இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒருசில நோய்களுக்கு தீர்வே இல்லை என்று சொல்வார்கள். ஆனால் இன்று வளர்ந்துகொண்டிருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மருத்துவத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அப்படி பல லட்சங்களை செலவழித்து சிகிச்சை அளித்தாலுமே சிலருக்கு ஒருசில குறிப்பிட்ட நோய்களிலிருந்து விடுதலை கிடைப்பதில்லை. அப்படி குறுகிய அல்லது நாள்பட்ட வியாதி என எதுவாக இருந்தாலும் அக்குபஞ்சர் சிகிச்சைமூலம் குறைந்த செலவில் முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் லூர்து சேத். பிற மருத்துவத்தைப் போன்று உடனடி தீர்வு கிடைக்காவிட்டாலும் பக்கவிளைவுகளின்றி முழுமையான தீர்வை அக்குபஞ்சர் சிகிச்சையில் பெறமுடியும் என்கிறார் அவர்.

அக்குபஞ்சர் என்றால் என்ன? இதன்மூலம் எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?

ஊசிகள்மூலம் உடலிலிருக்கும் சக்தி ஓட்டபாதைகளை தூண்டி, எல்லாவிதமான உறுப்புகளுக்கும் எனர்ஜி கொடுத்து பிரச்சினைகளை சரிபடுத்துவதுதான் அக்குபஞ்சர். இந்த சிகிச்சை வளர்ச்சியடைந்தபோது சீனாவிலிருந்து 1988 காலகட்டத்தில் பஸ்லூர் ரகுமான் என்ற மருத்துவரால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இப்போது இந்த மருத்துவத்தில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதில் நல்ல பலன் கிடைப்பதால் பிற மருத்துவத்திலிருந்து நிறைய பேர் அக்குபஞ்சருக்கு மாறிவருகிறார்கள்.

அக்குபஞ்சர் மருத்துவத்துக்கும் பிற மருத்துவத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எல்லா பிரச்சினைக்கும் அறுவைசிகிச்சை சரியான தீர்வா?

அக்குபஞ்சரை பொருத்தவரை சிகிச்சை செலவு குறைவு. இதை ஏழைகளுக்கான சிகிச்சை என்று சொல்லலாம். அதேபோல் பூரணமான சுகம் அக்குபஞ்சரில் கிடைக்கும். ஹோமியோ மற்றும் சித்த மருத்துவத்திலும் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அது சிகிச்சையளிக்கும் மருத்துவரை பொருத்தது. பொதுவாகவே அலோபதி மருத்துவத்தை பிற மருத்துவங்களுடன் ஒப்பிடக்கூடாது. அவசர சிகிச்சைக்கு கைக்கொடுக்கக்கூடிய மருத்துவமாக அதை பார்க்கலாம். அதுவே நீண்டகாலமாக இருக்கும் பல வியாதிகளுக்கு அக்குபஞ்சர் நல்ல மருத்துவமாக பார்க்கப்படுகிறது.


ஊசியை பயன்படுத்தி வலியின்றி அளிக்கப்படும் அக்குபஞ்சர் சிகிச்சை முறை

உதாரணத்திற்கு 15 வருடங்களாக இருக்கும் தலைவலி, 4 வருடங்களாக இருக்கும் முதுகுதண்டு பிரச்சினை போன்றவற்றை அக்குபஞ்சர் சிகிச்சைமூலம் சரிசெய்ய முடியும். நாள்பட்ட வியாதியையும், குறுகிய கால வியாதியையும்கூட அக்குபஞ்சரால் சரிசெய்ய முடியும். ஊசியால் குத்துவதால் வலி இருக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் இந்த சிகிச்சையில் வலி இருக்காது. அக்குபஞ்சர் சிகிச்சைமூலம் குறைந்த செலவிலேயே மருந்து, மாத்திரை மற்றும் அறுவைசிகிச்சைகளின்றி வியாதிகளை குணப்படுத்த முடியும். உடல்நல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சீக்கிரத்திலேயே 100% குணப்படுத்திவிட முடியும்.

என்னென்ன மாதிரியான நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் மூலம் தீர்வு கிடைக்கும்?

அக்குபஞ்சர் மூலம் எல்லா வியாதிகளையுமே குணப்படுத்த முடியும். அதில் ஒருசில வியாதிகளை குணப்படுத்துவதில் சிரமம் இருக்கும். குறிப்பாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல; ஏனென்றால் பக்கவாதம் ஏற்படுபவர்களுக்கு மூளையிலிருக்கும் நியூரான்கள் செத்துவிடும். அங்கு புது நியூரான்கள் உண்டாகாது. அவற்றை உயிரூட்டவும் முடியாது. எனவே அந்த நியூரான்களால் இயங்கிவந்த உறுப்புகள் செயலிழந்துவிட்டால் அவ்வளவுதான். அதை சரிசெய்வது முடியாதது. அதேபோல் கேன்சரின் ஸ்டேஜ் மாறும்போது அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பது கடினம். ஆரம்பநிலையிலேயே வந்தால் சிகிச்சை அளிக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் நான்காவது நிலையில்தான் சிகிச்சைக்கே வருகிறார்கள். அதேபோல் பயாப்ஸி பண்ணாமல் அக்குபஞ்சர் சிகிச்சைக்கு வந்தால்கூட சரிசெய்ய வாய்ப்பிருக்கிறது.


