இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுவாகவே மருத்துவத்தில் நமக்கு நன்கு தெரிந்த முறைகள் என்றால் அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா போன்றவைகள்தான். இவைகள் தவிர மலர் மருத்துவம் என்கிற முறையும் ஒன்று உள்ளது. பெரியளவில் பலருக்கும் தெரியாத இந்த சிகிச்சையானது ஹோமியோபதி மருத்துவத்தின் 'சகோதரி' என்று அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவத்தின் மூலம் நாள்பட்ட நோய்களுக்கு தீர்வுகான முடியும் என சொல்லப்படுவதோடு, அதற்கான பல சான்றுகளும் இங்கு உள்ளன. அந்த வகையில் மலர் மருத்துவம் என்றால் என்ன? இந்த மருத்துவம் எந்த மாதிரியான நோய்களுக்கு எல்லாம் அருமருந்தாக செயல்படுகிறது போன்ற பல விவரங்களை மலர் மருத்துவ நிபுணர் திரு.வர்மா நம்முடன் பகிர்ந்துக்கொண்டார். அந்த தொகுப்பை இங்கு காணலாம்.

மலர் மருத்துவம் என்றால் என்ன? அதன் சிறப்பை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

மலர் மருத்துவம் என்பது 1930-ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர் எட்வர்ட் பாச் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மகத்தான சிகிச்சை முறையாகும். அவரின் கூற்றுப்படி இவ்வுலகில் ஏழு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். மேலும் எந்த ஒரு நோய்க்கும் மனமே காரணம் என கண்டுபிடித்த அவர், மனதை சரி செய்தாலே பெரும்பாலான நோய்களை குணப்படுத்திவிடலாம் என்பதை உறுதியாக நம்பினார். அதனை அடிப்படையாகக் கொண்டு 38 வகையான மலர் மருந்துகளை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவைகள் மலை, காடு போன்ற பல இடங்களுக்கு சென்று அவர் சேகரித்த மூலிகைகளையும் மலர்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மருந்துகளாகும். இதன் உதவியோடு மனதை ஒழுங்குபடுத்தி பல நோய்களுக்கு தீர்வு காணமுடியும். உதாரணமாக நம் வீடுகளில் உள்ள குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை நாம் திட்டுவோம், மனஅழுத்தத்தையும் அவர்களிடத்தில் ஏற்படுத்துவோம். ஆனால் நாம் அப்படியெல்லாம் சிரமப்பட தேவையே இல்லை. குழந்தைகளின் மனநிலையை புரிந்து அவர்களின் கல்வி திறனை மேம்படுத்த கூட இந்த மலர் மருத்துவத்தில் சிகிச்சை இருக்கிறது.


மலர் மருத்துவத்தில் "ரெஸ்க்யூ ரெமடி" எனும் மருந்து மிகமிக முக்கியமானது - மருத்துவ நிபுணர் வர்மா

தற்போது இருக்கும் குழந்தைகள் சிறிய விஷயத்தையே பெரிதாக எடுத்துக்கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி, தங்களையே வருத்திக் கொள்கிறார்கள். இந்த மாதிரியான சிக்கல்களுக்கு மலர் மருத்துவத்தில் தீர்வு உண்டா?

நிச்சயமாக இருக்கிறது. தற்போதெல்லாம் மன அழுத்தம் என்பது சர்வ சாதாரணமாக எல்லோரிடத்திலும் இருக்கக்கூடிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் குழந்தைகளை பொறுத்தவரை மன அழுத்தம் என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. நம்முடைய கோவத்தையும், ஆதங்கத்தையும் அவர்கள் மேல் காட்டித்தான் அவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்துகிறோம். இதற்கு தீர்வுகான மலர் மருத்துவத்தில் அற்புதமான மருந்துகள் இருக்கின்றன. அவர்களின் மனநிலையை புரிந்து, அவர்களிடம் பேசி, எந்த மாதிரியான மருந்து கொடுத்தால் சரியான மனமாற்றம் வரும் என்பதை உணர்ந்தே இங்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. முன்பே கூறியது போல இங்கு படிக்காத குழந்தையென்று யாருமே கிடையாது. ஒரு பள்ளியில் பயிலும் ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்க்கை பின்னணியும், மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனை புரிந்துகொண்டு, ஆலோசனை செய்து சரியான மருந்துகள் கொடுத்தாலே போதும் அவர்களின் கல்வி திறன் நிச்சயம் மேம்படும். இது குறித்த விழிப்புணர்வு இங்கு சரியாக இல்லாததோடு, முறையான மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெறாமல் நாம் மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. மீறி தவறு செய்தால் நன்கு படித்த குழந்தை கூட சரியாக படிக்காமல் போய்விடலாம். இந்த மருந்துகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே ஹோமியோபதி மருந்தகங்களில் விற்கப்படுகின்றன. ஆதலால் மருத்துவர் ஆலோசனையோடு பயன்படுத்தினால் நல்ல மாற்றம் கிடைக்கும். இதுதவிர போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருக்கும் நபர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை மீட்டு கொண்டு வருவதற்கும் மலர் மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. வெறும் 48 நாட்களிலேயே நல்ல மாற்றத்தை அவர்களிடத்தில் நம்மால் காணமுடியும்.


