இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய மாசுபாடான சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவருமே சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அதிலும் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வெளிப்புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக பெண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் என்னென்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பது குறித்து விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்.

பிறப்புறுப்பை சுத்தம் செய்வது ஏன் அவசியம்?

பெண்களுக்கு இருக்கும் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருப்பது. நாம் பிறப்புறுப்பை சுத்தமாகத்தான் வைத்திருக்கிறோமா? அல்லது எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பது போன்ற சந்தேகங்களை பிறரிடம் கேட்பதற்கு நிறையப் பெண்களுக்கு தயக்கம் இருக்கும். குழந்தைகளுக்கு டயபர் போடும்போது அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தாய்மார்களுக்குத் தெரியும். அதுவே பெண் குழந்தைகள் வளர்ந்து வளர் இளம்பருவத்தை அடைந்து மாத விலக்கு மற்றும் அது சம்பந்தப்பட்ட தீட்டுகள் வெளிவரும்போது பலவிதமான மாறுபாடுகள் இயற்கையாக இருக்கும்.

அந்த சமயத்தில் பிறப்புறுப்பை எப்படி சுத்தமாக வைத்திருப்பது? என்ற கேள்வி பலருக்கும் எழும். நமது உடலின் மேற்புறத்திலுள்ள கண், வாய், மூக்கு, காது போன்றவற்றின் வழியாக வெளிப்புற கிருமிகள் எளிதில் உடலினுள் நுழையக்கூடும். அதேபோலத்தான் கீழ்ப்புறத்திலுள்ள ஆசன வாய், சிறுநீர்ப்பாதை மற்றும் பிறப்புறுப்பு போன்றவற்றின் வழியாகவும் கிருமிகள் உட்செல்கின்றன. உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலின் திறந்த உறுப்புகள் வழியாக தொற்றுகள் உள்நுழையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

பிறப்புறுப்பு சுத்தம் அவசியம்

எப்படி சுத்தம் செய்வது?

அதே மாதிரித்தான் பெண்களின் பிறப்புறுப்புகளை சுத்தம் செய்வதில் தெளிவு வேண்டும். சில பெண்கள் காலை, மாலை இருவேளையும் சோப்பு , டெட்டால் கொண்டு சுத்தம் செய்தாலும் ஒருவித எரிச்சல் இருப்பதை உணர்வார்கள். சிலருக்கு அந்த இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். சிலருக்கு எப்போதும் திரவ வெளியேற்றம் இருக்கும். இதை எப்படி சுத்தப்படுத்துவது? என்ற கேள்வி இருக்கும். சிலருக்கு அந்தரங்க பகுதிகளில் உள்ள முடிகளை அகற்றுவதில் சந்தேகங்கள் இருக்கும்.

பெண்களுக்கு கருப்பை வாய் திறக்கும் இடம்தான் Vagina என்கிற யோனிக்குழாய். இது 10 செ.மீ நீளமுள்ள ஒரு குழாய் போன்றது. இதன் வெளித்துவாரம்தான் வால்வார் திறப்பு. இந்த பகுதியானது மிகவும் சுத்தமாக இருக்கும். இந்த குழாயின் உள்பகுதியில்தான் கர்ப்பவாய் திறக்கிறது. எனவே vulva என்று சொல்லக்கூடிய சினைப்பையைத்தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலுறவு, பிரசவம், கருப்பை சிகிச்சைகள் போன்ற சமயங்களில் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் உள்ளது. ஆனால் வல்வா பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க, சுத்தமான தண்ணீரால் கழுவினாலே போதுமானது. இந்த பகுதி மிகவும் மென்மையானது என்பதால், அதன்மீது வீரியமிக்க சோப், டெட்டால் அல்லது ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்தினால் சருமம் சேதமடைந்துவிடும். அதாவது சருமம் வறண்டுபோவதால் தொற்றுகள் எளிதில் பரவும். சோப் பயன்படுத்தும்போது சருமத்தை பாதுகாக்க இயற்கையாகவே உடலில் இருக்கும் லேக்டோ பெசெல்லே என்று சொல்லக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

பிறப்புறுப்பில் சோப், டெட்டால் பயன்படுத்தக்கூடாது

என்னென்ன தவறுகளை செய்கிறார்கள்?

