இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குழந்தையின்மை என்பது சமூகத்தில் தற்போது அதிகரித்து வரும் மிக முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாக விளங்குகிறது. மருத்துவ விஞ்ஞானத் துறையின் வளர்ச்சியால் உண்டாகியிருக்கும் புரட்சிகளுள் ஒன்று, செயற்கை கருத்தரிப்பு. இதில் குழந்தையில்லா தம்பதிகளுக்கு அவர்தம் பிரச்சினைகளுக்கு ஏற்ப பலதரப்பட்ட தீர்வுகள் உள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இடமாக தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விளங்கி வருகின்றன. அதனால் தமிழகத்தில் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் முதன்முதலில் 1980-களில் செயற்கை கருத்தரிப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த இருபது ஆண்டுகளில் தனியார் கருத்தரிப்பு மையங்களின் வளர்ச்சி அபரிமிதமாக பெருகியுள்ளதை காணலாம். தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கான கட்டணங்களும் உச்சாணிக்கொம்பில் உள்ளன. செயற்கை கருத்தரிப்பு மையத்துக்கேற்ப வெவ்வேறு விதமாக கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இதனால் ஏழ்மை நிலையிலுள்ள மக்களால் இந்த சிகிச்சை மேற்கொள்வது சிரமமானதாக இருக்கிறது. அதனால் மகப்பேறு கிடைக்காத பல்லாயிரக்கணக்கான தம்பதிகளின் குழந்தை கனவு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், குழந்தையில்லா தம்பதிகளின் கவலையை போக்கும் வகையில் தமிழ்நாட்டின் அரசு மருத்துவனைகளில் செயற்கை கருத்தரிப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளது தமிழக அரசு. இந்த சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் சென்னையில் உள்ள எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையிலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தொடங்கப்படவுள்ளது.


செயற்கை கருத்தரிப்பு

இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்வது செயற்கை கருத்தரிப்பு முறை என்று கூறப்படுகிறது. இதில் இன்ட்ரா யூடிரைன் இன்செமினேசன் (I.U.I) எனப்படும் பெண்ணின் கருப்பைக்குள் விந்தணுவை செலுத்துவது, இன்-விட்ரோ பெர்டிலைசேசன் (I.V.F.) எனப்படும் வெளியில் கருவை உருவாக்கி கருப்பையில் வைத்து வளர்க்கப்படும் சிகிச்சை முறை போன்றவைகளே அதிகம் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகளாகும். இன்ட்ரா யூடிரைன் இன்செமினேசன் (I.U.I) சிகிச்சை முறையில் விந்தணுக்கள் ஆய்வகத்தில் சேகரிக்கப்பட்டு அவற்றுள் திடமான விந்துணுக்களை தரம் பிரித்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். மற்றொரு முறையான ஐவிஎஃப் சிகிச்சையில் பெண்ணின் கருமுட்டைகளை வெளியே எடுத்து ஆய்வகச் சூழலில் வைத்து அதில் அதில் விந்தணுக்களைச் செலுத்தி வளர்க்கப்பட்டு, கருவாக உருவான பிறகு அந்தக் கரு பெண்ணின் கருப்பையில் பொதிக்கப்படும். இவ்விரு சிகிச்சை முறைகளில் பலன்களின் அடிப்படையில் ஐவிஎஃப் முறைகளே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


தமிழக அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வந்தது. இதை அமல்படுத்துவதற்கு அதிக நிதி செலவாகும் என்பதால் செயல்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் தொடங்கப்படும் என அறிவித்தது.

அதன்படி சென்னையில் உள்ள எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையிலும், மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தலா 2.5 கோடி செலவில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன. இதில் ஒவ்வொரு மையத்திலும் கட்டமைப்புக்காக மட்டுமே ரூ.1.5 கோடியும், தேவையான மருந்துகளைப் பெற ரூ.1 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் சேவைகள்

அரசு செயற்கை கருத்தரிப்பு மையங்களில் ஆண்களுக்கான விந்தணு பரிசோதனை, பெண்களுக்கான கருமுட்டை, கருக்குழாய் பரிசோதனை , கருப்பை நுண்ணறைகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.

