இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வளர்ந்துவரும் டெக்னாலஜி, மாடர்ன் வாழ்க்கைமுறை, சோஷியல் மீடியா போன்றவை அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, பிஸியாக வைத்திருந்தாலும், இதனால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ டீனேஜ் பருவத்தினர்தான். குழந்தைகளுடன் செலவிட நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய பெற்றோர் அவர்களுடைய மனநிலையை புரிந்துகொள்ளாமல் பிறருடன் ஒப்பிட்டு பேசுவது, போதிய நேரம் செலவிடாமை போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் டீனேஜ் பருவத்தினரின் எண்ணிக்கை மற்றும் தற்கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றன. வளர் இளம் பருவத்தினரை எவ்வாறு கையாள்வது, உணவு மற்றும் கட்டுப்பாடின் அவசியம், உடல் பரிசோதனையின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் பொதுநல மருத்துவர் ஜெயந்த்.

இளம் வயது மரணங்கள் அதிகரித்துக்கொண்டே போவதற்கான காரணம் என்ன?

டீனேஜ் பருவத்தினர் தற்கொலை செய்துகொள்வதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கையில் சாதிக்கவேண்டியவை நிறைய இருந்தாலும் குறிப்பிட்ட சூழலிலிருந்து தன்னால் விடுபட முடியாது என்ற பொய்யான நம்பிக்கையால்தான் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். இதற்கு காரணம் மனச்சோர்வு. குறிப்பாக, கொரோனா காலங்களில் பள்ளிக்கு போகமுடியாமல் ஆன்லைன் வகுப்புகளில் மட்டுமே படித்துக்கொண்டிருந்ததால் ஐந்தில் ஒருவருக்கு டீனேஜ் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது 20% மன அழுத்தம் அதிகமாகி இருக்கிறது. அதே சமயம் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இதுபோன்ற மன நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான மருத்துவர்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பள்ளியில் கவுன்சிலர்கள் தேவை. நன்றாக படிக்கும் குழந்தை திடீரென நன்றாக படிக்கவில்லை என்றாலோ, நண்பர்களுடன் சரியாக பழகவில்லை என்றாலோ, தனியாக அமர்ந்து அழுதாலோ, பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் கீழ்ப்படியவில்லை என்றாலோ, நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து உடனடியாக பெற்றோரை அழைத்து இதுகுறித்து பேசவேண்டும். இந்த சூழலில் இருந்து குழந்தையை மீட்டெடுக்க பெற்றோர்கள்தான் பொறுப்பெடுக்க வேண்டும்.


இளம் பருவத்தினரிடையே அதிகரித்துள்ள தற்கொலைகள்

ஒரு குழந்தை வளர் இளம்பருவத்துக்கு மாறும்போது தன்னுடைய வரம்பு என்ன? எப்படி இருந்தால் பெற்றோர் அதட்ட மாட்டார்கள் என தன்னைத்தானே ஆராய்ந்துகொண்டிருக்கும். இந்த சூழலில் அவர்களுக்கு வரம்புகள் மற்றும் விதிமுறைகளை விதிக்கும்போது குழந்தைகளுக்கு ஒருவித டென்ஷன் ஏற்படும். அந்த நேரத்தில் பெற்றோர் அவர்களிடம் அன்பாக பேசி, மாற்ற வேண்டும். சரியாக சாப்பிடாமை, தூங்காமல் இருத்தல், டிவி மற்றும் சமூக ஊடகங்களின்மீது நாட்டமில்லாமல் சோர்வாக இருத்தல், தான் ஏன் பிறந்தோம்? என்ற எண்ணம் மேலோங்குவதால் எதிலும் நாட்டமில்லாமல் இருத்தல் போன்றவை மன அழுத்தத்துக்கு ஆளாகும் குழந்தைகளிடையே காணப்படும் முக்கிய அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்போது, உடனடியாக மனநல ஆலோசகர்களை சந்தித்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது அவசியம். அது போதாத பட்சத்தில், மாத்திரைகள் மூலம் அவர்களுக்கு சிகிச்சையளிக்கலாம்.

