இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய குழந்தைகள் பெற்றோர்களிடம் பேசுவதைக் காட்டிலும் திரைப் பொருட்கள், சமூக ஊடகம், தொழில்நுட்பத்தில்தான் அதிகம் நேரம் செலுத்துகிறார்கள். பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகள் செல்போனில் என்னென்ன பார்க்கிறார்கள்? யாருடன் பேசுகிறார்கள்? என்பதை கண்காணிப்பதில்லை. இது தவிர, பல குழந்தைகள் அனைத்து விஷயங்களிலுமே சென்சிட்டிவாக இருக்கின்றனர். மன அழுத்தம், காதல் தோல்வி, சரியாக படிப்பு வரவில்லை போன்ற பல காரணங்களால் தவறான முடிவை எடுக்கின்றனர். குழந்தைகள் இதுபோன்ற தவறான செயல்களை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை வளர்க்க வேண்டும்? என்பது போன்ற பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார் கல்வி உளவியல் நிபுணர் சரண்யா ஜெயக்குமார்.

ஒரு உளவியல் நிபுணராக இப்போதிருக்கும் குழந்தைகளின் நடத்தையை எப்படி பார்க்கிறீர்கள்?

இக்காலத்து குழந்தைகள் யாருடைய சொல் பேச்சையும் கேட்பதற்கு தயாராக இல்லை. பெற்றோர்களைக்கூட மரியாதையில்லாமல் கூப்பிடுகிறார்கள். பல குழந்தைகள் கோபப்பட்டு, பெற்றோர்களுடன் பேசாமலேயே இருப்பதும் உண்டு. இது போன்று நடத்தை சார்ந்த பிரச்சினைகளுடைய குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வருவதுண்டு. இதற்கு சமூக ஊடகங்களின் தாக்கம் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. அதேபோல் மரியாதை தெரிந்து நடக்கும் குழந்தைகளும் உண்டு. என்னை பொறுத்தவரை இக்காலத்து குழந்தைகள் முதலில் பிறருக்கு மரியாதை அளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

படிக்கும் மாணவர்கள் படிப்பதையே மன அழுத்தமாக கருதுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

படிப்பது மாணவர்களுக்கு ஒரு மன அழுத்தமாகத்தான் இருக்கிறது. ஓரளவுதான் படிப்பு வரும் என்பவர்கள்தான் மிகவும் சிரமப்படுகிறார்கள். எந்த ஒரு குழந்தையும் தான் வீணாக போகவேண்டும், தேர்வில் தோல்வியடைய வேண்டும் என்று நினைப்பதில்லை. சிலருக்கு இயற்கையாகவே நன்றாக படிப்பு வரும். சிலருக்கு சிரத்தை எடுத்து படித்தால்தான் நினைவில் நிற்கும். இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் முட்டி மோதி படித்தாலும் எதுவும் நினைவில் இருக்காது. இதற்கு திரை நேரம் அதிகரித்தலும், தினமும் படிக்காமல் இருப்பதும் ஒரு பெரும் காரணமாக பார்க்கப்படுகிறது. தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது படிப்பிற்கென்று நேரம் செலுத்த வேண்டும்.


பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்

பள்ளி பாடம் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. செய்தித்தாள், கதை என்று எதை வேண்டுமானாலும் படிக்கலாம். பொழுதுபோக்கு என்பது வண்ணம், சிரிப்பு, ஆடல், பாடல் நிறைந்தது. நாள்முழுவதும் பொழுதுபோக்கை மட்டும் பார்த்தால் அது மட்டுமே நம் மூளையில் இருக்கும். பாதி நேரம் பொழுதுபோக்கு மீதி நேரம் படிப்பு என்று செலவிட்டால் மட்டுமே படிப்பதும் நினைவில் இருக்கும். இப்படி இரண்டையும் சமநிலையில் செலவு செய்தால் மட்டுமே படிப்பானது மனச்சோர்வாக இருக்காது.

