இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குழந்தை பேறு என்பது அபூர்வமான ஒரு நிகழ்வாகவே இன்று மாறி வருகிறது. அதற்கு, இன்றைய வாழ்க்கை சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், அதிக வயதை கடந்த பிறகு திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் பெண்களுக்கு கருமுட்டைப்பை, கருக்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகளும் இதுபோன்ற குழந்தையின்மை பிரச்சினைகளுக்கு முக்கிய கரணமாகவும் அமைவதாக சிலர் கூறுகின்றனர். திருமணமாகி 5 அல்லது 10 ஆண்டுகள் கடந்த தம்பதிகள் இயற்கையாக கருத்தரிக்க முடியாமல், செயற்கை கருத்தரித்தல் முறையை நோக்கி நகர்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் IVF சிகிச்சை முறைக்காக முயற்சி செய்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்த IVF சிகிச்சையை எப்படி எடுக்க வேண்டும்? IVF சிகிச்சை என்றால் என்ன? இந்த சிகிச்சை முறையில் நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசியுள்ளார் அப்பல்லோ ஃபெர்டிலிட்டி சென்டர் மருத்துவர் அப்துல் பாசித். IVF சிகிச்சை குறித்த அவரின் நேர்காணல் தொகுப்பை இங்கே காணலாம்.

IVF சிகிச்சை முறை என்றால் என்ன?

IVF சிகிச்சை முறையில் கருத்தரிப்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இயற்கை முறையில் கருத்தரிப்பதை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு பெண்ணிற்கு டே 2 அல்லது டே 3-யில் ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது ஓவரீஸ் என்று சொல்லக்கூடிய கருப்பையில் சின்ன சின்ன முட்டைகளை காண முடியும். சிறியதாக இருக்கும் இந்த முட்டைகள் பெண்களுக்கான மாதவிடாய் நேரத்தில் பெரிதாக வளர்ந்து கருமுட்டை பையில் இருந்து வெடித்து ஃபெலோபியன் குழாய் எனப்படும் கருக்குழாய்க்குள் செல்லும். இந்த நேரத்தில் கணவன் - மனைவி இருவரும் உடலுறவில் ஈடுபட்டு ஒன்றாக சேர்ந்து இருந்தால் அப்போது வெளிப்படும் விந்தணு யூட்ரஸ் வழியாக அந்த ஃபெலோபியன் குழாய்க்குள் சென்று கருவாக மாறி கர்ப்பம் அடைவதை உறுதிப்படுத்தும். இப்படி நடைபெறும் ஒரு நிகழ்வை IVF முறையில் நாம் செய்யும்பொழுது கருமுட்டை வெடித்து கருக்குழாய்க்குள் செல்வதற்கு முன்பாக அந்த முட்டைகளை வெளியில் எடுத்துவிடுவோம். அதன் பிறகு ஃபெர்டிலைசேஷன் என்ற செயல்முறைக்கு கொண்டு செல்வோம். அதாவது கணவரின் விந்து மற்றும் பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட கருமுட்டை இரண்டையும் Lab-ல் வைத்து பராமரித்து கருவாக உருவாக்குவோம் . இப்படி ஆய்வகத்தில் வளர்க்கப்படும் கருவை பிறகு பெண்ணின் கருவறைவுக்குள் செலுத்தும் நிகழ்வைத்தான் IVF என்று சொல்கிறோம்.


கருமுட்டைக்குள் செல்லும் விந்தணு

டெஸ்ட் டியூப் பேபி, IVF வித்தியாசம் என்ன?

டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சைக்கும், IVF- க்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. கிட்டதட்ட இரண்டும் ஒரே முறையை சேர்ந்ததுதான். IVF என்பது ஃபெர்டிலிட்டி மெடிசனின் ஒரு பகுதியாகும். இந்த ஃபெர்டிலிட்டி மெடிசன் நிறைய விஷயங்களை உள்ளடக்கியது. அதில் முதலாவதாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு தம்பதி ஸ்கேனை மட்டுமே பின்பற்றி இயற்கையாக கருத்தரிக்கும் நிகழ்வுதான். அதேபோன்று இரண்டாவது IUI என்ற ஒரு சிகிச்சை உள்ளது. அதாவது கணவரின் விந்தணு குறைவாக இருந்தாலோ ; கணவன் - மனைவியால் முறையான உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்றாலோ ; அதையும் தாண்டி கணவர் வேறொரு இடத்தில்; மனைவி வேறொரு இடத்தில் பணியாற்றுகிறார்கள்... ஆனால், குழந்தைக்கு முயற்சி செய்கிறார்கள் என்கிற நிலை இருந்தாலோ, அப்போது இந்த சிகிச்சை முறைதான் பயன்படுத்தப்படுகிறது. IUI என்றால் பெண்ணின் கருமுட்டை வளர்ந்து வெடிக்கும் சமயத்தில், கணவரின் விந்தணுவை ஆய்வத்தில் முறையாக பராமரித்து வளர்த்து மனைவி கருத்தரிப்பதற்கு வசதியாக அவரின் ஆரோக்கியமான விந்தணுக்களை மட்டும் பெற்று ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தும் ஒரு முறையாகும். இதற்கு அடுத்ததுதான் IVF என்று சொல்லக்கூடிய கருமுட்டை மற்றும் கணவரின் விந்தணுவை ஆய்வகத்தில் வளர வைத்து மீண்டும் கருவறைக்குள் செலுத்தி வளர வைக்கும் முயற்சி செய்யப்படுகிறது. இதனை தவிர்த்து லேப்ராஸ்கோபி மூலம் கருத்தரிக்கும் முறையும் உள்ளது. அதாவது கருத்தரிக்கும் பெண்ணின் ஃபெலோபியன் டியூப் அடைப்பாக இருந்தால் அந்த அடைப்பை லேப்ராஸ்கோபி மூலம் சரி செய்து கருத்தரிக்கச் செய்வது. இந்த மாதிரி வெவ்வேறு முறைகள் ஃபெர்டிலிட்டி மெடிசனில் உள்ளது. அதில் IVF முறையும் ஒன்று.

குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த மாதிரியான மருத்துவத்தின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? ஒரு மருத்துவராக நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்னவாக இருக்கும்?

எடுத்த எடுப்பிலேயே குழந்தைக்காக முயற்சி செய்யும் அனைவரையும் IVF சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட மாட்டோம். குழந்தை இல்லையென்று வரக்கூடிய தம்பதிகளுக்கு முக்கிய பிரச்சினை என்னவென்று பார்ப்போம். விந்தணு எந்த அளவில் இருக்கிறது? எத்தனை முறை IUI சிகிச்சை செய்து ஃபெயிலியர் ஆகி இருக்கிறர்கள்? இதை தவிர்த்து கணவன் - மனைவி இரண்டு தரப்பிலும் வேறு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது? திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும், முயற்சிகள் பல செய்தும் பலன் கிடைக்காததற்கு காரணம் என்ன? பரம்பரை பிரச்சினை அவர்கள் குடும்பத்தில் ஏதேனும் உள்ளதா? என அவர்களின் பல குறைகளை ஆராய்ந்து, அனைத்தையும் கவனித்து அதற்கு அவர்கள் தகுதியானவர்களா? என்று கணித்த பிறகே IVF சிகிச்சையை பரிந்துரை செய்வோம்.


கருவறைக்குள் குழந்தை எவ்வாறு இருக்கும் என்பதற்கான மாதிரி காட்சி

IVF பரிந்துரைக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு இதில் என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது? அதன் சக்ஸஸ் ரேஷியோ என்ன என்பது குறித்து விளக்கமான கவுன்சிலிங் ஒன்று கொடுப்போம். பிறகு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாதவிடாய் வந்து இரண்டாவது அல்லது மூன்றாவது நாள் மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களின் கருமுட்டை வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை ஸ்கேன் எடுத்து பார்ப்போம். அதன் பிறகு ஊசி மூலமாக மருந்து செலுத்தும் முறையை துவங்குவோம். இயற்கையாக கருத்தரிக்கும்போது ஒரு பெண்ணின் கருப்பையில் 7-ல் இருந்து 15-வரை கருமுட்டைகள் இருக்கும். அதில் ஒன்றுதான் கருவாக வளரும். ஆனால், IVF சிகிச்சையில் அந்த முட்டைகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் வளர வைப்போம். அதற்கு தகுந்த ஊசிகளும் தினமும் செலுத்த வேண்டி இருக்கும். இதற்கிடையில் மூன்று, நான்கு முறை முட்டைகள் நன்றாக வளர்கிறதா? வேறு ஏதும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்று ஸ்கேன் எடுத்தும் பாப்போம். இந்த முட்டைகள் தானாக வெடித்துவிட கூடாது என்பதற்காக 5-வது அல்லது 6-வது நாளில் கூடுதலாக ஒரு ஊசி போடுவோம். 10-நாட்களில் எல்லா முறைகளையும் சரியாக கையாண்டு முட்டைகளும் நன்கு வளர்ந்துவிட்டது என்றால் அந்த முட்டைகளை எடுக்கும் வேலையை செய்வோம். அதைத்தான் Egg Collection என்று சொல்லுவோம்.

