இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமூக ஊடகங்களின் வளர்ச்சியானது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை பரப்ப உதவுகிறதோ அதே அளவிற்கு தவறான செய்திகளையும் மக்களிடையே பரப்புகிறது. எதையாவது பேசி எப்படியாவது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகவேண்டும் என நினைப்பவர்கள் தற்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் இது ஒரு சிறந்த விளம்பரதளமும் கூட. குறிப்பாக, மருத்துவம் குறித்த தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் நிறைய பரவுகிறது. அதனை நம்பி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர்கள் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் போலியான தகவல்களை தனது தமாஷான பேச்சால் ட்ரெண்டிங் வார்த்தைகளையே பயன்படுத்தி பிரபலமானவர்தான் ‘உருட்டு’ ஃபேமஸ் டாக்டர் முருகு சுந்தரம். சருமம் தொடர்பான போலி விளம்பரங்கள் குறித்து என்ன சொல்கிறார்? பார்ப்போம்.

ஒருபுறம் விலை உயர்ந்த க்ரீம்கள், மற்றொருபுறம் முல்தானி மெட்டி போன்ற இயற்கை முறைகள் குறித்து பேசுகிறார்கள். இதில் எது உண்மை?

முல்தானி மெட்டி, கரையான் புற்று போன்றவை எல்லாம் மண்தான். மக்களுடைய கற்பனை திறனுக்கு அளவே கிடையாது. மனதில் தோன்றியதையெல்லாம் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவுமின்றி பேசுகிறார்கள்.


ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முறை

ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தால் சிலருக்கு மோசமான ரிசல்ட் கிடைக்கிறதே? எதனால்?

முகத்தின் நடுவில் கோடுபோட்டு இரண்டாக பிரித்தால், ஒருபுறம் இருப்பதை போன்ற அமைப்பு மற்றொருபுறம் இருக்காது. மூக்கு, வாய் போன்றவை ஒவ்வொரு புறமும் மாறுபடும். சிலருக்கு மச்சம் இருப்பது, கன்னத்தில் குழி விழுவது போன்றவை தனி அழகுதான். இதனை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றுவது நல்லதல்ல. தீக்காயம், அன்னப்பிளவு போன்றவற்றை சரிசெய்ய உருவாக்கப்பட்டதுதான் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை என்கிற ப்ளாஸ்டிக் சர்ஜரி. இதுபோன்று ப்ளாஸ்டிக் சர்ஜரியை பலமுறை செய்ததால்தான் பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்தார் என்ற கருத்தும் உள்ளது. இதனால் சில நடிகைகள் உயிரிழந்திருக்கிறார்கள்.

நாம் பயன்படுத்தும் அழகு பொருட்கள் சரும துவாரங்கள் வழியாக உள்ளே சென்று பலன் தருகிறதா?

சரும துவாரங்கள் வழியாகத்தான் ரோமம் வருகிறது. அந்த வழியாகத்தான் எண்ணெய் மற்றும் வியர்வை போன்றவை வெளியே வருகிறது. அதே வழியில்தான் நாம் முகத்தில் தடவும் அனைத்தும் உள்ளே செல்கிறது. சரும துவாரங்கள் சருமத்தின் ஜன்னல் போன்றது. இந்த துவாரங்கள் வழியாக ஆபத்தான மாசுக்கள் உள்ளே செல்லாமல் இருக்கத்தான் அவை மிகச்சிறியதாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பொருளின் மூலக்கூறு எடையானது துவாரத்தை விட சிறியதாக இருந்தால்தான் சருமத்துக்குள் இறங்கும். ஆனால் முல்தானி மெட்டி அல்லது க்ரீம்கள் போன்றவை சருமத்துவாரங்களுக்குள் புகாமல் அதை மூடிவிடும். இதனால் உள்ளே இருக்கும் கழிவுகள் வெளியேற முடியாமல் போய்விடும். அதிகப்படியான காஸ்மெட்டிக்குகளை பயன்படுத்துபவர்களுக்கு இதனால்தான் முகப்பரு போன்ற பிரச்சினைகள் வருகின்றன. எனவே தோல் சுவாசிப்பதற்கு ஏதுவாக துவாரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள்

முகப்பருவை கிள்ளினால் அது பரவிவிடும் என்கிறார்கள். அது உண்மையா?

முகப்பருவை கிள்ளினால் அந்த இடத்தில் தழும்பாகிவிடும். சருமத்தில் ஒவ்வொரு ரோமத்தின்கீழும் ஒரு எண்ணெய் சுரப்பி இருக்கிறது. அதில் சுரந்திருக்கும் எண்ணெயை கழுவி சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அழுக்கு படிந்து துளை மூடிவிடும். இதனால் உள்ளே இருக்கும் எண்ணெயானது ஒன்றுதிரண்டு உப்பி வெடித்துவிடும். இதைத்தான் முகப்பரு என்கின்றனர். இதனை கிள்ளுவதால் அதிலிருக்கும் தொற்றுக்கள் பரவி பக்கத்திலும் முகப்பரு வரலாம். டீனேஜ் பருவத்தில் வரும் முகப்பருவானது தானாகவே சரியாகிவிடும். ஆனால் Nodulocystic acne என்று சொல்லக்கூடிய பெரிய பெரிய கட்டிகளுக்கு மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.