மற்ற மருத்துவத்தைப் போன்று அக்குபஞ்சரில் மருந்து மாத்திரைகள் இல்லை

பிற மருத்துவங்களில் இருப்பதைப்போன்று அக்குபஞ்சரில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பெரிதாக விழிப்புணர்வு இல்லையே. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அக்குபஞ்சர் அசோசியேஷன் மூலம் நாடாளுமன்றம் வரை இதுகுறித்து எடுத்துச்சென்றிருக்கின்றனர். அவர்கள் ஒருசில வரைமுறைகளை நிர்ணயிக்கின்றனர். ஆனால் அதற்குள் அக்குபஞ்சர் மருத்துவர்கள் நிறையப்பேர் இல்லை. அதனாலேயே முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அக்குபஞ்சரை குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் கொண்டுவந்தால் நிச்சயம் நிறைய மருத்துவர்களை உருவாக்கலாம். இப்போதே நிறைய இடங்களில் அக்குபஞ்சர் மருத்துவமனைகளை பார்க்கமுடிகிறது. அதனால் இந்த துறை அசுர வளர்ச்சி அடைந்துவருகிறது என்றே சொல்லலாம். பிற மருத்துவ சிகிச்சைகளில் தவறான மருந்தை கொடுத்தால் கண்டிப்பாக எதிர்மறை விளைவுகள் ஏற்படும். ஆனால் அக்குபஞ்சரில் தவறான சிகிச்சை அளித்தாலும்கூட எதிர்மறை விளைவுகள் ஏற்படாது.

எதிர்மறை விளைவுகள் ஏற்படாது என்று எப்படி சொல்கிறீர்கள்?

உதாரணத்திற்கு, தண்ணீர் பஞ்சபூதங்களில் ஒன்று. தண்ணீரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகப்படுத்த நினைக்கிறீர்கள். ஆனால் அதை அதிகப்படுத்தும் புள்ளிக்கு பதிலாக குறைக்கும் புள்ளியில் அழுத்தம் கொடுக்கிறீர்கள். அப்படி கொடுப்பதால் தண்ணீர் அளவு குறையப்போவதில்லை. அதை சமப்படுத்த முடியுமே தவிர குறைக்கமுடியாது. அதுபோல அக்குபஞ்சர் சிகிச்சையை தவறாக அளித்தாலும் இருக்கும் பிரச்சினையை சமப்படுத்த முடியுமே தவிர, புதிதாக ஒரு வியாதியை உருவாக்க முடியாது. பிற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் நீண்ட நாட்கள் ஒரு நோய்க்கு மருந்து சாப்பிடும்போது, சிறுநீரகம் செயலிழந்துவிடும். ஆனால் அக்குபஞ்சரில் அதுபோன்ற பக்கவிளைவுகள் கிடையாது. அக்குபஞ்சரை பொருத்தவரை விளைவுகள் இருக்குமே தவிர, பக்கவிளைவுகள் என்பது 100% கிடையாது.


அக்குபஞ்சரில் பக்கவிளைவுகள் கிடையாது - மருத்துவர் லூர்து சேத்

ஒரு அக்குபஞ்சர் மருத்துவராக தமிழக அரசுக்கு என்ன வேண்டுகோள் வைக்கிறீர்கள்?

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கென்று பாடத்திட்டத்தை வகுத்து, அதை கல்விநிறுவனங்களில் அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இதை ஒரு டிகிரியாகவே கொண்டுவர வேண்டும். இன்றுவரை அக்குபஞ்சர் மருத்துவத்தை தனியாரில்தான் படிக்கிறார்கள். நானும் நிறைய தனியார் நிறுவனங்களுக்கு சென்று படித்திருக்கிறேன். இப்போது பாடமும் எடுத்துவருகிறேன். ஆனால் 100% அக்குபஞ்சரை புரியும் அளவிற்கு எங்கும் பாடம் சொல்லித்தர படுவதில்லை. ஏனென்றால் இது ஒரு பாடம் போன்று இல்லாமல் கலை போன்றுதான் இயங்கிவருகிறது. ஆர்வம் இருந்தால் மட்டுமே முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். இந்த படிப்பிற்கு முழு வடிவம் கிடையாது. நாடித்துடிப்பை பார்த்து உடலின் தூண்டுதல்களை சரிசெய்ய வேண்டும். இதை ஒரு மருத்துவரால் முழுமையாக சொல்லித்தர முடியாது என்பதால்தான் அரசு இதற்கென்று பாடத்திட்டம் மற்றும் வரையறைகளை வகுக்கவேண்டும்.

கொரோனா போன்ற தொற்றுவியாதிகளை அக்குபஞ்சரால் குணப்படுத்த முடியுமா?

கொரோனா காலத்தில் அக்குபஞ்சர் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும், என்னிடம் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த ஒருசில நோயாளிகளுக்கு கொரோனாவிலிருந்து விடுபட சிகிச்சை அளித்திருக்கிறேன். ஒருசிலர் பூரண குணமடைந்து இருக்கின்றனர்.

Updated On 29 July 2024 11:49 PM IST
ராணி

ராணி

Next Story