இந்த சிகிச்சை முறைகள் முதல் அடுக்கு இரண்டாம் அடுக்கு என இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் அடுக்கு சிகிச்சையில் பெண்களுக்கு அண்டம் முட்டை விடுவிப்பினை உந்தும் மருந்துகள் வழங்கப்படும். அண்டம் முட்டை விடுவிப்பைக் கண்டறிய கருப்பை நுண்ணறைகள் கண்காணிக்கப்படும். கருக்குழாயில் அடைப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும். ஆண்களின் விந்தணுக்களைப் பெருக்க அடிப்படை மருத்துவ உதவிகளும் வழங்கப்படும்.

இதுகுறித்து இத்துறையில் இருபது ஆண்டுகளாக இயங்கி வரும் சென்னை கருத்தரிப்பு நிபுணரான டாக்டர் குந்தவி சங்கரிடம் கேட்டோம்:

அரசு மருத்துவமனைகளின் செயற்கை கருத்தரிப்பு முறை மக்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இந்த செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை அரசு மருத்துவமனைகளின் மூலமாகப் பெறும்படி அமைத்துத் தரும் இந்த சேவை பாராட்டுக்குரியது. அதனை நாங்கள் முழுவதுமாக வரவேற்கிறோம். இந்த சேவை, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கீழ் நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெரிதும் பயனளிக்கும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், கேரளாவில் உள்ள பொதுத்துறை மருத்துவமனைகளிலும் அரசால் நடத்தப்படும் செயற்கை கருத்தரிப்பு சேவை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் தெலுங்கானாவிலும் இச்சேவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாகக் கருதப்படும் நமது தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மருத்துவ சேவையும், தேர்ந்த மருத்துவர்கள் கொண்ட குழுவையும் நாம் பெற்றுள்ளோம். எனவே இந்த செயற்கை கருத்தரிப்பு மருத்துவ சேவையானது தேவைப்படுவோருக்கு எளிதில் அணுகும் வழிமுறையாக நிச்சயம் இருக்கும்.

அடித்தட்டு மக்களுக்கும் இது சாத்தியமா?

இந்த சேவை முற்றிலும் அடித்தட்டு மக்களுக்கான சிறந்த சேவையாகவே இருக்கும். நமது அரசு மருத்துவமனைகளில் உயர் தொழிற்நுட்பக் கருவிகள் உள்ளன. மக்களுக்கு சேவை செய்யும் தகுதியான மருத்துவக் குழுவும் இயங்கி வருகிறது. பணவசதியற்ற, குழந்தை இல்லா தம்பதிகள் நிச்சயம் இதனால் பயனடைவர் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த சேவையை தனியார் மருத்துவமனைகள் அளவிற்கு அரசு மருத்துவமனைகளால் செயல்படுத்த இயலுமா?

நிச்சயமாக. இதில் மிகப்பெரிய வெற்றியை அரசு மருத்துவமனைகளால் எட்ட இயலும்.

செயற்கை கருத்தரிப்பு போன்ற மருத்துவத்தை குறைந்த கட்டணத்தில் செயல்படுத்துவது சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியமே. பரிசோதனைகளை இலவசமாக வழங்குதல், ஹார்மோன் ஊசிகளை மொத்தமாக கொள்முதல் செய்வதால் அவற்றை குறைந்த விலையில் பயனாளிகளுக்கு வழங்குதல் அல்லது அரசுத் திட்டங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து குறைந்த கட்டணத்தில் செயல்படுத்தலாம்.

இந்த சேவை உடனடியாக நடைமுறைக்கு வருவது சாத்தியமா?

கண்டிப்பாக சாத்தியம்தான். நமது தமிழகம் சிறந்த மருத்துவர்களையும், மருத்துவக் குழுவையும் கொண்டு இயங்கி வருகிறது. நிச்சயம் அவர்களால் இந்தத் திட்டத்தைத் தொடங்குவது மட்டுமின்றி சிறப்பான சேவையை வழங்கவும் முடியும். குழந்தையின்றித் தவிக்கும் பல தம்பதியரின் பெற்றோராகும் கனவை மெய்ப்பிக்க இயலும்.

Updated On 22 Aug 2023 12:08 AM IST
ராணி

ராணி

Next Story