இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த இரண்டு தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய தலைமுறையினரிடையே ஆண்மை குறைபாடு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு வேலைப்பளு, உணவு பழக்கவழக்கங்கள், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன. இளைஞர்களுக்கு விந்தணு உற்பத்தி ஏன் குறைகிறது? ஆண்மை குறைபாடு ஏற்படுவது எதனால்? என்பது குறித்த பல கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் பாலியல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் காமராஜ்.

இன்றைய இளம் தலைமுறை ஆண்களுக்கு விந்தணு குறைபாடு அதிகம் ஏற்படுவது எதனால்?

விந்து குறைபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குழந்தை வயிற்றிலிருக்கும்போதே விந்துப்பைகள் உருவாகின்றன. எனவே குழந்தை பிறக்கும்போதே விந்துப்பைகள் கீழே இறங்கியிருக்க வேண்டும். நூற்றில் ஒன்றிரண்டு பேருக்கு அப்படி ஆகாத பட்சத்தில் அதனை மருத்துவரை அணுகி உடனடியாக சரிசெய்ய வேண்டும். நிறைய ஆண் பிள்ளைகளுக்கு கிரிக்கெட் விளையாடும்போது பந்தால் அடிபட்டு விந்துப்பைகள் சேதமடைவதால் வீங்கி கரைந்து போகக்கூட வாய்ப்புகள் உள்ளன. குதித்து விளையாடும்போது விந்துப்பைகள் திருகப்பட்டு தொங்கும்நிலை ஏற்படுவதால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அடுத்து வாலிப வயதை எட்டும்போது, தவறான உடலுறவால் பால்வினை நோய் ஏற்பட்டு விந்தணுக்கள் பாதிக்கப்படலாம். இதனைத் தவிர, பிறவிக் குறைபாடுகள், புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவை விந்தணுக்களை பெருமளவில் பாதிக்கும். இதுதவிர, லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துதல், இறுக்கமான ஜீன்ஸ் போன்றவற்றை அணிவதாலும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.


இளம் தலைமுறையினருக்கு விந்தணு குறைபாடு

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. தினமும் சுடு தண்ணீரில் குளிப்பதுகூட பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. விந்தணுக்கள் எப்போதும் 35 டிகிரி வெப்பத்திற்கு மேல் போகாமல் குளிர்ச்சியாக இருப்பது அவசியம். உடலில் சூடு அதிகமாக இருந்தாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ 3 முதல் 6 மாதங்கள் வரை விந்தணு உற்பத்தி குறையலாம். ஒரு நாளில் குறைந்தது நாம் 3000 கெமிக்கல்களை பயன்படுத்துகிறோம். இவை மிகப்பெரிய அளவில் விந்தணுக்களை சேதப்படுத்துகின்றன.

இளம்வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்படுவது ஏன்?

விந்தணு குறைபாடும் ஆண்மை குறைபாடும் வேறு வேறு. முதலில் ரத்தநாளங்களில் வரக்கூடிய பிரச்சினை, இரண்டாவதாக ஹார்மோன் குறைபாடு, மூன்றாவது நரம்புகள் பாதிப்பு, நான்காவது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை ஆண்மை குறைபாட்டுக்கு காரணமாகின்றன. இதுதவிர, ஆணுறுப்பில் வரக்கூடிய பைரோனி நோய் (Peyronie's disease), மெட்டபாலிச பிரச்சினைகள் போன்றவையும் சில முக்கிய காரணிகள். ஆண்மை குறைபாடு வராமல் இருக்க சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.


மது, சிகரெட் மற்றும் ஜங்க் உணவுகளால் அதிகரிக்கும் ஆண்மை குறைபாடு

மது மற்றும் சிகரெட் வேண்டாம் (Abstain from alcohol and cigarettes)

எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் (BMI maintenance)

கொழுப்பு மற்றும் நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும்(Control diabetes and cholesterol)

காய்கறிகள், பழங்கள் நிறைந்த நல்ல டயட்டை பின்பற்ற வேண்டும் (Diet)

நடைபயணம் அல்லது ஜிம் உடற்பயிற்சி (Exercise)

வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உடலுறவு தேவை (Frequency of sex)

தினமும் காலை, மாலை இருவேளையும் கிரீன் டீ குடிப்பது நல்லது (Green tea)

நெகட்டிவ் உணர்வுகள் மற்றும் பதட்டம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் (Happiness)

6 - 8 மணிநேர தூக்கம் அவசியம் (Optimal amount of sleep)

ஜங்க் உணவுகளை சாப்பிடக்கூடாது (Junk food should be avoided)

இந்த 10 விஷயங்களை பின்பற்றினாலே ஆண்மைக் குறைவை தவிர்க்கலாம்.

