சயாட்டிகாவில் இத்தனை நிலைகள் இருக்கிறதா? - விளக்குகிறார் மருத்துவர் அம்ரீஷ்
அமர்ந்தே வேலை செய்பவர்கள் அல்லது குனிந்து நிமிர்ந்து வேலை செய்பவர்கள் அல்லது அதிக தூரம் பயணிப்பவர்கள் அல்லது அதிக எடை தூக்குபவர்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு வலியானது சாதாரணமாகவே இருக்கும். வலிக்க ஆரம்பிக்கும்போதே அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதுடன் காரணத்தையும் கண்டறிந்து அதனை தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் இடுப்பு மற்றும் முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். குறிப்பாக, முறையற்ற வாழ்க்கைமுறைகளால் இன்றைய இளம் தலைமுறையினர் சயாட்டிகா மற்றும் இடுப்பு வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சயாட்டிகா எதனால் ஏற்படுகிறது? முதுகெலும்பு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையை தவிர்க்க என்ன செய்யவேண்டும்? வலியை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்தெல்லாம் விரிவாக உரையாடுகிறார் Interventional pain specialist, மயக்க மருந்து நிபுணர் மற்றும் கிரிட்டிக்கல் கேர் கன்சல்டன்ட் அம்ரீஷ்.
சயாட்டிகா என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது?
சயாட்டிகா என்றால் முதுகு எலும்பில் ஏற்படும் ஒரு பிரச்சினையால் நரம்பு நசுக்கப்பட்டு முதுகிலிருந்து கால் நுனிவரை ஷாக் அடிப்பது போன்றோ அல்லது இழுப்பதுபோன்றோ வருகிற வலி. இந்த பிரச்சினையானது ஆண், பெண் வேற்றுமையின்றி எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் 50 வயதுக்குமேல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பிரச்சினை அதிகமாக வரும். ஆனால் இப்போது சர்க்கரை வியாதியைப் போன்று சயாட்டிகாவும் அதிகரித்திருக்கிறது. இதற்கு மூலக்காரணம், போதுமான உடல் உழைப்பற்ற வாழ்வியல் முறைதான். இன்றைய கான்செப்டே Sitting is the New Smoking என்பதுதான். அதாவது சிகரெட் பிடிப்பதால் முதுகெலும்பு டிஸ்க்கில் எந்த அளவிற்கு பிரச்சினை வருமோ அதே அளவிற்கு உட்கார்ந்தே இருப்பதாலும் டிஸ்க் பிரச்சினை வரும் என்கிறது சமீபத்திய ஆய்வு.
இதனை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலிருந்து பார்க்கவேண்டும். முதலில் நான்கு கால்களில் நடக்க ஆரம்பித்து பின்னர் இரண்டு கால்களில் நடக்கும் அளவிற்கு மனிதனின் வளர்ச்சியானது ஏற்பட்டது. ஆரம்பத்தில் கீழ்ப்பகுதி உடலானது, அதாவது வயிறுப்பகுதியில் இருக்கும் முதுகுத்தண்டு வலிமையாகவும், மேற்பகுதி உடலானது அதைவிட வலிமையற்றதாகவும் இருந்தது. இரண்டு கால்களில் நடக்கும்போது உடலின் முன்புறம் இருக்கும் தசைநார்கள் வலிமையானதாகவும், பின்புறம் இருக்கும் தசைநார்கள் வலிமையற்றதாகவும் இருப்பதால் 99.9% சயாட்டிகா இருப்பவர்களுக்கு பின்புற டிஸ்க்கில்தான் பிரச்சினை ஏற்படுகிறது.
சயாட்டிகா பிரச்சினையால் ஏற்படும் இடுப்பு வலி மற்றும் கால் வலி
பொதுவாகவே மனிதர்களுக்கு முன்புற உடலைவிட பின்புற உடல் வலிமையற்றது. இரண்டாவது, பைக் அல்லது ஷேர் ஆட்டோவில் அதிகம் பயணிக்கும்போது முதுக்குப்புறம் ஜெர்க் ஆகிறது. மூன்றாவது தண்ணீர்கேன் போடுபவர்கள், கேஸ் சிலிண்டர்களை போடுபவர்கள் மற்றும் ஜிம்மில் எடை தூக்குபவர்களுக்கு குறுகிய காலத்திலேயே அதிக அழுத்தம் முதுகுத்தண்டின்மீது கொடுக்கப்படுவதால் டிஸ்க் வீங்கி அருகிலிருக்கும் நரம்புகளில் அழுத்தம் கொடுக்கிறது. குறிப்பாக, உடலில் இடுப்பிலிருந்து கால்வரை செல்லக்கூடிய சயாட்டிக் என்ற பெரிய நரம்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதால் சயாட்டிகா என்ற பிரச்சினை ஏற்படுகிறது.