போதைக்கு அடிமையானவர்களையும் மீட்டு கொண்டுவர மலர் மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன!

நாள்பட்ட நோய்கள் என சொல்லப்படுகூடிய ஆஸ்துமா, சர்க்கரை போன்ற நோய்களுக்கு மலர் மருத்துவதில் தீர்வு இருக்கிறதா?

பொதுவாகவே ஆஸ்துமா, சர்க்கரை போன்ற நாள்பட்ட நோய்கள் திடீரென யாருக்கும் வந்துவிடுவதில்லை. அதற்கு என்று ஒரு மூலகாரணம் இருக்கும், மன ரீதியான சில சிக்கல்களும் இருக்கும். அது அவர்களது நோய் விளக்கக் குறிப்பு என சொல்லும் case history-யை பார்க்கும்போதே நமக்கு தெரிந்துவிடும். குறிப்பாக எல்லோரிடத்திலும் ஒரு பயம் இருப்பதோடு, எல்லா நோய்களுக்கு பின்னாலும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கும். அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு அந்த நோயும் வந்திருக்கும். அந்த நிகழ்வை கண்டறிந்து அதனை மறக்கும்படி சரி செய்தாலே போதும், நாம் நோயிலிருந்து விடுபட்டுவிடுவோம். அதற்கான தீர்வும் மருந்துகளும் மலர் மருத்துவத்தில் இருக்கிறது. உதாரணமாக நாம் எல்லோருமே நிகழ்காலத்தில் இருப்பதாக வார்த்தை பிரயோகத்தில் சொல்லுவோம். ஆனால் அது உண்மை இல்லை ஒவ்வொருவருமே கடந்தகாலத்தில் நடந்த நிகழ்வுகளை சிந்தித்துக்கொண்டோ அல்லது எதிர்காலம் குறித்த எண்ணங்களை சிந்தித்துக்கொண்டோ நமது வாழ்க்கையை கடத்தி வருகிறோம். இது மன அழுத்தத்தையும், மோசமான நிகழ்வுகளையும் ஏற்படுத்தலாம். இதிலிருந்து விடுபட்டு நிகழ்கால விஷயங்களை மட்டுமே யோசிக்கும் வகையில் மலர் மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. இதனை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் நிச்சயம் பார்க்க முடியும்.

திருமண வாழ்க்கையில் பல தம்பதியினரிடையே சண்டையும், மனவருத்தமும் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறார்கள். இதற்கு மலர் மருத்துவத்தில் மருந்துகள் உள்ளதா?

விவாகரத்து என்பது எதனால் ஏற்படுகிறது? கணவன் மனைவி இடையே ஏற்படும் போட்டப்போட்டி, சந்தேகம் மற்றும் பொய் சொல்லும் பழக்கத்தினால்தான் பிரதானமாக நிகழ்கிறது. இந்த மனநிலையை மாற்ற மலர் மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. எப்போதுமே ஒளிவுமறைவு இல்லாமல், வெளிப்படையான வாழ்க்கையை கணவன் மனைவி பின்பற்றினாலே அவர்கள் இடத்தில் சண்டைகள் வரப்போவதில்லை. அப்படி இருக்கும்போது அந்த மனநிலையை சரி செய்தாலே விவாகரத்து என்பது நிச்சயம் நிகழாது.


கணவன், மனைவி வெளிப்படையான வாழ்க்கையை பின்பற்றினாலே விவாகரத்திற்கு இடமிருக்காது - வர்மா

மற்ற மருத்துவத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டுதான் நோய்கள் கண்டறியப்படுகின்றன. மலர் மருத்துவத்தில் எதன் அடிப்படையில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

இந்த சிகிச்சை முறையை பொறுத்தவரை நோயாளிகள் எங்களை வந்து பார்க்கும்போது, அவர்களிடம் நாங்கள் பேச்சுக்கொடுத்து. அவர்களின் நோய் குறித்து முழுமையாக அறிந்து, கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதோ ஒரு பாதிப்பினால்தான் இந்த நோய் வந்ததா என்பது குறித்து ஆராய்வோம். இன்றும் அவர்கள் பழையகால எண்ணத்திலேயே இருக்கிறார்களா? பழைய சம்பவங்களின் பாதிப்பு இன்னமும் அவர்களின் வாழ்க்கையில் உள்ளதா என்பதை கேட்டு தெரிந்துக்கொண்டு அவற்றை மறப்பதற்கான மருந்துகளை நாங்கள் கொடுக்க ஆரம்பிப்போம். கடந்த கால நினைவுகளை அகற்றிவிட்டாலே அவர்களை நோயிலிருந்து மீட்டுவிடலாம். இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்து ஒரு வாரத்திலேயே நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும். மனதினால் உண்டாகும் எந்த நோய்க்கும் இந்த மலர் மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது. ஆனால் தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு நேரடி மருந்துகள் இங்கு கிடையாது. அந்த தலைவலியோ, காய்ச்சலோ எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து கொடுக்க மனதிற்கான மருந்து எங்களிடம் உள்ளது.

Updated On 19 Aug 2024 11:42 PM IST
ராணி

ராணி

Next Story