இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இங்கு அனைத்து காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை... அப்படியே முடிந்தாலும் அது நிலைப்பதில்லை... அதையும் மீறி நிலைத்தாலும் அதில் புரிதல் இருப்பதில்லை.. இப்படித்தான் இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அழகாக தொடங்கிய பந்தங்கள் ஏன் கடைசிவரை நிலைப்பதில்லை என்று பார்த்தால், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமை, விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமல் இருத்தல் போன்றவைதான். ஒரு உறவு அழகாக நீடிக்க என்ன செய்யவேண்டும்? தனது இணையை எப்படி புரிந்துகொள்வது? என்பது போன்ற பல சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார் லைஃப் கோச் பிரியா.

சாரி, ப்ளீஸ் என்று கேட்கவே இன்றைய தலைமுறையினர் தயங்குகிறார்களே? இந்த வார்த்தைகளின் முக்கியத்துவம் பற்றிக் கூறுங்கள்?

சாரி, தேங்க்யூ, ப்ளீஸ் போன்ற வார்த்தைகளை ‘மேஜிக் வார்த்தைகள்’ என்று சொல்லுவார்கள். நிறைய பிரச்சினைகளுக்கு இந்த வார்த்தைகளை பயன்படுத்தும்போது அதனை உடனே சரிசெய்துவிடலாம். ஆனால் இவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு, ‘நான் தப்பு செய்யவில்லையே...’ என்பது போன்ற கேள்விகளும், ஈகோவும் மேலோங்கி நிற்கும். அதனாலேயே விட்டுக்கொடுக்க மனமில்லாமல் விவாதிப்பார்கள். ஆனால் நிறைய பேர் தேவையற்ற இடங்களில் தேவையற்ற நபர்களிடம் சாரி கேட்பார்கள், தேங்க்யூ சொல்லுவார்கள். இந்த வார்த்தைகளை வெளிநபர்களிடம் உபயோகிப்பதைவிட வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளிடம் உபயோகிப்பது நல்லது.

உதாரணத்திற்கு, கணவன் - மனைவியிடையே பிரச்சினைகள் வரும்போது யார் முதலில் சாரி கேட்கிறார்களோ அவர்கள்தான் பெஸ்ட் என்று மாறி மாறி ஊக்குவித்துக்கொள்ளலாம் அல்லது ஒருமுறை நீ சாரி கேட்டால், இன்னொரு முறை நான் கேட்கிறேன் என்று பேசி வைத்துக்கொள்ளலாம்.


பிரச்சினைகளை குறைக்கும் மேஜிக் வார்த்தைகள்

2K கிட்ஸ்களிடம் இல்லாத ஒரு நல்ல குணாதிசயம் 90ஸ் கிட்ஸ்களிடம் இருக்கிறது என்றால் எதை சொல்வீர்கள்?

பொறுமை. 2K கிட்ஸ்களுடன் ஒப்பிடுகையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு எதுவும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. ஒவ்வொரு விஷயத்துக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, முன்பெல்லாம் தனது காதலை வெளிப்படுத்தினால் பதில்வர ஒரு வாரம் வரைகூட காத்திருப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் தனது காதலை வெளிப்படுத்தினால் உடனே பதில் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார்கள். இல்லாவிட்டால் அடுத்ததை நோக்கி சென்றுவிடுகிறார்கள்.

அதேபோல் 90ஸ் கிட்ஸ்களிடம் இல்லாத ஒரு நல்ல குணாதிசயம் 2K கிட்ஸ்களிடம் இருக்கிறது என்றால் எதை சொல்வீர்கள்?

நிறைய கற்றுக்கொள்கிறார்கள். நிறைய விஷயங்களை தேடிப்போய் கற்றுக்கொள்வதில் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தவறான நபர்களிடம் சீக்கிரத்தில் காதல் வயப்படுவது இப்போது அதிகரித்துவிட்டது. ரிலேஷன்ஷிப்பில் இருக்கக்கூடிய நல்லது, கெட்டது பற்றி சொல்லுங்கள்...

