இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இப்போதெல்லாம் சிறிய உடல்நல பிரச்சினை என்றால்கூட உடனே மருத்துவரிடம் ஓடுபவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். இதனால் அதிகப்படியான மருந்து மாத்திரைகள் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அதனாலேயே உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதும் அதிகமாகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் பிரபலமான அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மாத்திரை, மருந்துகளை உட்கொள்ளாமலே பெரும்பாலானோருக்கு ஏற்படுகிற வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கமுடியும் என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் சோனல் மேக்தா.

அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷருக்கான வித்தியாசம் என்ன?

அக்கு பிரஷர் என்பது உடலில் வலி உள்ள இடங்களில் குறிப்பிட்ட ஒரு கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி வலியை குணப்படுத்தும் முறை. இதனால் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அது துல்லியமாக கண்டறியப்பட்டு குணப்படுத்தப்படுகிறது. அக்குபஞ்சரில் ஊசியை பயன்படுத்துவோம். அதனை நீடில் தெரபி என்கின்றனர். இது தலையிலிருந்து கால் வரையிலான மத்திய நரம்பு மண்டலத்தின்மீது செயல்படுத்தப்படுகிறது.


அக்குபிரஷர் மற்றும் அக்குபஞ்சர்

மைக்ரேன், முதுகு வலி, தலைவலி, தீவிர கழுத்துவலி என எந்த மாதிரியான வலியாக இருந்தாலும் இந்த தெரபிமூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் இரண்டுமே வலியை சரிசெய்வதில் ஒன்றுக்கொன்று மாற்று சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. பொறுமையாகவும் முறையாகவும் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்.

சிகிச்சை நன்மைகள்

அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக பக்கவிளைவுகள் இருக்காது. எந்தவிதமான வலியாக இருந்தாலும் 95% வரை இந்த சிகிச்சைகளின்மூலம் குணப்படுத்த முடியும். உதாரணத்திற்கு, முழங்கால் வலிக்கு அறுவைசிகிச்சை செய்யும் நிலையில் இருப்பவருக்கு அக்குபஞ்சர், அக்குபிரஷர் மற்றும் வர்மா சிகிச்சைகளை தொடர்ந்து 21 சிட்டிங்குகள் அளித்தால் அறுவைசிகிச்சை இல்லாமலே முழுமையாக குணமாக்க முடியும். ஊசியை பயன்படுத்துவதால் சிறிது ரத்தக்கசிவு ஏற்படுமே தவிர வேறு எந்த பக்கவிளைவுகளும் வராது.


அக்குபஞ்சர் புள்ளிகள்

யாரெல்லாம் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்?

அக்குபஞ்சர் சிகிச்சைக்கு வயது வரம்புகள் கிடையாது. 5 வயது முதல் 80 வயதினர் வரைக்கும்கூட அக்குபிரஷர் சிகிச்சையை மேற்கொள்ளலாம். கேன்சர் போன்ற நோயுள்ளவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ளக்கூடாது. கேன்சர், சி.ஓ.பி.டி போன்ற நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை கைகொடுக்காது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய முடியும்.

வர்மா தெரபி மூலம் அனைத்துவிதமான வலிகளையும் சரிசெய்ய முடியும். இந்த சிகிச்சையில் தாவர எண்ணெய் (plant based oil) போன்ற அத்தியாவசிய எண்ணெய் வழங்கப்படும். இதன்மூலம் மருந்துகளுக்கு பதிலாக ஆயில் தெரபியை எடுத்துக்கொள்ளலாம். இதை ‘healthy lifestyle living' என்கின்றனர். இதன்மூலம் காய்ச்சல், இருமல் போன்றவற்றைகூட குணமாக்கமுடியும்.

இந்த சிகிச்சைமூலம் நாள்பட்ட சையாட்டிகா வலியைக்கூட குணப்படுத்த முடியும். தொடர்ந்து அக்குபிரஷர், அக்குபஞ்சர் மற்றும் வர்மா என அனைத்தும் கலந்த 21 சிட்டிங்குகள் அடங்கிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த சிகிச்சை எடுக்கும்போது என்ன சாப்பிட வேண்டும் என்ற டயட் சார்ட் கொடுக்கப்படும். அந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். இல்லாவிட்டால் பலன் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


அக்குபஞ்சர் & அக்குபிரஷரின் வகைகள்

அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷரின் வகைகள்

அக்குபிரஷரில் நிறைய வகைகள் இருக்கின்றன. முதுகுவலிக்கு தனி சிகிச்சை, கப்பிங், ஹிஜாமா, ஸ்டொமக் கப்பிங், ஆயில் தெரபி போன்ற பலதரப்பட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் குறிப்பிட்ட வலிக்கு காரணமான முக்கிய காரணியை கண்டறிந்து அதனை உடலிலிருந்து வெளியேற்றிவிட்டாலே வலி குறைந்துவிடும். இந்த சிகிச்சையை பொருத்தவரை மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட அத்தியாவசிய எண்ணெய்களை மட்டும் சில துளிகள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுவதுண்டு.

உதாரணத்திற்கு, 60 வயதை தாண்டியவருக்கு நிற்பது மற்றும் உட்காருவது என அனைத்திலும் முழங்கால் வலி ஏற்படும். அவர்களுக்கு அதிகப்படியாக 21 சிட்டிங்குகள் சிகிச்சை அளிக்கப்படும். அதன்பிறகு, ஆயில் தெரபி மூலம் சில எண்ணெய்களை உட்கொள்ள வேண்டும். இப்படி உள்ளிருந்து சரிசெய்தாலே வெளிப்புறமும் சரியாகிவிடும்.


அக்குபஞ்சர் தெரபி

மன அழுத்தம், கோபத்தை இந்த தெரபிமூலம் கட்டுப்படுத்துவது எப்படி?

வீட்டிலிருந்தே அக்குபிரஷர் செய்வதன்மூலம் நல்ல பலன் கிடைக்கும். உதாரணத்திற்கு மன அழுத்தம் மற்றும் மன பதற்றம் இருக்கும்போது லிவர் 3 என்று சொல்லக்கூடிய இடதுகாலில்; ஒரு குறிப்பிட்ட புள்ளியில்(மருத்துவர் பரிந்துரைப்படி) 2 -3 முறைஅழுத்தம் கொடுக்கவேண்டும். அதேபோல் நாள்பட்ட தலைவலி மற்றும் மைக்ரேன் பிரச்சினைகளுக்கு, கைகளில் LI4 என்று சொல்லக்கூடிய புள்ளியில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தாலே உடனடியாக சரியாகிவிடும். வயிறு மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முழங்கால்களுக்கு கீழிருக்கும் ST36 என்ற புள்ளியில் அழுத்தம் கொடுக்கலாம்.

தூக்கமின்மை பிரச்சினைக்கு கைகளில் HT7 என்று சொல்லக்கூடிய புள்ளியில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். SP8 என்று சொல்லக்கூடிய முழங்காலுக்கு கீழ் 2 நிமிடங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலே மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பொதுவாக உடல்நலத்தை மேம்படுத்த நகங்களைச் சுற்றி மற்றும் கீழ்பகுதியில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனால் தினசரி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

Updated On 5 Sept 2023 12:01 AM IST
ராணி

ராணி

Next Story