சயாட்டிகாவிற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?
சயாட்டிகா பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்கமுடியாது, உட்கார முடியாது. உட்கார்ந்தாலோ படுத்தாலோ ஷாக் அடிப்பது போன்று இருக்கும். எத்தனை நாட்கள் பிரச்சினை இருக்கிறது என்பதை பொருத்துதான் சிகிச்சை அளிக்கப்படும். 90% நோயாளிகளுக்கு ஜிம் போகக்கூடாது, எடை தூக்கக்கூடாது, பைக் ஓட்டக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு எளிமையான சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் சில நோயாளிகளுக்கு பல ஆண்டுகள் இந்த பிரச்சினை இருக்கும். அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை எலும்பு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்களுக்குத்தான் interventional pain specialist-இன் உதவி தேவைப்படும்.
இவர்களுக்கு மாத்திரை, மருந்து மற்றும் உடற்பயிற்சிதான் முதன்மை சிகிச்சை. அதை விட்டால் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருக்கும். ஆனால் இவை இரண்டிற்கும் நடுவில் minimally invasive procedure என்ற இன்னொரு சிகிச்சைமுறை இருக்கிறது. அதாவது ஊசி மூலமாகவே ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு மருந்து செலுத்தப்படும். இதனால் உடனடியாக வலி குறைக்கப்பட்டு, பயிற்சிகள் செய்ய வலியுறுத்தப்படுவதுடன், இயற்கையாகவே முதுகு எலும்பு குணப்படுத்தப்படுகிறது.
இடுப்பு வலிக்கு ஊசி மூலம் வலியை குறைத்தல் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல்
ஒருமுறை இந்த சிகிச்சையை செய்யும்போதே 95% பேர் குணமடைந்துவிடுவார்கள். இதனால் அறுவை சிகிச்சையை தவிர்க்கும் அளவிற்கு உடல் குணமடைந்துவிடும். 5% அட்வான்ஸ் டிசீஸ் இருப்பவர்களுக்கு கால் மரத்து, செயலிழந்து போய்விடும். கட்டுபாடில்லாமல் சிறுநீர் கழிப்பர். யாரோ ஒருவரின் துணையில்லாமல் நடக்கமுடியாது. இவர்களுக்கு கட்டாயம் அறுவைசிகிச்சை தேவைப்படும். கால் மரத்து போகும் நிலைக்கு முன்புவரை interventional pain சிகிச்சை மூலமாக குணப்படுத்த வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
சயாட்டிகா பிரச்சினையின் படிநிலைகளை எப்படி கண்டுபிடிப்பது?
சயாட்டிகா பிரச்சினையானது டிஸ்க்கிலிருந்து ஆரம்பிக்கிறது. நமது முதுகெலும்பில் இரண்டு எலும்புகளுக்கு நடுவே ஷாக் அப்சர்வர் போன்று டிஸ்க் அமைந்திருக்கும். இதனால் உடலின் அனைத்து அழுத்தங்களும் டிஸ்க் மீது செலுத்தப்பட்டு அது தேய்மானம் அடைந்துவிடும். இதனால் டிஸ்க் உள்ளே இருக்கும் மஜ்ஜையானது வெளியே பிதுங்கிவிடும். இது எந்த அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதை பொருத்துதான் படிநிலைகள் தீர்மானிக்கப்படுகிறது. முதல் நிலையில் டிஸ்க் தேய்மானம் மட்டும் அடைந்திருக்கும். அப்போது முதுகு எலும்பை சுற்றித்தான் வலிக்கும். இரண்டாவது இடுப்பு மற்றும் கால் பகுதிகளுக்கு செல்லும் நரம்புகளின்மீது அழுத்தம் ஏற்படுவது. இதனால் கால் பகுதிவரை கரண்ட் ஷாக் அடிப்பது போன்று வலிக்கும். மூன்றாவது நிலையில் மூளையிலிருந்து வருகிற முக்கிய முதுகெலும்பின்மீதே டிஸ்க் பல்ஜ் ஆகி அழுத்தம் கொடுத்தால் கால்கள் முழுமையாக பலவீனம் அடைந்துவிடும். இதைத்தான் அட்வான்ஸ் நிலை என்கின்றனர்.
