இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இளம்வயது திருமணம், குழந்தைப்பேறு என்பதெல்லாம் இன்றைய நவீன காலகட்டத்தில் குறைந்துவிட்டது. பெண்களின் திருமண வயது என்பதே இப்போது 27க்கும் மேல்தான் என்றாகிவிட்டது. அதே சமயம் டெக்னாலஜி வளர்ச்சி, உடலுழைப்பு குறைவு, உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம், அதிகப்படியான அழுத்தம் போன்றவற்றால் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. பிசிஓடி பிரச்சினை, குழந்தைப்பேறில் உள்ள சிக்கல்கள் குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் குழந்தை மகப்பேறு மருத்துவர் வரலட்சுமி.

மாதந்தோறும் பீரியட்ஸ் சரியாக வந்தாலும் பிசிஓடி பிரச்சினை இருப்பதாக கூறுகிறார்கள். இதனை என்னென்ன அறிகுறிகளின்மூலம் தெரிந்துகொள்வது?

பிசிஓடி என்பது பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ். 30 வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்சினை மிகவும் அரிதாகத்தான் இருக்கும். ஆனால் கடந்த 10 வருடங்களில் இந்த பிரச்சினையால் அதிக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கைமுறை மாற்றங்கள்தான். அப்போதுள்ள பெண்களுக்கு உடலுழைப்பு அதிகமாக இருந்தது. ஆனால் காலம் மாற மாற இப்போதுள்ள பெண்கள் அதிகமாக மெஷின்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதால் உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பு குறைந்துவிட்டது. அதற்கு ஏற்றாற்போல் உணவுமுறைகளும் மாறிவிட்டன. அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் மற்றும் ஜங்க் உணவுகளால் இன்சுலின் எதிர்ப்பு அதிகரிப்பதால் பிசிஓடி பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரித்து, உற்பத்தியாகும் கருமுட்டைகள் சிறுசிறு நீர்க்கட்டிகளாக உருவாகின்றன. இதனை பிசிஓடி என்கின்றனர். இதனுடன் கழுத்தை சுற்றி கருப்பாதல், முகத்தில் முடி வளர்ச்சி அதிகரித்தல், உடலில் ஆங்காங்கே வெள்ளை தழும்புகள் ஏற்படுதல் போன்ற சில அறிகுறிகள் சேர்ந்து உருவாவதை சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்கின்றனர்.


கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படும் வயிற்று வலி

இந்த பிரச்சினை இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க, மாதம் ஒருமுறை ஏற்படும் மாதவிடாயானது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது அதற்கும் மேல் தள்ளிப்போதல் அல்லது அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பிசிஓடியால் ஏற்படும் உடற்பருமனை குறைக்க என்னென்ன உணவுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும்? என்னென்ன உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்?

கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணெய் அதிகமுள்ள உணவுப் பொருட்களை கட்டாயம் தவிர்க்கவேண்டும். வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பரிசி மற்றும் தினை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் காய்கறி, கீரைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலர் ட்ரிங்ஸ், ஜூஸ் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. நூடுல்ஸ், பர்கர், பாஸ்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முறையான டயட்டுடன் கூடவே உடற்பயிற்சி அல்லது யோகாவை தினமும் 45 நிமிடங்களாவது செய்வது நல்லது.

அடினோமையோசிஸால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுற சிரமப்படுவதாக சொல்கிறார்கள். இது உண்மையா?

கர்ப்பப்பையின் உள்ளிருக்கும் அடுக்கு எண்டோமெட்ரியம். அதனை சுற்றியுள்ள அடுக்கு மையோமெட்ரியம். எண்டோமெட்ரியல் திசுக்களானது மையோமெட்ரியத்தில் பரவ ஆரம்பித்துவிட்டால் இதனை அடினோமையோசிஸ் என்கின்றனர். இதில் கர்ப்பப்பையின் அளவானது இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிதாகக்கூடும். இதனால் மெனோரேஜியா என்று சொல்லக்கூடிய அதீத ரத்தப்போக்கு ஏற்படும்.


அடினோமையோசிஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பப்பை

சாதாரணமாக 3 அல்லது 4 நாட்கள் ஏற்படும் மாதவிடாயானது 7 அல்லது 8 நாட்கள் வரை நீடிக்கும். அதில் ரத்தப்போக்கின் அளவும் மிகவும் அதிகமாக இருக்கும். அதேபோல் வலியும் மிகமிக அதிகமாக இருக்கும். இதனை டிஸ்மெனோரியா என்கின்றனர். சிலருக்கு மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுவதற்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை கூட ஏற்படும்.

இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களில் 30% பேர் கருத்தரிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. அடினோமையோசிஸ் பிரச்சினை கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வதுடன் கருத்தரிப்பையும் உடனடியாக திட்டமிடுவது நல்லது. அடினோமையோசிஸ் பிரச்சினை இருக்கும் பெண்கள் நிறைய பழங்கள், காய்கறிகள், சோயா, அவகேடோ, பெர்ரீஸ், ட்ரை நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். கொழுப்பு நிறைந்த, எண்ணெயில் வறுத்த, பொரித்த, அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது.

குழந்தையின்மை பிரச்சினை இப்போது அதிகமாக இருக்கிறது. இதில் ஆண், பெண் இருவருக்கும் இருக்கும் பிரச்சினைகளை கண்டறிவது எப்படி?

திருமணமாகி ஒரு வருடம் உறவில் ஈடுபட்டும் குழந்தை உருவாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. பெண்ணின் மாதவிடாய் காலங்களில் அதிகம் வலி இருத்தல், தள்ளிப்போதல், வெள்ளைப்படுதல் அதிகமாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும். அதேபோல் திருமண வயதையும் கணக்கில் கொள்ளவேண்டும். அதிகபட்சமாக கருத்தரித்தல் காலமானது 35 வயது வரைதான். அதன்பிறகு கருமுட்டைகளின் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். எனவே 30 வயதை தாண்டிவிட்டாலே மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.