உங்களை ஒருவர் கட்டுப்படுத்த நினைத்தாலே அது நல்ல ரிலேஷன்ஷிப்பாக இருக்க முடியாது. நான் நினைப்பதுபோலத்தான் பார்ட்னர் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அதேபோல், பொசஸிவ்னெஸ் என்று சொல்லி அளவுக்கு அதிகமாக அவர்களின் எண்ணத்தை திணிப்பதோ, அக்கறை என்ற பேரில் கட்டுப்படுத்துவதோ, மிரட்டுவதோ அல்லது வளர்ச்சிக்கு தடையாக இருப்பதோ கூடாது. நல்ல ரிலேஷன்ஷிப் என்பது வாழ்க்கை லட்சியம் மற்றும் குறிக்கோளை நோக்கி பயணிக்கும்போது அதற்கு உறுதுணையாக இருப்பது, உணர்ச்சிகளை புரிந்துகொள்வது, பிரச்சினைகளை நல்லவிதமாக பேசித் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வது போன்றவையே. குறிப்பாக, ஒரு ரிலேஷன்ஷிப்பை பொறுத்தவரை இருவருமே வளர வேண்டும். இருவரின் நிறை குறைகளை இருவருமே தெரிந்திருக்க வேண்டும்.


இணையரிடையே இருக்கும் மாற்றங்களை பரிமாறி ஏற்றுக்கொள்ளுதல்

காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்கூட, ‘காதலித்தபோது இருந்தது போல தனது துணை தற்போது இல்லை' என்று கூறுகிறார்கள். இது எதனால்?

நாம் அனைவருமே ஆண்டுகள் செல்ல செல்ல மாறிக்கொண்டேதான் இருப்போம். அப்படியே இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. திருமணத்திற்கு பிறகு பொறுப்புகள் கூடும்போது, காதலனாக, காதலியாக இருந்ததுபோல கணவனாக, மனைவியாக இருக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு திருமணத்திற்கு முன்பு, ‘எப்படி வேண்டுமானாலும் ட்ரஸ் போட்டுக்கோ’ என்று சொன்ன காதலன், திருமணத்திற்கு பிறகு ‘என் அம்மாவிற்கு பிடித்த மாதிரி ட்ரஸ் போடு’ என்று சொல்லும் கணவனாக இருப்பார்கள். காதலியாக இருக்கும்போது, ‘உன் நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும் போகலாம்’ என்று சொல்லிவிட்டு, மனைவியான பிறகு, ‘என்கூடத்தான் இருக்கவேண்டும்’ என்று சொல்வார்கள். ஒவ்வொருவரும் வயது ஏற ஏற மாறிக்கொண்டேதான் இருப்பார்கள். அந்த மாற்றத்தை இருவரும் எப்படி புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

தங்களுடைய பார்ட்னரிடம் ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பலர் தவறாக முடிவெடுக்கிறார்களே... அதனை மாற்றிக்கொள்வது எப்படி?

ஒருவர் நம்மை மாறிவிட்டதாக கூறும்போது, முதலாவது அது உண்மையா என்பதை பார்க்கவேண்டும். நம்மிடம் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா? அல்லது அவருக்கு ஏதேனும் பிரச்சினையா? என்பதை ஆராயவேண்டும். நம்மை நாமே வருத்திக்கொள்ளும் முன்பு பிரச்சினை எங்கிருந்து தொடங்கியது என்பதை கண்டறிந்து அதை பேசி சரிசெய்ய வேண்டும். உறவுகளில் சிக்கல் வருவதற்கு முக்கிய காரணமே முறையாக கம்யூனிகேஷன் இல்லாததுதான்.


கணவன் - மனைவி இடையேயான புரிதல்

திருமணமான பலபேருக்கு இருக்கும் மற்றொரு பிரச்சினை, தனது மனைவியை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான். ஒரு பெண்ணை புரிந்துகொள்வது எப்படி?