இடுப்பு எலும்பு டிஸ்க் வீங்கி சயாட்டிக் நரம்பின் மீது அழுத்தம் ஏற்படுதல்
எனவே வலி, நமநமவென இருத்தல், கரண்ட் அடிப்பது போன்று இருத்தல் போன்றவை மீடியம் நிலை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் முன்பு இருந்ததைப் போன்று வலி இல்லாமல் கால் மரத்துப்போவதுடன், நடக்கும்போது மடங்கி முழுவதும் பலவீனம் அடைந்துவிட்டால் இது அட்வான்ஸ் நிலை.
Pain management என்றால் என்ன?
நோயாளிகளை மருத்துவமனைக்கு கூட்டிவருகிற முக்கிய காரணி என்னவென்றால் அது வலி. வலிக்கு மருந்து, மாத்திரை அல்லது அறுவைசிகிச்சைதான் நிவாரணியாக இருக்கிறது. மருந்து, மாத்திரைகளால் குணமடையாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தும்போது நூற்றில் 5 பேர்தான் அதனை செய்துகொள்கிறார்கள். மீதி 95 பேர் அறுவை சிகிச்சைக்கு பயந்து வலியுடனேயே இருந்துவிடுகிறார்கள். இவர்களுக்கு Pain management தேவைப்படுகிறது. வலி எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்து, அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி மூலமாக நோயாளிக்கு வலியிலிருந்து விடுதலை கொடுப்பதுதான் இந்த முறையின் நோக்கம்.
தைராய்டு, வைட்டமின் டி குறைபாடு மற்றும் சர்க்கரை அளவை பரிசோதித்தல் அவசியம்
உதாரணத்திற்கு, Trigeminal neuralgia என்ற நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்தபோது மிகவும் கடினமாக இருந்தது. இந்த Trigeminal என்பது மூளையிலிருந்து முகத்திற்கு செல்லக்கூடிய ஒரு நரம்பு. மூளைக்குள் இந்த நரம்பின்மீது ஒரு ரத்தக்குழாய் அழுத்தம் கொடுப்பதால் நோயாளிக்கு 24 மணிநேரமும் முகத்தில் ஷாக் அடித்துக்கொண்டே இருக்கும். இந்த நோயாளிகளில் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத்தான் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதற்கும் மேற்பட்டவர்களுக்கு Pain management சிகிச்சைமுறையால் தீர்வு அளிக்க முடியும். உலகளவில் காதல் தோல்விக்குப் பிறகு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கையில் இரண்டாவது அதிக இடத்தில் இருப்பவர்கள் Trigeminal neuralgia நோயாளிகள்தான் என்கிறது புள்ளிவிவர தரவுகள்.
நரம்பு சம்பந்தப்பட பிரச்சினைகள் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
நரம்புக்கு தேவையான ஊட்டச்சத்தான வைட்டமின் டி அதிகம் எடுத்துக்கொள்ளுதல், சர்க்கரை கட்டுப்பாடு, தைராய்டு கட்டுப்பாடு இவை மூன்றும் அவசியம். சர்க்கரை நோயாளிக்கும், தைராய்டு நோயாளிக்கும் நரம்பு பிரச்சினைகள் எளிதில் வரலாம். சயாட்டிகா போன்ற பிரச்சினையோ அல்லது கால் எரிச்சலோ அல்லது கை, கால்களில் ஷாக் அடிப்பது போன்ற உணர்வோ இருந்தால் எலும்பு மருத்துவரை அணுகும் முன்பு, தைராய்டு மற்றும் சுகர் பரிசோதனை செய்யவேண்டும். வைட்டமின் டி அளவு குறைவாக இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். இவை மூன்றும் சரியாக இருந்தாலே உடலில் நரம்பு பிரச்சினைகள் தானாக வராது.