ஜெயலலிதா அவ்ளோ சீக்கிரம் பாராட்டமாட்டாங்க! ஆனா என்னை பாராட்டுனாங்க - மருத்துவர் கீதாலட்சுமி
சவால்களும் தடைகளும் இல்லாத வேலைகள் என்று இங்கு எதுவுமே இல்லை. எவ்வளவு உயர்ந்த பதவியாக இருந்தாலும் அதிலும் பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதுபோக, பிடித்த வேலையை செய்வது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதாது, சரியான திட்டமிடலும் வாழ்க்கையில் முன்னேற தேவை என்கிறார் அரசு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் மருத்துவர் கீதாலட்சுமி. மேலும் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர்கள் எப்படி அவர்களை வழிநடத்த வேண்டும்? தவறான முடிவுகளை எடுக்கும்போது உருவாகும் பிரச்சினைகள் என்னென்ன? என்பது பற்றியெல்லாம் நம்முடன் உரையாடுகிறார்.
நீங்கள் உங்களுடைய பயணத்தில் பல சவால்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் தாண்டி சாதித்து காட்டவேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது?
எனக்கு மேலதிகாரிகள் ஒருசிலர், ‘உன்னால் முடியாது’ என்று சொல்லி திட்டுவார்கள். அப்போதெல்லாம், ‘எதற்காக இவர்களிடமெல்லாம் திட்டு வாங்கவேண்டும்’ என்று தோன்றும். அதற்காகவே உதாசீனப்படுத்தியவர்கள் முன்பு செய்துகாட்ட வேண்டும், அவர்களுக்கு மேல் உயரவேண்டும் என்ற உந்துதல் வரும். எப்படியெல்லாம் நம்முடைய உயர்வை தடுக்கலாம் என்று திட்டமிடுவார்கள். ஆனால், பொறுமையாக இருந்து, நம்மை மேம்படுத்துவதற்கான வழிகளை பின்பற்றினால் அது தானாக நடக்கும். நமது குறிக்கோள் என்னவென்பது எப்போதும் நம் மனதிலிருக்கவேண்டும். அப்படி இருந்தால் அதற்கான வேலைகளை சரியாக செய்வீர்கள். குறிக்கோள் இல்லையென்றால் அதற்கான வழிகளை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எனக்கு எப்போதும் நான் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால்தான் முதலில் பேராசிரியராக பயணத்தை ஆரம்பித்து பல்கலைக்கழக டீனாக உயர்ந்திருக்கிறேன். டீனாக இருந்தாலும் கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரைக்கும் வேலை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிறரிடம் வேலை வாங்கக்கூடிய திறமை இருக்கும். அதுபோக இறைவன் அருளும் கட்டாயம் தேவை.
வேலையில் ஏற்படும் சவால்களை அணுகும் வழிமுறைகள்
நமது வேலையைக் காட்டிலும் சற்று கூடுதலாக சிரத்தை எடுத்து வேலை செய்யவேண்டும். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, நானே களத்தில் இறங்கி வேலைசெய்தேன். அதனாலேயே துணைவேந்தராக பதவி உயர்வு கிடைத்தது. இருப்பினும், பப்ளிகேஷன், ரிசர்ச் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்துவேன். தொடர்ந்து என்னை மெருகேற்றிக்கொண்டே இருந்ததால், பிறருக்கு முன்மாதிரியாகவும், சமுதாயத்திற்கு பயன்படுபவராகவும் இருக்க முடிகிறது.
உங்களுடைய இரண்டு மகன்களையும் மருத்துவத் துறைக்குள் கொண்டுவராததன் காரணம் என்ன?
நானும் என் கணவரும் மருத்துவர்கள் என்பதால், சிறுவயதிலிருந்தே நாங்கள் படும் சிரமங்கள் அனைத்தையும் இருவரும் பார்த்தே வளர்ந்தனர். அதனாலேயே வேறு ஏதாவது படிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, இன்ஜினியரிங், எம்பிஏ படித்து முடித்துவிட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறார்கள். பொதுவாகவே மருத்துவர்களின் பிள்ளைகளும் மருத்துவர்தான் ஆகவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் எனக்கு diversity மிகவும் பிடிக்கும். மருத்துவத்துறையில் எனக்கே போதும் என்றாகிவிட்டதால், மற்ற துறைகளையும் பார்க்கவேண்டும் என்று எனக்கும் தோன்றியது, எனது மகன்களுக்கும் அப்படியே தோன்றியதால் நானும் மருத்துவத்துறைக்கு வரச்சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. மேலும் மருத்துவத்துறையை பொருத்துவரை மேலும் மேலும் மேற்படிப்புகளை படித்துக்கொண்டே இருக்கவேண்டும். இதில் செட்டில் ஆகவே கிட்டத்தட்ட 45 வயதாகிவிடும். அதனாலேயே பிள்ளைகளுக்கு பிடித்த துறையிலேயே போக விட்டுவிட்டேன்.