அதுதவிர சுத்தம் செய்யும்போது செய்யும் முக்கியத் தவறுகளில் ஒன்று ஆசன வாயை கீழிருந்து மேலாக சுத்தம் செய்வது. இதனால் மலத்திலிருக்கும் பாக்டீரியாக்கள் பிறப்புறுப்புகளில் பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே மேலிருந்து கீழாக சுத்தம் செய்வதே முறையானது. மேலும், பிறப்புறுப்பை வறட்சியாக வைத்துக்கொள்வதே தவறு. ஈரமில்லாமல் இருக்கலாமேயொழிய உலர்வாக இருக்கக்கூடாது. இதற்காக சிலர் ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். இதனால் சரும அலர்ஜி மற்றும் தொற்றுகள் பரவும். குறிப்பாக உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. சிந்தட்டிக் துணிகளாலான உள்ளாடைகளை பயன்படுத்தக்கூடாது. இதனால் அங்கு ஈரம் சேர்ந்து பூஞ்சைத் தொற்றுகள் எளிதில் வரும். ஏனெனில் நமது நாட்டை பொறுத்தவரை வெப்பம், வியர்வை மற்றும் ஈரப்பதம் சற்று அதிகமாகவே இருக்கும். எனவே மென்மையான காட்டன் துணிகளை பயன்படுத்தவேண்டும். அதேபோல், ஒரு நாளைக்கு இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றவேண்டும். இன்றைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்துகிற லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்றவை சருமத்தின்மீது இறுக்கமாக இருப்பதால் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாகி பூஞ்சைத் தொற்று ஏற்படும். எனவே சுத்தமான காட்டன் துணிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

மென்மையான காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும்

பிறப்புறுப்பை வாக்ஸ் செய்யலாமா?

பல பெண்களுக்கு இருக்கும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று பிறப்புறுப்பிலிருந்து துர்நாற்றம் வருதல். இதனை கட்டுப்படுத்த ஸ்ப்ரே, டியோடரண்டுகள் பயன்படுத்தினால் பலவிதமான சரும பிரச்சினைகள், தொற்றுகள் அல்லது கேன்சர் கூட வர வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதுதவிர அந்தரங்க உறுப்புகளிலிருக்கும் முடிகளை நீக்க, வாக்ஸ், கிரீம்களை பயன்படுத்தலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த முடிகளை நீக்குவது தவறு. அதை ட்ரிம் செய்வதே போதுமானது. அதையும் மீறி ஷேவ் செய்ய நினைப்பவர்கள் ஸ்டெரெய்ல் முறையை பின்பற்றுவது மிகவும் அவசியமானது. ஏனெனில் ஷேவ் செய்யும்போது சிறிய காயம் ஏற்பட்டாலே எளிதில் தொற்றுகள் ஏற்பட்டு, மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


பிறப்புறுப்பில் வாக்ஸ் செய்யக்கூடாது

சுகாதாரம் மிகவும் முக்கியம்

மாதவிலக்கு சமயத்தில் சுகாதாரத்தை பின்பற்றுவது மிகவும் முக்கியம். அந்த காலத்தில் துணிகளைப் பயன்படுத்தினார்கள். அடுத்து காட்டன் பேட்களை பயன்படுத்தினார்கள். அடுத்து நாப்கின்களை பயன்படுத்தினார்கள். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும், துணிகளை சுத்தமாக பயன்படுத்தாதால் அல்லது நாப்கின்களில் பயன்படுத்தப்படுகிற ரசாயனத்தால் கேன்சர் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுத்தன. ஆனால் இப்போது மென்ஸ்ட்ரல் கப்ஸ் பயன்படுத்தலாம். அது முடியாதவர்கள் புதிய சுத்தமான காட்டன் துணியை பயன்படுத்தலாம். பிறந்ததிலிருந்து பருவமடைந்த காலம் மற்றும் மாதவிலக்கு காலங்களில் பிறப்புறுப்பை சுகாதாரமாக பேணிக்காத்தால் கருப்பை தொற்று, அரிப்பு, எரிச்சல், பூஞ்சைத் தொற்று போன்றவற்றை தடுக்கலாம். இந்த சாதாரண தொற்றுகளால்தான் கருக்குழாய் அடைப்பு, குழந்தையின்மை, முதுகு வலி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி போன்ற மோசமான பிரச்சினைகள் வருகிறது என்பதை மறக்கவேண்டாம். எனவே சுகாதாரத்தை முறையாக பின்பற்றினாலே ஆரோக்கியமாக வாழலாம்.

Updated On 6 Nov 2023 6:54 PM GMT
ராணி

ராணி

Next Story