மனச்சோர்வினால் பல குழந்தைகள் தவறான முடிவு எடுக்கிறார்கள். அதுபற்றி கூறுங்கள்...

பெரும்பாலானோர் இரண்டு வகையான தவறான முடிவுகளை எடுக்கின்றனர். சில குழந்தைகள் குறிப்பிட்ட ஒரு பொருளை பயன்படுத்தினால்தான் படைப்பாற்றல் வருகிறது, படிப்பு வருகிறது என்று அவர்களே எண்ணி தேவையற்றப் பொருட்களை உட்கொள்கிறார்கள். இது 100% பொய். யாராவது புகைப்பிடிப்பதால், மது அருந்துவதால் நல்ல நினைவாற்றல் கிடைக்கும் என்று கூறினால் அது நிச்சயம் பொய்தான். இது மிகமிக தவறான செயல். இதன் மூலம் படித்ததும் நினைவில் நிற்காமல் மறந்துதான் போகும். அடுத்து அனைத்தையும் சென்சிட்டிவாக எடுத்துக்கொள்வது. இதன் காரணமாக சிலர் வீட்டைவிட்டு ஓடிவிடுவது, தற்கொலை செய்துகொள்வது என்று தவறான முடிவை எடுக்கிறார்கள். தற்கொலை எந்வொரு பிரச்சினைக்கும் சரியான முடிவல்ல. வாழ்க்கையில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் தைரியமாக சந்திக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுதே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கைபேசி வாங்கிக் கொடுக்கின்றனர். இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?

தொழில்நுட்பம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள் தொழில்நுட்பத்தில்தான் வளர்கிறார்கள். தலைமுறை ஆல்பா என்று சொல்லக்கூடிய 2012-க்கு பின் பிறந்த குழந்தைகளுடைய பெற்றோர்களுக்கு டெக்னாலஜியுடன் வளரும் குழந்தைகளை கையாள்வது என்பது சற்று கடினமாகக் காணப்படுகிறது. அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychological Association) 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு கைப்பேசியோ, ஐபோனோ, ஐபேடோ எதுவும் காண்பிக்கக்கூடாது என்று கூறுகிறது. 2 - 6 வயது வரை guided watching உடன்தான் பார்க்க வேண்டும். அதாவது குழந்தைகள் கைப்பேசி உபயோகிக்கும்போது பெற்றோர்கள் கூடவே இருந்து அவர்கள் என்னப் பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். பலர் செல்போனில் kids mode போட்டுதான் கொடுத்திருக்கிறேன் என்பார்கள். ஆனால் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன்களிலும் பாலியல் மற்றும் அதிகமான வன்முறை இருக்கிறது.


மன அழுத்தத்தால் குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டமின்மை

குழந்தைகள் விளையாடும் மொபைல் விளையாட்டுகளில் அதிக வன்முறை இருப்பது பல பெற்றோர்களுக்கு தெரியாது. அதனால் குழந்தைகள் கைப்பேசி உபயோகிக்கும் போது guided watching உடன் போனை கொடுப்பது நல்லது. 6 வயதிற்கு மேற்பட்டோர் ஒரு நாளைக்கு 1 அல்லது 1 ½ மணிநேரம் ஏதேனும் ஒரு திரையைப் பார்க்கலாம். கட்டாயமில்லை என்றாலும் எவ்வளவு நேரம் நாம் திரை நேரம் பார்க்கிறோமோ அதைவிட சற்று அதிக நேரம் படிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நினைவாற்றல் மற்றும் தொடர்பு கொள்ளுதலில் (Communication)பிரச்சினைகள் ஏற்படும். 3 வயதுக்குள் நன்றாக பேசவேண்டிய குழந்தைகள் 6 வயது வரை பேசவில்லை என்பதற்கு அதிக திரை நேரமே காரணமாக இருக்கிறது.

