இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஆனால் முகத்திற்கே முகவரியாக இருப்பது பற்கள்தான். பற்களை முறையாக எப்படி பராமரிப்பது என்பது குறித்து பல் மருத்துவர் கவிதா அளித்த பேட்டி.

நமது பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்?

நமது முகத்துக்கு அழகு சேர்ப்பது பற்கள். அதனால் பற்களை சிறப்பாகப் பராமரிப்பது அவசியம். தினமும் இரு வேளை பல் துலக்குவது, சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது போன்றவற்றை தவறாது செய்ய வேண்டும். இதைப் பின்பற்றி வந்தால் போதும். பற்கள் நன்றாக இருக்கும்.


பற்சிதைவு என்றால் என்ன?

பற்களில் சொத்தை விழுவதைத்தான் பற்சிதைவு என்கிறோம். சொத்தை பல் ஆரம்பத்தில் ஈறுகளில்தான் ஆரம்பிக்கும். ஈறுகளில் அழுக்குகள் எளிதில் ஒட்டிக் கொள்ளும். நாம் சரியாக பல் துலக்காவிட்டாலோ அல்லது ஈறிலிருக்கும் அழுக்கினை அகற்ற முடியாவிட்டாலோ அந்த அழுக்கு அங்கேயே தங்கி ஈறை பலமிழக்கச் செய்யும். அதன் அறிகுறியாக முதலில் ரத்தக்கசிவு உண்டாகும். அங்கு உணவுத் துகள் தேங்கியிருந்து பல் சொத்தையாவதுடன் அடுத்தடுத்த பற்களுக்கும் பரவும்.


பற்கள் வெள்ளையாக இருக்கவேண்டும் என்பது சரியா?

நமது இந்திய மரபுக்கு பற்களின் நிறம் வெள்ளை கிடையாது. சற்று மஞ்சள் நிறமாக இருப்பதுதான் சரியானது. நாம் கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்வதால் நமது பற்களின் நிறம் சிறிது மஞ்சளாகத்தான் இருக்கும். பற்களை வெள்ளையாக்குவதற்கு சிகிச்சைகள் உள்ளன. ஆனாலும் அது பளிச்சென்ற வெள்ளை நிறத்தைத் தராது. சிறிது மஞ்சளாகத்தான் இருக்கும். வெள்ளை நிறம் என்பது இயற்கையில் பால் பற்களில் மட்டும்தான் இருக்கும். அதுவும் வளர வளர மஞ்சளாகி விடும்.

வேப்பங்குச்சி, ஆலங்குச்சியிலிருந்து நாம் ‘பிரஷு’க்கு மாறி விட்டோம். இது ஆரோக்கியமானதா?

அந்தக் காலத்தில் பல் துலக்க வேப்பங்குச்சிகளைத்தான் பயன்படுத்தி வந்தனர். அதில் நன்மைகளும் இருந்தது. ஆனால் அதை வைத்து முறையாக துலக்கத் தெரியாமல் ஈறுகளை குத்திக் கொண்டிருந்தனர். பின்னர் காலப்போக்கில் ‘பிரஷு’க்கு மாறி விட்டோம். மீண்டும் இப்போது மூங்கில் பிரஷ் எல்லாம் கிடைக்கிறது. எதுவாயிருந்தாலும் அதை வைத்து நாம் முறையாக பல் துலக்க வேண்டும். அப்போதுதான் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

தெத்துப் பற்களை சரிசெய்வது எப்படி?

தெத்துப் பற்களின் அறிகுறிகள் சிறு வயதிலேயே தெரிய வரும். அதில் நிறைய வகைகளும் இருக்கிறது. பன்னிரண்டு வயதுக்கு முன்பே கண்டறிந்தால் அதன் வளர்ச்சியை தடுப்பதற்கென தனி சிகிச்சை முறைகள் உள்ளன. எலும்பு வளர்ச்சி மூலமாகவும் தெத்துப் பல் ஏற்படலாம். எதுவாயிருந்தாலும் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். தெத்துப் பல்லுக்கு ‘பிரேசஸ்’ போடுவதுதான் சிகிச்சை முறை. ஆனால் வயது மற்றும் பல்லின் பிரச்சினையைப் பொருத்து பிரேசஸ் போடும் காலம் மாறுபடும்.


கர்ப்ப காலத்தில் பற்களில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாகுமா?

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மையால் கண்டிப்பாக மாற்றங்கள் உருவாகும். நாள அழற்சி அதிகமாவதால் ஈறுகள் பலவீனமடைந்து சிவப்பாகி ரத்தக்கசிவு உண்டாகும். அதனால் பற்களை சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் வேறு வகையான மாத்திரை மருந்துகளை பயன்படுத்துவதும் சிரமத்தை தரலாம். எனவே கர்ப்பம் தரிக்கும் முன்னரே பற்களில் பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

விபத்தில் பாதிக்கப்படும் பற்களின் சிகிச்சை முறைகள் என்ன?