இந்த முட்டை சேகரிப்பு செய்யும் முறை ஒரே நாளில் நடந்து முடிந்துவிடும். மருத்துவமனையில் வந்து தங்க வேண்டிய அவசியம் இருக்காது. மயக்க மருந்து கொடுத்து செய்வதால் வலி ஏதும் இருக்காது. அடி வயிற்றில் இருந்து கிழித்து எடுப்பது எல்லாம் கிடையாது. பெண்ணின் பிறப்புறுப்பு மூலமாகவே ஒரு நீளமான ஊசி செலுத்தி கருமுட்டைகளை எடுத்து விடுவோம். இந்த செயல்முறை முடிந்து இரண்டு முதல் மூன்று மணி நேரத்திலேயே அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். இதற்கு பிறகுதான் அந்த முட்டைகளின் தரம் எந்த அளவில் இருக்கிறது என்பதை கவனித்து கணவரின் விந்தணுவுடன் சேர்த்து ஆய்வகத்தில் 6 நாட்கள்வரை வளர வைப்போம். இவ்வளவு நிகழ்வுகளுக்கு பிறகுதான் அதனை அந்த பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி முழுமையாக வளர வைப்போம்.


IVF சிகிச்சையில் 60 முதல் 70 சதவிகிதம் வெற்றி கிடைக்கும் - மருத்துவர் அப்துல் பாசித்

IVF சிகிச்சை எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்று கூற முடியுமா?

ஒவ்வொருவரும் வேறு வேறு காரணங்களுக்காகத்தான் IVF சிகிச்சை எடுத்துக்கொள்ள வருவார்கள். ஒரு மாதத்தில் ஒரு 10 பேர் வந்து IVF சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அதில் ஆறு அல்லது ஏழு பேர்வரை கர்ப்பம் தரிப்பார்கள். அதாவது 60 முதல் 70 சதவிகிதம் என்ற அளவில் வெற்றி கிடைக்கும் . மீதமுள்ளவர்கள் கர்ப்பம் ஆகாமல் ஏமாற்றம் அடைவார்கள். இதுதான் உலகம் முழுவதும் உள்ள நிலை. வெற்றி பெற்றவர்களிடம் மிக முக்கியமாக மூன்று விஷயங்கள் பார்க்கப்படுகிறது. அதில் எம்ரியோ குவாலிட்டி என சொல்லப்படக்கூடிய கருவின் தரம் மிக அவசியமான ஒன்று; இந்த எம்ரியோ குவாலிட்டி முழுக்க முழுக்க விந்து மற்றும் கருமுட்டையை சார்ந்தே இருப்பதால், இது மூன்றும் சரியாக அமைந்தால்தான் ஒரு ஜோடி இணைவு ஏற்பட்டு IVF சிகிச்சையும் வெற்றி பெறுகிறது.

குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு காரணம் என்ன?

குழந்தையின்மை பிரச்சினையை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று திருமணம் செய்துகொள்ளும் வயது. முன்பெல்லாம் 18 முதல் 20 வயதுக்குள்ளாகவே ஆண், பெண் இருவரும் திருமணம் செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் 30 முதல் 32 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறுகிறது. அப்படி திருமணம் ஆனாலும் ஒரு மூன்று வருடங்கள் குழந்தை வேண்டாம் என்று ஒத்திவைத்து விடுகிறார்கள். அதனால் கூட குழந்தை பெற்று கொள்வதில் பிச்சினைகள் ஏற்படுகிறது. இன்னொன்று நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. நிறைய ஜங்க் ஃபுட் என சொல்லப்படக்கூடிய துரித உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்வது குறைந்து விட்டது. வேலையில் டென்ஷன்; இரவுப்பணி செய்வது; சரியான தூக்கம் இல்லாதது; அதிகமாக மது அருந்துவது என மாற்றம் கண்டுள்ள நமது அன்றாட பழக்கவழக்கங்களும் குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாக உள்ளது.

Updated On 4 Nov 2024 12:46 PM IST
ராணி

ராணி

Next Story