இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உயிர்வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. ஏழை முதல் பணக்காரர் வரை ஓடியாடி உழைப்பதற்கான முக்கிய காரணமே உணவுதான். அப்படி நாம் உண்ணும் உணவு தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். இன்று எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம் என்றாகிவிட்டது. உணவுகளை வாங்கும்போது எப்படி பார்த்து வாங்கவேண்டும்? கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி? என்பதுபோன்ற பல சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் தமிழ்நாடு தலைமை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார்.

10 ரூபாய் பெட் பாட்டில்களை இப்போது நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அது சரியா?

பெரிய பாட்டில்களின் விலை அதிகரித்துவிட்டதால் தற்போது நிறைய பேர் 10 ரூபாய் பாட்டில்களை வாங்குகிறார்கள். FSSAI - விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட பாட்டில்களை தாராளமாக வாங்கிப் பயன்படுத்தலாம். சில பாட்டில்களில் பெயர் மட்டும் இருக்கும். ஆனால், முகவரி, தொடர்பு எண், காலாவதி தேதி போன்ற எந்த விவரங்களும் இருக்காது. இதுபோன்ற பாட்டில்களை கட்டாயம் தவிர்க்கவேண்டும். அதேபோல், ஜூஸ் பாட்டில்களை அறைக்குள் அல்லது குளிரூட்டிகளுக்குள் வைக்காமல் சூரிய ஒளி படும் விதத்தில் வெளியே வைத்திருந்தால் அதனை வாங்கவேண்டாம். ஏனெனில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களின்மீது சூரிய ஒளி படும்போது அதில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, விஷ பானமாக மாறிவிடும்.


ஜூஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்களை சூரிய ஒளி படும் விதத்தில் வெளியே வைத்திருந்தால் வாங்க வேண்டாம்

20 லிட்டர் கேன்களை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது?

தரமான நிறுவனங்களில் தயாரிக்கப்படும் கேன் தண்ணீரை 15 முதல் 20 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இன்று நிறைய இடங்களில் கேன்களின்மீது லேபிள் இல்லாமல் தரமில்லாமல் வெறும் ஃபில்டர்களை மட்டும் பயன்படுத்தி அரசாங்க அனுமதி இல்லாமல் தண்ணீர் கேன்களை விநியோகிக்கிறார்கள். அதுபோன்ற கேன்களை வாங்கும்போது தண்ணீரை கொதிக்கவைத்து அந்த நாளே குடித்து முடித்துவிட வேண்டும். அதேபோல் உள்ளே இருக்கும் தண்ணீர் 80% வெளியே தெரியும்படியாகத்தான் கேன்கள் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் உள்ளே அழுக்குகள் மற்றும் புழுக்கள் இருந்தால் பார்க்கமுடியும். பாட்டில்கள் மற்றும் கேன்களில் கீறல்கள் அதிகம் இருந்தால் அதனை வாங்கவேண்டாம்.

தினசரி கேன் தண்ணீர் வாங்கி குடிப்பவர்கள் பயன்படுத்தும் கேனை சோப் ஆயில் மற்றும் சுடு தண்ணீர் கொண்டு சுத்தமாக கழுவுவது அவசியம். இல்லாவிட்டால் பாசி படிய ஆரம்பித்துவிடும். ஆனால் அதுபோன்று சுத்தப்படுத்த நிறைய பேருக்கு நேரமில்லாததால், முடிந்தவரை கேன்களை அவ்வப்போது மாற்றிவிடுவது நல்லது. சுகாதாரமற்ற கேன் தண்ணீரை குடிக்கும்போது ஃபுட் பாய்சன் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.


கார்பைட் கற்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்கள்

காய்கறிகள் மற்றும் பழங்களில் கலர் சேர்த்திருப்பதை எப்படி கண்டறிவது?