மருத்துவர் கீதாலட்சுமியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டிய தருணம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பீரியடில் நிறைய உழைத்திருக்கிறீர்கள்.. அவர்களிடமிருந்து உங்களுக்கு பாராட்டு கிடைத்திருக்கிறதா?
எனக்கு ஜெயலலிதாவை பார்க்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் என்னால் அவர்களை பார்க்கமுடியாது என்றும் எனக்கே தெரியும். ஒருமுறை அவரிடம் நிறைய பேர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர், ‘call that lady' என்று சொன்னார்கள். என்னைத்தான் சொல்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. என் பக்கத்திலிருந்தவர்கள், ‘உன்னைத்தான் கூப்பிடுகிறார்’ என்று சொல்லி என்னை தள்ளிவிட்டார்கள். அவரே என்னை கூப்பிட்டு கைகுலுக்கி, “As a lady, You are doing a very good job, quite interesting" என்று சொன்னார். அந்த நேரத்தில் என்னால் சிரிக்கக்கூட முடியவில்லை. கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர்தான் வந்தது. நீண்ட நேரம் என் கைகளை பிடித்துக்கொண்டே இருந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் யாரையும் பாராட்ட மாட்டார். உண்மையிலேயே நன்றாக வேலைசெய்தால் மட்டும்தான் பாராட்டுவார். அவரிடமிருந்து கிடைத்த அந்த பாராட்டை என்னால் மறக்கவே முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் நம்முடைய வேலையை செய்தால் அதற்கான வெகுமதி நிச்சயம் தானாக கிடைக்கும்.
பிள்ளைகளை எப்படி நடத்தவேண்டும் என்பது குறித்து மருத்துவர் கீதாலட்சுமியின் ஆலோசனை
பெற்றோர்கள் தங்களால் செய்யமுடியாததை பிள்ளைகள்மீது திணிக்கும்போது அவர்கள் தவறான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்களே. இதை எப்படி சரிசெய்வது?
பிள்ளைகளுக்கு விருப்பமில்லாத எதிலும் அவர்களை தள்ளவேண்டாம் என்பதுதான் அனைத்து பெற்றோர்களுக்கும் நான் கூறும் அறிவுரை. பிள்ளைகள் பள்ளியில் படிக்கும்போதே அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பது பெற்றோர்களுக்கு தெரியும். அதை வைத்து அவர்களுக்கு விருப்பமிருக்கும் துறையில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். குழந்தைகளுக்கு எந்தெந்த விஷயங்களில் ஆர்வம் இருக்கிறதோ அதில் இருக்கும் நன்மை தீமைகளை எடுத்துக்கூற வேண்டும். உதாரணத்திற்கு, மருத்துவ துறையில் ஆர்வம் இருந்தால் அதில் வாய்ப்புகள், பலன்கள் போன்றவற்றை தெளிவாக சொல்லவேண்டும். அதில் விருப்பம் இருந்தால், அந்த துறையை தேர்ந்தெடுப்பார்கள். விருப்பமில்லாத துறையை திணிக்கும்போது, பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அனைத்தையும் விரிவாக எடுத்துக்கூற வேண்டும். சொல்லும்போது விருப்பம் இல்லாததை திணிக்கும்போது, அதிலிருந்து மீளமுடியாமல் தவறான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இப்போது கல்வியானது மிகவும் விரிவடைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்து அதில் எப்படியெல்லாம் முன்னேறலாம் என்பதைத்தான் பார்க்கவேண்டும். பிடிக்காததை திணிக்கும்போது பெற்றோர், பிள்ளைகள் இருவருக்குமே மன அழுத்தம்தான் ஏற்படும். இதை தவிர்க்க, விருப்பமானதை மட்டும் செய்யவேண்டும்.