ஒரு பெண்ணை புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினமான விஷயம். இது மிகப்பெரிய விவாதத்திற்குரிய விஷயமும்கூட. ஒருவரை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே அந்த நபரிடமிருந்து தப்பிக்க நினைப்பதாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒருவரை புரிந்துகொள்ள முயற்சி எடுத்தாலே கண்டிப்பாக புரிந்துகொள்ள முடியும். சில நேரங்களில் தனக்கு என்ன பிடிக்கும் என்று பெண்களே கூறினாலும் ஆண்கள் அதனை கவனிக்காமல் பிடித்ததை விட்டுவிட்டு ஏதேதோ செய்வார்கள். ரிலேஷன்ஷிப் என்பது பெரிய விஷயம். எனவே அதற்குள் செல்வதற்கு முன்பு புரிந்துகொள்ளுதல் என்பது மிகவும் முக்கியம். அதேபோல் பெண்களும் தங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஓபனாக சொல்லிவிடுவதே பல நேரங்களில் நல்லது.

சுய பராமரிப்பு (Self-care) எவ்வளவு முக்கியம்?

சுய பராமரிப்பு மிகவும் அவசியம். எப்போதாவது எங்காவது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் மட்டுமே ஒருவர் தன்னை பராமரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. திருமணமானாலும் கணவன் - மனைவி இருவருமே தங்களை பராமரித்துக் கொள்வது பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குவதோடு மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நம்மை நாமே பராமரித்து மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே அந்த மகிழ்ச்சியை பிறருக்கும் பரப்பலாம். இதனால் உங்கள் மீதான அன்பும் உங்களுக்கு அதிகரிக்கும்.


சுய பராமரிப்பும் அக்கறையும் தேவை

ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் அதிகமாக அக்கறை செலுத்துவது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

அளவுக்கு அதிகமாக அக்கறை செலுத்துவது ஒருவித எரிச்சலை உண்டுபண்ணும். அப்படி தோன்றும் பட்சத்தில் தனது பார்ட்னரிடம் அதுகுறித்து வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். அதனை புரிந்துகொண்டால் நல்லது. சொல்லாமலேயே தனது பார்ட்னர் தன்னை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறானது. அதேபோல அதிகப்படியான அக்கறை செலுத்தும் முன்பு அது தேவைதானா என்று நன்கு ஆராய்ந்து பின்னர் செயல்படுத்துவது இன்னும் நல்லது.

பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் ‘நீ என்ன செய்ய வேண்டுமானாலும் அதை உன் கணவன் வீட்டில் போய் செய்துகொள்’ என்கிறார்களே... இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இது முற்றிலும் தவறானது. ஒரு பெண் தனியாக இருக்கும்போது செய்யும் சில விஷயங்களை திருமணத்திற்கு பிறகு செய்யமுடியாது. அந்த ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். உதாரணத்திற்கு, பயணங்கள்மீது ஆர்வமுள்ள பெண்ணுக்கு பயணம் செய்வதே பிடிக்காத ஒரு கணவன் அமைந்துவிட்டால் அந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விடும். திருமணத்திற்கு பிறகு, குடும்பம், குழந்தை என பொறுப்புகள் கூடிவிடும். அம்மா வீட்டில் இருக்கும்போது, ‘கணவன் வீட்டிற்கு போய் பார்த்துக்கொள்’ என்று கூறினால், கணவன் வீட்டிற்கு சென்றபிறகு, ‘இது ஒன்றும் உன்னுடைய அம்மா வீடு கிடையாது; நினைத்தது போல் இருப்பதற்கு’ என்று கூறுவார்கள். இது ஒரு தவறான ஸ்டேட்மெண்ட்.


கோபத்தில் செய்யும் தவறுகள்

தனது பார்ட்னரிடம் என்னென்ன வார்த்தைகளை சொல்லக்கூடாது?

பொதுவாக தனது பார்ட்னரின் கோபத்தை தூண்டுகிற வார்த்தைகளை சொல்லக்கூடாது. ஒரு சிலர் தனது பார்ட்னர் கோபமாக இருக்கும்போது அந்த வார்த்தைகளை சொல்லி காண்பிப்பார்கள். அது அவர்களை காயப்படுத்தும் என்று தெரிந்தும் அப்படி செய்வது நல்லதல்ல. அதேபோல் பிறருடன் ஒப்பிட்டு பேசுவது, நம்பிக்கை இல்லாமல் இருப்பது, ஒரு பக்க கதையை மட்டும் கேட்பது போன்றவை உறவை பாதிக்கும்.

Updated On 6 Dec 2023 1:08 PM IST
ராணி

ராணி

Next Story