இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வயதானவர்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட அதே அளவிற்கு இன்றைய தலைமுறையினருக்கும் மூட்டு வலி மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. அதேபோல் ஆண்களுக்கும், கழுத்து வலி, இடுப்பு வலி அதிகம் ஏற்படுகிறது. அதில் குறிப்பாக நிறையப்பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சினையான ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்பு தேய்மானம் குறித்தும், அதனால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது பற்றியும் அதை எப்படி சரிசெய்வது என்பது குறித்தும் விளக்குகிறார் சித்த மருத்துவர் யோக வித்யா.

ஆஸ்டியோ போரோசிஸ் என்றால் என்ன?

ஒரு மூட்டை நம்மால் அசைக்கவே முடியவில்லை என்றாலோ அல்லது அசைக்கும்போது கடுமையான வலி ஏற்பட்டாலோ அதனை ஆர்த்ரிட்டிஸ் என்கிறோம். இதில் ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ், ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் மற்றும் கவுட் ஆர்த்ரிட்டிஸ் (கீல்வாதம்) என பல வகைகள் இருக்கின்றன. எலும்பு தேய்மானத்தால் வருவது ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ். நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுபாட்டால் எலும்பு மூட்டுகளில் தாக்கம் ஏற்பட்டு, முடக்குவாதம் என்கிற ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் ஏற்படுகிறது. இதனால் சிறுசிறு மூட்டுகள்கூட வீங்கிவிடும். காலையில் எழுந்திருக்கும்போது கழுத்தை திருப்ப முடியாத நிலை, உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாத நிலை ஏற்படும். கீல்வாதம் என்பது வியர்வையே வராமல் வேலை செய்தல், பீர் குடித்தல், சிறுநீரை அடக்குதல், போதிய நீர் அருந்தாமை போன்ற காரணங்களால் யூரிக் ஆசிட் அதிகமாகி, கால் கட்டைவிரலில் ஆரம்பித்து ஒவ்வொரு மூட்டாக தேங்க ஆரம்பிக்கும். இதனால் ஒவ்வொரு மூட்டாக வலிக்க ஆரம்பித்து, அதை கவனிக்காமல் விடும்போது யூரிக் ஆசிட் அங்கேயே தங்கிவிடுவதால் அறுவை சிகிச்சை செய்யும் நிலைகூட ஏற்படும். அடுத்து ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ்.


ஆர்த்ரிட்டிஸ் மூட்டுவலி - எலும்பு தேய்மானத்தால் எலும்பு பலவீனமடைதல்

எலும்பு தேய்மானம் என்றாலே கால்சியம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் மருந்து கடைகளில் கால்சியம் மாத்திரையை வாங்கி பயன்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். நமது எலும்பு என்பது வெறும் கால்சியத்தால் மட்டும் உருவாகவில்லை. அதில் பல்வேறு மினரல்கள் மற்றும் மூலக்கூறுகளும் சேர்ந்திருக்கின்றன. கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முன்பு, முதலில் எடுக்கவேண்டிய பரிசோதனை வைட்டமின் டி. சூரிய ஒளி அதிகம் படாததால் இன்று நிறையப்பேருக்கு வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே காலையும், மாலையும் குறைந்தது 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் படும்படி நடக்கவோ, விளையாடவோ செய்யலாம். அப்படி செல்ல முடியாதவர்களுக்கு ஒவ்வாமை பிரச்சினை இல்லையென்றால் கடற்பாசியை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். இதில் நிறைய மினரல்கள் இருக்கின்றன. பசும்பால், முட்டை போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி, நெல்லிக்காய் போன்றவற்றை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து, அதை தேனில் போட்டு சாப்பிட்டு வரலாம். வைட்டமின் டி குறைபாடு இருக்கும்போது கால்சியம் மாத்திரைகளை உட்கொண்டால் அதனை உடல் உறிஞ்சாது.


எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க தேவையான சத்துக்கள் மற்றும் உணவுகள்

எலும்பு எளிதில் உடையக்கூடிய நிலையில் இருந்தாலோ, சேதமடைந்தாலோ வைட்டமின் கே எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் வைட்டமின் கே அதிகம் இருக்கிறது. எனவே தினசரி ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் எலும்பின் அடர்த்தி அதிகரிக்கும். அடுத்து போரான் (Boron). எலும்பு அடர்த்தி மற்றும் உருவாக்கத்திற்கு இது உடலில் தேவையான அளவில் இருக்கவேண்டும். ப்ளம்ஸ், கொடிமுந்திரி, வாதுமை பழம், உலர் திராட்சை போன்றவற்றில் போரான் அதிகம் இருக்கிறது. இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் கீல்வாதத்திலிருந்து விடுபட முடியும்.

அடுத்து ஃபைட்டோ - ஈஸ்ட்ரோஜென். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களுக்கே உரிய ஹார்மோனாக இருந்தாலும் ஆண்களுக்கும் குறிப்பிட்ட அளவில் இருக்கும். அது குறையும்போது ஆண்களுக்கும், மெனோபாஸ் காலத்தில் கருமுட்டை உற்பத்தி குறைந்துபோவதால் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து பெண்களுக்கும் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. அதனால் உணவு மூலமாக ஈஸ்ட்ரோஜெனை நமது உடலுக்கு கொடுக்கவேண்டும். இதைத்தான் ஃபைட்டோ - ஈஸ்ட்ரோஜென் என்கின்றனர். எள், நல்லெண்ணெய், கருப்பு உளுந்து, சோயா பொருட்களில் இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜென் இருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுதவிர, நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் மூட்டுகளுக்கு நடுவே இருக்கும் திரவமும் வறண்டு மூட்டுவலி ஏற்படும். எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயும்போது தேய்மானம் ஏற்படுகிறது. இதனை சித்த மருத்துவத்தில் கீல்வாதம் என்கின்றனர்.


எலும்பு நடுவே திரவம் வற்றி காற்று அடைப்பதால் ஏற்படும் கீல்வாத வலி

கீல்வாதம் என்றால் என்ன?

கீல் என்றால் மூட்டு, வாதம் என்றால் வாயு. காலியிடத்தில் எப்படி காற்று அடைக்கிறதோ, அதுபோல எலும்புகளின் நடுவே இருக்கும் திரவம் வற்றும்போது அந்த இடத்தை காற்று அடைக்கிறது. ஆரம்பத்தில் நடக்கும்போது முழங்காலில் ஒருவித சத்தம் உருவாகும். எனவே இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது அவசியம். 20 கிலோ எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் குடிக்கவேண்டும். கடைசியாக, கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், அவை சிறுநீரகத்தில் சேர்ந்து கல்லாக உருவாகிவிடும். சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். இதுதவிர, கால்சியம் மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, கார்டியோ வாஸ்குலார் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றன. எனவே உணவு மூலமாகவே கால்சியத்தை எடுத்துக்கொள்வது நல்லது. பால், தக்காளி, வெண்டைக்காய், காலிஃப்ளவர், ப்ரக்கோலி, சிறுதானியங்கள் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ளலாம். கால்சியம் உடலில் சேர வைட்டமின் சி அவசியம் என்பதால் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரலாம். துவர்ப்புமிக்க பாக்கு, கால்சியம் மிக்க சுண்ணாம்பு, மெக்னீசியம், கால்சியம், பொட்டசியம் போன்ற மினரல்கள் இருக்கக்கூடிய வெற்றிலை மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் உணவு செரிக்கும். இதைத்தான் அந்த காலத்திலேயே ‘தாம்பூலம் தரிக்கும் விதி’ என்று பின்பற்றினர் நம் முன்னோர்.


கால்சியம் மாத்திரைகளால் சிறுநீரகத்தில் கல் உருவாதல் - அதனை தடுக்க அதிக தண்ணீர் குடித்தல்

இதுதவிர, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். சரும துவாரங்கள் மூலம் எண்ணெய் உடலுக்குள் செல்வதால் மூட்டுகளில் இருக்கும் திரவம் வறண்டுபோகாமல் பாதுகாக்கப்படும். ஆண், பெண் இருவருமே எடை தூக்கி உடற்பயிற்சி செய்வதன்மூலம் உடல் எலும்பு மற்றும் தசைகள் வலிமையாகும்.

Updated On 26 Dec 2023 12:55 AM IST
ராணி

ராணி

Next Story