கீழே விழுந்து பல் உடைந்து அது உள்ளேயே குத்தி நின்று கொண்டிருந்தால் அதை முதலில் எடுத்து அகற்ற வேண்டும். அந்த காயம் எல்லாம் ஆறிய பிறகு `ரூட் கெனால்’ சிகிச்சை செய்ய வேண்டும். பல் முழுமையாக கீழே விழுந்துவிட்டால் அதை பேப்பர் அல்லது துணியில் சுற்றாமல், காய்ச்சாத பசும்பாலில் போட்டு வைத்து எடுத்து வந்தால், அந்தப் பல்லையே மீண்டும் பதிக்கலாம். பல் இல்லாமல் இருந்தால் ‘இம்பிளான்ட்’ அல்லது ‘பிரிட்ஜ்’ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.

‘டீத் ஒயிட்னிங்’ எவ்வளவு காலம் நீடிக்கும்?

`டீத் ஒயிட்னிங்’ என்பது பற்களை சுத்தப்படுத்தி வெள்ளையாக்குவது. இதை அடிக்கடி செய்யக்கூடாது. `டீத் ஒயிட்னிங்’ செய்வதால் பற்களின் ‘எனாமல்’ எனப்படும் மேற்புறம் சிதைவுறலாம். அதனால் பற்கள் பலவீனமாகும். குறைந்தது 2 முதல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே `டீத் ஒயிட்னிங்’ செய்வது நல்லது. அதுவும் அவசியமிருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்.


பல் வலி மற்றும் ரத்தக்கசிவு எதனால் உண்டாகிறது?

சொத்தை பல் அல்லது ஈறு பிரச்சினைகளால் பல் வலி ஏற்படலாம். சொத்தை சிறிய அளவில் இருக்கும்போதே சிகிச்சை எடுத்துக் கொண்டால் வலி இருக்காது. சொத்தை பெரிதானால், வலி, வீக்கம் அதிகமாகும். மேலும் அதிக செலவும் ஏற்படும். சரியாக பல் துலக்காத காரணத்தால் அழுக்குகள் ஈறுகளுக்குள் சென்று பலவீனமாகி ரத்தக்கசிவு ஏற்படும். ஈறுகளை சரியாகப் பராமரிக்காது விட்டால் நன்றாக இருக்கும் பல்கூட ஆட்டம் கண்டு விழுந்து விடும் வாய்ப்பிருக்கிறது. முறையாக பல் துலக்கினாலும்கூட ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை ‘ஸ்கேலிங்’ என அழைக்கப்படும் பல் சுத்தப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும்.


ஒரு பிரஷ்ஷை எவ்வளவு நாட்கள் வரை பயன்படுத்தலாம்?

ஒரு பிரஷ்ஷை 2½ அல்லது 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். நன்கு தேய்த்து அழுத்தி பயன்படுத்தினால் பிரஷ் 2½ மாதத்திற்குள் தேய்ந்து விரிந்து விடும்.

பல்லுக்கேற்றவாறு எந்தெந்த வகை பிரஷ்களை பயன்படுத்த வேண்டும்?

கடின வகை பிரஷ்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. மென்மை அல்லது நடுத்தர வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வயதானவர்கள் மென்மை பிரஷ்களையும், 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் நடுத்தர வகை பிரஷ்களையும் பயன்படுத்துவது நல்லது.

பல் மருத்துவரை எப்போதெல்லாம் அணுக வேண்டும்?

பொதுவாக நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுதல் வேண்டும்.

பற்களின் மஞ்சள் கரையை சுயமாக சுத்தப்படுத்தலாமா?

பற்களின் மஞ்சள் கரையை சுயமாக சுத்தப்படுத்த இயலாது. மருத்துவரைத்தான் அணுக வேண்டும். முறையாக பல் துலக்காவிட்டால் தினசரி சேரும் உணவுத் துகள்கள் பற்களில் படிந்து விடும். அதை ‘ஸ்கேலிங்’ என்ற முறையில்தான் நீக்க வேண்டும்.

`டூத் பிட்ஸ்’ என்றால் என்ன?

`டூத் பிட்ஸ்’ என்பது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதாகும். குழந்தைகள் சரியாக பல் துலக்க மாட்டார்கள் என்பதால் அவர்களை கவரும் வகையில் இந்த `டூத் பிட்ஸ்கள்’ தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சாக்லெட் போன்று வாயில் போட்டு மென்றதும் டூத் பேஸ்ட் போல் நுரை வரும். அதன் பிறகு பிரஷ் செய்து கொள்ளலாம். இது பலவிதமான சுவைகளில் கிடைக்கிறது.

ஆரோக்கியமான பற்களுக்கு என்ன செய்ய வேண்டும்?

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. கார்பனேடட் பானங்கள், கார்போ ஹைட்ரேட்ஸ், இனிப்புகள், சாக்லெட்கள் மற்றும் பற்களில் ஒட்டும் மாதிரியான பொருட்களை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்டதும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

தாடை வடிவமைப்புக்கு (Jawline) அறுவைசிகிச்சைதான் செய்ய வேண்டுமா?

தாடை வடிவமைப்பு இல்லாதிருப்பதற்கு முகம் குண்டாக இருப்பதுதான் காரணம். பில்லர்ஸ் அல்லது திரெட்ஸ் போடுவது தாடையை நல்ல வடிவமைப்புக்கு கொண்டு வரும்.



Updated On 1 Aug 2023 11:32 AM GMT
ராணி

ராணி

Next Story