இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகளவில் பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய நோய்களில் ஒன்று நீரிழிவு. இதில் டைப் 1 மற்றும் டைப் 2 என இருவகைகள் இருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் வராமல் தடுப்பது குறித்தும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது பற்றியும் விளக்குகிறார் நீரிழிவு மருத்துவர் ஏ.சீனிவாசன்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதை எப்படி அறிகுறிகளின்மூலம் தெரிந்துகொள்வது?

முன்பெல்லாம் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்றாலே அது பணக்காரர்களுக்குத்தான் வரக்கூடிய நோய் என்ற கருத்து இருந்தது. ஆனால், அது உண்மையில்லை. நாம் சாப்பிடும் உணவானது இன்சுலின் சுரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடும்போது உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து ரத்தத்தில் கலப்பதால் இன்சுலின் அளவும் அதிகரிப்பதால் நீரிழிவு நோய் வருகிறது. எனவே சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட் அளவை குறைப்பது மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டிய உணவுகள் என்னென்ன?

கார்போஹைட்ரேட் டயட் முறையை பின்பற்றவேண்டும். அதாவது வெள்ளை நிறமுள்ள சர்க்கரை, உப்பு, அரிசி, சீஸ், வெண்ணெய், தயிர், பால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இட்லி, தோசை, சாதம் மற்றும் சப்பாத்தி போன்ற க்ளைசெமிக் குறியீடு அதிகமுள்ள உணவுகளை குறைத்துவிட வேண்டும். 0 கார்ப் உணவுகளை எடுப்பவர்களுக்கு நீரிழிவு நோயே வராது. ஆனால் தென்னிந்தியாவை பொருத்தவரை அனைத்து உணவுகளுமே அரிசியை சார்ந்தே இருக்கிறது. எனவே அளவோடு எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு 4 இட்லிக்கு பதிலாக, 2 இட்லி சாப்பிட்டுவிட்டு கூடவே சாலட்கள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் 3 வேளைக்கு பதிலாக 6 வேளை என உணவுகளை பிரித்து சாப்பிடலாம். சிறுதானியங்களை அதிகம் சேர்க்கலாம்.


நீரிழிவு பரிசோதனை - தவிர்க்கவேண்டிய உணவுகள்

சர்க்கரை நோயின் வகைகளை தெரிந்துக்கொள்வது எப்படி?

பொதுவாக டைப்1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை சர்க்கரை நோய்கள் இருக்கின்றன. குறிப்பாக பிரசவ காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிக உணவுகள் சாப்பிடுவதால் பெண்கள் ஒபிசிட்டியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நீரிழிவும் எளிதாக வருகிறது. தற்போது கர்ப்பகால நீரிழிவையும் (Gestational diabetes) சேர்த்து மூன்று வகைகள் இருக்கின்றன என்று சொல்லலாம். கர்ப்ப கால நீரிழிவானது குழந்தைப்பேறுக்கு பிறகு போய்விடும். ஆனால் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் குழந்தைப்பேறுக்கு பிறகு நிறைய பெண்கள் நீரிழிவு நோயாளிகளாகிவிடுகின்றனர். கர்ப்பகால நீரிழிவை கவனிக்காமல் விட்டுவிட்டால் அந்த பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு வரும் என்பதை மருத்துவர்கள் விளக்கவேண்டும். குறிப்பாக, கர்ப்பகால நீரிழிவு மற்றும் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் டைப் 2 நீரிழிவு வர வாய்ப்புகள் இருக்கின்றன.

பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் குழந்தைகளுக்கும் வருமா?

சாப்பிடும் உணவை கட்டுப்படுத்தினாலே நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம். அடிக்கடி பரிசோதனை செய்து உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டு, மாத்திரைகள் மற்றும் இன்சுலினை முறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு வீட்டில் அப்பா, அம்மா அல்லது உடன்பிறந்தவருக்கு நீரிழிவு இருந்தால் அந்த நபருக்கும் நீரிழிவு வர 100% வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை தடுக்க உடற்பயிற்சி, முறையான டயட் மற்றும் எடை கட்டுப்பாடு அவசியம்.