தர்பூசணி போன்ற பழங்களில் நிறத்தை ஊசிமூலம் செலுத்திவிடுவார்கள். சில பழங்களை பார்க்கும்போதே கண்களை பறிக்கும்விதமான கலர்களில் இருக்கும். பொதுவாக இதுபோன்ற கலர்கள் இனிப்பு கலந்த சிரப்பாகத்தான் இருக்கும். எனவே சாப்பிடும்போது மிகவும் இனிப்பாகவும், மீண்டும் சாப்பிடத் தூண்டும்படியாகவும் இருக்கும். அதேபோல், வெண்டைக்காய், மிளகாய், பீன்ஸ் போன்ற பச்சை காய்கறிகளில் டைகளை(மை) அதிகளவில் செலுத்துகிறார்கள். இந்த காய்களை தொட்டுப் பார்க்கும்போது கலர் கைகளில் ஒட்டினால் அது ஆபத்து. இதுபோன்ற நிறமேற்றப்பட்ட காய்கள் 4 நாட்கள் ஆனாலும் வாடாமல் அப்படியே இருக்கும். உதாரணத்திற்கு, இயற்கை வெண்டைக்காயாக இருந்தால் ஒரே நாளில் அதன் மேல் மற்றும் கீழ் காம்புகள் வாட ஆரம்பித்துவிடும்.

அதேபோல், மா, வாழை போன்ற பழங்களை பழுக்கவைக்க, கார்பைட் கற்களை (carbide stone) பயன்படுத்துகிறார்கள். கடைகளில் இதுபோன்ற முறைகேடுகளை கண்டறிந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறையை 9444042322 என்ற எண்ணில் தொடர்புகொண்டு வாட்ஸ்-அப், மெசேஜ் மூலம் தெரியப்படுத்தலாம். இதன்மூலம் தலைமை அலுவலகத்திலிருந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும். இது ஒரு வகை. இல்லாவிட்டால் unavupukar@gmail.com என்ற ஜிமெயில் மூலமோ அல்லது food safety consumer ஆப் மூலமோ உணவு தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம்.


சிறுதானியங்கள் மற்றும் மசாலாக்களில் கூட கலப்படங்கள் செய்யப்படுகின்றன

தானியங்கள் மற்றும் மசாலாக்களில் செய்யப்படும் கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

ராகி போன்ற சிறுதானியங்களில் சிவப்பு நிற மையை கலந்துவிடுகிறார்கள். அதேபோல் முழுமையாக வளர்ச்சியடையாத ராகியைக்கூட விற்கிறார்கள். சிறிய ஈரத்துணியில் ராகியைப் போட்டுத் துடைத்தாலே நிறம் வந்துவிடும். அதேபோல், கடுகு, மிளகு போன்றவற்றிலும் கலப்படம் நடக்கிறது. மிளகில் பப்பாளி விதைகளை கலப்பது, அதிலுள்ள எண்ணெய்களை உறிந்துவிட்டு சக்கையை மட்டும் விற்பது போன்ற ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. எனவே, மிளகை சிறிது தண்ணீரில் போடும்போது அவை மிதந்தால் அது வேஸ்ட். அடியில் சென்று தங்குபவைதான் ஒரிஜினல். அரிசியை பொருத்தவரை பாலிஷ் செய்யப்பட்டதை தவிர்ப்பது நல்லது. அரிசியில் கிளைசெமிக் குறியீட்டின் அளவு அதிகம். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதே, சிறுதானியங்களில் இந்த குறியீட்டு அளவு குறைவு. அதேபோல், சிறுதானியங்களின் விலை சற்று அதிகம். மேலும் அதை உடனடியாக சமைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கெட்டுப் போய்விடும். ஆனால் அரிசியை மாதக்கணக்கில் வைத்திருந்தாலும் கெடாது.

அதேபோல் பிளாஸ்டிக் அரிசி என்ற வதந்தியும் ஒரு கட்டத்தில் பரவியது. ஆனால் உண்மையில் அது செறிவூட்டப்பட்ட அரிசி (fortified rice). அரிசியை நன்றாக அரைத்து அதில் மினரல்கள் மற்றும் வைட்டமின்களை செறிவூட்டி மீண்டும் அரிசியாக உருவாக்குவார்கள். இப்படி உருவாக்கும்போது அதில் இயற்கை அரிசிக்கான தன்மை இருக்காது. இந்த அரிசியை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சத்துக்களை அதிகரிக்கக் கொடுப்பார்கள்.

Updated On 19 Dec 2023 12:12 AM IST
ராணி

ராணி

Next Story