இன்றைய மிடில் க்ளாஸ் இந்தியர்களிடையே குழந்தைகள் மீதான எதிர்பார்ப்பு என்பது சற்று அதிகமாகவே இருக்கிறது. ‘நீதான் எங்களை பார்த்துக்கொள்ள வேண்டும்’, ‘நீதான் படித்து முன்னேற வேண்டும்’ என்பது போன்ற அழுத்தங்களை குழந்தைகள்மீது திணிக்கும்போது, டீனேஜில் அதனை அடைய முடியாதபோது கவனச்சிதறல் ஏற்பட்டு, மிகுந்த சோர்வுக்கு ஆளாகிறார்கள். அந்த நேரத்தில் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு, ‘பரவாயில்லை, பின்னர் சாதிக்கலாம்’ என ஊக்குவித்து நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உறவை ஏற்படுத்த பிள்ளைகளுடன் சேர்ந்து படம் பார்ப்பது, அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து அவர்களுடன் பேசுவது போன்றவை அவசியம். பெற்றோரிடம் எதையும் பேசலாம் என்ற மனநிலை குழந்தைகளுக்கு உருவாக வேண்டும். படிப்பில் சாதிக்க முடியாவிட்டாலும், விளையாட்டு, இசை போன்ற பிற துறைகளில் முன்னேற அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.


தூக்கமின்மையால் அவதிப்படும் வளர் இளம் பருவத்தினர்

தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் என்ன?

அனைவருமே 6 - 8 மணிநேரம் தூங்குவது மிகவும் அவசியம். சரியாக தூங்காவிட்டால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யாமை, மைக்ரேன், வலிப்பு நோய் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. தூக்கமின்மைக்கு பழக்கவழக்கங்கள் முக்கிய பங்காற்றுகிறது. மாலை 4 மணிக்குமேல் கஃபைன், கோக் அருந்துதல், சண்டை, பழிவாங்குதல் போன்ற திரைப்படங்களை பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணிநேரம் முன்பே செல்ஃபோன், டிவி பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டும். மாலை நன்றாக உடற்பயிற்சி செய்தாலே உடல் சோர்வாகி இரவில் நன்றாக தூக்கம் வரும்.


உடற்பருமனும் ஜங்க் உணவுகளும்

இன்றைய தலைமுறையினருக்கு உடல் எடையை கட்டுக்குள் வைத்தல் எவ்வளவு முக்கியம்?

உடல் எடை கூட கூட மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி, நீரிழிவு போன்ற பிற நோய்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகிக்கொண்டே போகும். குறிப்பாக, உடல் எடை அதிகரிக்கும்போது சுய மதிப்பீடு குறைந்து மன நோய் ஏற்படும். எனவே BMI அளவானது 18.5 - 25 க்குள் இருக்கவேண்டும். அதே சமயம் உடல் எடையை குறைப்பதற்காக சாப்பிடாமல் இருப்பது நல்லதல்ல. சராசரியாக 5.8 அடி உயரமுள்ள ஆண் 75 கிலோ எடையுடன் இருப்பது போதுமானது. எனவே இனிப்பு, எண்ணெய் நிறைந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. இன்று நிறைய பேர் நார்ச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கிறார்கள். நார்ச்சத்து மிகுந்த உணவுகள் வயிறை நிரப்புவதோடு, பித்தத்தை வெளியேற்றுகிறது. எனவே சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.


மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை

ஒரு ஆண்டில் எத்தனை முறை மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது?

ஆரோக்கியமாக இருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவரை அணுகி ஜெனரல் பரிசோதனை செய்வது நல்லது. குறிப்பாக, ரத்த அழுத்தம், எடை, சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, சிறுநீரகம் போன்ற பரிசோதனைகளை செய்வது அவசியம். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் தலைவலி வரும், சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் தாகம் எடுக்கும், சிறுநீர் அதிகமாக வரும் என்று நினைப்பது தவறு. ஆனால் உண்மையில் ஒரு சர்க்கரை நோயாளிக்கு 10 வருடங்கள் ஆகியும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ரத்த கொதிப்பு ஒரு ரகசிய கொலையாளி. சாதாரணமாக ஒரு மனிதனுக்கு 130/80 பிபி இருப்பதுதான் நல்லது. அதில் லேசான உயர்வு ஏற்படும்போது எந்தவித அறிகுறிகளும் தென்படாது. எனவே மருத்துவரை அணுகி பரிசோதித்தால் மட்டுமே அதனை கண்டறிய முடியும். எனவே வருடத்திற்கு ஒருமுறையாவது மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது. குறிப்பாக, சர்க்கரை மற்றும் பிபி நோயாளிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.

Updated On 19 Dec 2023 12:15 AM IST
ராணி

ராணி

Next Story