ஆல்கஹால் மற்றும் சிகரெட், ஆண்மை குறைபாட்டுக்கு காரணமாகக் கூறப்பட்டாலும், இந்தப் பழக்கங்கள் இருக்கும் பலருக்கு ஆண்மை குறைபாடு இருப்பதில்லையே... அது எப்படி?

சிகரெட், கேன்சர் போன்ற ஏராளமான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இதில் ஏறத்தாழ 3000 கெமிக்கல்கள் இருப்பதால் சிகரெட் பிடிக்கும்போதே உடனடியாக ரத்த நாளங்களை பாதிக்கும். அதாவது ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் மூளை, இதயம், கால்கள் மற்றும் ஆணுறுப்புகளுக்குப் போகும் ரத்தம் குறைகின்றது. ஒரு முழு விமானத்தையும் தாங்கும் அளவிற்கு அதன் டயர்களில் போதுமான அழுத்தத்துடன் காற்று இருக்கவேண்டும். அதுபோலத்தான் ஆணுறுப்புகள் விறைப்படைவதற்கு போதுமான அழுத்தமுள்ள ரத்தம் பாயவேண்டும். ஆணுறுப்பிலிருக்கும் ரத்த நாளங்கள் சேதமடையும்போது போதுமான அளவிற்கு ரத்தம் செல்லாது. அதனால் ஆண்மைக்குறைவு வரலாம்.


மரபணு பிரச்சினைகளால் விந்தணு உற்பத்தி குறையும்

அதுபோலவே மதுவும். மது அருந்துவது உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் பாதிக்கிறது. அதில் முக்கியமாக கல்லீரலை பாதித்து சிரோசிஸ் என்ற நோய்க்கு வழிவகுக்கிறது. இதனால் ஆண் ஹார்மோன்கள் குறைந்து பெண் ஹார்மோன்கள் அதிகரிப்பதால் விந்துப்பைகள் சுருங்கிவிடும். ஆரம்பத்தில் மது குடிப்பதால் உடலுறவு ஆர்வம் அதிகமாக இருப்பதாக தோன்றினாலும், நாட்கள் செல்ல செல்ல விறைப்புத் தன்மையானது குறைந்துவிடும். குறைந்த அளவு ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும்போது மூளையில் கிளர்ச்சி இருக்கும். ஆனால் அளவு அதிகரிக்கும்போது மூளை மயக்கநிலைக்கு சென்றுவிடும்.

உயிரணு உற்பத்தி குறைவதற்கான காரணங்கள் என்னென்ன?

இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மரபணு குறைபாடும் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் விந்தணுக்கள் குறைவாகவே உற்பத்தியாகும். அடுத்து விந்துப்பைகள் கீழே இறங்காமல் வயிற்றுப்பகுதியிலேயே தங்கிவிடுவதும் முக்கிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சூடு அதிகமாகி, விந்துப்பைகள் வளராது. இதனால் விந்தணு உற்பத்தியும் தடைபடும். அதேபோல் விந்துப்பைகளின் அளவு 15 ml முதல் 25 ml வரை இருக்கவேண்டும். அது சிறியதாக இருக்கும்போது விந்தணுக்களின் உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கும். புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி, காசநோய் போன்ற பல்வேறு வைரல் நோய்கள் விந்துப்பைகளை தாக்குகின்றன. இதனால் விந்துப்பைகள் சேதமடைகின்றன.


விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்

சிலருக்கு ஹார்மோன் மற்றும் பிற காரணங்களால் விந்துப்பைகள் வளர்வதில்லை. அதனால்கூட விந்தணுக்கள் குறைவாக இருக்கும். சிகரெட், போதை மருந்துகள், ஸ்டீராய்டுகள் போன்றவையும் பாதிக்கின்றன. 26 வயதிற்கு மேல் விந்தணுக்களின் உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். எனவே குறிப்பிட்ட வயதிற்குள்ளாக திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உயிரணு வளர்ச்சிக்கு என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

நிறைய காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுதல், நச்சு உணவுகளை தவிர்த்தல் போன்றவை அவசியம். தவிர ஆரோக்கியமான மனநிலை மிகவும் முக்கியமானது. பாதாம், பிஸ்தா, செவ்வாழை மற்றும் அத்திப்பழம் சாப்பிட்டால் விந்தணு உற்பத்தி அதிகமாகும் போன்றவையெல்லாம் நிரூபிக்கப்படாத விஷயங்கள். முறையான தரவுகள் மற்றும் நிரூபிக்கப்பட்ட சோதனைகளின் அடிப்படையிலேயே இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Updated On 28 Nov 2023 12:15 AM IST
ராணி

ராணி

Next Story