக்கக் கூடிய வல்லமை கொண்டது. இதன் காரணமாகத் தான் நம் அன்றாட சமையலில் மிளகு இணைக்கப்பட்டுள்ளது.


விஷத்தன்மை, காய்ச்சல், சளி ஆகியவற்றை போக்கும் திப்பிலி மற்றும் மிளகு

மாங்காய் இஞ்சி

இந்த மாங்காய் இஞ்சியானது வயிறைக் குளிர்விக்கும் ஆற்றல் உடையது. ஆனால் சாதாரண இஞ்சி என்பது சூடான உணர்வைத் தரும். இவை சாதாரண இஞ்சிக்கும் மற்றும் மாங்காய் இஞ்சிக்கும் உள்ள வேறுபாடுகள்.

குங்கிலியம்

இந்த குங்கிலியத்திலிருந்து வெளிவரும் மணமானது நம் மனதுக்கு ஒரு அமைதியைக் கொடுக்கும். ஆரோக்கியம் முக்கியம் தான் அதற்கு மிக முக்கிய ஒன்று நல்ல உணர்வு, அதை இந்த குங்கிலியம் நமக்கு கொடுக்கும். மேலும் இதன் இலைகளை பஸ்பமாக்கி சாமிக்கு பூஜையின் போது பயன்படுத்துவார்கள்.

தரணி, கலாக்காய், சோமலதா

இவை மூன்றும் கூட்டு மருந்துகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படும் மூலிகை செடிகளாகும்.

முறிகூட்டி

இதன் தன்மையானது தோள்களில் பிளவு ஏற்பட்டாலும் கூட இந்த மூலிகைச் செடியின் இலையை சாறு பிழிந்து, துணியைக் கொண்டு இறுக்கி கட்டி வைத்தால் சதைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தோல் பிளவு எளிதில் குணமாகும்.

மருந்து துர்க்கன்

இதனை சாப்பிட்டு வருவதால் கிட்னி மற்றும் வயிற்றுப் பகுதி சுத்தமாகும்.

கீழாநெல்லி

மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்தும் ஒரு மூலிகைச் செடி தான் கீழாநெல்லி. அதுமட்டுமில்லாமல் இந்த கீழாநெல்லியை மூன்று நாள் வரை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பிறகு சுடு தண்ணீர் மற்றும் உப்பில்லாத உணவை உண்டு வர உடலில் உள்ள சர்க்கரை நோய் முழுவதுமாக குணமாகும்.


மாங்காய் இஞ்சி, குங்கிலியம், முறிகூட்டி மற்றும் கீழாநெல்லி

பூவரசம்பூ

பூவரசம்பூ என்பது நல்ல காற்றை நமக்கு அளிக்கும். அதாவது கெட்ட நச்சுக் கலந்த காற்றை உள்வாங்கிக் கொண்டு நல்ல காற்றை வெளியேற்றும். இதிலிருந்து வெளிவரும் காற்றை சுவாசிப்பது நல்லது. கிராமப்புறங்களில் சாலையோரம் இன்றளவும் அதிகப்படியான பூவரச மரங்களை நம்மால் காண முடியும்.

வல்லாரை

வல்லாரையின் வடிவமானது மனித மூளையை போன்ற தோற்றத்தில் இருக்கும். இது நமது மூளையின் வேகத்தை அதிகபடுத்தி, நியாபக சக்தியை அதிகரித்து மூளைச் சோர்வடைவதை தடுக்கும். வாரம் ஒருமுறை இந்த வல்லாரைக் கீரையை சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டு வருவது நல்லது.


பூவரசம்பூ, வல்லாரை மற்றும் எலும்பு ஒட்டி செடிகள்

எலும்பு ஒட்டி

இந்த மூலிகை மருந்தானது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் புத்தூர் மாவு கட்டுக்கு இந்த எலும்பு ஒட்டியைத்தான் அதிகம் பயன்படுத்துவர். இந்த மூலிகையை காய்ச்சி குடித்தாலும் சரி, உருண்டையாக சமைத்து விழுங்கினாலும் சரி, பாலில் கலந்து குடித்தாலும் சரி இது எலும்பு பகுதியில் ஏற்படும் வலிகளுக்குத் தீர்வளிக்கும்.

Updated On 31 Oct 2023 12:12 AM IST
ராணி

ராணி

Next Story