இளம்பெண்கள் தவிர்க்கவேண்டிய - சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

வளர் இளம்பருவத்திலுள்ள பெண் குழந்தைகள் என்னென்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?

சிறுவயது ஒபிசிட்டி என்பது இப்போது காணப்படுகிற பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பிஸ்கட்ஸ், சாக்லெட்டுகள், கேக்ஸ், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ் போன்ற கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட கொடுத்தல், ப்ராய்லர் சிக்கன் அதிகம் எடுத்துக்கொள்ளுதல் போன்ற காரணங்களால் 8 - 9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்தி விடுகின்றனர். எனவே இதுபோன்ற உணவுகளை தவிர்த்துவிட்டு நிறைய காய்கறிகள் மற்றும் கீரைகளை கொடுப்பது நல்லது. அதேபோல் சிறுவயதிலிருந்தே நீச்சல், ஓட்டம் போன்ற விளையாட்டுகளிலோ அல்லது ஜிம்னாஸ்டிக் போன்ற உடற்பயிற்சிகளிலோ அவர்களை ஈடுபடுத்தலாம். செல்போன் பயன்பாட்டை குறைக்கலாம்.

சில பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?

கருச்சிதைவில் முதல் trimester மற்றும் இரண்டாவது trimester என இருக்கிறது. மரபணு பிரச்சினைகளால் கரு சரியாக உருவாகாவிட்டால் முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்படும். 4 முதல் 6வது மாதத்திற்குள் ஏற்படும் கருச்சிதைவுக்கு, கர்ப்பப்பை வாய் பலவீனமடைதல் காரணமாக சொல்லப்படுகிறது. இதற்கு cervical incompetence என்று பெயர். கர்ப்பப்பை வாயின் நீளத்தை ஸ்கேன் மூலம் கணக்கிட முடியும். அப்படி கணக்கிடும்போது நீளம் குறைவாக இருந்தால் அந்த பெண்ணுக்கு குறிப்பிட்ட மாதங்களுக்குள் கருச்சிதைவு ஏற்படும் என்பதை யூகித்து, சிறு அறுவைசிகிச்சை முறை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இதற்கு cervical cerclage என்று பெயர். இதன்மூலம் கர்ப்பப்பை வாயை 36 வாரங்களுக்கு இறுக்கமுடியும். அதன்பிறகு அந்த தையல்களை எடுத்துவிட்டால் பிரசவமாகும்.


கருத்தரிப்பதற்கு கருமுட்டைக்குள் விந்தணு நுழைதல்

கருமுட்டை குழாய் கருத்தரிப்பு (fallopian tube conceive) என்றால் என்ன?

கருத்தரித்த பிறகு, கருவானது கர்ப்பப்பைக்குள்தான் வளரவேண்டும். சிலருக்கு கருமுட்டை குழாய்க்குள் கருவானது சென்று தங்கிவிடும். இதனை எக்டோபிக் கருத்தரிப்பு என்கின்றனர். ஃபெலோபியன் டியூபானது 5 மி.மீ அளவுக்கு சிறிய வயரின் அளவுதான் இருக்கும். அதற்குள் கரு வளரும்போது குறிப்பிட்ட அளவிற்குள் அது வெடித்து ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் ஊசி மூலமே கருவை கலைத்துவிடலாம்.

சி-செக்‌ஷன் மூலம் குழந்தைப்பேற்றை தவிர்க்க என்ன செய்வது?

நார்மல் டெலிவரி மூலம் குழந்தைபெறுவதுதான் பொதுவாக நல்லது. இதற்கு கர்ப்பிணியின் இடுப்பு எலும்பு விரிந்திருக்க வேண்டும். Contractions நன்றாக இருக்கவேண்டும். குழந்தையின் தலை பெரியதாக இருக்கக்கூடாது. இதுபோன்று இருந்தால்தான் நார்மல் டெலிவரி என்பது சாத்தியம். ஆனால் ஒருசில கர்ப்பிணிகளுக்கும் குழ்ந்தைக்கும் நார்மல் டெலிவரியால் பிரச்சினைகள் இருக்கும் என கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை வெளியே எடுப்பது நல்லது.


பனிக்குடத்திற்குள் சேய் - NICU-இல் குழந்தைக்கு சிகிச்சை

குழந்தைப்பிறப்பின்போது தாய் அல்லது சேய் இறத்தல் எதனால் ஏற்படுகிறது?

இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கருப்பை நஞ்சுக்கொடி பற்றாக்குறை (utero placental insufficiency) போன்ற பிரச்சினைகள் இருந்தால் டெலிவரி ஆகும்போது குழந்தையின் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் குழந்தை இறக்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் டெலிவரிக்கு பிறகு ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாவிட்டால் தாய் இறக்க வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்க்க அரசாங்கமும், மருத்துவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவாறுதான் இருக்கின்றனர்.

பனிக்குடம் உடைவதால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன?

பனிக்குடம் உடைந்த சமயத்தில் குழந்தை மலம் கழித்துவிட்டால் (மெக்கோனியம்) அது குழந்தையின் உடலுக்குள் சென்று நுரையீரலை பாதிக்கும். இதற்கு மெக்கோனியம் ஆஸ்பிரேஷன் சிண்ட்ரோம் என்று பெயர். இந்த சமயத்தில் NICU-இல் குழந்தையை அட்மிட் செய்து சிகிச்சை அளிப்பர். முடிந்தவரை இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பது நல்லது.

Updated On 6 Feb 2024 12:26 AM IST
ராணி

ராணி

Next Story