இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நலமாக வாழ ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்ற பெயரில் பலரும் தவறான வழிகாட்டுதல்களை பின்பற்றுகின்றனர். உண்மையில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை எப்படி பின்பற்ற வேண்டும், காலை உணவு உண்பதை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பொதுநல மருத்துவர் ஜெயந்த்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவது எப்படி?

இந்தியா போன்ற நாடுகளில் ‘வருமுன் காப்போம்’ என்ற கொள்கையை நம் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். 6 முதல் 8 மணி நேரம் என்று உடலுக்கு போதுமான ஓய்வு கொடுத்து இடையூறின்றி தூங்க வேண்டும். நன்றாக உடற்பயிற்சி செய்யவேண்டும். தேவையற்ற துரித உணவு, செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்பட்ட ஆகாரம், மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வேலை - வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் கையாள்வது சிறந்தது.


ஆரோக்கியமான உணவு, தூக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள்

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

‘காலை உணவை அரசனைப் போலவும், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள்’ என்ற ஆங்கிலேய பழமொழி உண்டு. ஆனால் நம் நாட்டை பொருத்தவரை பெரும்பாலானோர் காலைநேரத்தைக் காட்டிலும் இரவில்தான் அதிக உணவை சாப்பிடுகின்றனர். ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம். காலையில் அதிகமாக சாப்பிட்டால் சோம்பேறியாக இருப்போம். மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யாது என்பதெல்லாம் தப்பான கருத்து. நம் மூளைக்கு எரிபொருளாக இருப்பது குளுக்கோஸ். நாம் காலை உணவு உட்கொண்டால் மட்டுமே மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். நாமும் சுறுசுறுப்பாக பணிபுரிவோம். முக்கியமாக காலை உணவு உட்கொள்ளாததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் எளிதாக தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

உண்ணாவிரதம் என்று 17 - 20 மணி நேரமெல்லாம் சாப்பிடாமல் இருப்பது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சரி. ஆனால் சாதாரண எடை உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கும், உடல் எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) குறைவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் மெட்டபாலிசமும் மெதுவாகிவிடுகிறது. ஒருமுறை நன்றாக சாப்பிடுவதைக் காட்டிலும் மூன்று வேளையும் கொஞ்சம் கொஞ்சமாக புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளவதே சிறந்தது.


ஆரோக்கியமான காலை உணவு

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் காலை உணவை தவிர்க்க நேர்ந்தால் அதை எப்படி சமன் செய்வது?

எக்காரணம்கொண்டும் காலை உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லதல்ல. உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஒரு சில நாட்கள் வேண்டுமானால் சாப்பிடாமல் இருப்பது பரவாயில்லை. ஆனால் அதையே தொடர்ச்சியாக செய்வது நல்லதல்ல. உணவு சாப்பிடவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒரு வாழைப்பழம் அல்லது 2 துண்டு ரொட்டி அல்லது 4 பிஸ்கட் சாப்பிடுவது நல்லது. அதேபோல் காலையில் அதிக தண்ணீர் குடிப்பது மிகமிக அவசியம். தண்ணீர் கூட குடிக்காமல் பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். அப்படி இருந்தால் நிச்சயம் சிறுநீரகத்தில் கல் வரக்கூடும். காலையிலே 1 லிட்டர் அல்லது 1 ½ லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் காலையில் எழுந்தபிறகு 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் ஏதாவது சாப்பிடுவது நல்லது.

டயட் என்ற பெயரில் பலரும் உணவை உட்கொள்வதையே தவிர்க்கின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

உடல் எடையை குறைக்க டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பவர்கள் மூன்று வேளையும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பிறகு உடற்பயிற்சி செய்வது நல்லது. அதிக கலோரிகள் கொண்ட இனிப்பு பதார்த்தங்கள், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்தாலே எடைக்கூடுவதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக பழ வகைகள், காய்கறிகள், முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம்.


ஒருநாளில் குடிக்கவேண்டிய தண்ணீர் அளவு

ஒருநாளில் எவ்வளவு அளவு தண்ணீர் குடித்தால் உடல் நீரிழப்பு (Dehydrated) ஆகாமல் இருக்கும்?

நிச்சயமாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2.5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதை தவிர்த்தால் நிச்சயம் சிறுநீரகத்தில் கல் மற்றும் சிறுநீர் தொற்று வரும். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண்கள் அலுவலகத்திலும், பள்ளியிலும் பொது கழிப்பறை இருப்பதால் காலை முதல் மாலை வரை தண்ணீர் குடிக்காமலேயே இருந்து வீட்டிற்கு சென்ற பின்னரே தண்ணீர் குடிக்கின்றனர். இப்படி செய்யவே கூடாது. இது உடலுக்கு அதிக கேடு விளைவிக்கும். இதனால் பல பேர் தேவையற்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முக்கியமாக திறந்தவெளி தொழிலாளர்கள், வெயிலில் வேலை செய்பவர்கலெல்லாம் 3.5 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை குடிப்பது மிக மிக சிறந்தது. இதய பிரச்சினை மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு தண்ணீர் குடிப்பது போதுமானது.

Updated On 16 Oct 2023 7:10 PM GMT
ராணி

ராணி

Next Story