இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்ப காலங்களில் யோகாசனங்கள் செய்யலாமா? யோகா செய்தால் சுகப்பிரசவம் ஆகுமா? என்பது போன்ற பல கேள்விகள் இருக்கும். ஆனால் கர்ப்ப காலங்களில் கடினமாக இல்லாமல் எளிதான யோகா செய்வது எப்படி? அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? எந்தெந்த ஆசனங்கள் செய்யலாம்? என்று தெளிவாக விளக்கியுள்ளார் யோகா கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி.

1 - 5 மாத கர்ப்பிணிகளுக்கான ஆசனங்கள்

பயிற்சி 1:

தரையில் பாய் (Mat) விரித்து முதலில் சுகாசனம் நிலையில் நிமிர்ந்து அமர வேண்டும். பின்னர் இரண்டு கைகளையும் நீட்டி ஆதி முத்திரை செய்து (கட்டை விரலை உட்புறமாக மடக்கி மற்ற விரல்களை மூடுவது) மூச்சை உள்ளிழுத்தவாறே நீட்டிய கைகளை மடக்கி மூச்சை வெளியேற்றியபடி கைகளை நீட்ட வேண்டும். நன்கு பயிற்சி பெற்றவுடன் கண்களை மூடி பயிற்சி செய்யலாம். கண்களை மூடி பயிற்சி செய்வதன்மூலம் வலது மூளையானது நன்றாக வேலை செய்யும். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். இதுபோல் ஐந்து முறை செய்ய வேண்டும்.


1 - 5 மாத கர்ப்பிணிகளுக்கான யோகா - பயிற்சி 1

பயிற்சி 2:

தரையில் பாய் (Mat) விரித்து சுகாசனம் நிலையில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை பக்கவாட்டில் நீட்டிக்கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளை பக்கவாட்டிலிருந்து முன்பாக கொண்டு வந்து கூப்பியபடி சேர்க்க வேண்டும். பிறகு மூச்சை வெளியேற்றியவாறே கூப்பிய கைகளை பக்கவாட்டு நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும். பயிற்சி புரிந்துவிட்டால் கண்கள் மூடியே செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் நம் வலது மூளைக்கு நன்றாக ரத்த ஓட்டம் கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தோள்பட்டை வலி வராது. இதுபோன்று நிதானமாக ஐந்து முறை செய்யவேண்டும்.


1 - 5 மாத கர்ப்பிணிகளுக்கான யோகா - பயிற்சி 2

பயிற்சி 3:

பொதுவாக கர்ப்ப காலத்தில் லேசாக கீழ் முதுகு, நடு முதுகுப் பகுதிகளில் வலி ஏற்படுவது சகஜம். அப்படி வலி ஏற்படாமல் இருக்க பர்வட்டாசனம் செய்தல் நன்று.

முதலில் சுகாசன நிலையில் அமர்ந்து மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளை தரையிலிருந்து தலைக்கு மேல் பொறுமையாகக் கொண்டுசென்று கைகூப்ப வேண்டும். 10 நொடிகள் அதே நிலையில் இருக்க வேண்டும். 10 நொடி கழித்து பொறுமையாக மூச்சை வெளியேற்றியபடி கைகளை பொறுமையாக இறக்கி தரைக்கு கொண்டுவர வேண்டும். பருமனாக இருக்கும் பெண்களால் கர்ப்ப காலத்தில் கைகளை தலைக்குமேல் கூப்பி ஆசனம் செய்வது கடினமாக இருக்கும். அதனால் கட்டாயமாக கைகூப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதுவரை கைகளை கொண்டுசெல்ல முடிகிறதோ அதுவரை கொண்டு செல்வதே போதுமானது.


1 - 5 மாத கர்ப்பிணிகளுக்கான யோகா - பயிற்சி 3

பயிற்சி 4:

சுகாசன நிலையில் அமர்ந்து கைகளை நீட்டி ஆதி முத்திரை வைத்து கைகளை கடிகார முள் திசையில் 5 முறையும் கடிகார முள் திசைக்கு எதிர்திசையில் 5 முறையும் சுழற்ற வேண்டும். இப்படி செய்வதால் கை மூட்டு வலி, தோள்பட்டை வலி வராது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.


1 - 5 மாத கர்ப்பிணிகளுக்கான யோகா - பயிற்சி 4

பயிற்சி 5:

மேற்கூறிய பயிற்சிகளை முடித்துவிட்டு இறுதியாக சின்முத்திரை (சுட்டு விரலால் பெரு விரல் நுனியைச் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல்) வைத்து கால் முட்டிகளின் மேல் வைத்து, நிமிர்ந்து அமர்ந்து கண்களை மூடி மூச்சை மெதுவாக உள்ளே வெளியே என இழுத்து விடவேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும். மூச்சு உள்வாங்குவதிலும் மூச்சு வெளியிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்படி செய்வதால் இதயத்துடிப்பு சீராக இருக்கும்.