நீரிழிவின் பொதுவான வகைகள்

நீரிழிவு நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள் என்னென்ன?

இங்கு பெரும்பாலானோர் அடிக்கடி நீரிழிவு பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. 35 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்தாலே அவர்களுக்கு நீரிழிவு பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர். சிலருக்கு அடிக்கடி தாகம் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், நிறைய சாப்பிட்டாலும் எடை குறைதல், காயங்கள் ஆறாமல் இருத்தல், ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் தொற்று ஏற்படுதல் போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகள். எனவே 40 வயதுக்கு மேற்பட்டோர் அடிக்கடி நீரிழிவு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சர்க்கரை நோய்க்கும் பிற நோய்களுக்கும் தொடர்பு உண்டா?

சர்க்கரை நோய் ஒரு சைலண்ட் கில்லர். இது தலையிலிருந்து கால் வரை பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கண்களில் ரெட்டினோபதி, இதயத்தில் கார்டியோ மயோபதி, பக்கவாதம், சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற மோசமான விளைவுகளைக்கூட ஏற்படுத்தும். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் டயாலிசிஸ் செய்வதும், மாற்று அறுவைசிகிச்சை செய்வதும் மிகவும் கடினம்.


குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் புண் வந்து நிலைமை மோசமாகிறதே! எப்படி பாதுகாப்பாக இருப்பது?

தினமும் முகத்தை எப்படி பராமரிக்கிறோமோ அதேபோல் கால்களையும் சுத்தமாக கழுவி வைத்திருக்கவேண்டும். குறிப்பாக, விரல் இடுக்குகள் சுத்தமாக இருப்பதுடன், காலுக்கு பொருத்தமான செருப்பையும் அணியவேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு நியூரோபதி பிரச்சினை இருக்கும். கால்களில் உணர்ச்சிகள் குறைவதால் காய்ப்பு (callus) பிடித்துவிடும். அதிலிருந்து சிறு புண் உருவாகும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் காலையே அகற்றவேண்டிய நிலைகூட ஏற்படலாம். எனவே பராமரிப்பு மிகமிக அவசியம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் காயங்கள் ஏற்பட்ட இடங்களில் நுண்குழாய் ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் ரணம் ஆறாது. சிறிய காயமாக இருக்கும்போதே மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய நேரிட்டால் எப்படி ரத்தம் செலுத்துவது?

நீரிழிவு நோயாளிகளுக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்யும் சூழல் வந்தால் நோயாளியை முதலில் நீரிழிவு மருத்துவர்களிடம் அனுப்புவார்கள். சர்க்கரை அளவு 180 முதல் 200க்குள் இருந்தால் அவர்களுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளலாம்.


நீரிழிவு நோயாளிகளும் புண்களும்

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு நீரிழிவு இருப்பது கண்டறியப்படுகிறது. நீரிழிவு இல்லாமல் குழந்தையை பிறக்கவைப்பது சாத்தியமா?

கர்ப்பகால நீரிழிவு தாய்க்கு இருப்பது மருத்துவர்களால் எளிதில் கண்டறியப்படுகிறது. இவர்களுக்கு மாத்திரை கொடுக்காமல் பெரும்பாலும் இன்சுலின் ஊசிதான் செலுத்துவார்கள். மேலும் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க வேண்டும். ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சர்க்கரை அளவை பொருத்துதான் குழந்தைப்பிறப்பையே மருத்துவர்கள் திட்டமிட அறிவுறுத்துகிறார்கள். கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் சர்க்கரை அளவீடானது மாறுபடும். குழந்தை பிறக்கும்போதே நீரிழிவு இருப்பதற்கு முக்கிய காரணம் தாய்தான். பெரும்பாலான குழந்தைகள் குறைவான சர்க்கரை அளவுடன்தான் பிறக்கின்றன. அவர்களுக்கு குளுக்கோஸ் கொடுத்துதான் மருத்துவர்கள் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவார்கள்.

Updated On 19 Feb 2024 11:48 PM IST
ராணி

ராணி

Next Story