இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் கணவன் - மனைவி என்றாலே பிரியக்கூடாது சேர்ந்துதான் இருக்கவேண்டும் என்ற நிலைமை மாறி, இப்போது திருமணமாகி ஒரேநாளில்கூட விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், என்னவகை உறவாக இருந்தாலும் அதற்கு அடிப்படை தேவை புரிதல்தான் என்பதை பலர் புரிந்துகொள்வதில்லை. இதனாலேயே இன்று பல குடும்பங்கள் ஒன்றாக இருந்தாலும் மனதளவில் சேர்ந்திருப்பதில்லை. ஒரு உறவை எப்படி கையாள்வது? எப்படி குழந்தைகளை சரியாக வளர்ப்பது? பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையேயான உறவு எப்படி இருக்கவேண்டும்? என்பது குறித்தெல்லாம் நம்முடன் உரையாடுகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

ரிலேஷன்ஷிப்பை கையாள்வது எப்படி?

நாம் வளர்ந்த விதம், பெற்றோருடனான நமது உறவு, இணக்கம் மற்றும் சிறு வயதில் நமக்கு கிடைத்த அனுபவங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்துதான் பிறருடனான உறவு உருவாகிறது. ஏற்கனவே நாம் மனதில் நினைத்து வைத்திருக்கும் குணாதிசயங்கள் ஒருவரிடம் இருப்பதை பார்க்கும்போதுதான் ஒருவரை கண்டவுடன் காதல் ஏற்படுகிறது. ஆனால் கொஞ்சநாள் கழித்துதான் முகத்திரை விலகும்போது வருகிற ஏமாற்றம் மற்றும் பிரச்சினைகளைத் தாண்டி காதல் நிற்குமேயானால் நல்லது. அதுவே டாக்சிக் உறவாக இருக்கும்பட்சத்தில் சேர்ந்திருப்பது கடினம்.

டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இதற்குமேல் இருக்கக்கூடாது என எந்த இடத்தில் முடிவுசெய்வது?

எந்தவித உறவாக இருந்தாலும் அதில் வளர்ச்சி இருக்கவேண்டும். நமக்கான சௌகர்யமான இடைவெளி, சுதந்திரம் இருக்கவேண்டும். உறவில் இருக்கும் இருவரும் ஒருவரால் மற்றொருவர் வளரவேண்டும். நம்மைப்பற்றி என்ன நினைப்பாரோ என இருவருக்குமிடையே பயம் இருக்கக்கூடாது. இவை அனைத்தையும் தாண்டித்தான் ஒரு உறவு வளரும். இப்போதுள்ள நிறைய காதல்களில் தங்களுடைய ஐடிக்கான பாஸ்வேர்டுகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.


டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் அக்கறை இருக்காது; கண்காணிப்புதான் இருக்கும்

அதேபோல் போன் பண்ணும்போது லைன் பிஸியாக இருந்தால் யாருடன் பேசிக்கொண்டிருந்தாய் என கேட்பது, கான்ஃபரன்ஸ் கால் போட்டு பேசச் சொல்வது, உடையில் கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற கட்டளைகளை போடுகிறார்கள். இதெல்லாம் அன்போ, அக்கறையோ கிடையாது. துணையை கண்காணிப்பது. இப்படிப்பட்ட உறவில் வளர்ச்சி இருக்காது. மேலும் இப்போதுள்ள நிறைய உறவுகளில் ‘நீ எனக்கு கிடைக்கவில்லையென்றால் நான் உன்னை கொன்றுவிடுவேன், ஆசிட் அடித்துவிடுவேன்’ என்பதுபோன்ற வன்முறைகள்தான் அதிகம் இருக்கிறது. இது காதலே கிடையாது.

திருமணத்தை மீறிய உறவினால் குற்றங்கள் அதிகரிக்கிறதே? இதற்கும் மனநல பிரச்சினைக்கும் தொடர்பு உண்டா?