1 - 5 மாத கர்ப்பிணிகளுக்கான யோகா - பயிற்சி 5

பொதுவாக கர்ப்பகாலங்களில் எல்லா பெண்களுக்கும் உடம்பில் கரு தங்கவேண்டும், குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும், சுகப் பிரசவம் ஆக வேண்டும் போன்ற சிந்தனைகள் இயற்கையாகவே இருக்கும். அப்போது இதுபோன்ற பயிற்சிகளை 2 நிமிடங்களுக்கு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் மன நிம்மதி கிடைக்கும். இந்த பயிற்சியை காலை ஒரு முறை, மதியம் சாப்பிடுவதற்கு முன் ஒரு முறை, மாலை ஒரு முறை, இரவு படுப்பதற்கு முன் ஒருமுறை என்று ஒரு நாளைக்கு 4 முறை சுமார் 2 அல்லது 5 நிமிடங்களுக்கு செய்வதன் மூலம் மனநல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

5 - 10 மாத கர்ப்பிணிகளுக்கான ஆசனங்கள்

பயிற்சி 1:

கர்ப்பிணிகளுக்கு மாதங்கள் கூட கூட சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்ற எண்ணமும் பயமும் அதிகரிக்கும். அதுவும் சிறிய அளவில் வலி ஏற்பட்டால்கூட உடனே சமூக ஊடகங்களைப் பார்த்து இன்னும் பயந்துபோகின்றனர். எனவே 5 முதல் 10 மாத கர்ப்பிணிகள் இந்த ஆசனம் செய்தால் நிச்சயம் மனம் சாந்தமாக இருக்கும். புத்தி தெளிவாக இருக்கும். தன்னம்பிக்கை கூடும்.

சுகாசன நிலையில் நேராக அமர்ந்து இடது கையை கீழ் வைத்து வலது கையை மேல் வைத்து இரு கைகளின் பெருவிரல் தொடும்படி (தியான முத்திரை) கைகளை மடியில் வைத்து கண்களை மூடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக சீராக இருக்கிறது நிச்சயம் சுக பிரசவம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு வயிற்றுப்பகுதியை சந்தோஷமாக தடவியபடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். அதேபோல் ஒவ்வொரு உறுப்புகளின் தசைகளையும் பொறுமையாக ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இப்படி அனைத்து தசைகளையும் ரிலாக்ஸ் செய்துவிட்டு மூச்சை மெதுவாக உள்ளிழுத்து மூச்சை மெதுவாக வெளியில் விடவேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.


5 - 10 மாத கர்ப்பிணிகளுக்கான ஆசனங்கள் - பயிற்சி 1

இறுதியாக ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி என்று 3 முறை மனதில் கூறியபடி கண்களை திறந்து இரண்டு கைகளையும் தேய்த்து கண்களில் லேசாக தடவிவிட்டு கைகளை வயிற்றுப்பகுதியில் வைத்து நல்ல உணர்வை பரப்ப வேண்டும். இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளையும் செய்யலாம்.

பயிற்சி 2:

7 வது மற்றும் 8 வது மாதத்தில் செய்யக்கூடிய ஒரு சிறிய ஆசனம்தான் நாடி சுத்தி. இடது கையில் சின்முத்திரை வைத்து வலது கை பெருவிரலால் வலது நாசியை மூடி மெதுவாக இடது நாசியின் வழியாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதுபோல் 5 முறை செய்ய வேண்டும்.

வலது கையின் மோதிர விரலால் இடது நாசியை மூடி வலது நாசியினால் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும். இதுபோல் 5 முறை செய்யவேண்டும்.


5 - 10 மாத கர்ப்பிணிகளுக்கான ஆசனங்கள் - பயிற்சி 2

மூன்றாவதாக வலது கை பெருவிரலால் வலது நாசியை மூடி, இடது நாசியில் மூச்சை உள்ளிழுத்து வலது கை மோதிர விரலால் இடது நாசியை மூடி வலது நாசியால் மூச்சை வெளிவிட வேண்டும். இதுபோல் நிதானமாக 5 முறை செய்யவேண்டும்.

அடுத்ததாக, வலது கை மோதிர விரலால் இடது நாசியை மூடி வலது நாசியில் மூச்சை உள்ளிழுத்து வலது கை பெருவிரலால் வலது நாசியை மூடி இடது நாசியில் மூச்சை வெளிவிட வேண்டும். இது போல் 5 முறை செய்யவேண்டும். இந்த நாடி சுத்தி ஆசனங்களை காலை, மதியம், இரவு என்று ஒரு நாளைக்கு 3 வேளை செய்யலாம். இந்த ஆசனங்கள் மற்றும் தியானங்களை செய்வதன் மூலம் நிச்சயம் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Updated On 3 Oct 2023 12:02 AM IST
ராணி

ராணி

Next Story