1970 மற்றும் 1980 காலங்களில் இரு வழி தொடர்பு இருந்தது. ஆனால் காலம் செல்லசெல்ல திரையில் அதிக நேரம் செலவழிப்பதால் அது ஒரு வழி தொடர்பாக மாறியது. வருங்காலத்தில் யாருடனும் தொடர்பின்றி, எந்தவொரு உணர்ச்சிகள் மற்றும் எதிர்வினைகள் இல்லாமல்தான் மக்கள் வாழ்வார்களோ என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது. 18 வயதுக்கு பின் தனியுரிமை கொடுப்பது போதுமானது.

எந்த வயதில் பிள்ளைகளுக்கு கைபேசி வாங்கி கொடுப்பது சிறந்தது?

சிறந்த வயது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இப்போதுகூட 15 வயது வரை கைபேசி வாங்கிக் கொடுக்காத பெற்றோர்கள் பலர் இருக்கிறார்கள். வாங்கித் தராததால் எந்தொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் 15 வயதிலிருந்து ஏங்கி ஏங்கி 17 வயதில் அது கிடைக்கும் போது ஈகோ குறைதல் (Ego Depletion) - இறுக்கி பிடித்ததை 17 வயதில் கொடுக்கும் போது அளவுக்கு மீறி உபயோகிக்க கூடும். அதனால் இந்த வயதில் தான் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் அவர்களுக்கு வேண்டும் என்ற பொழுது வாங்கி கொடுத்துவிட்டு அவர்கள் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் எதை பார்க்கிறார்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.


பெற்றோர் முன்னிலையில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த வேண்டும்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு குழந்தை உரிமை ஆர்வலராக என்னை பொறுத்தவரை குழந்தைகள் எப்போதும் சரியாகத்தான் இருக்கிறார்கள். குழந்தைகள் தவறுகள் செய்வது கிடையாது. குறிப்பாக இப்போதிருக்கும் பெற்றோர்கள் தங்கள் வேலை எளிதாக முடியவேண்டும் என்பதால் குழந்தைகளுக்கு போன் காண்பித்து உணவு ஊட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி போனைப் பார்த்து பழகிய அந்த குழந்தைக்கு அது மிக அவசியமான ஒன்றாகத்தான் தெரியும். இது முழுக்க முழுக்க பெற்றோர் மேலிருக்கும் தவறுதானே தவிர பிள்ளைகளின் தவறு இல்லை. குழந்தை வளர்ப்பு என்பது பெற்றெடுத்த நாள் முதல் நாம் எப்படி வளர்க்கிறமோ அதுதான் 18 வயது அடையும்போது குழந்தைகளின் செயல்களில் பிரதிபலிக்கும். அதேபோல் குழந்தைகள் எதை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறோமோ அதேபோல் பெற்றோர்களும் அதை பின்பற்ற வேண்டும்.

இப்போதிருக்கும் பெற்றோர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் கருத்து என்ன?

குழந்தை வளர்ப்பில் மிகவும் உறுதியாக இருப்பது மிகமிக முக்கியமானது. பெற்றோர் முதலில் நாம் குழந்தைகளிடம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் இறுதி வரை இருக்கமுடியும். அதீத நட்பாக பெற்றோர் இருப்பதில் (over friendly parenting) எனக்கு நம்பிக்கை இல்லை. குழந்தைகளை தண்டிக்கக்கூடாது என்றுதான் சட்டம் இருக்கிறதே தவிர கண்டிக்கக்கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. அதனால் குழந்தைகளை நிச்சயம் கண்டித்து வளர்க்க வேண்டும். தவறு என்றால் அதை நேரடியாக அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஒரே விஷயத்தைத்தான் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். குழந்தைகளுடன் முதலில் ஒழுங்காக உரையாட வேண்டும். உரையாடல் என்ற பெயரில் அவர்களுக்கு வெறும் ஆலோசனைகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை பேசவிட்டு பெற்றோர்கள் அதை கேட்க வேண்டும். இதுதான் சிறந்த குழந்தை வளர்ப்பு முறையாகும்.

Updated On 3 Oct 2023 12:05 AM IST
ராணி

ராணி

Next Story