திருமணத்தை மீறிய உறவு தவறு என்றாலும் அதைத் தாண்டி வன்முறைதான் கண்டிக்கப்படவேண்டியது. நிறைய சினிமாக்களில்கூட பளார் என்று அறைவது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. இதை பார்த்து வளர்பவர்கள் எப்படி வளருவார்கள்? இதுபோன்ற வன்முறை எங்கிருந்து வருகிறது? எதையும் பேசி தீர்க்கலாமே! பெண்ணை ஆணுக்கு சமமாக வைத்து கருத்துகளை கேட்டால்தான் அவர்களால் தங்களை வெளிப்படுத்த முடியும். ஆனால் அதுபோன்ற உரிமைகள் இன்றளவும் பெண்களுக்கு கிடைக்கவில்லை. இதை பார்த்து வளரும் குழந்தைகளும் அப்படியேதான் வளர்வார்கள். இதுதவிர டெக்னாலஜி வளர்ச்சியும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் உலகமே கையில் இருக்கிறது என்ற மனநிலை உருவாகிவிடுகிறது. கஸ்டமர் சர்வீஸ், பணம் ஏமாற்றுதல் போன்றவற்றில் செல்போனின் பங்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதே அளவிற்கு தகாத உறவுமுறைகளிலும் இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை திருமணம் செய்துவிட்டாலே கடைசிவரைக்கும் ஒரு கணவன் ஒரு மனைவி என்றுதான் இருக்கிறது. அவர்களே பிரிய நினைத்தாலும் சமுதாயத்தின் கட்டாயத்தால் ஒன்றாக சேர்ந்து இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இன்றைய பெரும்பாலான இளம்தம்பதிகள் உடனே பிரிந்துவிடுகிறார்கள். தங்களுடைய திருமண பந்தத்தை காப்பாறுவதற்காக வேலைகளை செய்வதில்லை. அப்படியே மற்றொருபுறம் திரும்பி பார்த்தால் குடித்தாலும் அடித்தாலும் பெண்ணையே குறைகூறி ஒன்றாக வாழவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.


திருமணத்தை மீறிய உறவால் குடும்பத்தில் ஏற்படும் விரிசல்

ஒரு உறவு எல்லை தாண்டும்போது எந்த இடத்தில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்?

ஒரு உறவில் இருக்கும்போது இவர் நம்மை அடிப்பாரோ, சந்தேகப்படுவாரோ, ஏதாவது சொல்வாரோ என்ற பயம் வரக்கூடாது. சந்தேகமே ஒரு வியாதிதான். இதற்கு குடிப்பது முக்கியக் காரணமாக இருக்கிறது. குடிபோதையில் மனைவியை சந்தேகப்பட்டு, கொலை செய்தது, அடித்தது குறித்த செய்திகளை அதிகம் பார்க்கிறோம். கணவனுக்கு இதுபோன்ற பழக்கம் இருக்கும்போது, நிலைமை சரியில்லை என்று மனைவிக்கு தோன்றும்போது, மருத்துவரிடம் அழைத்துச்சென்றோ அல்லது குடும்பத்தினரை அழைத்து பேசியோ சரிசெய்யவேண்டும். சில பெண்கள் வேலைக்கு செல்லாததாலோ அல்லது குழந்தைகளை பார்க்கவேண்டிய கட்டாயம் இருப்பதாலோ வருமானத்திற்கு கணவனை சார்ந்திருக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் நிறைய முடிவுகளை எடுக்கமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் பெண்கள்.

பிள்ளைகளுக்கு தேர்வு ரிசல்ட் வரும்போது பெற்றோரும் பிள்ளைகளும் எப்படி தங்கள் மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும்?

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. திட்டக்கூடாது. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். இது குறைவான மதிப்பெண் வாங்கிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே பெற்றோர்கள் இதுபோல செய்யாமல் தங்களுடைய பிள்ளைகள் எடுத்திருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, என்ன படிக்கலாம் என்பதை பற்றி யோசிக்கவேண்டும்.


மதிப்பெண் குறைவாக எடுக்கும் பிள்ளைகளை பெற்றோர் கையாளும் விதம்

மதிப்பெண் குறையும்போது மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக கூறுவதையும், தவறான முடிவுகளை எடுப்பதையும் தடுப்பது எப்படி?

