இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நாட்டின் வருங்கால தூண்கள் மாணவர்கள். அவர்களை சரியாக வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூகத்திற்கு இருக்கிறது. அந்த பொறுப்பை எப்படி நிறைவேற்றுவது என பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி வரும் அபி சங்கரி கூறும் கருத்துகளை காண்போம்.

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் எதனால் வந்தது?

நான் ஆசிரியராகத்தான் எனது கேரியரைத் தொடங்கினேன். சிறு வயதிலேயே தவறை சரி செய்வது அவர்கள் வளர்ந்து பெரியவரான பின் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும். இளம்பிராயத்தில் இருக்கும் மாணவர்கள் மீது கவனம் செலுத்தினால் பின்னாளில் சமூகத்தில் நடக்கும் பாதிப்புகளை தடுக்க முடியும் என்ற ஆர்வத்தால்தான் நான் பெரும்பாலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை கூறி வருகிறேன்.


மனநல ஆலோசகர் அபி சங்கரி

மாணவர்களின் தற்கொலை எண்ணத்துக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

சமீபகாலமாக தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக நான் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும்தான் சுட்டிக் காட்டுவேன். நாம் மாணவர்களைப் பார்க்கும் கண்ணோட்டம் மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்கிறது. கல்வி அவசியம்தான் அதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதுதான் உலகம் என்ற மனப்போக்கு தேவையில்லாதது. இதனால் நன்கு படிக்கும் மாணவர்கள்கூட தேர்வு பயம் காரணமாக தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெறுபவராக இருந்தாலும் தேர்வு நன்றாக எழுதவில்லையோ மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற பயத்தாலும் தவறான முடிவு எடுக்கின்றனர்.


தேர்வில் தோல்வி அடைந்தாலும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. அதற்கு முக்கியமாக மாணவர்களுக்கு தேவையானது தன்னம்பிக்கை. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் தனக்கு ஏற்றத் துறை எதுவென தேர்ந்தெடுத்து அதில் நம்பிக்கையுடன் முன்னேறலாம். உதாரணமாக பெற்றோர் நிறைவேறாத தங்கள் கனவை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்களால் அடைய முடியாத ஆசையை குழந்தைகளைக் கொண்டு நிறைவேற்றும்படி வற்புறுத்துகிறார்கள். நமது குடும்பத்தில் யாரும் இதுவரை டாக்டர் ஆனதில்லை, ஐஏஎஸ் படித்ததில்லை, நான் ஐபிஎஸ் படிக்க ஆசைப்பட்டு படிக்க முடியாமல் போய்விட்டது இப்படி பல காரணங்களைச் சொல்லி, அவர்களுக்கு பிடிக்குமா, முடியுமா என்றெல்லாம் யோசிக்க விடாமல் கட்டாயப்படுத்தி ஏதேனும் துறையில் நுழைக்கப் பார்க்கிறார்கள். இப்படியாக பெற்றோரும் சமூகமும் சேர்ந்து அவர்கள் மீது கொடுக்கும் அழுத்தத்தால் அவர்கள் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.

பள்ளிப்படிப்பு முடித்ததும் ஏதோ படிப்பைத் தேர்ந்தெடுத்து அதனால் பயனில்லாமல் தவிப்பவர்கள் உண்டு. அதேபோல் கல்லூரிக் காலத்தில் தவறான பழக்கத்துக்கு ஆட்பட்டு வாழ்வை தொலைப்பவர்களும் உண்டு. அவர்களுக்கு நீங்கள் கூறுவது என்ன?

வளரிளம் பருவத்தில் இந்த மருந்தை உட்கொண்டால் நன்றாகப் படிக்கலாம். இந்த சாக்லெட் சாப்பிட்டால் அதிக நேரம் விழித்திருந்துப் படிக்கலாம். இப்படி தவறான தகவல்களால் கெட்டப் பழகத்திற்கு ஆளாகிறார்கள். இதிலிருந்து அவர்கள் தப்பிக்க வேண்டுமானால் அவர்களுக்கு தெளிவான இலக்கு இருக்க வேண்டும். தான் என்னவாக வேண்டும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். தன்னிடம் இருக்கும் ஆற்றல் குறித்தும் குறிக்கோள் குறித்தும் தெளிவு இருக்க வேண்டும். இதற்கு உற்சாகம் தரக்கூடிய நல்ல நண்பர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாம். உயர் படிப்பு படிப்பதாக இருந்தாலும், வேலை சம்பந்தமாக இருந்தாலும் இலக்கை சரியாக நிர்ணயிக்க வேண்டும். அப்படி நிர்ணயிப்பதில் குழப்பம் இருந்தால் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுக்கலாம்.


படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

இந்த காலகட்டத்தில் நிறைய கல்வி முறைகள் உள்ளன. பட்டம்தான் படிக்க வேண்டும் என்றில்லை: 1 மாதம் முதல் 6 மாதங்கள் வரையான குறைந்த காலத்தில் படிக்கக் கூடிய பட்டயப் பயிற்சிப் படிப்புகள் நிறைய உள்ளன. இதற்கான வேலைவாய்ப்புகளும் அதிகம். பிளம்பர், எலக்டிரீசியன், விற்பனை பிரதிநிதி, மேலாளர், காப்பீடு, அழகுக்கலை நிபுணர் போன்ற வேலைவாய்ப்புள்ள துறைகள் அதிகம் இருக்கிறது. நிறைய துறைகளில் இப்போது ஆட்கள் தேவையாகத்தான் இருக்கிறது. டிஜிட்டல் துறை, வீட்டிலிருந்தபடியே கைபேசியில், கணினியில் பணியாற்றும் வேலை என வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. அதற்கான தகவல்களை மட்டும் நாம் சரியாக தேடிக் கண்டறிந்தால் போதும். நிச்சயம் நாம் ஒரு நல்ல வேலைவாய்ப்பினைப் பெற முடியும்.

செல்ஃப் ஹிப்னாடிசம் நல்லதா?

செல்ஃப் ஹிப்னாடிசம் நல்லதுதான். தன்னம்பிக்கை ஊட்டும் வழிமுறைகளுள் ஒன்று செல்ஃப் ஹிப்னாடிசம். ‘நான் நன்றாக படிக்கிறேன்’, ‘நான் நன்றாக வளர்கிறேன்’ போன்ற வாசகங்கள் அடங்கியவைதான் செல்ஃப் ஹிப்னாடிசம். அதை மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை முறையாக கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். ஏனோதானோவென்று செய்யாமல் முறையாக செய்தால் அதில் பக்க விளைவு எதுவும் இருக்காது. ஊக்க மருந்து எடுத்துக் கொள்வது நிச்சயம் பக்க விளைவை உண்டாக்கும். அது சரியானதும் கிடையாது. ஊக்க மருந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பைத் தரக்கூடியது. அதனால் அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தனது பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து செயல்பட வேண்டும். தன்னுடைய ஆற்றல் என்ன? எந்தத் துறையில் சென்றால் தனது ஆற்றலை முழுமையாக செலுத்த முடியும்? என்பதை சிந்தித்து அதை செயல்படுத்தினால் கட்டாயம் வெற்றி பெறலாம்.


செல்ஃப் ஹிப்னாடிசம்

தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் மேலோங்கும்போது உடனே மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 எண்களில் தொடர்பு கொண்டால் உரிய ஆலோசனைகளை இலவசமாகப் பெறலாம்.

Updated On 14 Aug 2023 6:49 PM GMT
ராணி

ராணி

Next Story