சைட் அடிப்பதால் முகப்பரு வரும் என்று சொல்வதற்கு காரணம், ஒவ்வொரு சுரப்பியும் ஹார்மோன்களுடன் தொடர்புடையது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரித்தால் முகப்பருக்கள் வர வாய்ப்புண்டு. அதேபோல் ஒரு வெள்ளைமுடியை பிடுங்கிவிட்டால் பக்கத்திலேயே நிறைய வெள்ளைமுடி வரும் என்பதுகூட பொய்தான். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், வைட்டமின் பி12 மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் 30% பேருக்கு நரைமுடி வருகிறது. ஆனால் 70% பேருக்கு பரம்பரை பரம்பரையாக வருகிறது. உடலின் மற்ற செல்களைவிட தலைமுடிக்கு நிறம் கொடுக்கும் செல்களானது சீக்கிரத்தில் தனது செயல்திறனை இழந்துவிடுகிறது.


தாடி வளர எண்ணெய் மற்றும் க்ரீம்களை பயன்படுத்துதல் தவறு

ஆண்களுக்கு முகத்தில் சரியாக தாடி வளராவிட்டால் அதற்கென பிரத்யேக க்ரீம்கள் மற்றும் எண்ணெய்கள் விற்கப்படுகிறதே?

அது ஒருவித உருட்டுதான். இப்போது ஆண்களிடையே தாடி வைத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. அனைத்து ஆண்களுக்கும் தாடி ஒரேமாதிரி வளராது. ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆண்களுக்கு தாடி முழுமையாக வளரும். ஆனால் நமது நாட்டில் சற்று குறைவாகத்தான் வளரும். அதுவே சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதைவிட குறைவு. தாடியே பலருக்கு வளராது. தாடிக்கும் ஆண்மைக்கும் சம்பந்தம் கிடையாது. ஒவ்வொரு பகுதி மக்கள் மற்றும் இனத்திற்கு ஏற்றவாறு தாடியின் வளர்ச்சியும் இருக்கும். இந்த எண்ணெயை தடவினால் தாடி வளரும், க்ரீமை தடவுங்கள் என வருகிற விளம்பரங்கள் எல்லாமே பொய்தான். அதேபோல் ஷேவ் செய்தால் தாடி வளரும் என்பதும் பொய்தான். மஞ்சள் பூசினால் மீசை, தாடி வளராது, தேன் முடியில் பட்டால் நரைத்துவிடும் என்பதுகூட பொய்தான்.

இளநரையை தடுப்பது எப்படி?

ஏற்கனவே கூறியதுபோல இளநரைக்கு முக்கிய காரணம், 30% ஊட்டச்சத்து குறைபாடு, 70% மரபணு. ஊட்டச்சத்து குறைபாட்டை பொருத்தவரை இரும்புச்சத்து, கால்சியம், புரதம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் குறைவாக இருக்கும். குறிப்பாக, வைட்டமின் பி12தான் முடியின் வேர்க்கால்களின் நிறத்தை பராமரிக்க உதவக்கூடியவை. குறிப்பாக ஆக்ஸிடேட்டிவ் அழுத்தமானது ஒவ்வொரு செல்லுக்குள்ளும் நஞ்சை உருவாக்குகிறது.


மரபணு பிரச்சினையால் இளநரை மற்றும் சாப்பிடவேண்டிய உணவுகள்

அதனை வெளியேற்றத்தான் ஆன்டி ஆக்ஸிடண்டுகளை நமது உடலே உருவாக்குகிறது. எப்போது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் அதிகரித்து ஆன்டி ஆக்ஸிடண்டுகள் குறைகிறதோ அப்போது செல்கள் பாதிப்படையும். இதனால் எளிதில் திறனை இழந்து மீண்டும் புதுப்பிக்க முடியாமல் போகும் செல்கள்தான் முடிக்கு நிறத்தை கொடுப்பவை.

வாட்டர் ப்ரூஃப் ப்ரைடல் மேக்கப் மற்றும் ஸ்பா குறித்து கூறுங்கள்...

வாட்டர் ப்ரூஃப் மேக்கப்பால் சரும துவாரங்கள் மூடப்படுவதால் ஏகப்பட்ட சேதங்கள் ஏற்படுகின்றன. 6 மணிநேரம் மேக்கப்பை கலைக்காமல் வைத்திருக்கும்போது சருமம் முழுமையாக பாதிப்படையும். அதேபோல் ஸ்பாக்களில் இலையால் உடலை மூடி ஸ்டீமிங் மெஷினுக்குள் வைத்தால் உடலிலிருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும் என்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற தவறான விஷயங்களை கேட்கும்போது அதை செய்துபார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரிக்கிறது. Dysmorphophobia என்கிற ‘நாம் நன்றாக இல்லை’ என்ற மனநோய் பலருக்கும் இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்தே இதுபோன்ற பிஸினஸ்கள் செயல்பட்டு வருகின்றன.

Updated On 26 Feb 2024 11:57 PM IST
ராணி

ராணி

Next Story