இளம் தலைமுறையினருக்கு பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று தெரிவதில்லை. எனவே தற்கொலை செய்துகொள்வது, காணாமல்போவதுதான் பிரச்சினைக்கு முடிவு என்று நினைத்துக்கொள்கிறார்கள். ரிசல்ட் வருவதற்கு முன்பே பல பெற்றோர்கள், ‘எங்களுடைய எதிர்காலமே நீதான். நீ என்ன மார்க் வாங்கப்போகிறாயோ’ என்று தங்களுடைய எதிர்பார்ப்பை சொல்லிக்கொண்டே இருந்தால் அந்த அழுத்தம் குழந்தைகள்மீது விழுகிறது. அதை எப்படி எடுத்துக்கொண்டு கையாள்வது என தெரியாத குழந்தைகள் தவறாக முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே பெற்றோர் அப்படி சொல்லும்போது என்னால் முடிந்தவரை படித்திருக்கிறேன் என பெற்றோரிடம் பிள்ளைகளும் முன்கூட்டியே பேசி புரியவைக்கவேண்டும். அதேபோல் பிள்ளைகள் கேட்கிறார்களே என பெற்றோர் தங்களுடைய சூழ்நிலையையும் தாண்டி, லட்சம் ரூபாய் செலவழித்து பைக் வாங்கிக்கொடுப்பது, பத்தாயிரம் ரூபாய்க்கு டிரஸ் வாங்கிக்கொடுப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது. இதனால் அவர்கள் அடுத்தடுத்து இதுவேண்டும் அது வேண்டும் என்று டிமாண்ட் செய்வார்கள்.

குழந்தைகளால் சிறிய வயதில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாது. வளரும்போது அதே மனநிலையுடன் வளர்ந்தால் வாழ்க்கையை சமாளிப்பது சிரமமாகும். தோல்விக்கு குழந்தையை பழக்குவிப்பது எப்படி?

குழந்தைகள் கீழே விழுந்துவிட்டால் சில பெற்றோர்கள், ‘இரு தரையை அடிக்கிறேன்’ என அடிப்பார்கள். ஆனால் ‘தரைமீது தவறில்லை; நீதான் கீழே விழுந்துவிட்டாய்’ என்று சொல்லி பழக்கப்படுத்தவேண்டும். அதேபோல் பிறருக்கு கொடுக்கும் தன்மையை குழந்தைகளுக்குள் பெற்றோர் வளர்க்கவேண்டும். இப்போது நிறையப்பேருக்கு ஒரு குழந்தைதான் இருக்கிறது. எனவே ‘ஒரு பொம்மையை பிறருக்கு கொடுத்தால்தான் உனக்கு அடுத்த பொம்மை வாங்கிக்கொடுப்பேன்’ என பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கும் பழக்கத்தை கற்பிக்க வேண்டும். அதேபோல் சாரி, தேங்க்ஸ், எக்ஸ்க்யூஸ்மி போன்ற வார்த்தைகளை பயன்படுத்த சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்போது நிறைய டிவி ஷோக்களில்கூட இதை பார்க்கிறோம். ஒரு குழந்தை தோற்றுவிட்டால் குடும்பமே அழுகிறார்கள். அது தவறு. அது ஒரு போட்டி என்பதை எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கவேண்டும்.


சிறுவயதிலிருந்தே தோல்விக்கு குழந்தைகளை பழக்கப்படுத்துவது சிறந்த வாழ்க்கை பாடம்

முன்பெல்லாம் போட்டி என்றால் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு என்று கொடுப்பார்கள். ஆனால் இப்போதுள்ள பள்ளிகளில் குழந்தைகள் ஏமார்ந்து போய்விடக்கூடாது என்பதற்காக அனைவர் கையிலும் ஒரேமாதிரியான பரிசுகளை கொடுத்துவிடுகிறார்கள். இந்த மனநிலையுடன் வளரும் பிள்ளைகள் காலேஜுக்கு போகும்போது அங்கு பல்வேறு இடங்களில் படித்து முதலிடம் வாங்கிய பலர் வருவார்கள். அப்போது அனைவராலும் முதலிடம் பெறமுடியாது. அப்படி முதலிடம் பெறமுடியாத பட்சத்தில் தற்கொலை முயற்சி எடுக்கிறார்கள். எனவே சிறுவயதிலிருந்தே பகிர்தல், ஏற்றுக்கொள்ளுதல், பிறரை மதித்தல் போன்ற பழக்கங்களை கற்றுக்கொடுக்கவேண்டும்.

ஆரோக்கியமான மனநிலையை உருவாக்க என்ன செய்யவேண்டும்?

இந்த நிமிடம் நன்றாயிருக்கிறது, இது போதும் எனக்கு, ஒரு நல்ல பாடல் கேட்டேன் என்பதுபோன்ற சிறுசிறு சந்தோஷங்களை அனுபவிக்கவேண்டும். நோ சொல்லவேண்டிய இடங்களில் கட்டாயம் சொல்லவேண்டும். சுய பராமரிப்பு அவசியம். பிறருடன் ஒப்பிடவேண்டாம். மற்றவர்களுக்கு உதவுங்கள்! Be kind to yourself!

Updated On 3 Jun 2024 6:17 PM GMT
ராணி

ராணி

Next Story